பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் சிறப்பு ஊடக விருது விழா | தினகரன் வாரமஞ்சரி

பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் சிறப்பு ஊடக விருது விழா

பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் 20ஆவது சிறப்பு ஊடக விருது வழங்கல் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இம்முறை விருதுகளை பெறுவதற்காக மூன்று மொழிகளிலும், 17பிரிவுகளில் மொத்தம் 313விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. இவை நாளாந்த மற்றும் வார  இறுதிப் பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்கள் மூலம் கிடைத்திருந்தன.

இந்த விருது வழங்கல் நிகழ்வின் சிறப்பம்சமாக இடம்பெறும் வாழ்நாள்  சாதனையாளர்கள் விருதுகள் டட்லி ஜான்ஸ், திலகரட்ன குருவிட்ட பண்டார, ஏ. எல்.  கே. பெரேரா, கே. எம். எல். பி. சேனாரத்ன மற்றும் ஜி.ரி. கேதாரநாதன் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன.

இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தினால் 1999ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது வழங்கல் விழா தற்போது இலங்கை பத்திரிகை  ஆசிரியர்கள் சங்கம் மற்றும் இலங்கை பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்து  நடத்தப்படுகிறது. நாட்டில் இடம்பெறும் மிகப்பெரிய ஊடக விருது வழங்கல்  நிகழ்வு இதுவாகும்.

டட்லி ஜேன்ஸ்:

வாழ்நாள் சாதனையாளர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுள்ள டட்லி ஜாஸ்  1978ஆம் ஆண்டு செய்தியாளராக லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் 'டெய்லி  நியூஸ்' பத்திரிகை மூலம் ஊடகத் தொழிலை ஆரம்பித்தார். இவர் கொழும்பு_-13இல் அமைந்துள்ள புனித பெனடிக்ட் கல்லூரியின் பழைய  மாணவராவார். பாடசாலையின் சஞ்சிகையான ‘பென்’ சஞ்சிகையின் ஆசிரியராகவும்  இருந்துள்ளார். ஜாஸ் ஒரு சிறந்த வானொலி கலைஞராக இருந்ததோடு, 25வருடங்களாக  இலங்கை வானொலியில் பகுதி நேர தயாரிப்பாளராக கடமையாற்றியுள்ளார். இவர்  டெய்லி நியுஸ் மற்றும் ஒப்சர்வர் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக 40வருட கால  சேவையப் பூர்த்தி செய்துள்ளார்.

திலகரத்ன குருவிட்ட பண்டார:

திலகரத்ன குருவிட்ட பண்டார 1960ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஜன சமாகம  என்ற பத்திரிகை நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ‘ஜனஹித’ ‘லஸ்ஸன’ ‘உதய’  மற்றும் ‘போதா உதய’ ஆகிய பத்திரிகைகளில் இணைந்து ஊடகப் பணியை ஆரம்பித்தார்.  1970ஆம் ஆண்டு லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் 'ஜனதா' பத்திரிகையின அலுவலக  செய்தியாளராகவும் பின்னர் 1993ஆம் ஆண்டு 'சிலுமின' பத்திரிகையின் பிரதம  ஆசிரியராகவும் பதவி வகித்தார். சிலுமின பத்திரிகையின் பின்னர் ‘சரசவி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராக  இருந்த குருவிட்ட பண்டார, மீண்டும் 2000ஆம் ஆண்டு அதே 'சிலுமின'  பத்திரிகையின் ஆசிரியராகவும் 2004ம் ஆண்டு பிரதம ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

எல்.கே.பெரேரா:

எல்.கே.பெரேரா பழைய டைம்ஸ் ஒஃப் சிலோன் குழுமத்தில் தனது பத்திரிகை  வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர்களால் வெளியிடப்பட்ட லங்கா தீபவின் ஆசிரியர்  குழுவின் உறுப்பினராக 70களில் சேவையில் சேர்ந்தார். 1987-_88ஆம் ஆண்டில்,  அவர் விஜயா பத்திரிகை லிமிடெட் ஆசிரியர் குழுவில் சேர்ந்து லங்காதீப  பத்திரிகையில் பணியாற்றினார். பெரேரா செய்தி ஆசிரியராகவும்,   லங்காதீபவின் கட்டுரை எழுத்தாளராகவும் பணியாற்றினார். பின்னர் லங்காதீபவின்  துணை ஆசிரியரானார்.

கே. எம். எல். பி. சேனாரத்ன:

ஊடகத்துறையில் 63வருட கால அனுபவத்தையும் அறிவையும் பெற்றுள்ள கே. எம்.  எல். பி. சேனரத்ன கண்டியில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கொழும்பு புனித  யோசப் கல்லூலியிலும் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். அப்போதைய டைம்ஸ் ஒப் சிலொன் பத்திரிகையில் இணைந்து ஊடகப் பணியை  ஆரம்பித்தார். அதன் பின்னர் சிறிது காலத்தில் சிலோன் டெய்லி மிரர்  பத்திரிகையில் இணைந்து கொண்ட சேனாரத்ன, அப்பத்திரிகையில் புகைப்படப்பிடிப்பாளராக சேவையாற்றினார். அவர் அங்கு பணியாற்றிய காலப் பகுதியில்  புகைப்படப்பிடிப்பாளராக சேவையாற்றினார். அவர் அங்கு பணியாற்றிய  காலப் பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த சுவீடன் நாட்டின் முடிக்குரிய  16வது இளவரச் சார்ல்  யானை மீது சவாரி செய்யும் புகைப்படத்தை எடுத்த  பெருமைக்குரியவராக இருக்கிறார்.

ஜி.ரி. கேதாரநாதன்:

கேதாரநாதன் வீரகேசரி பத்திரிகையில் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தவர். யாழ். மட்டுவில் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் நீண்ட காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். இலக்கியம், ஊடகம், சினிமா, உலக அரசியல் உட்பட பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்டவர் கேதாரநாதன். இலக்கணச் சுத்தமாக தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதவும் பேசவும் ஆற்றல் படைத்தவர் அவர். கட்டுரை, செய்தி போன்றவற்றைச் செம்மைப்படுத்துவதில் தமிழ் ஊடகத்துறையில் காணப்படும் ஒருசிலரில் கேதாரநாதனும் ஒருவர். தமிழ் ஊடகத்துறையில் புதியவர்களுக்கு வழி காட்டும் திறன் கொண்டவர் கேதாரநாதன்.

Comments