அருளர்: விடுதலை அமைப்புகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபட்டவர் | தினகரன் வாரமஞ்சரி

அருளர்: விடுதலை அமைப்புகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபட்டவர்

ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமான அருளர் (அருளப்பு அருட்பிரகாசம்) 03.12.2019 அன்று காலமாகி விட்டார். ஈழத்தமிழரின் அரசியல் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்தது. அது தனியே தமிழ் மக்களின் விடுதலையாக மட்டும் இருக்க முடியாது.

மலையகத் தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரின் விடுதலையையும் உள்ளடக்கியது என்ற எண்ணத்தின்பாற் செயற்பட்டவர் அருளர். இதைச் சாத்தியப்படுத்த வேண்டுமானால் அகன்ற பார்வையோடும் ஜனநாயக உள்ளடக்கத்தோடும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கருதியவர்.

இதனால் அவருடைய நெருக்கமும் இணைவும் ஈரோஸ் இயக்கத்தோடிருந்தது. ஈரோஸ் இயக்கத்துக்கும் பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையில் இருந்த நல்லுறவின் பயனாக பலஸ்தீனத்தில் பல போராளிகள் ஆயுதப்பயிற்சியைப் பெறக் கூடியதாக இருந்தது. இதனால் முதலாவது அணியில் பயிற்சியைப் பெற்றார் அருளர்.

பலஸ்தீனத்தில் பயிற்சியைப் பெற்ற அருளர் பின்னர் நாடு திரும்பி, வவுனியாவுக்கு அண்மையில் உள்ள கன்னாட்டி விவசாயப் பண்ணையில் செயற்பட்டார்.

இதற்கு முன்பு அருளர், ரஷ்யாவில் அபிவிருத்திப் பொறியலாளராகப் படித்துப் பட்டம் பெற்று லண்டன் சென்று சில காலம் அந்தத் துறையில் பணியாற்றியிருந்தார். ஆனாலும் மக்களுடைய அரசியல், சமூக விடுதலையை முன்னிலைப்படுத்தியதால் அதையெல்லாம் தூக்கி ஒரு புறமாக வைத்து விட்டு கன்னாட்டிக்கு வந்து விவசாயப் பண்ணையில் வேலை செய்தார்.

இந்த விவசாயப் பண்ணை அருளரின் தந்தையாருடையது. இந்தப் பண்ணையில்தான் பின்னாளில் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் வந்து வேலை செய்தனர். அதாவது பண்ணையில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை கொலையைத் தொடர்ந்து நடந்த தேடுதலின்போது கன்னாட்டிப் பண்ணையிலிருந்தவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டனர். இதில் அருளரின் தந்தையும் சகோதரர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரின் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறையிலும் அடைக்கப்பட்டனர். அருளருடைய தந்தையாரும் சகோதரர்களும் நான்கு மாதங்கள் போகம்பரைச் சிறைச்சாலையில் சிறைவாசத்தை அனுபவித்தனர். 

வழக்கிலிருந்து விடுதலையாகிய அருளர் தொடர்ந்து போராட்டப்பணிகளில் ஈடுபட்டார். இந்தக்காலத்தில் அவர்  “லங்கா ராணி” என்ற நாவலை எழுதினார். இது 1977 ஆம் ஆண்டு நடந்த இன வன்முறை அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட ஈழப்போராட்ட நாவலாகும். இதுவே ஈழப்போராட்டத்தின் முதலாவது  இலக்கியப் பிரதி – நாவல் என்று கருதப்படுகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற லங்கா ராணி என்ற கப்பலே இந்த நாவலின் குறியீடு. அருளரும் இந்தக் கப்பலில் பயணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்குப் பிறகு அருளர் லண்டன், இந்தியா, இலங்கை என்ற மூன்று புள்ளிகளில் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்தார். கூடவே அன்று பல இயக்கங்களாக இருந்த விடுதலை அமைப்புகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். இதனால் அருளருக்குப் பல இயக்கத் தலைமைகளோடும் முக்கிய போராளிகளோடும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. குறிப்பாக இதற்காக விசுவானந்த தேவா (என்.எல்.எவ்.ரி), உமா மகேஸ்வரன் (புளொட்), பிரபாகரன் (விடுதலைப்புலிகள்), பாலகுமாரன் (ஈரோஸ்), பத்மநாபா (ஈ.பி.ஆர்.எல்.எவ்), சிறிசபாரத்தினம் (ரெலோ) ஆகியோருடன் இணைந்தும் பழகியும் உறவாடினார். ஒரு காலத்தில் அனைத்து இயக்கங்களாலும் மதிக்கப்பட்ட ஒருவராக அருளர் விளங்கினார். அந்த மதிப்பு அவர் மறையும் வரையிலும் தொடர்ந்தது. எல்லாக்கரைகளையும் தழுவிப் பாயும் ஆற்றினைப்போலவே அருளர் விளங்கினார்.

ஆனால், அருளர் மேற்கொண்ட இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை. என்றாலும் அவர் இறுதி வரையில் சோர்ந்து விடவில்லை. இதற்குப் பிரதான காரணம் அவர் ஈழ அரசியல் சிந்தனையில் துரதிருஷ்டவசமாக ஊடுருவி தீராத நோயாகப் பரவிய தீண்டாமை (துரோகி – தியாகி என்ற வேறுபாடு) நோயில் சிக்கிக் கொள்ளவில்லை. அருளருடைய இயல்பும் அடையாளமும் இந்தச் சிந்தனைக்கு அப்பாலானது. அதனால்தான் அவருக்கு புலிகளோடும் உறவும் நெருக்கமும் இருந்தது. புலிகள் எதிர்த்த இயக்கங்கள், தலைவர்களோடும் நெருக்கமும் உறவும் நீடித்தது. இதற்கு இன்னொரு காரணம், அருளர் எல்லோரோடும் வெளிப்படைத்தன்மையான உறவையும் செயற்பாட்டையும் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

1980 களின் முற்பகுதியில் ஈரோஸ் இயக்கம் இரண்டாகப் பிளவுண்டு, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் என ஆகியபோது அருளர் இரண்டுக்கும் வெளியே நின்று கொண்டார். ஆனாலும் இரண்டு இயக்கங்களோடும் அருளருடைய உறவும் தொடர்பும் நீடித்தது. பின்னர் இலங்கை – இந்திய ஒப்பத்தத்தின் விளைவாக உருவாகிய வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையில் அருளர், ஆய்வும் அபிவிருத்தியும் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

அந்தச் சொற்ப காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. இதற்கென திருமலை கப்பல் துறை என்னும் பிரமாண்டமான நிலப்பரப்பில் ஒரு பாரிய கைத்தொழில் பேட்டையை நிறுவுவதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் மிக முக்கியமான ஆவணமொன்றைத் தயார்படுத்தியிருந்தார். ஆனால், பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் அதை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. 

ஆனாலும் அருளர் சோர்ந்து விடவில்லை. அவர் வேறு தளங்களில் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்தார். ஈரோஸின் ஈழ ஆய்வு நிறுவனம், விடுதலைப்புலிகளின் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றில் ஆலோசகராகப் பணியாற்றினார். அரசியற் பங்களிப்பாக தமிழ்ச்சமூகத்தின் வரலாறு, அதனுடைய குடிப்பரம்பல், அதனுடைய இருப்புத் தொடர்பான ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். இதன்விளைவாக அவர் எழுதிய The Traditional Home Land Of The Tamils – The miing Pages Of Sri Lankan History, Monetary Exploitation, Global Sustainnability Initiative போன்ற நூல்கள் முக்கியமானவை. இதை விட ஏராளமான கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். 

ஈழப் போராட்டத்தில் தனி ஆளுமையாக சில காத்திரமான பதிவுகளைச் செய்திருக்கின்றார் அருளர் என்பதோடு, ஈழப்போராட்டத்தில் முற்போக்கு பாரம்பரியம் ஒன்றை உருவாக்குவதிலும் தேசிய சமூக விடுதலைப்போராட்டத்தில் சர்வதேச சகோதரத்துவத்தையும் விடுதலை இயக்கங்களிடையே ஐக்கியத்தை வலியுறுத்துவதிலும் ஒரு முன்னோடியாக செயற்பட்டவர் என்பது முக்கியமானது.

மாக்ஸிஸ தத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு, ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தாபகர் இளையதம்பி இரத்தினசாபதியோடு செயற்பட்ட அருளர் பின்னாளில் பிரபாகரனின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் நிலைக்கு மாற்றமடைந்திருந்தார். இதனால் ஏராளமாக விமர்சனங்கள் அருளரின் மீது எழுந்தது. ஆனாலும் அவர் எதன் பொருட்டும் சோர்ந்து இருந்து விடவில்லை. தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். இதற்காகஅவர் லண்டனில் இருந்து வந்து தாயக மண்ணிலேயே தங்கியிருந்தார். 

அருளரைப்பற்றிய வரலாற்றுப்பதிவுகள் நிறைய உண்டு. அந்தளவுக்கு அவர் தன்னை இந்த வரலாற்றோடும் இந்த மக்களோடும் பதிந்து விட்டிருக்கிறார்.    

கருணாகரன்

Comments