சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள சுவிஸ் தூதரக விவகாரம் | தினகரன் வாரமஞ்சரி

சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள சுவிஸ் தூதரக விவகாரம்

நாட்டின் புதிய தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதிவியேற்றுக்ெகாண்டதோடு, அவர் மீதான எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தும் தகர்ந்து போயின. எதிர்ப்பிரசாரம் செய்தவர்கள்கூட வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்கள். 

ஜனாதிபதியின் எளிமையான நடைமுறைகளும் நேர்த்தியான செயற்பாடுகளும் பல சர்வதேச நாடுகளின் தலைவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டன. இந்தியா செங்கம்பள வரவேற்பளித்துக் கௌரவித்தது. ஏழாயிரம் கோடி ரூபாய் கடனுதவியைக்கூட வழங்கியது. உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளை அனுப்பி வைத்ததோடு புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றத் தயார் எனத் தெரிவித்திருந்தார்கள். 

இவையெல்லாம் நடந்த ஒரு வாரத்தில் கறைபடிய வைக்கும் ஒரு செய்தி. கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுக் காரில் வைத்தே விசாரணை செய்யப்பட்டதாக முறைப்பாடு.  

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர் இன்னமும் பொலிஸாரிடம் முறைப்பாட்டைச் செய்யவில்லை. சுவிஸ் தூதரகம் மட்டுமே முறையிட்டிருக்கின்றது. " எங்கள் தூதரகப் பெண் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டதை எந்த விதத்திலும் ஏற்றுக்ெகாள்ள முடியாது" என்றது சுவிஸ் அரசு. சுவிற்சர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சியை அழைத்துத் தனது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கின்றது. அதேநேரம், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணையும் அவரின் குடும்பத்தவர்களையும் ஆகாய அம்பியுலன்ஸ் மூலம் சுவிற்சர்லாந்துக்கு அழைத்துச் செல்லவும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பினைத் தெரிவிக்கவும் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது. ஆளடையாளம் தெரியாத ஒருவரை நாட்டைவிட்டுச் செல்ல அனுமதிக்க முடியாது என்று

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். 

சர்ச்சைக்குள்ளாகியுள்ள சுவிஸ் தூதரகப் பணியாளர் தொடர்பான தகவல்கள் முன்னுக்குப் பின் முரணானதாகவுள்ளபோதும் அதனை இராஜதந்திர ரீதியில் விசாரித்து உண்மைநிலையை வெளிப்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார். 

ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத எவரையும் மறைமுக செயற்பாடுகள் மூலம் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க முடியாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் ஆணித்தரமாக கூறியிருக்கின்றார்.  

"பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் பணியாளரும் அவரது குடும்பத்தாரும் இருக்கும் இடம் எமக்குத் தெரியாது என்கின்றபோதும் அவர்கள் தற்போது நாட்டுக்குள் பாதுகாப்பாக இருப்பதாக சுவிஸ் தூதுவர் எம்மிடம் தெரிவித்தார். அப்பெண் எங்கு இருக்கின்றார் என்பது தெரியாமல் எவ்வாறு எம்மால் பாதுகாப்பு வழங்க முடியும்?" என்பது அமைச்சரின் கேள்வி. அப்பெண்ணை நேரில் வந்து வாக்குமூலம் வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன் அதற்கான பாதுகாப்பை வழங்குவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்.  

சுவிஸ் தூதரக பணியாளர் பற்றிய முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பாதிக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண் ஊழியரின் வாக்குமூலம் அவசியம் என்பதை உலக நாடுகளுக்கு வலியுறுத்தும் வகையில், வெளிவிவகார அமைச்சர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர்களையும் அமைச்சில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.  

"இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் பெற்றுத் தந்த தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டே தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊழியர் தொடர்பிலான எவ்வித விவரங்களும் எமக்கு பெற்றுத் தரப்படவில்லை. சுவிஸ் தூதுவர் வழங்கிய தரவுகளும் ஒன்றுக்குப் பின் முரணானவை. வாக்குமூலம் பெறுவதற்காக சிஐடியினர் அவரது இருப்பிடம் நோக்கிச் சென்றபோது அவர்கள் குடும்பத்தோடு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவரை வாக்குமூலம் வழங்குமாறு நாம் சுவிஸ் தூதுவரிடம் பல தடவைகள் வலியுறுத்தி வருகின்றோம். எனினும், அவர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக வாக்குமூலம் அளிக்கும் மனநிலையில் இந்த ஊழியர் இல்லை என்று அவர் எமக்குத் தெரிவிக்கின்றார்," என்றும்  அமைச்சர்  குறிப்பிட்டிருக்கின்றார்.  

"சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஊழியர் பற்றிய ஆள் அடையாளம் இன்னமும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அவர் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாக சுவிஸ் நாட்டு வைத்தியர் ஒருவர் வெளியிட்ட கடிதமொன்றை இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் எம்மிடம் சமர்ப்பித்துள்ளார். குறிப்பிட்ட வைத்தியர் பாதிக்கப்பட்ட பெண்ணை வீடியோ காட்சி மூலம் பரிசோதித்ததாக எமக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊழியருக்கு சிகிச்சையளிப்பதற்காக அவரையும் அவரது குடும்பத்தாரையும் ஆகாய எம்பியுலன்ஸ் மூலம் சுவிட்சர்லாந்துக்குச் செல்ல அனுமதிக்குமாறும் சுவிஸ் தூதுவர் எம்மிடம் கோரியுள்ளார். சுவிட்சர்லாந்துக்கான இலங்கை தூதுவர் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தபோதும் இதே கோரிக்கையையே அவர் முன்வைத்துள்ளார். என்றபோதும் அரசு என்ற வகையில் பெயர், கடவுச்சீட்டு இலக்கம் உள்ளிட்ட எந்தவொரு விடயமும் தெரியாத ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத ஒருவரை பிறர் முன்வைக்கப்படும் காரணங்களுக்காகக் குடியகல்வு சட்ட திட்டங்களை மீறி நாட்டைவிட்டுச் செல்ல அனுமதிக்க முடியாது," என்றும் அமைச்சர் குணவர்தன தெரிவித்திருக்கிறார்.  

எனினும், இப்பெண் ஊழியர் நாளை திங்கட்கிழமை 09ஆம் திகதிக்கு முன்னர் வாக்குமூலம் அளிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தின் உத்தரவின்றி நாட்டை விட்டுச் செல்ல முடியாதென்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், அப்பெண் தனக்கு நடந்தது என்னவென்பதை தெரியப்படுத்துவதற்காக வாக்குமூலம் அளிக்க முன்வருவார் என நம்புகின்றோமென்றும் அமைச்சர் நம்பிக்கை   வெளியிட்டிருக்கிறார்.  

"சுவிஸ் தூதரக பெண் ஊழியர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. எனினும் 27ஆம் திகதி காலை அனைத்து வெளிநாட்டுச் செய்திகளிலும் இச்செய்தி வெளியாகியிருந்தது. அப்படியானால், 26ஆம் திகதி இச்செய்தி வெளிநாட்டு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 27ஆம் திகதி காலை சுவிஸ் தூதுவர் என்னைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அதற்கமைய அவர் எங்களைச் சந்தித்தபோதே இச்சம்பவம் தொடர்பில் எமக்குத் தகவல் தந்தார். அவர் வழங்கிய நேரம், இடம் ஆகிய தகவல்களைக் கொண்டு அக்கணமே உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு வெளிவிவகார அமைச்சு உத்தரவு பிறப்பித்தது. தகவல் கிடைத்தது முதல் அரசாங்கம் சிறிதும் தாமதிக்காமல் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது," என்றும் அமைச்சர் விளக்கமளித்திருக்கிறார். 

இதனிடையே, சுவிட்சர்லாந்து தூதரகம் இலங்கையர்களுக்கு சுற்றுலா வீசா வழங்குவதையும் நிறுத்திவிட்டது என்றும் ஒரு செய்தி பரப்பப்பட்டது. பின்னர் அந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று அறிவிக்கப்பட்டது. வெ ளிவிவகார அமைச்சும் சுவிற்சர்லாந்து நாட்டின் சமஷ்டி திணைக்களமும் இவ்வாறு மறுப்பு தெரிவித்திருக்கிறது. இந்தச் செய்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தொடர்பில் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்கு மகிழச்சியூட்டுவதாக இருக்கலாம். ஆனால், ஒரு நாடென்ற வகையில், ஒரு புதிய ஜனாதிபதியைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய சூழ்ச்சியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். 

தேர்தலுக்கு முன்னர் இந்த அரசாங்கம் மீது சேறு பூசியவர்களே தற்போது எதிர்க்கட்சியிலிருந்தபடி ஜனாதிபதியின் ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதனால், இச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகள் முடிவடையும் வரை உண்மையைத் திரிபுபடுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுக்காது ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

ஆனால், சில ஊடகங்கள் அதுபற்றியெல்லாம் அலட்டிக் ெகாள்வதாகத் தெரிவதில்லை. ஆட்சிக்கு வருகின்றவர்களுக்கு எதிராகவே செய்திகளை வெளியிட வேண்டும்; அப்போதுதான் மக்கள் மத்தியில் பத்திரிகைக்குச் செல்வாக்கு காணப்படும். இல்லாவிட்டால், மக்கள் மறந்துவிடுவார்கள் என்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்றதுமே மேற்கொண்ட சில எளிமையான நடவடிக்ைககள் , மக்கள் மனத்தினில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்கவியலாது. இஃது எதிர்மறையாக விமர்சித்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.  

கோட்டாபய ராஜபக்‌ஷ ஒரு பயங்கரமான மனிதர்; அவர் பதவிக்கு வந்தால், இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்மறையாக எதிர்வு கூறியவர்களின் கருத்தை மெய்ப்பிக்க வேண்டிய தலையாய தேவையொன்று சில தரப்பினருக்கு இருக்கின்றது. அவர்களின் இருப்பு அதில்தான் தங்கியிருக்கின்றது. நாட்டில் மீண்டும் கடத்தல் கலாசாரம் அரங்கேறுகிறது என்பதை உலக நாடுகளுக்குச் சொல்ல வேண்டும். நாங்கள் அச்சப்பட்டது இதற்காகத்தான், என்பதை நிரூபிப்பதற்கு சுவிஸ் தூதரக சம்பவம் அவர்களுக்கு அவல் கிடைத்தமாதிரி. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டைக்ெகாண்டிருக்கிறார் என்பது வேறு விடயம். ஆனால், அவர் பதவி ஏற்றது முதல், அவர்பற்றிப் பரப்பப்பட்ட பொய்யான பிம்பத்தைத் தகர்க்கும் விதத்திலேயே அவரது நடவடிக்ைககள் அமைந்து வந்துள்ளன. அவ்வாறிருக்கும்போது, ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டுவதென்பது புதிய அரசாங்கத்தின் மீது பழிபோடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இது வெளி நாடொன்றுடன் இராஜதந்திர ரீதியிலான முறுகலை ஏற்படுத்துவதற்குத் தீட்டப்பட்ட சதித்திட்டமாக இருக்கலாம் என்பதையும் மறுதலிக்க முடியாது. 

இதுவிடயத்தில் முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்தின தெரிவித்திருக்கும் கருத்துகள் குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்ைகயும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சுவிஸ் தூதரக விவகாரத்தைத் தவிர வேறு எவ்விதமான எதிர்மறையான விடயங்களும் நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு மற்றொரு தலையிடியை ஏற்படுத்தியிருக்கும் விடயம்தான் பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம். 

பிரிட்டனில் பொதுத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தொடர்பான கருத்து இடம்பெற்றதையிட்டு பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வெளியிட்ட குறிப்புகள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

பிரட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சி இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத்து பின்வருமாறு அமைவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிடுகிறது.  

உலகளாவிய ரீதியில் நல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதி ஆகியவற்றை எட்டுவதற்கான சர்வதேச நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் ஆதரிப்போம். அத்துடன் முன்னர் மோதல் வலயங்களாக இருந்த சைப்ரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கில் இரண்டு தேச தீர்வுக்கான எமது ஆதரவைத் தொடர்ந்து பேணுவோம்.  

மேற்படி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதையடுத்து பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் ஆலோசனையின்படி உடனடியாக கன்சர்வேடிவ் கட்சியின் இணைத் தலைவரான ஜேம்ஸ் க்லெவர்லியுடன் தொடர்புகொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை பற்றி குறிப்பிட்ட கருத்து தொடர்பாக பலத்த கண்டனத்தை தெரிவித்தார். பிரட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரான மனிஷா குணசேகர கடந்த நவம்பர் 27ஆம் தகதி கன்சர்வேடிவ் கட்சியின் இணைத் தலைவருக்கு இக்கடிதத்தை எழுதியிருந்தார்.  

இலங்கைக்கு இரு தேச தீர்வொன்று தேவை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இவ்வாறான நிலைப்பாடு பிரிட்டனின் எந்தவொரு கட்சியினதும் கருத்தாக இருந்ததில்லை.  ஐக்கிய இலங்கையில் எப்போதுமே அமைதியும் நல்லெண்ணமும் இடம்பெறுவதற்கே தொடர்ந்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்களும் அவற்றுக்குத் தலைமை தாங்கிய அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கி வந்தன என்பதை அவர் மீளவும் உறுதிப்படுத்தியிருந்தார். எனவே, இலங்கை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த பந்தி முறையாக திருத்தி எழுதப்பட்டு இலங்கை தொடர்பான கன்சர்வேடிவ் கட்சியின் நிலைப்பாடு சரியான முறையில் பிரதிபலிக்கும் வகையில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று இலங்கை உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இலங்கை உயர் ஸ்தானிகரின் மேற்படி செயற்பாடு மூலமும் கன்சர்வேடிவ் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகள் மூலமும் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதித் தலைவர் போல் ஸ்கல்லி கீழ்க்காணும் விளக்கத்தை கடந்த நவம்பர் 27ஆம் திகதி இலங்கை உயர் ஸ்தானிகரின் மின்னஞ்சல் தொடர்பினையடுத்து வழங்கியுள்ளார்.  

இலங்கை தொடர்பான கட்சியின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முறையாக விளக்கப்படுத்தும் போது இருநாட்டு ஏற்பு வரியானது மத்திய கிழக்கில் இஸ்ரேலிய- பலஸ்தீனிய நிலையைக் குறிப்பிடுவது போலவே கருதப்படுகிறது. பிளவுபட்ட சமூகங்களில் அமைதி மற்றும் நல்லிணககம் ஆகியவற்றுக்காக தற்போது இடம்பெறும் முயற்சிகள் இலங்கை மற்றும் சைப்ரஸ் பற்றிய கடப்பாடுகளின் போதும் தொடரும் என்பதையே குறிப்பிடுகிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  

மேற்படி நிலைப்பாட்டை பிரிட்டனின் சூழல் உணவு மற்றும் கிராமப்புற அலுவல்கள் தொடர்பான இராஜாங்க செயலாளர் தெரேசா வில்லியர்ஸ் மீள உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த நவம்பர் 30ஆம் திகதி அவரது சமூக ஊடக (பேஸ் புக்) பக்கத்தின் மூலம் அவர் மேலும் கூறியுள்ளதாவது:  

இரு தேசங்களுக்கான தீர்வு என்ற குறிப்பு மத்திய கிழக்கையே குறிக்கிறது. சைப்பிரஸையோ அல்லது இலங்கையையோ அல்ல. நான் இது தொடர்பாக வெளிநாட்டு செயலாளர் மொமினிக் ராப்புடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அவரும் அதனை உறுதி செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.  

பிரிட்டனில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்ெகாள்வதற்காக இவ்வாறான பரிந்துரைகள், யோசனைகள் போன்றவற்றை அந்தந்த நாடுகளின் அரசியல் கட்சிகள் முன்வைப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. அதேநேரம், தமிழர்களுக்கு அந்த நாடுகளில் அரசியல் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. அண்மையில் அவுஸ்திரேலியா தமிழையும் தேசிய மொழியாக அங்கீகரித்திருக்கின்றது. 

இலங்கையைப் பொறுத்தவரை, இரண்டு தேசம் என்கின்ற கோஷம், பிரச்சினையின் தொடக்கக் காலத்திலேயே முன்வைக்கப்பட்டு நீர்த்துப்போன ஒரு விடயமாகும்.  

தனிச் சிங்களச் சட்டம் அல்லது 1956ஆம் ஆண்டு 33ஆம் இலக்க அரச கரும மொழிச் சட்டமானது, 1970களின் இறுதியிலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற போருக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாகும். அச்சட்டமும் வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களும், பல்கலைக்கழக தேர்வில் நடைமுறைப்படுத்தப்பட்ட தரப்படுத்தலும் உரிமை கேட்ட போதெல்லாம் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டமையும், ஆரம்ப காலத்தில் முக்கிய அரசியல் பிரச்சினைகளாகும். 

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று, ஆங்கிலேயரைப் போல் வாழ்ந்த பண்டாரநாயக்க, அடிப்படையில் ஓர் இனவாதியல்ல. ஆனால், தமது எதிர்கால அரசியல் நலனைக் கருதி, அவர் ஒரு சந்தர்ப்பவாதியானார் என்றே சொல்கிறார்கள். சிங்கள மொழி, அரசகரும மொழியாக்கப்பட்ட போது, கலாநிதி என்.எம்.பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா போன்ற இலங்கையில் அப்போதிருந்த இடதுசாரியினர், அதனைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்கள், 1930களில் இருந்தே சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரசகரும மொழிகளாக்கப்படவேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 'தனிச் சிங்கள'ச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றிய கலாநிதி 

கொல்வின் ஆர்.டி. சில்வா, ஒரு மொழியென்றால் இரு நாடாகிவிடுவோம், இரு மொழிகளாக இருந்தால் ஒரே நாடாக இருப்போம் என எச்சரித்தார். 'தனிச் சிங்கள'ச் சட்டத்தை எதிர்க்கும் பலர், இன்னமும் கொல்வினின் இந்தக் கூற்றை பாராட்டுகின்றனர். அதே கொல்வின், அரசியலமைப்புத்துறை அமைச்சராக இருந்த போதே 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பு வரையப்பட்டது. அதனை வரைவதில் முன்னணியில் இருந்து உழைத்தவரும் அவரே. ஆனால், தாம் போதித்த அந்தக் கொள்கையை அந்த யாப்பு வரைவின் போது பின்பற்ற அவரே பின்வாங்கினார் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். 

இவ்வாறு சந்தர்ப்பவாத அரசியல் செல்நெறியும் ஜனநாயகப் பண்புகள் பக்குவப்படாத நிலையிலும் இரு தேசக்ெகாள்கை என்பது எந்த விதத்திலும் ஏற்புடையதாக இருக்கமாட்டாது. எனவே, இந்தக் கோஷங்கள் வீணான சந்தேகங்களையும் பிரச்சினைகளையுமே தோற்றுவிக்க வழிவகுக்கும். ஆகையால், தமிழர் அரசியல் மிகவும் நிதானப்போக்கில் நகர்த்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.   

விசு கருணாநிதி

Comments