டெங்கு வெற்றிகொள்ள முடியாத சவாலா? | தினகரன் வாரமஞ்சரி

டெங்கு வெற்றிகொள்ள முடியாத சவாலா?

இலங்கையில் மழைக்காலநிலையுடன் சேர்த்து தீவிரமடையும் நோய்களில் டெங்கு நோய் பிரதானமானதாக விளங்குகின்றது. இந்நிலைமை கடந்த இரண்டொரு தசாப்தங்களாக ஏற்பட்டுள்ளதோடு அது நீடித்தும் வருகின்றது.

அந்த வகையில் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் இந்நாட்டுக்குக் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் விளைவாக டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகளின் பெருக்கமும் பெரிதும் அதிகரித்துள்ளது. அதனால் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் டெங்கு நோய்க்கு உள்ளானவர்களதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது.

இவ்வாறான சூழலில், ‘வட கீழ் பருவ பெயர்ச்சி மழைவீழச்சியும் தற்போது ஆரம்பித்திருக்கின்றது. இதன் விளைவாகவும் இந்நாட்டுக்கு கிடைக்கப்பெறும் மழைவீழ்ச்சியின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியமே நிலவுகின்றது. அதனால் டெங்கு வைரஸைக் காவிப்பரப்பக்கூடிய நுளம்புகள் பல்கிப்பெருகக்கூடிய அச்சுறுத்தலும் மேலும் அதிகரிக்கலாம்’ என டெங்கு ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்திருக்கின்றார். 

இம்மழைவீழ்ச்சிக் காலப்பகுதியில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கும் அதிக மழை வீழச்சி கிடைக்கப்பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதனால் அப்பிரதேசங்களிலும் இந்நோய் தீவிரமடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட டொக்டர் அருண ஜயசேகர, தற்போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் டெங்கு நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.  

அதனால் ‘இவ்வைரஸைக் காவிப்பரப்பக்கூடிய நுளம்புகள் பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பது தம் பணியென ஒவ்வொருவரும் கருத வேண்டும். இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி செயற்படுவது மிக அவசியம்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையில் டொக்டர் அருணவின் இந்த வலியுறுத்தலை சாதாரண ஒன்றாக நோக்க முடியாது. ஏனெனில் இவ்வைரஸ் கடந்த 11மாதங்களிலும் 82ஆயிரம் பேரைப் பாதித்துள்ளதோடு 90பேர் மரணமடையவும் காரணமாக அமைந்துள்ளது. அதனால் இவ்வைரஸ் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்படுவது இன்றியமையாததாகும்.  

இது ஒரு வைரஸ் நோய். இதனை நுளம்புகளில் காணப்படும் ஈடிஸ் எஜிப்டைஸ் மற்றும் ஈடிஸ் அல்பொபிக்டஸ் என்கின்ற இரு வகை நுளம்புகள் தான் காவிப்பரப்புகின்றன. என்றாலும் தெளிந்த நீர் தேங்கும் இடங்களில் தான் இவ்வின நுளம்புகள் பல்கிப்பெருகும் தன்மையைப் பெரிதும் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மழை நீர் தேங்கும் இடங்கள் இதற்கு நல்ல வாய்ப்பாகும். குறிப்பாக கைவிடப்பட்ட சிரட்டைகள், யோகட் கப்கள், பொலித்தீன், டயர், தயிர்ச்சட்டி, பூச்சாடி உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்கக்கூடிய எல்லா இடங்களும் இந்நுளம்புகளின் பெருக்கத்திற்கு பக்க துணையாக அமைபவையாகும். அந்த வகையில் இவ்வருடத்தின் பெரும்பகுதி மழைக்காலமாக விளங்கியதால் தான் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் டெங்கு நுளம்பின் பெருக்கம் பெரிதும் அதிகரித்திருக்கின்றது. இதனை நகர மற்றும் துணை நகரப் பிரதேசங்களிலும் கிராமங்களிலும் கூட பரவலாக அவதானிக்க முடிகின்றது. 

இவ்வாறு பெருகும் இந்நுளம்புகள் டெங்கு நோய்க்கு உள்ளானவரை குத்துவதன் ஊடாக டெங்கு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றது. அந்த நுளம்பு சுகதேகிக்கு குத்தும் போது தான் டெங்கு இவ்வைரஸ் கடத்தப்படுகின்றது. மற்றப்படி இது ஆளுக்கு ஆள் பரவக்கூடிய வைரஸ் அல்ல.

அறிகுறிகள்...

இவ்வாறு இவ்வைரஸ் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து 4முதல் 7நாட்களுக்குள் டெங்கு நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படும். இதன் பிரதான அறிகுறியாக முதலில் இலகுவான காய்ச்சல் வெளிப்பட்ட போதிலும் அக்காய்ச்சல் திடீரென தீவிரமடையும். அத்தோடு கண்களின் பின்பகுதியில் வலி, தசை, மூட்டு மற்றும் என்புகளில் வலி, கடும் தலைவலி, தோலில் அரிப்பு, சிகப்பு புள்ளிகள் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும்.  

இதற்கு உரிய நேர காலத்தில் அவசியமான மருத்துவ பராமரிப்பு அளிக்கத் தவறினால் இந்நோய் சில சமயம் தீவிர நிலையை அடைய முடியும். அதன் விளைவாக டெங்கு குருதிப்பெருக்குக்கு உரிய அறிகுறிகள் அல்லது டெங்கு அதிர்ச்சிக்குரிய குணாம்சங்கள் வெளிப்படலாம். அவற்றில் கடும் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றோட்டம், வலிப்பு, சிராய்ப்பு, தொடரான குருதி கசிவு என்பன குறிப்பிடத்தக்கவையாகும். அத்தோடு நோயெதிர்ப்பு சக்தியிலும் வீழ்ச்சி ஏற்படலாம். இவ்வாறான அறிகுறிகளின் தீவிர நிலையாக டெங்கு அதிர்ச்சி நிலை ஏற்பட்டு உயிராபத்து கூட ஏற்படலாம். 

அதனால் பகல் வேளையில் நுளம்பு குத்துவதைத் தவிர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் டெங்கு நுளம்புகள் பெரும்பாலும் பகல் வேளையில் குத்தும் பண்பையே கொண்டிருக்கின்றன. அதனால் உடலின் வெளிப்புறத் தோலில் நுளம்பு குத்த முடியாதபடி களிம்புகள் மற்றும் எண்ணெய் வகைகளை பூசுதல், நுளம்பு வலை பாவித்தல், வெள்ளை மற்றும் கிறீம் நிறம் கொண்ட நீண்ட ஆடைகளை அணிதல், குடியிருப்புகளுக்கு அருகில் நீர் தேங்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருத்தல், வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுகளின் திரைச்சிலைகளை கொண்டு நுளம்பு வர முடியாதபடி தடுத்தல் போனறவாறான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இவ்வருடம் டெங்கு வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானோரின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் பெரிதும் அதிகரித்துள்ளது. அதாவது 2018ஆம் ஆண்டில் 51ஆயிரத்து 659பேர் மாத்திரம் தான் இந்நோய்க்கு உள்ளாகினர். ஆனால் இவ்வருடம் முதல் 11மாதங்களிலும் 82ஆயிரத்து 679பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனைக் கடந்த வருடத்தின் 12மாதங்களை விடவும் இவ்வருட 11மாதங்களுடன்் ஒப்பிடுகையில் 30ஆயிர அதிகரிப்பை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு இவ்வருடம் இந்நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 92வரை அதிகரித்து காணப்படுகின்றது.

இதேவேளை சுகாதார அமைச்சின் தொற்று நோய் பரவுதல் தடுப்பு பிரிவின் தரவுகளின்படி இவ்வருடம் ஏப்ரல் மாதத்தைத் தவிர ஏனைய எல்லா மாதங்களிலும் இந்நோய்க்கு உள்ளானவர்களாகப் பதிவானோரின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. அதிலும் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சியும், நுளம்புகளின் பெருக்கமும் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கையும் மிக அதிகமாகும். அதனால் டெங்கு வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவென பொலிஸாரையும் முப்படையிரையும் உள்ளடக்கி நுளம்பு ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டங்களும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் வட கீழ் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை ஆரம்பித்திருப்பதால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் மேலும் தீவிரமடையக்கூடிய அச்சுறுத்தலே நிலவுகின்றது.  

என்றாலும் டெங்கு வைரஸ் தாக்கத்திற்கென விஷேட சிகிச்சைகளும் கிடையாது. மருத்துவ ஆலோசனையுடன் முழுமையான ஓய்வும் நீராகரமும் தான் இதற்கு சிறந்த தீர்வாகும். அதன் காரணத்தினால் நுளம்பு பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பதில் விஷேட கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு சுகாதார பிரச்சினை என்பதை விடவும் சமூக பிரச்சினையாகவும் நோக்கப்பட வேண்டும். மக்கள் தாம் வாழும் சுற்றாடலை நுளம்பு பெருக முடியாதபடி சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்துக்கொள்ளத் தவறக்கூடாது. இதில் ஏற்படும் தவறுகளால் தான் டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகள் பல்கிப் பெருகி மனிதர்களுக்கே பெரும் சவாலாக அமைகின்றன. அதனால் மழைக்காலத்தில் நுளம்புகள் பெருக முடியாதபடி தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது இன்றியமையாததாகும். அப்போது டெங்கு ஒரு சவாலாகவே இராது.

மர்லின் மரிக்கார்

Comments