அதிபர் சேவை நியமனத்திற்கு நீதி கிட்டுமா? | தினகரன் வாரமஞ்சரி

அதிபர் சேவை நியமனத்திற்கு நீதி கிட்டுமா?

ஆட்சி மாற்றம் நிகழும்போது புதிய சிந்தனைகள் பிறப்பதும் புதிய செயற்பாடுகள் உருவாக்கப்படுவதும் புதிய திட்டங்கள் வகுக்கப்படுவதும் வழக்கமான சங்கதிதான். அந்த மரபில் தற்போதுள்ள அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் டளஸ் அழகப் பெரும் தேசிய மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் ஜனவரிக்கு முன் நிரப்பப்படும் என்று அண்மையில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார். 

கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கும் கல்வி அமைச்சருக்குமிடையில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்திருக்கின்றார். 

கல்வி அமைச்சரின் கூற்றுக்கிணங்க தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளப் போவதாகத் தெரிகிறது. வருகின்ற ஜனவரி மாதம் ஆரம்பத்திலேயே இதற்கான முடிவுகளை எட்ட வேண்டும் என்பது கல்வி அமைச்சரது தீர்மானமாக இருக்கின்றது. அந்தவகையில் இது அவசியமானதும் அர்த்தமுள்ளதுமான ஒரு முன்னெடுப்பாகவுள்ளதை நாம் முதலில் பாராட்டுகின்றோம். 

ஆனால், இவ்வெற்றிடங்களை நிரப்புவதில் இரண்டு விதமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதனை நாம் அவதானிக்கின்றோம். இதில் ஒன்று தற்போது அதிபர் சேவை தரத்தில் இருக்கின்றவர்களின் தரங்களையும்  தகைமைகளையும் கொண்டு உரிய வெற்றிடங்களை நிரப்புவது. இரண்டாவது உள்ள வெற்றிடங்களுக்கு போதுமானவர்கள் இல்லாத நிலையில் அதிபர் சேவை தரம் 3 இற்கு புதிய ஆட்சேர்ப்பு செய்வது என்ற இரு நடைமுறைகளையும் பின்பற்றும் அவசியம் ஏற்படலாம். 

இது இரண்டுக்கும் மேலாக, தற்போது அதிகமான பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்கள் பொறுப்பாக்கப்பட்டு அப்பாடசாலைகள் அவர்களின் பிடியில் இருக்கின்றன. இப்பாடசாலைகளுக்கு உரிய தரத்திலுள்ள அதிபர்களை நியமிப்பதில் சில சவால்களும் பிரச்சினைகளும் எழுவதும் அதனால் அது நிறைவேற்றப்படாமல் இடைநிறுத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டுமிருக்கின்றது. 

இத்தகைய பின்னணியைக்கொண்ட அதிபர் நியமனப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவதில் தற்போதுள்ள கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும விடுத்துள்ள அறிக்கை எத்தகைய பின்புலங்களை உள்ளடக்கி இருக்கின்றது? எதனை முன்னிலைப்படுத்தி இது அமையப் போகின்றது என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. 

ஏனெனில், எந்தவொரு அதிபர் நியமனத்தையோ, அது தொடர்பான முன்னெடுப்புகளையோ மேற்கொள்ளும் போது, அமைச்சர் என்ற அதிகாரம், அரசியல் பக்கச்சார்பான முன்னெடுப்பு என்பதற்கு அப்பால் இவ்வெற்றிடங்களை நிரப்புவதில் உள்ள தாபன விதிமுறைகள், சட்டத் தேவைகள், சுற்றுநிருபங்கள் என்பனவற்றைப் பின்பற்றுவதோடு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அதிபர் சேவை தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள 1885/31 ஆம் இலக்க 22.10.2014 ஆம் திகதிய இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பை அவசியம் அவதானித்து அதன் விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றியதாக, இக்காரியங்களை முன்னெடுப்பது சாலச் சிறப்பானதாக இருக்கும்.  

இதன்மூலம் வேற்றுமை அற்ற, பக்கச் சார்பு இல்லாத, அரசியல் பழிவாங்கல் செய்யாத நீதியும் நேர்மையும் நிறைந்த அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாட்டை நிறைவேற்ற முடியும்.  

இதனை இங்கு அழுத்திக் குறிப்பிட வேண்டிய தேவை கல்வி அமைச்சருக்கு  இருக்கிறது என்றால், கடந்த ஆட்சியில் இறுதியாக வழங்கப்பட்டுள்ள அதிபர் சேவை தரம் 3 ற்கான வெற்றிடங்களை புதிய நியமனங்கள் மூலம் நிரப்பியதில் அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பிலுள்ள விடயங்களுக்கு முற்றிலும் மாற்றமாக பல முறைகேடுகள் இடம்பெற்று தமிழ் மொழி மூல ஆட்சேர்ப்பு அநீதியாகவும் பாரபட்சமாகவும் அமைந்ததை நாம் அறிவோம்.  

போட்டிப் பரீட்சை ஒன்றின் மூலம் வழங்கப்பட்ட நியமனமாக அது இல்லாமால், அன்றிருந்த கல்வி அமைச்சர் தனது நேரடி செல்வாக்கில் வழங்கிய ஒரு நியமனமாகவே அது தென்பட்டது. தேர்தலை முன்வைத்து அவசர அவசரமாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டதில் போட்டிப் பரீட்சைகள் மீதிருந்த நம்பிக்கையும் எமக்கு இல்லாமல் போய்விட்டது. 

இத்தனைக்கும், கடந்த ஆட்சியில் இருந்த கல்வி அமைச்சர் உட்பட அவ் அமைச்சிலிருந்த செயலாளர் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளும் அதிபர் நியமனங்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பினை பின்பற்றாமை அல்லது அப்படி ஒன்று இருப்பதாக கருத்தில் கொள்ளாது அந்த நியமனங்களை செய்தமை ஒரு சமூக அநீதியாக குற்றம் சுமத்த வேண்டியதாக இருக்கின்றது. 

குறிப்பிட்ட அதிபர் சேவை பிரமாணக் குறிப்பில் தமிழ் மொழியிலுள்ள வெற்றிடங்களுக்கு தனியாக ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்ற கட்டாய விதியினைக் கூட அன்றிருந்த கல்வி அமைச்சின் செயலாளர் அறியாத ஒருவராகவே காட்டிக்கொண்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சென்று இதற்கான முறையீட்டினை செய்யும் போதுதான் இப்படி ஒரு விடயம் பிரமாணக் குறிப்பில் இருப்பதை அவர் அறிந்து கொண்டு கவலை தெரிவித்தார்.  

இந்த முன் உதாரணமும் இந்த நியமன மோசடியும் இனிவரும் எந்த ஆட்சியிலும் எந்த அரசாங்கத்திலும் இடம் பெறாதவாறு உரிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பு பின்பற்றப்படுவதில் அமைச்சர் உட்பட கல்வி அமைச்சிலுள்ள செயலாளர்கள், உரிய அதிகாரிகள் அனைவரும் இது விடயத்தில் போதிய தெளிவு கொள்வதோடு, அதனை பின்பற்றும் நேர்மையும் கொள்ள வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. 

இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் தற்போதுள்ள கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையின்படி எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதில் கடந்த ஆட்சியில் அதிபர் சேவை தரம் 3 நியமனத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மொழி மூலமான ஆசிரியர்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம்.  

வெளிப்படையாக அம்பலத்திற்கு வந்த ஓர் அநீதியாகவே தமிழ் மொழி மூலமான ஆட்சேர்ப்பு தனியாகச் செய்யப்படாமல் சிங்கள மொழியுடன் சேர்த்து நடைபெற்று தமிழ் மொழிமூல வெற்றிடங்கள் பறிபோயிருந்தன. இப்பிரச்சினையை கல்வி அமைச்சுக்கு கொண்டு செல்வதற்கிடையில் உரியவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு உரிய ஆட்சேர்ப்பு விடயம் முடிவாக்கப்பட்டுவிட்டது.  

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம்வரை சென்று தங்களுக்கான நீதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற இந்நிலையில் இந்த ஆட்சி மாற்றமானது நல்லதொரு சகுனமாகவே தெரிகிறது. அதிலும் தற்போதுள்ள கல்வி அமைச்சர் வருகின்ற ஜனவரி மாதத்தினுள் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதாக கூறி இருப்பது இன்னும் சாதகமான முடிவுகள் கிட்டும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. 

எனவே, உரிய அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் பணியை அவசரமாக ஜனவரி மாதத்தினுள் செய்வதாயின் ஏற்கனவே அதிபர் சேவை தரத்திலுள்ளவர்களை மாத்திரமே உள்வாங்கி வெற்றிடங்களை நிரப்ப முடியும். மாறாக புதிதாக அதிபர் சேவை நியமனங்களை வழங்குவதற்கு காலம் போதாது. ஏனெனில் புதிதாக நியமனங்கள் வழங்குவதாயின் அதிபர் சேவை பிரமாணக் குறிப்பின் பிரகாரம் போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையிலேயே ஆட்சேர்ப்புச் செய்ய முடியும். இவற்றை செய்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பது தவிர்க்க முடியாதது.  

ஆகவேதான், தற்போது உருவாகியுள்ள புதிய ஆட்சியும் புதிய கல்வி அமைச்சும் அதிபர் சேவை வெற்றிடங்களை நிரப்புவதில் கடந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டு நீதிமன்றம் வரை சென்றுள்ள தமிழ் மொழி மூலமான தரப்பினருக்கு தீர்வு வழங்கும் நன் நோக்கிலும் அவர்களது நீதிமன்ற நடவடிக்கையினை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலும் உரிய அதிபர் சேவை தரம் 3 இற்கான நியமனத்தில் தமிழ் மொழி மூலம் ஏற்பட்டுள்ள தவறினை நீதி மன்றத்திற்கு தெரியப்படுத்தி அதனை சரிசெய்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நியமனங்களை தாங்கள் வழங்குவதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்வார்களாயின் உரிய வழக்கினையும் முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வினையும் வழங்க முடியும்.  

கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறு என்பதனால், இந்த ஆட்சியிலிருக்கும் கல்வி அமைச்சரும் அமைச்சின் அதிகாரிகளும் அதனை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நியாயமும் முறையில் கிட்ட வேண்டும் என்ற மனப்பாங்கில் செயற்பட்டால் ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இன்னும் அதிகரிப்பதோடு, இந்த ஆட்சியின் மீதுள்ள நன்மதிப்பும் மேலோங்கும்.

நவாஸ் செளபி   

Comments