சமூக வலைத்தள போராளிகளுக்கு! | தினகரன் வாரமஞ்சரி

சமூக வலைத்தள போராளிகளுக்கு!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டபோது, ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் அவரைப் பலமுறை படுகொலை செய்ததை இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள். அதற்கு ஒப்பான ஒரு சம்பவம்தான் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியிருந்தது.  

ஒரு சமூகத்தைப் பற்றித் தொலைக்காட்சி விவாதமொன்றில் கூறப்பட்டதாகச் சொல்லிச் சொல்லி, அந்த அரசியல்வாதி ஒரு தடவை சொன்ன சொல்லை, பல்லாயிரம் தடவை சொல்லிவிட்டார்கள். இது அவர்களுக்கே புரிந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.  

நான் இன்னவன், ஆனால், அதனைப் பிறர் யாரும் சொல்லக்கூடாது! என்பதுமாதியான ஒரு கருத்தை இவர்கள் சொல்கிறார்கள். தொலைக்காட்சியில் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டவர்கள், இரண்டு அரசியல் தலைவர்கள். ஆனால், இந்த இரண்டு பேரையும் சமூக வலைத்தளப் போராளிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், விமர்சித்திருந்த விதம் கிஞ்சித்தும் ஏற்றுக்ெகாள்ள முடியாது!  

தலைவர்களை விமர்சிப்போர், தங்களின் மானம், மரியாதைகளையெல்லாம் இழந்து சமூகப் பொதுவௌியில் கருத்துகளைச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. முகநூல் உள்ளிட்ட வலைத்தளங்களில் ஒரு சமூகத்தின் தலைவர்கள்போல் செயற்பட முனைபவர்கள் தலைவர்கள் என்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குக் கீழே தரப்படும் உதாரணங்களைப் பாருங்கள்.  

தன்னளவில் ஒரு திறமை கொண்டு அதில் சாதனைகள் கண்டு வாழ்வில் வெற்றி காண்பது ஒரு வகை. மற்றவர்களின் பலம், பலவீனம் உணர்ந்து அவர்களின் பலத்தை (அல்லது அவர்களுள் புதைந்துள்ள திறமையை அறிந்து வெளிக் கொணர்ந்து) இலட்சியத்தை அடைந்து வெற்றி காண்பது இன்னொரு வகை.  

தனக்குப் பாதை வகுத்துக் கொள்ளத் தெரிந்தவனே மற்றவருக்கு பாதை வகுத்து கொடுக்க முடியும். அதைப் போல தன்னை கையாளத் தெரிந்தவனாலேயே பிறரைக் கையாள முடியும். மற்றவர்களைத் திறமையாக ஆக்கபூர்வமாகக் கையாளத் தெரிந்தவர்களே தலைவர்களாக அவர்களை ஒரு இலட்சியப் பாதையில் அல்லது ஓர் இலக்கை நோக்கி வழி நடத்திச் செல்லக் கூடியவர்களாகின்றனர்.  

ஓர் இலக்கை அடைவதற்குத் தேவையான வழி முறைகளைத் திட்டமிட்டு அதற்குத் தேவையான கொள்கைகளை வகுத்துக் கொண்டு குறித்த நேரத்தில், குறித்த முறையில் இலக்குகளை அடைய செய்யுமாறு மற்றவர்களைக் கையாளும் திறமையும் தலைமை நிலையில் நின்று செயலாற்ற தேவையான தகுதியாகின்றது  

மற்றவர்களிடமிருந்து தலைமைத் திறனுடையவர்கள் எவ்வகையில் மாறுபடுகின்றார்கள் என்பதை ஆராய்ந்தால்;அனுபவங்களே அவர்களுக்கு முதற் பாடம். அதிலிருந்து எப்போதும் அவர்கள் கற்றபடியே இருப்பர். காதுகளையும் கண்களையும் நன்கு பயன்படுத்தக் கூடியவர்கள். தெரியாத விடயங்களை எப்படியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமுடையவர்கள். அடுத்தவர் பேச வருவதைச்செவி கொடுத்து கேட்கும் பழக்க முடையவர்கள். எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வரையில், ஆர்வத்துடன் சந்தேகங்களைக் கேள்விகளை எழுப்பித் தெளிவு பெற விளைவர். தங்கள் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே இருப்பர் (இந்த திறமையைப் போதும் என்று சமாதானமடைய மாட்டார்கள் ) புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டுவர். தான் எல்லாம் அறிந்தவர் என்ற மமதை கொள்ளாதவர்.  

இவர்களின் எந்தவோர் அணுகு முறையும் உற்சாகமானதாக மகிழ்ச்சியானதாக இனிமையானதாக இருக்கும். நேர்மையானதாக, நம்பிக்கை மிகுந்தனவாக இருக்கும். இவர்களின் நேர்மையான அணுகுமுறை மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகிறது. இவர்களுடைய ஆர்வம் நம்பிக்கை மகிழ்ச்சி அவர்களையும் தொற்றிக் கொள்கிறது அதனாலேயே மற்றவர்களுக்கு இவர்கள் மீது ஒரு வித ஈர்ப்பும் நம்பிக்கைத் தன்மையும் ஏற்படுகின்றது.  

தங்கள் பழக்க வழக்கங்களை உணர்ச்சியை வெளிப்படுத்தும் முறைகளை அணுகு முறைகளை எப்போதும் கூர்ந்து கவனிப்பர். அதிலேதும் குற்றம் குறை கண்டாலோ மற்றவர்கள் சுட்டிக் காட்டினாலோ அவற்றை மாற்றிக் கொள்ள சிறிதும் தயங்காதவர்கள்சமூக வலைத்தள போராளிகளுக்கு!.

மற்றவர்களை ஆழமாக கவனித்து அதன் மூலம் அவர்களைப் புரிந்து கொள்ளல் என்பது மிக முக்கிய பழக்கமாகும். நீங்கள் மற்றவர்களைப் புரிந்து கொள்ளாமல், அடுத்தவர்களை உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. புரிந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் சொல்வதை முழு மனத்துடன் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கும் போதே மற்றவர்க்கு உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் மதிப்பும் ஏற்படும். பிறகு அவர் உங்களை புரிந்து கொள்ள எந்தத் தடையும் இருக்காது!  

கடைசியாக எப்போதும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். இது தான் நம் எல்லை. இவ்வளவுதான் நமக்கு என்று ஒரு குறுகிய வட்டத்துள் அடங்கி விடக் கூடாது. இதை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும். அதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதிய விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்; திருத்திக் கொள்ள வேண்டும். எப்போதும் உங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் பழக்கம் மிகவும் அவசியமானகின்றது. இந்தப் பழக்கம் இல்லாது போனால், இங்கே பேசப்படும் வேறெந்த விடயமும் அர்த்தமற்றது.  

இங்கே சொல்லப்பட்ட விடயங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும் அதே வேளையில், அடுத்தவரை மேம்படுத்தி அவர்கள் சிறப்பாக செயலாற்ற உதவும் என்று நம்புவோம்!   

Comments