மலையகத்தை கிளர்ச்சியாளர்களிடமே கையளித்துவிடலாமா என்று சிந்தித்த ஆளுநர் | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தை கிளர்ச்சியாளர்களிடமே கையளித்துவிடலாமா என்று சிந்தித்த ஆளுநர்

ஊவா பிராந்தியத்தையும் கண்டியின் பல பகுதிகளையும் தம் கைவசம் கொண்டிருந்த கெப்பெட்டிப்பொலையும் துரைசாமி பெயரில் பதவி பெற்று ஸ்ரீஇராஜசிங்கனாக விளங்கும் மன்னனும் மேற்கொண்டுவரும் சுதந்திர போராட்டம் குறித்தும் அதற்கு துணை நிற்போரின் விபரங்கள் பற்றியும் வெளியிட்ட பசறையைச் சேர்ந்த டிக்கிரி மல்லியா பரணகம, நடைமுறையில் உள்ள போராட்ட நடவடிக்கைகள் குறித்து ஆங்கிலேயரிடம் அக்குவேறு ஆணிவேறாக புட்டுவைத்தான்.

“ஒரு போராளிக்குழுவும், கொடகெதர என்னும் மொஹொட்டால தலைமையில் பிறிதொரு போராளி குழுவும் கெட்டகெலே மொஹொட்டால தலைமையில் ஒரு போராளி குழுவும் மூன்று திசைகளில் சென்றுள்ளன. முதலமைச்சர் கெப்பெட்டிப் பொல தனது அணியை வெள்ளவாய வரையிலும் அழைத்துவந்தான். அதன் பின்னர் கம்பஹா வாடியகொல்ல வரை சென்ற அவன் அப்புத்தளை நோக்கி தமது குழுவை வழிநடாத்திச் சென்றான். அவனது குழுவில் கரையோரவாசிகள் பன்னிரண்டு பேரும் இணைந்துள்ளனர். ஏனைய மொஹொட்டாலமார் தத்தமது குழுவினர்களுடன் முதலமைச்சர் கெப்பெட்டிப்பொலையை பெரகல குன்றின் மீது சந்தித்துக்கொண்டனர். அங்கு கெப்பெட்டிப்பொல களுபஹான கிராமவாசிகளை அழைத்துவருமாறு தமது போராளிகளுக்குக் கட்டளைப் பிறப்பித்தான். அவ்வேண்டுகோளை ஏற்காதவர்களின் வீடுகளை தீயிட்டு கொளுத்துமாறு கெப்பெட்டிப்பொல பணிப்புரை வழங்கினான்” என்று டிக்கிரி மல்லியா மேலும் ஆங்கிலேயரிடம் தெரிவித்தான். 

கெப்பெட்டிப்பொல எப்போதும் சாதாரண குடிமகனின் தோற்றத்திலேயே காணப்படுவதாகவும் கெப்பெட்டிப்பொல தலைப்பாகை அணிந்திருப்பதாகவும், கதிர்காமக் கந்தனின் திருவுருவமொன்றை தன் கையில் வைத்திருப்பதாகவும் டிக்கிரி மல்லியா மேலும் தெரிவித்தான். 

“கொஹு கும்புறே ரட்டேராலவின் தங்கையும், வெல்லஸ்ஸ கவுடன் கெட்டியே ரட்டே ராலவின் தங்கையும், கெஹெல் எல்ல விதானவின் தங்கைமார் இருவரும் மன்னனுடன் இருப்பதாகவும் அவன் கூறினான். அவர்கள் பல்லக்கில் பயணிப்பதை தாம் பார்த்ததாகவும் சொன்னான். இப்பெண்களுக்கு அரச மரியாதை கிடைத்துவருகின்றது என்றும் போராளி குழுக்கள் பெரகல மலை முகட்டையடையும்போது தான் அங்கிருந்து தப்பி வந்து விட்டேன் தெரிவித்தான் அவன். 

பசறை டிக்கிரி மல்லியாவிடமிருந்து வெளிப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து ஆளுநர் பிரவுன்றிக் உடனடி நடவடிக்கையில் இறங்கினான். எஹலபொல, கப்புவத்தை திசாவை, மில்லேவ திசாவை ஆகிய மூவரையும் கைது செய்து கொழும்பு கோட்டைக்கு கடத்திச் சென்று இரண்டு வீடுகளில் காவலில் வைத்தான் பிரவுன்றிக். இதன் மூலம் சற்று நிம்மதி ஏற்பட்டாலும் கெப்பெட்டிப்பொலையின் சக்தியை சீர்குலைக்கும்வரை பூரண திருப்தியடைய முடியாது என்று கருதினான் ஆளுநர். 

கெப்பெட்டிப்பொலை குழுவினரின் இடையறா தாக்குதல்களினால் ஊவா படைமுகாமை கைவிட்டு வெளியேறிய மேஜர் மெக்டொனல்ட் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பரணகம முகாமுக்குள் நுழைந்து கொண்டான். இதனையறிந்த முதலமைச்சர் கெப்பெட்டிப்பொல தனது தாக்குதல் வியூகத்தில்  சிறு மாற்றத்தை ஏற்படுத்தினான். 

எண்பது பேர்கொண்ட பாதுகாவலர்களின் பாதுகாப்பில் பரணகம முகாமுக்குள் தரித்திருக்கும் மெக்டொனல்டை தனிமைப்படுத்தி தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டான் கெப்பெட்டிப்பொல. அதற்காக ஊவாவில் சகல பகுதிகளிலும் பரந்திருந்த தனது கிளர்ச்சி வீரர்களை பரணகமவுக்கு அழைத்தான். தொடர்ந்து இரண்டு மாதங்களாக பரணகம முகாம்மீது கெப்பெட்டிப் பொலையின் தாக்குதல் நடைபெற்றது.  மார்ச் மாதம் எட்டாம் திகதியளவில் கிளர்ச்சியாளர்கள் பெரிதும் களைப்படைந்து காணப்பட்டனர். பரணகம முகாமுக்குள் மேஜர் மெக்டொனல்ட்தகுந்த பாதுகாப்புடன் இருந்தான். தாம் மேற்கொண்டதாக்குதல்கள் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகியதாக கிளர்ச்சியாளர்கள் உணரத்தலைப்பட்டனர். அடுத்த கட்டமாக ஊவாவில் உள்ள ஆங்கிலேய துப்பாக்கி முகாம்களை தாக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இத்தாக்குதல்களின் போது துப்பாக்கி முகாம்களிலிருந்து வேட்டுகள் தீர்க்கப்பட்டபோதும் அதனை விட பலமாகவும் சக்தியோடும் கிளர்ச்சியாளர்களின் வில்- அம்பு தாக்குதல்கள் அமைந்தன. அனேகமாக எதிர்பார்த்திராத வெற்றியை இத்தாக்குதல் மூலம் கெப்பெட்டிப்பொலையின் குழுவினர் பெற்றனர். 

அச் சந்தர்ப்பங்களின் சிறியதோர் அவகாசம் கிடைத்தவுடன் ஆங்கிலேய படையினர் கிராமங்களுக்குள் பிரவேசித்து அப்பாவி மக்களை துன்புறுத்தியும் உடைமைகளை சேதப்படுத்தியும் தம் கைவரிசையைக் காட்டிவந்தனர். கால்நடைகளைக் கொன்று இறைச்சிப் பொதிகளை படை முகாம்களுக்கு எடுத்துச் செல்வதிலும் முழுமூச்சில் ஈடுபட்டது ஆங்கிலேய இராணுவம். அத்தகைய வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு கெப்பெட்டிப்பொலையின் வில்லேந்தும் வீரர்களால் நிறைவேற்றப்பட்டு வந்தது. துப்பிற்றிய, வெலங்கஸ்ஹின்ன, தெல்தெனிய, பன்னல, மடவலதென்னை, களுபஹன ஆகிய துப்பாக்கி இராணுவ முகாம்களின் அட்டூழியங்கள் வில்லம்பு தாரிகளினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. 

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் ஓர் அடிமைத்தேசமாக மத்திய மலைநாட்டு இராசதானி கைப்பற்றப்பட்டபோதும் அரசு இயங்க முடியாத நிலையும், படையினர் வெளியில் தலைகாட்டுவதற்கே அஞ்சும் நிலையும், சுதேசிகளின் ஆதரவுடன் ஓர் அரசன் முடிதரித்து ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் அவமானமும் ஆளுநர் பிறவுன்றிக்கை வெகுவாகப் பாதித்தது. விசர் நிலையடைந்த ஆளுநர் ஆங்கிலேயருக்கு பணிய முன்வராத கிராமங்களை தீயிட்டு கொளுத்த உத்தரவிட்டான். கிராம மக்களை அச்சுறுத்தி அரச சார்பு கொண்டோராக மனமாற்றம் செய்யும் படியும் அல்லது அதற்கு இசையாதோரை கைது செய்து காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆளுநரின் இப்பணிப்புரைகளை இம்மியும் பிசகாது நிறைவேற்றுவதற்கு இராணுவம் கிஞ்சித்தும் பின்வாங்கவில்​லை. 

அவர்கள் சுதந்திரமாக கிராமங்களுக்குள் நுழைந்து வீடுகளுக்குள் பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்டும் மக்களின் உணவு தானியங்களை பலாத்காரமாக உண்டு களித்தும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். மொஹட்டால ஒருவரை அச்சுறுத்துவதற்கு முயன்ற ஆங்கிலேய சிப்பாய்கள் அப்பாவிகளான ஏழு குடிமக்களைக் கொன்று, மொஹட்டாலவின் வீட்டையும் சொத்துக்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

பிறிதொரு இடத்தில் பன்னிரண்டு அப்பாவிகளைக் கொன்றதோடு கிராமிய பெண்கள் பதின்மூன்று பேரையும் சிறுவர்கள் பெரும் எண்ணிக்கையானோரையும் கைது செய்து சிறையில் அடைந்தனர். நிராயுதபாணிகளாகிய உள்ளூர்வாசிகளை படுமோசமான முறையில் சீரழித்த ஆங்கிலேய சிப்பாய்களில் எவரும் சிறிதளவு உடற்காயமேனும் அடையவில்லை. 

தாம் இலங்கைத்தீவில் புரிந்து வரும் அராஜகங்கள் இங்கிலாந்து தேசத்தில் உள்ளவர்கள் அறிந்து கொள்வார்களாயின் தம்மை வெகு இழிவாகவும், பண்பற்றவனாகவும் கருதுவார்களெனவும் சிந்தித்தான் ஆளுநர் பிரவுன்றிக். அவ்வாறு தமது தாய்நாட்டில் தரக்குறைவான பிரஜையாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத ஆளுநர் இங்கு தம்மால் மேற்கொள்ளப்பட்ட சகல கரடுமுரடான போக்கினைக் கொண்ட நடவடிக்கைகளும் வெளியில் கசியாதிருப்பதில் கவனமாக இருந்தான். 

எனினும் தகவல்கள் வெளியில் கசியவே செய்தன. லண்டனில் வெளிவந்த ‘டைம்ஸ்’ பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டது.  

“தானிய வயல்களையும், கனிவகை பயிர்ச் செய்கையையும் அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் பதுளை பிரதேசத்தில் பெருவெற்றியளித்துள்ளது.

எனினும் இச்செயல்மிக பயங்கரமான வன்முறைகளாகுமென குறிப்பிட வேண்டியுள்ளது.” 

இச் செய்தியறிந்து குழப்பமடைந்தான் இலங்கையின் பிரித்தானிய ஆளுநர். தனது தாய்நாட்டு செய்தித்தாள் இவ்வாறு தன்னைப் பற்றி விமர்சனத்தை தனது நற்பெயருக்கு இழிவை ஏற்படுத்தியதாக வேதனையடைந்தான் பிரவுன்றிக். 

ஊவாவிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த தகவல்கள் அனைத்தும் ஆளுநருக்கு கவலையை ஏற்படுத்தின.

முதலமைச்சர் கெப்பெட்டிப்பொல, பானம திசாவையாக பதவி வகித்த கெட்டகெலே மொஹட்டாலையின் உதவியுடன் கொத்மலைக்கு வருகை தந்தான்.  

இதே சமயம் பதுளைக்கு கால்மைல் தூரத்தில் உள்ள அரச முகாம்களும் சொத்துக்களும் மேற்படி கெப்பெட்டிப்பொலையின் சகாக்களினால் நிர்மூலமாக்கப்பட்டன. 

கெப்பெட்டிப்பொலையினால் அடிமேல் அடிவாங்கிய ஆங்கிலேய அரசு, இந்தியாவிலிருந்து எதிர்பார்த்திருந்த படைபலம் கிட்டாமையின் காரணமாக மேலும் நலிவுற்றது. இதேவேளை இராணுவ முகாம்களில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையலாயிற்று.

1818ம் ஆண்டு மேமாதம் நடுப்பகுதியில் ஏராளமான ஆங்கிலேய இராணுவத்தினர் உடல்நலம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. சுருக்கமாகக் கூறுவதாயின் இக்காலகட்டத்தில் ஆளுநர் பிரவுன்றிக் பொறுமையிழந்து குழம்பிப்போன நிலையை அடைந்தான். பதுளை பிராந்திய வரியிறுப்பு அதிகாரி சோவர்ஸ் ஆளுநரைப் போன்ற இக்கட்டான நிலையில் அவதியுறலானான். 

மலைநாட்டின் புதிய அரசன் ஸ்ரீ இராஜசிங்கனு (துரைசாமி)டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதோடு மத்திய மலைநாட்டிலிருந்து ஆங்கிலேயரின் ஆட்சியை நீக்கி கொள்ளலாம் என்ற முடிவுக்கு ஒரு சமயத்தில் ஆளுநர் வந்துமிருந்தான். இதனை சோவர்ஸ் அறிந்து கொண்டான். இந்த இரகசியம் ஜூன்மாதம் 5ம் திகதி சோவர்ஸுக்கு தெரிய வந்தது. 

மத்திய மலைநாட்டின் அரியணைக்கு உரிமைகோருவதை தவிர்த்து எம்முடன் சமாதானமாக நட்பு பேண முன்வருவீர்களாயின் பூரண பொது மன்னிப்பு வழங்குவதோடு, ஆயுள்பூராவும் ஓய்வூதியம் வழங்குவதாகவும், கொழும்பில் வசதியான வீடொன்றை வசிப்பிடமாக்கித் தருவதாகவும் புதிய அரசனிடம் தெரிவிக்குமாறு கடிதம் மூலம் சோவர்ஸ் கேட்டுக்கொள்ளப்பட்டான்.

இவ்வாறு கெப்பெட்டிப்பொலையின் சுதந்திர போராட்டம் ஆங்கிலேயரை நிலைகுலையச் செய்த போதும் எதிர்பாராத பலவீனங்களும் கெப்பெட்டிப் பொலையின் போராட்டத்தில் ஆங்காங்கே தோன்றலாயின.

தகவல் –தயாவன்ச ஜயகொடி
(கண்டிச் சுதந்திர போராட்டங்கள்)
சி.கே. முருகேசு

Comments