பிளாஸ்ரிக் கிரகம்; எதிர்ப்பை வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம் | தினகரன் வாரமஞ்சரி

பிளாஸ்ரிக் கிரகம்; எதிர்ப்பை வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம்

இப்போது இலங்கை எங்கனும் கடும் மழை பொழிகின்றது. அதுவும் மாலை   நேரங்களில் சொல்லவே வேண்டாம். அன்றும் அப்படித்தான், மாலை அலுவலகம் முடிவுறும் தறுவாயில் திடீரென இருட்டியது. மழை சோவென்று அடித்துப்பெய்கின்றது. அலுவலக வாசலில் இருந்து கோட்டை பஸ்தரிப்பிடத்துக்கு போய்ச்சேருவதற்குள் வீதியெங்கும் கணுக்கால் அளவுக்கு வெள்ளம். தொப்பலாக நனைந்து பஸ்ஸினுள் ஏறி உட்கார்ந்தால், சாதாரண நாட்களில் அரைமணிநேரத்தில் பஸ்ஸில் போய்ச் சேரவேண்டிய தூரத்தைக் கடக்க இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நேரம் தேவைப்படுகிறது. இது தற்போதைய மழைக்காலத்தில் அடிக்கடி அனுபவிக்கும் துயரம்.  

காரணம் மிகக் குறுகிய நேரத்தில் பெய்யும் மழையால் கூட வீதிகள் நிரம்பி வழிந்து வெள்ளம் போட்டு விடுவதுதான். ஆனால் மழை நேரங்களில் வீதிகளில் பயணிப்போருக்கு தெரியும், அவ்வாறான வெள்ளப்பெருக்ேகற்படுவதற்கான காரணம் என்னவென்பது. பல சமயங்களில் பிரதான வீதிகளின் அருகேயுள்ள கான்களில் மழையையும் பொருட்படுத்தாது சிலர் அடைப்பை துப்பரவாக்கிக் கொண்டிருப்பர்.  

கொழும்பின் வடிகாலமைப்பு சுமார் 100வருடகாலப் பழைமைவாய்ந்ததென்றும், ஒரு சிறிய மழை பெய்தாலே கொழும்பு மாநகரே நீரில் மூழ்கி விடுவதற்கான காரணம் அதுவென்றும் பலர் குற்றம்சாட்டினாலும், மழைக்காலங்களில் வடிகான்களை சுத்தம் செய்வோருக்கும் அதனைப் பார்ப்போருக்கும் தெரியும் கான்கள் அடைப்பதற்கான உண்மைக் காரம் எதுவென்று.  

கான்களில் இருந்து வௌியே எடுக்கப்படும் பொலித்தீன் பைகளும், பிளாஸ்திக் பொருட்களும்தான் சிறியதொரு மழைபெய்தாலும் கொழும்பை வெள்ளக்காடாக்கி விடுகின்றன.  

1970களின் ஆரம்பத்திலேயே பிளாஸ்திக்குகளும் பொலித்தீன்களும் (நெகிழி) அறிமுகமாயின. அதுவரை கடதாசிப் பைகளிலும், ஓலையால் பின்னப்பட்ட பைகளிலும் பொருட்களை கொள்வனவு செய்த எங்களது வாழ்க்ைகயை பொலித்தீன் பைகளும், பிளாஸ்திக் பொருட்களும் இலகுவாக்கிவிட்டன.  

அதனால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றி அறியாமலேயே முழு உலகுமே பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளுக்கு அடிமையானது.  

2015ஆம் ஆண்டளவில் இலங்கை 141மில்லியன் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்திருந்தது. பிளாஸ்டிக்குகளை மீள் சுழற்சிக்காக அனுப்பினாலும், அவற்றில் 2சதவிகிதம் மட்டுமே மீள்சுழற்றப்படுகின்றன. மீள் சுழற்சியென்பதே கட்டுக்கதை என்கின்றனர் சுற்றாடல் ஆர்வலர்கள். பிளாஸ்டிக்கை தவறாகப் பயன்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. ஒரு முறை பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்பட்டாலும், ஒரு பிளாஸ்டிக் போத்தல் சிதைவதற்கு கிட்டத்தட்ட 1000ஆண்டுகள்ஆகும், அதே நேரத்தில் பிளாஸ்திக் ஸ்டிரோ சிதைவடைய 700ஆண்டுகள். தேவைப்படலாம் ”ஒரு சிறிய லொலிபாப் குச்சி கிட்டத்தட்ட 400ஆண்டுகளுக்கு சிதைவதில்லை, அதே நேரத்தில் ஒரு பிளாஸ்டிக் பை சிதைவடைய 450ஆண்டுகள் ஆகும்.  

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 1டிரில்லியன் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நிமிடமொன்றுக்கு கிட்டத்தட்ட 2மில்லியன் ஆகும் ஒவ்வொரு ஆண்டும் 1.15முதல் 2.41மில்லியன் தொன் பிளாஸ்டிக் கடலுக்குள் நுழைகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அரை பில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் உரிஞ்சு குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 500பில்லியன் பிளாஸ்டிக் கோப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன.  

பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் பொருட்களின் குறிப்பாக ஒற்றைப் பயன்பாட்டு பொலித்தீன்களின் பாவனையை இல்லாதெழிப்பதற்கான கோரிக்ைக உலகமெங்கனும் தற்போது வலுவடைந்து வருகின்றது.  

இலங்கையிலும் 20மைக்குரோன்களிலும் குறைந்த தடிப்புக்கொண்ட பொலித்தீன்களின் பாவனைக்கான தடையை இலங்கை அரசு விதித்தது. ஆனாலும் அது பூரணமாக அமுல் செய்யபடுவதனை கண்காணிப்பதற்கான உரிய பொறிமுறையையும் அரசு நிறுவவில்லை. இன்னமும் உணவகங்களில் லஞ்ச் சீற்றில் கொதிக்கக் கொதிக்க உணவு பரிமாறுகின்றார்கள்.  

இலங்கையில் பொலித்தீன் தடை அமுலுக்கு வந்த 2017ஆம் ஆண்டுகளில் பல்பொருள் அங்காடிகளில் துணிப்பைகள் வைக்கப்பட்டு, துணிப்பைகளில் பொருட்களை வாங்கிச் செல்வோருக்கு விலைப்பட்டியலில் கழிவுகளும் வழங்கப்பட்டன. ஆனால் அதுவும் கொஞ்சக் காலம் தான். மீண்டும் பொலத்தீன் பாவனை தலைவிரித்தாடத் தொட்ஙகி விட்டது.  

ஆனால் அரச ஆஸ்பத்திரிகளில் மட்டும் பொலித்தீன் பைகளில் பொருட்களைக் கொண்டு சென்றால், பொருட்களை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு உள்ளேசெல்ல, அங்கு செல்வோர் பணிக்கப்படுகின்றனர். தற்போதும் இ லங்கையில் பொலித்தீன் தடை அமுலில இருக்கும் ஒரே இடம் அது மாத்திரம்தான் .  

ஆனால் எமது அண்டை நாடான தமிழ் நாடோ வெற்றிகரமாக பொலித்தீன் தடையை அமுல செய்திருக்கின்றதது. பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டு, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள், பல்வேறு சூழ்நிலைகளில், காலகட்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதித்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் இந்த தடை இவ்வருடம் அக்ேடாபர் மாதம் 2ஆம் திகதிமுதல் தீவிரமாக அமலுக்கு வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திர தின விழா உரையாற்றிய பிரதமர் மோடி இது குறித்து நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். 2014ஆம் ஆண்டு காந்தியின் 145வது பிறந்த தினத்தையொட்டி, ’தூய்மை இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது.  

இதனை நாடு தழுவிய மிகப் பெரிய இயக்கமாகவும் முன்னெடுக்க மோடி வலியுறுத்தினார். இதையடுத்து, அனைத்து மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் என அனைவரும் களமிறங்கி, முழுவீச்சில் பிளாஸ்டிக் தவிர்ப்பு நடவடிக்கைகளில் முழுக்கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து கிராம, நகர, மாநகராட்சி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிளாஸ்டிக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருள்கள் குறித்த கண்காட்சி என நாடே ஓர் முக்கிய சாதனையை நோக்கி வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது.  

பொலித்தீன். மற்றும் பிளாஸ்திக் வர்த்தகர்களுக்கான மாாற்று நடவடிக்ைககள் குறித்து ஆராயாமல் பொலித்தீனை தடைசெய்ய அரசு தயங்கியமையே இலங்கையில் பொலித்தீன் பாவனைத் தடையை சாத்தியமற்றதாக்கி விட்டது.  

இதில் நம் பங்கு என்ன?  

எப்போதும் அரசை குற்றம் கூறிக் ெகாண்டிராமல் பிளாஸ்திக மற்றும் பொலத்தீன் பாவனையைக் குறைக்க நாம் என்ன செய்யலாம்? இதுவரை கையை வீசிக் கொண்டு கடைக்குச் சென்று, பொருள்களை வாங்கி ஓர் பொலித்தீன் பைகளில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்த நாம், இனி ஞாபகமாக வீட்டில் இருந்தே துணிப் பையை எடுத்துக் கொண்டு போகவேண்டும். இது நமக்கு புதுப்பழக்கம் என்பதால் அடிக்கடி மறந்துவிட்டு கடைக்குப் போன பின் மண்டையை சொறிந்து கொண்டு நிற்காமல் இருக்க, நாம் வீட்டில் இருக்கும்போதே நமது இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் ஒன்றிரண்டு துணிப்பைகளை எப்போதும் போட்டு வைப்பதை வழக்கமாகக் கொள்ளலாம். அது நமக்கு அவசர நேரத்தில் கை கொடுக்கும், தமிழ் நாட்டில் துணிப்பை அறிமுகத்துக்கான அரசின் முயற்சிக்கு உறுதுணையாக வியாபாரிகளும், வணிகர்களும் தங்களின் ஒத்துழைப்பை நல்கத் தொடங்கியுள்ளனர். ஆம், பூக்கடைகளில் ​ெபாலித்தீன் கவர்களில் பூக்களை கட்டிக் கொடுக்கும் பழக்கத்துக்கு பதிலாக மீண்டும் வாழை இலைகளில் பூக்களை பொட்டலம் கட்டத் தொடங்கிவிட்டனர். சில இடங்களில் தாமரை இலைகளும் தலைகாட்டுகின்றன. இனிப்பகங்களில் அல்வா வைத்துத்தர பயன்படுத்திய பொலித்தீன் துண்டு பேப்பர்களுக்கு பதிலாக தற்போது வாழை, மந்தாரை, தாமரை, தேக்கு மர இலைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன என்பது மகிழ்ச்சிகரமான தகவல். கையேந்திபவன் முதல் சாதாரண உணவகம் முதல் தட்டில் பொலித்தீன் விரித்து உணவு பரிமாறிய காலம் மலையேறி, தற்போது அவர்களும் இந்த இலைகள் அல்லது பாக்குமரத் தட்டுகளுக்கு மாறிவிட்டனர்.

கடைகளில் பார்சல் கட்டக்கூபொலித்தீனுக்கு பதிலாக சில்வர் காகிதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சில உணவகங்கள் இன்னும்  ஓர்படி மேலே போய், பாத்திரங்கள் மற்றும் பைகளை கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கின்றனர் என்பது கூடுதல் தகவல். முக்கிய பிரச்சினையாக இருந்த குடிநீர் போத்தல்களுக்கு பதிலாக அனைத்து இடங்களிலும் கண்ணாடி போத்தல்களும், சில இடங்களில் மண் கலயங்களிலும் குடிநீர் வழங்கப்படுவது பாரம்பரியத்தை மீட்டெடுத்ததுபோல் உள்ளது. தேசியக் கொடி உள்ளிட்ட அனைத்து கொடிகளும் கூட பிளாஸ்டிக்கில் இருக்கக் கூடாது. துணியிலோ அல்லது காகித்திலோதான தான் இருக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

சந்தைக்கு பையை மறந்துவிட்டு பழைய ஞாபகத்தில் வருபவர்களுக்கு வசதியாக ஆங்காங்கே துணிப் பைகளும் விற்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே இனி ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதில்லை என அறிவித்துள்ளது. இதேபோல, எயார் இந்தியா விமான நிறுவனமும் தனது பயணிகளுக்கு பிளாஸ்டிக் குவளைகளுக்கு பதிலாக பேப்பர் கோப்பைகளையே வழங்குகிறது.

தமிழ்நாட்டு அரசின் இந்த தீவிர பிளாஸ்டிக் தவிர்ப்பு நடவடிக்கை என்பது சுற்றுச்சூழல் சார்ந்த விஷயம் என்பது ஒருபுறம் இருந்தாலும், இதன் மூலம் சணல், துணி, கட்டைபிடி பை, காகித கப் தயாரிப்பு போன்ற தொழில்களும், பாக்குமரத் தட்டு, தாமரை, மந்தாரை, வாழை இலைகள் போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களும், மட்பாண்டங்கள், மண் குவளைகள் தயாரிப்பு என ஏராளமான சிறு தொழில்களில் வளர்ச்சிக்கு மறைமுகமாக பேருதவி புரிந்துள்ளது என்பது முக்கியமானது.  

இங்கையின் தூய்மையைப் பேண புதிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்ைககள் பிளாஸ்டிக் ஒழிப்பை மேற்கொள்ள தயவுதாட்சண்யமின்றி நடவடிக்ைக மேற்கொள்ளும் என்பதை கட்டியம் கூறியிள்ளது.  

இருப்பினும் ஒழிப்பை ஒவ்வொரு தனி மனிதனும் முதலில் தனது வீட்டில் இருந்து தொடங்கவேண்டும். வீட்டில் உள்ள பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழித்துவிட்டால், நாட்டில் உள்ள பிளாஸ்டிக் தானாகவே ஒழிந்துவிடும்.

அனி

Comments