போர்க் காலத்தில் நடைபெற்ற எளிமையான திருமணங்கள் | தினகரன் வாரமஞ்சரி

போர்க் காலத்தில் நடைபெற்ற எளிமையான திருமணங்கள்

வாழ்க்கைக்கு பொருள் மிக அவசியம். பொருள் இல்லாதவன் தனது  வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களில் மிக பெரியதாக அவனுடைய பிள்ளைகளின்  எதிர்காலம் உள்ளது. பிள்ளைகளை பெற்றோம் அவற்றுக்கு உழைக்கும் வலிமை  சேர்ந்து விட்டது இனி அவர்கள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்று  இருப்பவர்களும் இருக்கிறார்கள். அட வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள்  எங்களை இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கவலையொழித்து வாழும்  பெற்றோரும் இருக்கிறார்கள் .  

இதெல்லாம் அந்தப்பிள்ளைகளுக்கு திருமணமாகும் வரைதான்  அதற்கப்பால் அவனுடைய அவளுடைய வாழ்க்கைத்துணை அமைவதைப் பொறுத்தே பிள்ளைகளின்  அல்லது அவர்களை நம்பியுள்ள பெற்றோரின் நிலைமை மாறிவிடும். என்னதான்  அறநெறிகளைப் போதித்து வளர்த்த மகனானாலும் அவனுக்கும் மனைவி சொல்லே  மந்திரமாகி விடுவதுண்டு. மகளுக்கும் கணவனின் சொல்லே கருந்தனமாகிவிடும்  என்னதான் அவள் தானே உழைப்பவளாக இருந்தாலும்,  

வடபகுதித் தமிழர்களிடம் இன்னும்கூட மாறாமல் இருக்கும் ஒரு  வழிமுறை சீதனம் கொடுத்து ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும்.  பெற்றோரை மகள் தன்னுடன் வைத்தே பார்க்கவேண்டும். அதாவது திருமணத்தின்பின்  கணவன் மனைவியின் வீட்டுக்கு வந்துவிடவேண்டும். இந்த வழமை இப்போது சற்று  பிறழ்கிறது காரணம் தொழில் நிமித்தம் அவர்கள் வேறிடங்களில் வேலைக்கு  செல்வதால் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதில் இன்னுமொரு  நலம் இந்தியப் பெண்களுக்கு இருப்பது போல எமது பெண்களுக்கு மாமியார்  கொடுமையில்லை.  

பொருள் இல்லாத சாதாரண ஏழைக்குடும்பங்களில் திருமணம் என்பது  பிரச்சினையே இல்லை என்றொரு சூழல் காலங்காலமாக நடைமுறையில் வருகிறது. என்பதை  அறிவீர்களா? எமது கிராமங்களில் பெண்பிள்ளைகள் பிறந்து வளரும்போதே அவர்கள்  வயலிலும் தோட்டத்திலும் காடு கரம்பைகளிலும் இஸ்டப்படி திரிவதைக்காணலாம்.  வேலைக்காகவோ, குளிப்பதற்காகவோ, விறகுகள் சேகரிக்கவோ அவர்கள் அப்படி அலைவர்.  அதே கிராமத்து இளைஞர்களும் அவர்களை தொடர்வர். ஆனால் அந்தப் பெண்களுக்கு  அது பாதுகாப்பாகவே நடக்கும்.. வேறெங்குமிருந்து வந்து யாரும் எமது  பெண்களிடம் வாலாட்ட முடியாது. அது கிராமத்தவருக்கும் தெரியும். இந்த நிலை  தலைகீழாக மாறியது ஒரு காலம் அது போர் நடந்த காலம் என்பதை நான் சொல்லித்தான்  தெரிய வேண்டுமா?  

 தொடர்ச்சியான இடப்பெயர்வுகளால்  இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்த பெரும் தனக்காரர்கள் பாதுகாப்பான  இடங்களில் காணியை விலைக்கு வாங்கி வீடுகட்டி பெண்ணுக்கு சீதனம்  கொடுத்தார்கள். ஏழைப்பட்ட மக்கள் தமது நிலங்களை கூறுபோட்டு விற்றார்கள்.  அதனால் பெரிய காணிகள் சிறு துண்டுகளாயின. நான் இடம் பெயர்ந்தபோது எனது  கிராமத்தில் ஐம்பத்தாறு குடும்பங்களே இருந்தன. திரும்ப இருபத்தைந்து  வருடங்கள் கழித்துவந்தபோது இருநூற்றி ஐம்பத்தெட்டு குடும்பங்கள் இருந்தன.  

சீதன நடைமுறைகளில் இந்த வீடும் வளவும் பெரும் தாக்கமான  விடயமாகும் போர் நடந்தபோது தாம் வாழவே வீடில்லாமல் அலைந்தவர்கள் தோட்டம்  துரவுகளை இழந்து திரிந்தார்கள் அவர்களில் புத்திசாலித்தனமாக பிள்ளைகளையோ.  அல்லது குடும்பத்தலைவனையோ வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தால் அவர்களால்  மட்டுமே இந்த சீதனப்பிரச்சினையை எதிர்கொள்ளவும் படித்து ஒரு வேலை தேடும்  பெண்களைக் கொண்டதாகவும் மாற முடிந்தது.  

பல இயக்கப் போராளிகள் திருமணஞ் செய்வதற்கு இத்தகைய பெண்களையே  தெரிவு செய்தனர். பெண்களும் இயக்கப் போராளிகளால் கவரப்பட்டனர் என்றே  சொல்லலாம். காரணம் அவர்களுக்கு சமுதாயத்தில் இருந்த கவுரவம் உயர்வு  அதிகாரம் என்பவை அவர்களைக் கவர்ந்தது. எனக்கு ஒரு போராளி நண்பராக  இருக்கிறார் என்று சொல்வதே பெருமையாக இருந்தகாலம் அது.  

உண்மையில் போராளிகள் மக்கள் தொடர்பை சுமுகமாக வைத்திருக்க  வேண்டியவர்களாக இருக்க வேண்டும் இதனால் அவர்கள் சரளமாக மற்றவர்களுடைய  வீடுகளுக்கு செல்வதும் அங்கே அவர்களது உபசரிப்பை ஏற்பதும் சாப்பிடுவதும்  தேநீர் குடிப்பதும் கடமையாகும் அது வழமை என்ற சொல்லுக்குள் அடங்காது. இதே  சாக்காக பலர் போராளிகளுக்கு பெருவிருந்தே வைத்து அவர்களிடம் சலுகைகளை  பெற்றதும் உண்டு. முகாமுக்கு தேடிச்சென்று விளாம்பழம் தேன்,  நெய், மாம்பழம்,  இன்னும் காட்டுப்பகுதிகளாக இருந்தால் பாலைப்பழம் வீரைப்பழம் நாவற்பழம்  போன்றவையும் கொடுக்கும் கிராம வாசிகளும் இருந்தனர்.  

 வாராந்தக் கூட்டத்தில் போராளிகளிடம் பொறுப்பாளரால்  கேட்கப்படும் முக்கிய கேள்வி எத்தனை வீடுகளுக்கு போனீர்கள். எத்தனை  வீடுகளில் சாப்பிட்டீர்கள், எத்தனைபேர் நாம் கூப்பிட்ட உடனே  வரக்கூடியவர்கள். போருக்கு தயாரான எத்தனை பிள்ளைகள் உங்கள் ஏரியாவில்  இருக்கிறார்கள். என்பவையே . இத்கைய வீடுகளிலிருந்தே ஆண் போராளிகள் தமக்கான  துணையை நிர்ணயித்துக் கொள்வதும் இலக்கு வைத்துப் பழகி அந்தப் பெண்களை  திருமணம் செய்வதும் ஒரு பிரச்சினையே இல்லை.  

 என்னதான் பெற்றோருக்கு பிடிக்காது போனாலும் போராளிக்கு  மாமன், மாமியாகிவிட்டால் தாமும் போராளி குடும்பமாகிவிடலாம். சீதனமும் கேட்க  மாட்டார்கள். அதன்பின் இருக்கிற மற்றப் பிள்ளைகளை காப்பாற்றுவதும் சுலபம்.  என நினைத்தே பெண்களை கொடுத்தனர்.

ஆனால் எமது போராளிகள் மிகவும் தெளிவாகவே  இருந்தார்கள். குறைந்தபட்சம் கச்சேரி பிரதேச செயலகம் போன்ற அரச உத்தியோகம்  பார்ப்பவர்களையோ அல்லது ஆசிரியைகளையோதான் இலக்கு வைத்தனர்.  

ஒரு முக்கிய பொறுப்பில் இருந்த போராளி ஒருவன் என்னிடம்  தனக்கொரு பெண் பார்க்கச் சொன்னான்.. அரச உத்தியோகமாக இருந்தால் நல்லது  அல்லது அண்ணன் தம்பி வெளிநாட்டில் இருப்பவவாக பாருங்க. மற்றது பொம்பிளை  கலியாணத்துக்கு பிறகும் பெற்றோரோடயே இருக்கிறதா பாருங்க. தெரியுந்தானே  நாங்க கடமை நிமித்தம் தூரக்கீரப் போயிற்றா துணை வேணுந்தானே. மற்றது சாதி  நாங்க பாக்கிறது சரியில்ல. அதுக்காக அடியில பாத்திராதீங்க,  

இதுதான் சீதனமற்ற சமூக சீர்திருத்த கல்யாணம். உண்மையிலேயே  அப்படியான மனப்பூர்வமான அன்பில் மலர்ந்த காதல் திருமணங்களும் இருந்தன அவை  போராளிகளிடையே நடந்த காதல் திருமணங்கள்தான் வெளியே காதல்கொண்ட  ஏழைப்போராளிகளும் தமது திருமணங்களை மிக எளிமையாக நிறைவேற்றிக்  கொண்டனர்தான்.  

எப்படித்தான் பார்த்தாலும் சீதனம் என்பது தமது  பிள்ளைகளுக்காக தாம் கொடுப்பதுதானே என பெற்றோர் நினைத்து கொடுத்த காலம்  இப்போது இல்லை. போர் நடந்த காலத்தில் ஒரு அரசியல் ஆய்வாளர் ஒரு கல்லூரி  மாணவியை திருமணம் செய்ய பல லட்சங்கள் பெற்றதையே எமது கலைஞர்கள் நாடகமாக்கி  மேடையேற்றினர். சீதனம் ஒழிந்ததா அதே காலப்பகுதியில் வன்னியின் வறுமைக்குள்  ஒரு வசதியான குடும்பம் குடிசையில் வாழ்ந்தது. அவர்களுடைய மகளுக்கு திருமண  ஏற்பாடுகள் நடந்தன. அவர்கள் பெண்ணின் மாப்பிள்ளையை கனடாவில்  பார்த்திருந்தனர். சீதனம் ஒரு கோடி என்றார்கள். அவர்களுடைய இரண்டு மகன்கள்  ஏற்கெனவே வெளிநாட்டில் இருந்தார்கள்.  

தானும் தானும் பேசி பெற்றோருடைய சம்மதத்தையும் பெற்றோ  பெறாமலோ இணைந்து வாழ்கின்ற எண்ணற்ற குடும்பங்களை நானறிவேன். அவர்களுக்குள்  பிரச்சினை வந்தால் கத்தி சண்டை போடுகிறார்கள் அன்றிரவே திரும்பவும் ஒரே  பாயில் படுத்துறங்குகிறார்கள். பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டு  மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறார்கள் அவர்களுக்குள் உள்ள ஒரே பிரச்சினை என்னை  நம்பித்தானே வந்தவள்(ன்) அவளை நான் கோபிக்கலாமா? இதைவிட பெரிய செல்வம் என்ன  இருக்கு?

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments