'கைலாயா' என்ற பெயரில் இந்து தேசம் அமைக்கப் போகிறாராம் நித்தியானந்தா! | தினகரன் வாரமஞ்சரி

'கைலாயா' என்ற பெயரில் இந்து தேசம் அமைக்கப் போகிறாராம் நித்தியானந்தா!

சன் டிவியில் 2010ம் ஆண்டு ஒரு வீடியோ காட்டப்படுகிறது. ஒரு திடைப்படத்தில் வரும் காட்சி மோலத்தான் அது தெரிகிறது. ஆனால் பின்னணியில் ஒலிக்கும் குரலைக் கேட்ட பின்னர்தான் அது ஒரு திரைப்படக் காட்சியல்ல என்பதையும் உண்மையாகவே நடைபெற்ற ஒரு சம்பவமே இரகசியமாக பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது என்ற செய்தியை நாம் அறிந்து கொள்கிறோம். அக் காணொளி காட்சியில் சயன அறையில் மந்தகாசமாக படுத்துக்கிடந்தவர் அச் சமயத்தில் தமிழ் சமூகம் அறிந்திருந்த இளம் சுவாமி நித்தியானந்தா. ஆனந்த விகடனில் கதவைத்திற காற்று வரட்டும் என்ற ஆன்மிகத் தொடரை எழுதியதன் மூலம் தமிழர்கள் மத்தியில் அறிமுகமானவர். உண்மையைச் சொன்னால் அந்தத் தொடரும் வாசிப்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. அதைப் படித்து நித்தியானந்தா விசிறிகளாகிப் போனவர்கள் இணையத்தில் அவரைத் தேடிப்படித்து அவரது அருளுரைகளை காதுநிறையக் கேட்டுக் கொண்டிருந்தபோது தான் அந்த வீடியோ வெளியானது. 

சயன அறைக்குள் வரும் நடிகை ரஞ்சிதா சாமியாரின் காலைப்பிடித்து விடுகிறார். இருவரும் கணவன் மனைவி போல நடந்து கொள்ளத் தலைப்படுவது புரிகிறது. இதுதான் அந்த எடிட் செய்யப்பட்ட வீடியோ. இது வெளியானதும் நடிகை ரஞ்சிதாவும் சாமியாரும் மாயமானார்கள். கர்நாடக பொலிஸார் அவரைத் தேடியலைந்து இறுதியாக அருணாசலப் பிரதேசத்தில் அவரைக் கைது செய்தனர். அவரே தான் ஒரு பெண் என்றும் தன்னைப் பரிசோதனை செய்யும்படியும் பொலிசாரிடம் சொன்னார். பின்னர் அவர் பிணையில் வெளிவந்தார். சில வருடங்களின் பின் மதுரை ஆதீனத்தைக் கைப்பற்ற முனைந்து அதில் தோல்வியடைந்தார். நடிகை ரஞ்சிதாவும் தான் ஆன்மிகத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்து நித்தியானந்தாவின் சிஷ்யையானார்.  

தன்னை ஊடகங்கள் நார்நாராகக் கிழித்து போட்டு விட்ட பின்னரும் கூட நித்தியானந்தா அசரவில்லை. அவரது பல்லாயிரக்கணக்கான இந்திய மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் அசரவில்லை. அவர்கள் மத்தியில் நித்தியானந்தாவின் செல்வாக்கு குறையவும் இல்லை. இந்த கோர்பரேட் சாமியார்களிடம் பொதுவாகவே காணப்படும் ஒரு விசேஷம் தான் எத்தனை தடவைகள் கீழே விழுந்து மண் கௌவினாலும் மீசையில் மண் ஒட்டியதாகக் காட்டிக் கொள்ளவே மாட்டாரகள். அதனால் அவர்களையே தெய்வமாகக் கருதும் பக்தகோடிகளும் தமது ‘சுவாமி’களின் சேட்டைகளையும் தில்லுமுல்லுகளையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ‘பகவானின் திருவிளையாடல்’களாக எண்ணி தம்மைத் தேற்றிக் கொள்வதையே நாம் பார்த்துள்ளோம். மற்றொரு சாமியாரான தொண்ணூறுகளில் பிரேமானந்தாவின் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் வெளிவந்தபோது முழுத்தமிழகமே அவ்வழக்கை உற்று நோக்கியது திகிலுடன்! பெரும்பாலும் சாமியாருடன் தொடர்புபட்ட ஒரு கொலை வழக்கு தமிழகத்தில் இதுதான் முதல் சம்பவமாக இருக்க வேண்டும். அவர் விசாரிக்கப்பட்டு தூக்குத் தண்டனைக்குள்ளானார். சிறையிலேயே நோய் கண்டு இறந்து போனார். ஆனாலும் அவரைத் தெய்வமாக வழிபடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரது ஆசிரமங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. 

பக்தர்களிடம் காணப்படும் சில பலவீனங்கள், சமூகங்களில் காணப்படும் பின்னடைவு நிலை, குறைபாடுகள், உளவியல் ரீதியான சாதகமான தன்மைகள், பக்தி, ஆன்மிகம் தொடர்பாகக் காணப்படும் நம்பிக்கைகள் என்பனவற்றை இக் கோர்பரேட் சாமியார்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இச் சாமியார்களிடம் அல்லது அவர்கள் நடத்தும் ஆசிரமங்களுக்கு சாதி, மத வித்தியாசம் இல்லாமல் எவர் வேண்டுமானாலும் செல்லலாம். தமது பிரச்சினைகளைப் பற்றிப் பேசலாம். தீர்வுகளும் பெற்றுத் தரப்படும் என்பதோடு பண உதவிகளும் செய்யப்படும். பாரம்பரிய மதங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இச் சாமியார்களின் ஆசிரமங்களில் விதிக்கப்படுவதில்லை. அடுத்தது இந்த ஆசிரமங்கள் காட்டும் பிரமாண்டமும் செல்வச் செழிப்பும் ஒரு பக்தனை மயங்கிவிடும். இச் சாமியார்களின் சாதகத் தன்மையுடன் கூடிய பேச்சுகளும், அணுகுமுறைகளும், இரண்டாம் மூன்றாம் நிலை சாதுகளின் நிர்வாகத் திறனும் உள்ளே வருபவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. 

எப்படி மனிதர்கள் பர்கர், கோலா, பீட்ஸா, மது, சிகரெட் போன்றவற்றுக்கு அவற்றின் தீமையான பக்கங்களை நன்கு விளங்கிக் கொண்டே அடிமையாகிப் போகிறார்களோ அதேபோலத்தான் இச் சாமியார்களிடமும் பெருமளவிலான மக்கள் அடிமையாகிப் போகிறார்கள். இந்த மாயம் அதிகம் பாமரர்களையும் சிந்தனை விருத்தி குறைந்த பாரம்பரிய சிந்தனை போக்கு கொண்டவர்களையும் இந்தியர்களையும் மட்டும் அடித்து உலையில் போடவில்லை. உலக நாடுகளிலும் உள்ள கிறிஸ்தவ சாமியார்களும் இப்படித்தான் விசுவாசிகளின் பலவீனங்களைப் பயன்படுத்தி தமது ‘ஆன்மிக’ அமைப்புகளை நடத்தி வந்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஜிம் ஜோன்சை சொல்லலாம். தமது மத நம்பிக்கைகளை சுதந்திரமாகக் கைகொள்வதற்கு இவ்வுலகில் நெருக்கடிகள் மிகுந்து வருவதால் அடுத்த உலகுக்குச் சென்று நாம் எமது நடவடிக்கைகளை சுதந்திரமாகச் செய்யலாம் என்று அவர் கூறிய ஆலோசனையை பக்தர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இதையடுத்து சயன்னட் கலந்த பழரசம் தயாரிக்கப்பட்டு பக்தகோடிகள் முன் வைக்கப்பட்டது. ஒவ்வொருவராக அதை அருந்தி செத்து விழுந்தார்கள். தாய்மார் தமது பிள்ளைகளுக்கு பருக்கி தாமும் பருகி விழுந்தார்கள். இவ்வாறு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்ததும் ஜிம் ஜோன்சும் துப்பாக்கியால் தன்னை சுட்டு மாய்த்துக் கொண்டார். அனைவரும் மரணத்தின் பின்னர் மறு உலகில் ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்தார்களா என்பதை நாமறியோம். 

இனி நித்தியானந்தா விவகாரத்துக்கு வருவோம் 

நித்தியானந்தாவுடன் இருந்த ஒருவர் தன் இரு மகள்மாரையும் மீட்டுத்தரும்படி பீஹார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து நித்தியானந்தா பெயர் மீண்டும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. இவ்விவகாரம் வெளிவந்ததுமே நித்தியானந்தா மாயமாகிவிட்டார். பீஹார் பொலிஸார் பல இடங்களிலும் தேடுதல் நடத்தியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் பிரகாரம் அவர் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாகவும் ட்ரினிடாட் டுபாக்கோ தீவுக்கூட்டங்களுக்கு அருகே உள்ளே ஒரு தீவை விலைக்கு வாங்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

அவர் ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார். அத் தீவு ஒரு முழுமையான இந்து ராஜ்யமாக, உலகின் முதலாவது முழுமையான இந்து தேசமாக அமையும். கைலாயா என்பது அந்த நாட்டின் பெயராக இருக்கும். அடியார்களுடன் அந்த தேசத்தில் சுவாமி நித்தியானந்தா தலைவராக வீற்றிருப்பார். சுதந்திரமாக தமது ஆன்மிக வாழ்க்கையை இந்துக்களால் இங்கே மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் அவர் ஐ.நா. சபைக்கு ஒரு விரிவான அறிக்கை கொடுத்திருப்பதாகவும் அதில், பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தி.மு.க, அ.தி.மு.க மற்றும் இந்திய அரசு நிறுவனங்கள் என்பன தமது ஆன்மிக நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் தம்மிடம் உள்ள நிதியைப் பறிக்கும் எண்ணத்துடன் செயல்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. 

தான் ஏன் நாட்டை விட்டு வெளியேறினேன் என்பதற்கான தன்னிலை விளக்கமாக இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு தீவை விலை கொடுத்து வாங்குவது என்பதும் ஒரு நாட்டை உருவாக்குவதென்பதும் சாதாரண விஷயமல்ல. மேலும் ஒரு இந்தியன் இன்னொரு நாட்டின் பிரஜையாக இருக்க முடியுமா என்பதில் சட்ட சிக்கலும் உள்ளது. தீவு, கைலாயா என்பதெல்லாம் இவரது கப்ஸாவா என்ற கேள்வியும், பொலிசாரை திசை திருப்புவதற்காக அவிழ்த்துவிடப்பட்ட கட்டுக் கதையா என்பதும் தெரியவில்லை. ஆனால், அவர் இந்தியாவில் தான் இருக்கிறாரா அல்லது வெளிநாடொன்றுக்கு உண்மையாகவே தப்பிச் சென்று விட்டாரா? என்பதிலும் தெளிவில்லை. 

நித்தியானந்தாவின் எதிரிகளோ அல்லது ஆதரவாளர்களோ யாரானாலும் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறார்கள். நித்தியானந்தாவிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்பது நித்தியானந்தாவின் பல மர்மங்களில் ஒன்றக விளங்குகிறது என்பதே உண்மை. இப் பெரும் பணம் இவருக்கு மட்டுமல்ல, பல இந்திய சாமியார்களுக்கும் கொட்டோ கொட்டென கொட்டவும் செய்கிறது. இது சட்டபூர்வமான பணமா. அல்லது வேறு வர்த்தகங்களின் ஊடாக உள்வரும் பணமா? என்ற கேள்வி தொடர்ச்சியாகக் கேட்கப்பட்டு வந்துள்ளததோடு இதற்கு இன்று வரை பதில் கிடைத்தபாடுமில்லை. 

சரி, பொறுத்திருந்து பார்ப்போம், நித்தியானந்தாவின் அடுத்த நகர்வு எப்படி இருக்கப் போகிறது என்று!   

அருள் சத்தியநாதன்

Comments