நகரை அலங்கரிக்க வந்த மதில் ஓவியங்கள் | தினகரன் வாரமஞ்சரி

நகரை அலங்கரிக்க வந்த மதில் ஓவியங்கள்

உலக அதிசயமாக விண்ணுக்ேக தென்படும் வகையில் எழுந்த சீனப் பெருஞ்சுவருக்குப் பின்னர் உலக பார்வையை தன்வசம் ஈர்த்த ஒரு சுவராகவே ஜெர்மன் நாட்டின் பேர்லின் சுவர் எழுந்து நின்றது. அரசியல் காரணிக்காக பேர்லினை இரண்டாக பிரிக்கும் நோக்கில் எழுப்பப்பட்ட அச்சுவரானது அந்த காரணத்தையும்விட அதன் மீது பல்வேறு ஓவியர்கள் தீட்டிய ஓவியங்கள் காரணமாக உலக மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டது.  

குறிப்பாக பிரிவின் துயரத்தையும் இணைவின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் உலக ஓவியர்களால் தமது உணர்வுகளை தத்தமது ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தமை மக்களின் மனங்களை நெகிழவைக்கும் வகையில் அமைந்திருந்தது.  

1970களில் பிரபல்யமான வீதிச் சுவர் ஓவிய கலை தற்போது நம்மவரின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்திருக்கின்றது.  

சுவரில்லாத சித்திரங்களைப் பற்றி கதைகூற முடிந்த போதிலும் சுவரில்லாமல் சித்திரம் தீட்டுவதென்பது இயலாத காரியமாகும். அந்த வகையில் காலம்காலமாக இருந்த படியே இருக்கவிட்டு இருட்டடிப்புச் செய்து வந்த இந்த நாட்டின் தலைநகரம் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களின் வீதியோரங்களில் அமைந்திருக்கும் சுவர்களை தன்னார்வ இளைஞர் குழுக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் மேடையாக பயன்படுத்த ஆரம்பித்திருப்பதினாலேயே வீதி சுவரோவியம் இன்று இந்த நாட்டிலும் பேச்சுப் பொருளாகியிருக்கின்றது.  

வீதிகலைகளில் ஒன்றாக இருந்து வரும் மதில் ஓவியம் மேலைத்தேய நாடுகளில் பரிச்சியமான ஒன்றாக இருந்த போதிலும் நமது நாட்டைப் பொறுத்த வரையில் கடந்த சில வாரங்கள் வரை குறிப்பாக பாடசாலை மதில்களில் மாணவர்களைக் கொண்டு தீட்டப்படும் ஓவியங்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவையும் பெரும்பாலும் மாணவர் சமுதாயத்திற்கு படிப்பினையூட்டும் அவர்களை சமூக விரோத செயல்களிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டியாகவும் உபதேச ஓவியங்களாகவுமே இருந்து வந்திருக்கின்றன. தொழில்சார் ஓவியர்களோ, பல்கலைக்கழக நுண்கலை மாணவர்களோ பொது இடங்களில் தன்னார்வத்தினால் தூண்டப்பட்டு ஓவியம் கீறுவதென்பது இதுவரை காலமும் எமது நாட்டில் பெரிதாக காணப்பட்ட ஒரு விடயமல்ல. இந்தப் பின்னணியில் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தோடு அரசியல் தலைமைத்துவம் நாட்டையும் நகரத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை கொண்டிருப்பதை உணர்ந்த இந்த இளம் கலைஞர்கள் தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் மக்களின் கவனத்தை எளிதில் கவரக்கூடிய பிரதேசங்களை தேர்ந்தெடுத்து அங்கே அமைந்திருக்கும் சுவர்களிலும், பஸ் தரிப்பு நிலையங்களிலும் ஓவியங்களை தீட்டுவது நாடாளாவிய ரீதியில் பரவிவரும் ஒரு நிகழ்வாகி இருக்கின்றது.  

நமது நாட்டைப் பொறுத்தவரையில் சுயநலத்துடன் செயற்படும் வியாபாரத்தை நோக்காக் ​ெகாண்ட சிலர் தமது விளம்பரங்களை இலவசமாக மக்களுக்கு காட்சிப்படுத்தக் கூடிய ஒரு மேடையாகவே இதுவரை காலமும் வீதியோரச் சுவர்களை உபயோகப்படுத்தி வந்தனர். அரசியல்வாதிகள் முதல் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் வரை தத்தமது விளம்பரங்களை வீதியோரச் சுவர்களில் ஒட்டிவிட்டுச் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தனிப்பட்ட இலாபத்தை நோக்காகக் கொண்ட அத்தகைய விளம்பரச் சுவரொட்டிகளை பொதுவிடங்களை காட்சிப்படுத்துவது சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படத்தக்க குற்றமாக இருந்த போதிலும் அவர்களுக்கு தகுந்த தண்டனையை வழங்க வேண்டுமாயின் சாட்சியங்களுடன் சுவரொட்டியை ஒட்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் பொலிஸாருக்கு இருந்து வந்ததால் இதுவரை காலமும் அத்தகைய சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த எவரும் தண்டிக்கப்படவில்லை. மாறாக அரசாங்கத்தினால் பாரிய பணத்தையும் ஆளணியையும் ஒதுக்கி அத்தகைய சுவரொட்டிகளை அகற்றிவரும் செயற்பாடே முன்னெடுக்கப்பட்டு வந்தது. நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு செலுத்தும் வரியிலிருந்தே இதற்கான செலவீனமும் மேற்கொள்ளப்பட்டது. அரசுக்கு ஏற்பட்ட இந்த வீண்விரயத்தை தவிர்க்க முடியுமாயின் அதன் மூலம் எஞ்சும் நிதியையும் மக்கள் நலனுக்காக பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இருந்த போதிலும் அதற்கான ஒரு முன்மாதிரியான நடவடிக்ைக முன்னெடுக்கப்படாமை மக்களின் ஆதங்கத்துக்கு காரணமாக அமைந்திருந்தது.

தற்போது இந்த தன்னார்வ இளைஞர் குழுக்களால் மேற்கொள்ளப்படும் வீதி சுவரோவிய செயற்பாடானது மக்களின் மிகுந்த பாராட்டை பெறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.  

தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறிப்பாக, நாட்டின் பிரதான நகரங்களை சுத்தப்படுத்தும் பணி அதிகாலை 6.30 மணியளவில் பூர்த்தியடைந்திருக்க வேண்டியது. கட்டாயப்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில், சுவரோவிய செயற்பாடு அதனை மேலும் வலுவூட்டுவதாகவே அமைந்திருக்கின்றது.  

பொதுவாக மதிலோவியங்கள் மூலம் மக்கள் மத்தியில் முக்கிய விடயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கலையுணர்வை ஏற்படுத்துதல் ஆகியனவற்றை நோக்காகக் கொள்ளப்படுவதே வழக்கமாகும். அந்த வகையில் நமது நாட்டில் தற்போது வீதி சுவர் ஓவியங்கள் மூலம் கலையுணர்வுக்கு அப்பால் வரலாறு, நாட்டுப்பற்று, மதப்பற்று மற்றும் இன ஐக்கியம், சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கத்தக்க இந்நாட்டின் இயற்கை அழகு ஆகியவற்றை தலையங்கங்களாகக் கொண்ட ஓவியங்கள் தீட்டப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.  

பின்தங்கிய நிலையிலிருந்து சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அப்பயணத்தின் உந்து சக்தியாக சமூக செயற்பாடுகள் அமைந்திருந்ததை வரலாறு எமக்கு எடுத்துக் காட்டுகிறது. அந்த வகையில் நாட்டு மக்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதும் சட்டத்திற்கும் நீதிக்கும் தலைவணங்கி நடப்பதும் சமூக மாற்றத்தின் கட்டாயத் தேவைகளாக உணரப்பட்டு வரும் இத்தருணத்தில் சமூகத்தை அத்திசையில் திருப்பும் வகையிலேயே தமது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக தமது திறமையையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் இந்த இளம் கலைஞர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இது ஒரு பாரிய சமூக மாற்றத்திற்கான ஆரம்ப அத்திவாரமாக அமையுமென்ற எதிர்ப்பார்ப்பும் சமூக வலைத்தளங்களில் பெரிதாக பரவிவரும் பின்னணியில் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தன்னார்வ இளைஞர்களை அரச தலைவர் பிரத்தியேகமாக பாராட்டியிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

இந்த இளைஞர்கள் தமது முயற்சியின் மூலம் சமூகத்திற்கு புகட்ட முயலும் பாட்டத்தினை சரியாக புரிந்துக் கொள்ளும் பட்சத்தில் அது இந்த நாட்டை ஒரு புதிய திசையில் இட்டுச் செல்வதற்கான ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.

மறுபுறத்தில் இதுவரை காலமும் இலைமறைகாயாக இருந்து வந்த பல்கலைக்கழக நுண்கலை மாணவர்கள் உள்ளிட்ட இச்செயற்பாட்டில் இணைந்திருக்கும் ஏனைய கலைஞர்களினதும் திறமைகளை காட்சிப்படுத்தும் ஒரு பொது மேடையாகவும் இந்த வீதி சுவரோவியங்கள் அமைந்திருக்கின்றமை புதிய வாய்ப்புகளுக்களுக்கு வழிவகுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.  

ரவி ரத்னவேல்

Comments