அமெரிக்கர்களின் உணவு பழக்கங்கள் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்கர்களின் உணவு பழக்கங்கள்

பியர் பாணத்துக்கு கேஸ் ஏற்றும்பெண்

மெஹ்விஷ் அடிக்கடி செலட்களை தேடித்தேடி உண்பார். குல்ஷன் எனக்கு தானியங்களை அரைத்து செய்யும் பீன் சோஸ்ஸூக்கான செய்முறையை விளக்கினார். அது கிட்டத்தட்ட நாம் கடலைப்பருப்பை தேங்காய்ப்பூவுடன் சேர்த்து அரைக்கும் சட்னி மாதிரியானது. பாகிஸ்தானியர்களும் அமெரிக்கர்களைப்போலவே கடலை, கிட்னி பீன்ஸ் என அனைத்து வகையான தானியங்களிலும் சட்னி தயாரித்து சப்பாத்தி அல்லது நான் ரொட்டியில் அதைப்பூசி சுருட்டி குழந்தைகளுக்கு கொடுப்பார்களாம். பாகிஸ்தானிலும் நான்கு காலங்களும் மாறி மாறி வருவதனால் அதற்கேற்றாற்போல அனைத்து வகை காய்கறிகள் மற்றும் பழங்களும் அங்கு கிடைப்பதாக தெரிவித்தனர்.

அமெரிக்கர்களின் உணவுப்பழக்கத்தை பார்த்தபோது எனக்கு சீனாவின் உணவுப் பழக்கமும் அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்துசென்றது. சீனர்கள் தங்கள் உணவில் அதிக அக்கறை கொண்டவர்கள். அவர்களில் குண்டானவர்களை தேடிக் கண்டுபிடிப்பது அரிது. நான் சீனாவுக்கு சுற்றுலா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்கள் உடம்பிலும் உணவிலும் காட்டும் அக்கறையை கண்டு வியந்து போனேன்!

மாப்பொருட்களை மிகக்குறைந்த அளவில் உண்ணும் சீனர்கள், ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னரும் சுமார் அரை மணித்தியால இடைவெளியில் சுடச்சுட 'கிறீன் டீ' யை மறவாமல் குடிக்கின்றார்கள். நாம் எப்படி தண்ணீர் இல்லாமல் இருக்க மாட்டோமோ அப்படிதான் அவர்களுக்கு 'கிறீன் டீ'! . சாப்பிட்டவுடன் குடிக்காமல், சமிபாடு முடிவடைந்து கொழுப்பு உறிஞ்சப்படும் நேரத்தில் அதனை பருகினால்தான் அதன் பயன் முழுமையாக கிடைக்கும் என்று ஒரு சீன நண்பர் எனக்கு விளக்கமும் தந்தார். அப்போது கெட்ட கொழுப்புகள் உடலில் தங்காது என்பது அவர்கள் கூறும் விஞ்ஞான விளக்கம். அது மட்டுமா இரவு உணவை ஆறு, ஆறரை மணிக்கெல்லாம் முடித்து விடுகின்றார்கள். அதற்குப் பின்னர் சாப்பாட்டுக்கு அங்கே தடா! கொழும்பு, கண்டி,யாழ் போன்ற நகரங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ஒன்பது மணியிலிருந்து 11 மணிக்குள்தான் இரவு உணவை உண்கிறார்கள். நம் உணவு ​நேரங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

நாடுகளுக்கிடையிலுள்ள உணவு முறையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகிறது! அதுதான் ஒரு நாட்டின் முன்னேற்றம் நெடுஞ்சாலைகளிலும் வானுயர்ந்த கோபுரங்களில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பதும் அது அந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்திலும் தங்கியுள்ளது என்பதுதான்! மக்கள் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக இருந்தால் தானே உழைப்புக்கான ஆட்பலம் கிடைக்க முடியும்!

எனக்குத் தெரிந்த வரையில் இந்த உணவு பழக்கத்தில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் பின்னடைவான நிலையிலேயே உள்ளன. இலங்கையில் நாம் அதிகளவு மாச்சத்தையே உண்கின்றோம். கூடவே சுவைக்காக இறைச்சியையும் பெயருக்காக ஒன்றோ இரண்டோ காய்கறிகளையும் வைத்துக் கொள்கிறோம். இது மிகவும் தவறானதொரு உணவுப்பழக்கம் என்ற விழிப்புணர்வு கொண்டுவரப்பட்டாலும் உணவு பழக்கத்தில் அசட்டையாகவே உள்ளோம். சுட்ட ரொட்டி, தட்டு நிறைய சோறு,இரண்டு வேளை பாண் என்பதாகவே எமது பொதுவான உணவுப் பழக்கமாக உள்ளது.

தமிழ் நாட்டிலுள்ளவர்கள் மாச்சத்து, எண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளை உண்பது மிக மிக அதிகம். ஒருதடவை நான் இந்தியா சென்றிருந்தபோது சாப்பாட்டுக்காக பந்தியில் அமர்ந்திருந்தேன். எனக்கருகில் என் வயது பெண்ணொருவரும் அமர்ந்திருந்தார். அவர் எத்தனை தடவை சாதம் பரிமாறிக் கொண்டார் என்று என்னால் கணக்கிட்டுப் பார்க்க முடியவில்லை. குழம்புடன், கூட்டுடன், பொறியலுடன், தயிருடன் மோருடன் என ஏழு, எட்டு தடவைகள் 'சாதம்', 'சாதம்'என கேட்டு வாங்கி சாப்பிட்டார். பரிமாறுபவர்களும் சலிக்காமல் பரிமாறிக்ெகாண்டேயிருந்தனர்.

அப்பெண் மட்டுமல்ல கிட்டதட்ட பந்தியிலிருந்த எல்லோரும் அப்படிதான் சாப்பிட்டார்கள். அதிகம் சாப்பிடுவது அவர்களுக்கு சாதாரணமான விடயம். உலகில் உணவு பஞ்சம் ஏற்படுமாக இருந்தால் என் பார்வையில் நிச்சயம் அதற்கு முதலில் பொறுப்புக்கூற வேண்டிய நாடு இந்தியாதான்!

அதுமட்டுமா இந்தியர்கள் எப்போதும் எண்ணெயப் பலகாரம், இனிப்புக்கள், நெய் உணவுகள் என்பவற்றை அதிகமாக உண்கிறார்கள். மூன்று பிரதான உணவுகள் அல்லாமல் இடையே மாலையில் 'டிபன்' என்ற பெயரில் இரண்டு தோசை, மூன்று இட்லி, கோப்பியை வேறு தவறவிடமாட்டார்கள். இந்தியர்களுக்கு சமைப்பதும் சாப்பிடுவதும் தான் தொழிலோ என நினைக்க வேண்டியிருக்கிறது.

நம் நாட்டில் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அரோக்கியமில்லாத பனிஸ், பிஸ்கட், கேக் வகைகளை உள்ளே தள்ளுகிறோம். நாடெங்கும் பெரிதும் சிறிதுமாக காணப்படும் பேக்கறி கடைகளும் ஸ்னெக் பார்களுமே எமது உணவுப் பழக்கத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனவே!

நம் நாட்டிலும் சிங்களக் கடையில் வாங்கும் மதிய உணவுப் பொதியிலாவது கொஞ்சம் காய்கறிகளைக் காணலாம்.ஆனால் சைவ கடைகளில் வாங்கும் உணவுப் பொதியில் சோற்றை மட்டுமே காணக்கூடியதாக இருக்கும். மாறாக சில பொட்டலங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பொட்டலத்தின் முடிச்சையும் அவிழ்த்து சோற்றில் ஊற்றுவதற்கிடையில் பசி பறந்து போய்விடும்! அதுவும் மஞ்சள், சிவப்பு நிறங்களில் தண்ணீர் போன்று வைக்கப்பட்டிருக்கும் குழம்புகளில் நீச்சலடித்துதான் காய்கறித் துண்டுகளை தேடியெடுக்கும் நிலை! அதை நம்பி வாழ்பவர்களுக்கு. இந்த உணவுகளை நம்பி வாழ்பவர்களுக்கு எப்படி நீரிழிவு உள்ளிட்ட ஏனைய நோயகள் வராமல் இருக்கும்?

ஒரு காலத்தில் உலக மக்களை ஆட்டிப்படைத்த தொற்று நோய்களுக்கெல்லாம் இப்போது மருந்துகள் உள்ளன. ஆனால் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் தொற்றா நோய்களுக்கு வாய்களுக்கு இடும் பூட்டே மருந்தாக அமையமுடியும்! தவறான உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையுமே இந்நோய்களுக்கு பிரதான காரணமாகியுள்ளது. இன்று பிறக்கும் குழந்தை முதல் அனைத்து வயதினரையும் நீரிழிவு ஆக்கிரமித்துள்ளது. இதனால் அரசாங்கம் பெருந்தொகை நிதியை சுகாதாரத்துறைக்காக ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அபிவிருத்தி நோக்கிச் செல்லும் நாட்டை பின்நோக்கி இழுக்கும் செயன்முறை என்பது எனது கணிப்பு.  ஆரம்ப காலத்தில் இயந்திரங்கள் இருக்கவில்லை. மக்கள் அதிகம் உழைத்தார்கள். அதற்கேற்ற சக்தியை பெறும் வகையில் அவர்கள் அதிக உணவை உட்கொண்டார்கள். ஆனால் இப்போது மனிதன் செய்த வேலையை இயந்திரங்கள் செய்கின்றன. ஆனாலும் அதே அளவு உணவை மனிதன் இன்னும் தேடுகின்றான். அது அப்படியே உடலில் கொழுப்பாக படிந்து விரைவில் அவனை நோய்க்குள் தள்ளிவிடுகின்றது. இந்நிலைமை மாற வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு விடயம் சவாலாக இருக்கின்றது. அதுதான் பொருளாதாரம். அமெரிக்காவில் புத்துணர்ச்சியான பழங்களும் காய்கறிகளும் மலிவாக கிடைக்கின்றன. எனவே அந்நாட்டு மக்கள் அதனை அதிகமாக வாங்கி சாப்பிடுகின்றார்கள். நம் நாட்டின் விலை வாசிக்கு ஏற்ப சாதாரண ஒரு கூலித் தொழிலாளிக்கு இது சாத்தியமாகுமா? என்பது ஒரு பெரிய கேள்வி. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேநேரம் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்தால் நன்றாக இருக்குமென விமானத்தில் பறக்கும்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வேன்.

(நினைவுகள் தொடரும்)

லக்‌ஷ்மி பரசுராமன்

Comments