வடக்கில் வெற்றுக் காணிகளால் வீரியமடையும் டெங்கு | தினகரன் வாரமஞ்சரி

வடக்கில் வெற்றுக் காணிகளால் வீரியமடையும் டெங்கு

நாட்டின்  தற்போதைய காலநிலை மக்களிடத்தில் பெரும் டெங்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. டெங்கு நோயின் தாக்கம் வருடத்திற்கு வருடம் அதிகரித்து செல்வதை புள்ளிவிபரங்கள் வாயிலாக அவதானிக்க முடிகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையையோ அல்லது மக்கள் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவதையோ செயல்வடிவில் காணமுடியவில்லை. 

நாடளாவிய ரீதியில் இவ் வருடம் தை மாதம் முதல் கார்த்திகை மாதம் வரையிலான கணக்கெடுப்பின் பிரகாரம் 64ஆயிரத்து 290டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 85பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிக்கை வெளியிட்டது.  

டெங்கு தொற்றும் அறிகுறியும் 

டெங்கு தொற்று ஏற்பட்ட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த நோய் பரவுகிறது. டெங்கு நோய்க் கிருமிக் காவியாக நுளம்பு செயற்படுகிறது. மூன்று நாட்கள் தொடர்ச்சியான காய்ச்சல்  தலைவலி,வாந்தி, உடல் வலி மற்றும் மூட்டு வலி என்பன டெங்கு காய்ச்சலின் அறிகுறி என வைத்தியர்கள்கள் கூறுகின்றனர். அவ்வாறு டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளான ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்து, முறையாக இரத்தப் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டு மருத்துவம் செய்யப்படுகிறது. 

வளவில் தேங்கும் கழிவுகள், குட்டை, பழைய டயர், இளநீர் கோம்பைகள், தகர டப்பாக்கள், கண்ணாடி குவளைகள் மற்றும் பற்றைகள் புதர்கள் என்பவை டெங்கு நுளம்பு உருவாக்கத்திற்கான ஏதுவான சூழல் என அடையாளப்படுத்தி, அவற்றை அப்புறப்படுத்தி சூழலை சுத்தமாக வைத்திருக்கமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறது. 

இங்கு கூறப்பட்ட காரணிகள் யாவும் மழை நீர் தேங்கி நிற்க ஏதுவாகவுள்ளன. மழைக் காலத்தில் நீர் தேங்கி நிற்பதற்கான  சாத்தியம் அதிகம் உள்ளமையினால் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இவ்வாறு தேங்கும் நீரில் டெங்கு  நுளம்பு தனது இனத்தை விரைவாக பெருக்கிக் கொள்கிறது. 

இவ்வாறு டெங்கு தொற்று ஏற்பட்ட ஒருவர் முறையான மருத்துவ அணுகுமுறை, இரத்தப் பரிசோதனை என்பனவற்றைச் செய்து, நீர் அதிகம் அருந்தி தனது இரத்தத்தின் கூறுகளை சீர்செய்வதன் மூலம் டெங்கு நோய் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளமுடியும். வழமைபோன்ற காய்ச்சல்தான் என வீட்டு வைத்தியத்துடன் மட்டும் அசண்டையாக இருப்பவர்களே அதிகம். அவ்வாறு இருந்து இறுதியில் மருத்துவரை நாடுவது “வெள்ளம் வந்த பின் அணை கட்டுவதற்கு சமனானது”.  

இந்த டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளைப் பிரசவித்த தாய்மார்களாக உள்ளனர். அதற்கான காரணம் இவர்களுக்கு இரத்ததில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான்.

யாழ். மாவட்டத்தில் டெங்கு தாக்கம்  

யாழப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கமானது,  கடந்த 2018ஆம் ஆண்டினை விட அதிகம் என்பதை விட தீவிரமாகவுள்ளது என்பதே சரியான பதமாக இருக்கும். அந்தளவிற்கு நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்கிறது. 2018ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாகி  சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை 2ஆயிரத்து 120ஆக இருந்த நிலையில்  2019ஆம் ஆண்டு 3ஆயிரத்து 349பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அதில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  

2018ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 264பேர் இனங்காணப்பட்டதோடு மார்கழி மாதம் 602பேர் இனங்காணப்பட்டிருந்தனர். ஆனால்  2019ஆம் ஆண்டு இக்காலப்பகுதியில் அது பல மடங்காக அதிகரித்துள்ளது, இவ்வருடம் கார்த்திகை மாதம் மட்டும் ஆயிரத்து 549பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை விட மார்கழி மாதத்தின்  முதல் இரண்டு வாரத்தில் 84பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடவடிக்கைகளில் சீரின்மை 

டெங்கு நோய் பரவுதல் மற்றும் அதன் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகளினால் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு அது சார்ந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டன. மக்களும் “எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?” என்று  பொறுப்பற்று  அவற்றைக்  கடந்து செல்கின்றனர்.  

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளாந்த திண்மக்கழிவு என்பது பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு காரணம் யாழ். மாவட்டம் வெளி மாவட்ட மாணவர்களையும் பணியாளர்களையும் உள்ளீர்த்து கொண்டுள்ளமையாகும். திண்மக் கழிவுகளை அகற்றுவதில் உள்ளூராட்சி சபைகள் அவற்றில் தேங்கும் மழை நீர் என்பனவற்றின் விளைவே டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்புக்குக் காரணமாகும், இது இன்று மட்டும் நடக்கும் பிரச்சினை இல்லை, கடந்த காலங்களிலும் நடந்த  பிரச்சினை. 

பராமரிப்பு இன்றிக் காணப்படும் காணிகள், பற்றைகள், புதர்கள் என்பன  மிகையாக காணப்படுகிறன. இதுவும் டெங்கு நோய் பரவுவதற்கான சூழல் தான். குறிப்பாக யாழ். நகரப்பகுதி, குருநகர், கொக்குவில், கோண்டாவில், கோப்பாய், உடுவில், மற்றும் சுன்னாகம் ஆகிய பகுதிகளில் 5வீட்டுக்கு ஒரு வெற்றுக் காணி என்ற கணக்கில் வெற்றுகாணிகள் பராமரிப்பின்றி காணப்படுகிறன. 

உள்ளூராட்சி சபைகளின் கீழ் இயங்கும் டெங்குக் கட்டுப்பாட்டுச் சபையானது சோதனை நடவடிக்கைகளுக்கு செல்லும் போது, டெங்கு நுளம்பு பரவும் சூழலை ஒழங்காகப் பேணாமைக்காக முதல் தடவையாக  மஞ்சள் நிறத்திலான எச்சரிக்கையை விடுக்கின்றது. எச்சரிக்ைக விடுக்கப்பட்டு மூன்று நாட்களில், குப்பையைச்  சுத்தம் செய்து சபைக்கு அறிவிக்க வேண்டும். இராண்டாம் முறை சோதனைக்குச் செல்லும் போதும் சுத்தம் செய்யப்படாமல் இருப்பின்  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது. 

அதிகாரத்தில் உள்ளவர்கள் டெங்கு தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்ைகள் இவை. ஆனால் அதனை சரிவரச்  செய்யவில்லை என்பதே இங்கு உண்மை. சோதனைக்கு செல்லும் குழுவானது வருடத்திற்கு மூன்று முறை அல்லது நான்கு முறை செல்கிறது. இதற்கிடையில் குறித்த ஒரு பிரதேசத்தில் இருந்து டெங்கு நோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் குறித்த பிரதேசத்தில் உடனடியாக குழு செல்கிறது விசாரணை செய்கிறது அதனை தொடர்ந்து மேலும் நோய் பரவாமல் இருக்க புகை விசிறப்படுகிறது.  

பராமரிப்பு இன்றி காணப்படும் காணிகளில் சோதனைக்கு செல்லும் குழு எச்சரிக்கைச் சுவரொட்டியினை ஒட்டுகிறது. இது ஒவ்வொரு பயணத்தின் போது இடம்பெறுகிறது.  ஆனால் காணி துப்பரவு செய்யபடுவதில்லை. இதற்கு சரியான அணுகுமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இல்லை. பயனற்ற ஒரு துண்டுபிரசுரத்தை பராமரிப்பற்ற காணியில் எச்சரிக்கை சுவரொட்டி ஒட்டுவதால் என்ன மாற்றம் வரும் என்ற கேள்வியினை உள்ளூராட்சி சபைகளிடம் முன்வைத்தால், தாம் ஒவ்வொரு காணி, வீடாக சோதனைக்கு செல்வதை  அந்தத் துண்டு பிரசுரம் உறுதிப்படுத்துவதாகப்  பதில் கூறுகின்றனர். இதனை பொறுப்பு வாய்ந்த தரப்பினர் கூறும் பதிலாக ஏற்கமுடியாது. தலைமையிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் நலனில் குழப்பம் விளைவித்து தமது பணியினை முடிக்கும் பொறுப்பற்ற செயலும் டெங்கு நோயின் தாக்கம் இந்தளவிற்கு தீவிரம் அடைந்தமைக்கு ஒரு காரணம் என்பதில் ஐயம் இல்லை. 

சன நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில்  ஆரம்ப காலத்தில் கையாளப்பட்ட அணுகுமுறை தற்காலத்திற்கு உகந்ததா? என்பதை மீள் பரிசீலனை செய்யவேண்டும். ஆனால் திண்மக் கழிவகற்றுவதில் மாற்றம் இன்றி பழைய படிமுறையே கையாளப்படுகிறது. வீதிக்கு வீதி, சந்திக்கு சந்தி என கழிவுகள் தேங்குகின்றன. இந்தக் கழிவுகள் யாழ். நகரப் பகுதிக்குள் தினமும் இரண்டு முறை அகற்றப்படுகிறது. இருந்தும் கழிவுகள் மிகையாக சேர்கிறது.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்றதன் பின்னர் விடுத்த உத்தரவு “சுத்தப்படுத்தல்” என்பதாகும். இதனை தொடர்ந்து முழு வேகமாக சுத்தப்படுத்தல் செயற்திட்டம் இடம்பெற்றது. இதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் மாநகர சபையும் பங்குகொண்டது.

யாழ். மாநகர சபையின் சுத்தப்படுத்தல் செயற்திட்டமானது யாழ்ப்பாண பொலிஸாரின் ஈடுபாட்டுடன் இடம்பெற்றது. செயற்திட்டத்தில் யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கலந்து கொண்டார். இவர் பதவி ஏற்ற உடன் யாழ்ப்பாணத்தை தூய்மைப்படுத்தி “தூய்மை யாழ்ப்பாணம்” என்பதை உருவாக்கவுள்ளதாக தெரிவித்து கடந்த ஒரு வருடத்தில் எதையும் செயற்படுத்தவில்லை. ஜனாதிபதியின் உத்தரவில் பொலிஸாரின் ஆளணியுடன் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமாயின் ஏன் கடந்த காலத்தில் இவ்வாறு ஓர் அணுகுமுறையினை மேற்கொள்ளவில்லை? இங்கு எப்படிப் பார்த்தாலும் டெங்கு நோய் அதிகரிப்புக்கு சுற்றுப்புறச் சூழல் ஒழங்காக  இல்லை என்பதே உண்மை. இந்தவகையில் பொறுப்புக் கூறவேண்டிய இடத்தில் உள்ளது உள்ளூராட்சி சபையினரே. பொது மக்களின் குடியிருப்புகள் சுத்தமில்லை என வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரிகள் வீதி வடிகால்களில் மழை நீர் மற்றும் நிறுவன கழிவு நீர் தேங்கி மாதக்கணக்கில் ஓட்டம் இன்றி உள்ளமையினை கவனிப்பதும் இல்லை, நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இவ்வாறான இடங்களில் நுளம்பு பெருகாதா? டெங்கு நோய்த் தாக்கம் ஏற்படாதா? என்பது சாதாரண மக்களது கேள்வியாக உள்ளது. 

மக்களின் பொறுப்பற்ற செயற்பாடு 

டெங்குக் கட்டுப்பாடு என்பது வெறுமனே அதிகாரிகள் மட்டும் செயற்படுத்தக்கூடிய செயன்முறையில்லை. மக்களின் ஒத்துழைப்பு என்பது மிக அவசியாமானதொன்றாகும். டெங்கு நோயின் தீவிரத்துக்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் தமது கடமைகளை சீராக செய்யவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கின்ற போதும்,  பொது மக்களின் பொறுப்பற்ற செயற்பாடும் பழக்கவழக்கங்களும் பிறிதொரு காரணமாக அமைகிறது. 

நாகரீக வளர்ச்சி என்ற போர்வையில் பல மாற்றங்களை கைக் ெகாள்ளும் மக்கள் தமது பழக்கவழக்கங்களிலும் மாற்றத்தை உருவாக்கவேண்டும். பழக்கவழக்க மாற்றம் என்பது தனி மனித ஒழுக்கம், பொறுப்புடமை சமூக சிந்தனை போன்றவற்றை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளவேண்டும். தனிமனித ஒழுக்கம் தவறி, ஒவ்வொருவரும் செய்யும் தவறுகளே ஒட்டுமொத்த சமூக பிரச்சினையாக உருவெடுக்கிறது. 

டெங்கு நோயினை பொறுத்தவரையில் அதற்கான சூழலை உருவாக்குவதும் நாமே! அதன் பாதிப்பில் இருந்து விடுபட சமூத்தை நோக்கி குறைகூறுவதும் நாமே! ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று யாழ்ப்பாணத்தில் 5வீட்டிற்கு ஒரு வெற்றுக்காணி காணப்படுகிறது. வெற்றுக்காணியினை சுற்றி உள்ள குடியிருப்பாளர்கள் தமது வீட்டுச் சூழலை சுத்தப்படுத்தி கழிவுகளை வெற்றுக்காணிக்குள் வீசுகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்பு எமக்கே,  என்பதை உணருவதில்லை. இதில் வேடிக்கை, தாம் சுத்தமாக இருப்பதாக எண்ணிக்கொள்வது. 

வீதிகளில் பொறுப்பற்ற முறையில் கழிவுகளை வீசி எறிவது. வீதிகளில் வைக்கப்பட்டுள்ள தரம்பிரிப்பு கூடைகளுக்கு அருகில் செல்லும் பலர் கூடையினுள் கழிவுகளை போடும் சிந்தனையில் இல்லை. வாகனத்தில் இருந்தவாறு வீதியில் வீசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுவோரும் மனிதர்கள் என்ற எண்ணம் பலருக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விடயம். மக்கள் தமது சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதால் மட்டுமே டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து விடுபடமுடியும்.  

தமது சூழலை சுத்தமாக வைத்திருப்பதாக நினைத்து பிறிதொரு சூழலை அசுத்தப்படுத்துகிறீர்கள் என்பதை உணரவேண்டும். சமூக பொறுப்புடன் உணர்ந்து செயற்படவேண்டிய கடமையும் பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது. 

யாழ். மாவட்டத்தை பொறுத்தவரையில் டெங்குத் தாக்கம் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு யாழ். மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீடம் கூட டெங்கு தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இவை அனைத்தும் யாழ். மாவட்டத்தின் டெங்கு தாக்கத்தின் தீவிரத்தை எடுத்துகாட்டும் உதாரணங்கள் ஆகும். 

இச்செயற்பாடுகள் அனைத்தும் சமகால பிரச்சினையில் இருந்து விலகி நிற்பதற்கான எடுகோள்களே தவிர எதிர்கால தீர்வாக அமையாது. இனியும் தாமதிப்பதில் பயனில்லை. அனைவரும் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.

செயற்திட்டமானது எதிர்காலத்தை நோக்கிய தீர்வாக அமையவேண்டும். பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் இல்லையேல் மலேரியாவில் இருந்து விடுபட்ட இலங்கை டெங்கு நோயின் பிடியில் அகப்பட்டுவிடும்.   

எஸ். சொரூபன்

Comments