தமிழர் பெருமையை எடுத்துக் கூறிய சுவாமி விபுலானந்தர் | தினகரன் வாரமஞ்சரி

தமிழர் பெருமையை எடுத்துக் கூறிய சுவாமி விபுலானந்தர்

பண்டிதர் மயில்வாகனன் என்ற இயற்பெயரைக் கொண்ட சுவாமி விபுலானந்தர் தமிழின் சிறப்புக்களை உலகுக்கும் உலகின் சிறப்புக்களை தமிழுக்கும் பரிமாற்றம் செய்த பேராசான். 

கிழுக்கிலங்கைத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் மிக முக்கியமாகப் பேசப்படுபவர் அறிவாழமும் ஆற்றலும் மிகக் கொண்டவரான சுவாமி விபுலானந்தர் அவர்களே. 

கிழக்கிலங்ககையின் காரைதீவில் 27.03.1892ல் பிறந்தவர் இவர். சாமித்தம்பி – கண்ணம்மை தம்பதிகள் இவரது பெற்றோர். பெற்றோர் இவருக்கிட்ட பெயர் மயில்வாகனன். துறவறம் பூண்டபின் பெற்றபெயர் சுவாமி விபுலானந்தனர். 

ஆரம்பக் கல்வியை தான் பிறந்த காரைதீவிலும் இடை நிலைக் கல்வியை கல்முனை மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் பெற்று, கொழும்பு அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியப் பதவியேற்றார். 

இரண்டு ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிய பின் கொழும்பு பொறியியல் கல்லூரியில் பொறியில் கற்று டிப்ளோமா பட்டம் பெற்றார். (1916) 

அதே கால கட்டத்தில் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடாத்திய பண்டிதர் பரீட்சையிலும் வெற்றியீட்டி பண்டிதர் பட்டமும் பெற்றுக்கொண்டார். (1916) 

1917ல் யாழ்ப்பணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் அறிவியல் துறை ஆசிரியராகப் பதவியேற்றார். ஆசிரியப் பணியாற்றிய காலத்திலேயே லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞான மாணிப் பரீட்சையில் சித்திபெற்று பி.எஸ்.சி. பட்டம் பெற்றார்.  

மரபுவழிவரும் பாரம்பரியக்கல்வியும் விஞ்ஞானக் கல்வியும் எதிரெதிர் நிலைகளாகக் கொள்ளப்பட்ட அந்த இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அந்த இரண்டு எதிரெதிர் போக்குகளையும் ஆளுமையாகக் கொண்டவராகத் திகழ்ந்தவர் விபுலானந்தர். 

சுவாமி விபுலானந்தர் போன்ற அறிவாழமும், ஆளுமையும், சமூக நீதிக்காக வாதிடுகின்ற போராட்டக்குரலும் ஆன்மிகத் தேடல்களும், ஒப்பியல் ஆராய்வும் நிறைந்த இன்னொருவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் காண்பது அரிது தான். 

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராகச் சில ஆண்டுகள் பணியாற்றியபின், 1922ல் சென்னை மயிலாப்பூர் இராம கிருஷ்ணமடத்தில் இணைந்து கொள்கின்றார். துறவறம் மேற்கொண்டு விபுலானந்தர் சுவாமிகளாகின்றார். அவர் இராம கிருஷ்ண மடத்துச் சுவாமியாக இருந்த போது அந்த மடத்தின் சிலமுக்கியமான புலமை நிலைப்பதவிகளை அந்த இளம் வயதிலேயே வகித்தார். மடத்தின் சஞ்சிகையான ‘பிரபுத்த பாரத’வின் ஆசிரியராக செயற்பட்டமை முக்கியமானது. 

இராமகிருஷ்ணமடம் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாவின் போது அவரைக்கனம் பண்ணுவதற்காக அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ‘Ancient thoughts for modern man’ என்பது நூலின் தலைப்பு. இந்த நூல் பற்றிப்பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகையில், ‘அவரது ஆங்கில உரை நடைப்போக்குக்கும் அவர் கையாளும் தமிழ் உரைநடைப் போக்குக்கும் பாரிய வேறுபாடுண்டு. அவரது சரளமான ஆங்கில நடை வாசிப்போரைக் கவர்வது. அந்த நடை புதுமைப்பித்தன் சொல்வது போல் ‘கருத்தை எடுத்துச் சொல்வதற்காகப் பாய்ந்து செல்கின்ற நடை’. அப்படியான ஒரு நடை அவருக்குக் கை வந்திருக்கிறது. 

மட்டக்களப்பு புலமை வரலாற்றில் அவர் இடம் பெறுகின்ற அதே அளவுக்கு யாழ்ப்பாணத்துப் புலமை வரலாற்றிலும் இடம்கொள்ளுகின்றார். அதே போல் தமிழ் நாட்டிலும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தமிழறிஞராகவே விபுலானந்தர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றார். அதனாலேதான் 1930களில் தொடக்கப்பட விருந்த ஒரு பல்கலைக்கழகத்துக்கு அது எங்கே அமைய வேண்டும் என்பது பற்றிய விசாரணைக்குழுவில் அங்கம் வகிக்கமுடிந்தது. தமிழின் நவீன மயப்பாட்டுக்குத் தேவையானதாகக் கருதப்பட்ட கலைச்சொல்லாக்கல் குழுவில் அவரால் சென்னையிலேயே கடமையாற்ற முடிந்தது. 

புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் அவர் பணியாற்றிய போது அருகே உள்ள குருநகர் மீனவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். 

புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் அவர் பணியாற்றிய போது அருகே உள்ள குருநகர் மீனவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். 

அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றிய காலங்களில், அருகே அமைந்திருந்த திருவேற்களத்தில் தீண்டாமை ஒழிப்பு இயக்க நடவடிக்கைளில் செயற்பட்டுள்ளார். 

மட்டக்களப்பு சிவபுரியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தை நடத்தியுள்ளார்.’ என்று பதிகின்றார் பேராசிரியர் சிவத்தம்பி. 1931ல் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது. தமிழ்ப் பேராசிரியராகப் பதவி ஏற்கும்படி பல்கலைக்கழக நிர்வாகம் விபுலானந்தரை அழைத்தது. அவரும் ஏற்றுக் கொண்டார். கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி பல்கலைக்கழகமாக 1942ல் தொடங்கியபோதும் பேராசிரியராகப் பதவி ஏற்கும்படி இவரே அழைக்கப்பட்டார். 

இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பதவிவகித்த பெருமைக்குரியவர் சுவாமி விபுலானந்தர். 

இவருடைய இசைபற்றிய ஆராய்ச்சிகளின் இடைவிடாத செயற்பாடுகளே பண்டைத் தமிழ் இசை மரபை மீட்டெடுத்து யாழ் நூலாக நம்முன் நிறுத்தியுள்ளது. விபுலானந்தர் என்றதும் யாழ்நூலையே முதன்மைப்படுத்தும் மரபொன்றும் தமிழில் இருக்கின்றது. 

தான் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற நாடக செயற்பாடுகள் பற்றிய தனது நோக்கினை மதங்க சூளாமணியின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார் இவர். 

நாடகவியலை ஆராய்கின்ற சிற்றாராய்ச்சி என்ற தன் நூலைப்பற்றிக் குறிக்கின்றார் விபுலானந்தர். செந்தமிழ் இதழில் தொடராக வந்து பிறகு நூலான நாடகவியல் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘ஒரு கவிஞனாக அவரது கவிதைகள் தமிழின் செய்யுள் இலக்கண மரபை போற்றுவனவாகவும் யாப்புப் பிரயோக அமைப்பு இறுக்கம் கொண்டனவாகவும் இருந்தன. நவீன காலத்துக்கு முற்பட்டவையான யாப்பு சிரத்தையோடு செய்யுள் யாத்த விபுலானந்தர் தமிழின் மிக நவீன கவிஞனாக பாரதியை, மகா கவியாக, புதுமைக்கவியாக ஏற்றுப் போற்றியது அவர் தமிழுக்காற்றிய முக்கிய பணிகளில் ஒன்று’ என்கின்றார் சிவத்தம்பி. 

1947ஆம் ஆண்டு ஜுன் மாதம் யாழ் நூல் அரங்கேற்றவிழா தமிழகத்தில் சிறப்பாக நடந்தது. இவ்விழாவில் பங்கேற்று நாடு திரும்பிய விபுலானந்தர் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் 19--.07-.1947ல் அமரர் ஆனார்.   

தெளிவத்தை ஜோசப்

Comments