வலையில் சிக்கிய சுறாக்களை விடுவிக்கும் மீனவர்கள் | தினகரன் வாரமஞ்சரி

வலையில் சிக்கிய சுறாக்களை விடுவிக்கும் மீனவர்கள்

சுறா மீன் என்றாலே பலருக்கும் கொள்ளைப் பிரியம். அதுவும் தமிழர்களைப் பொறுத்தவரையில் வீட்டில் பிள்ளை பெற்ற பொண்ணொருவர் இருந்தால் தினமும் சுறா மீனில் குழம்பு, வறை என்று அமர்க்களமாயிருக்கும். சுறாமீனை பிள்ளை பெற்ற பெண்ணுக்கு கொடுத்தால் அதிகளவில் பால் சுரக்கும் என்பது நம்பிக்ைக. அதனாலேயே இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் சுறாக்களுக்கு கிராக்கி அதிகம். ஆனால் தமது வலையில் பட்ட சுறாக்களை அதே வடக்கு கடலிலேயே விட்ட சம்பவமும் நாட்டின் வடக்குப் பகுதியிலேயே இடம்பெற்றுமிருக்கின்றது. தமது வலையில் அகப்பட்ட வெள்ளை சுறாக்கள் மற்றும் வெள்ளை புள்ளி சுறாக்கள் என பன்னிரண்டு சுறாக்களுக்கு அபயம் அளிக்கும் அளவிற்கு வடக்கு மீனவர்கள் கருணைமிக்கவர்களாயிருந்திருக்கிறார்கள். கடந்த ஒன்றரை வருடங்களிலேயே அவர்கள் இவற்றிற்கு மறுவாழ்வளித்துள்ளார்கள்.  

வடக்கு கடலில் இவ்வாறு ஆங்காங்கே வெள்ளை சுறாக்களும் மற்றும் வெள்ளையில் கறுப்புப் புள்ளி போட்ட சுறாக்களும் மீனவர்களின் வலைகளிலேயே சிக்குகின்றன. மன்னார் மற்றும் யாழ்ப்பாண கடற்கரையோரங்களில் சிக்கிய இரண்டு சுறாக்கள் மாத்திரமே இதுவரை இறந்துள்ளன. ஏனையவை காப்பாற்றப்பட்டுள்ளன.  

வெள்ளை சுறா மற்றும் வெள்ளை புள்ளி சுறாக்களும் மீன் வகையைச் சேர்ந்தவையாகும். மீன்பிடித்தொழில் செய்யும் மீனவர்களின் அனுதாபத்தை இந்த மீன்கள் எவ்வாறு பெறுகின்றன? இது பற்றி அறிய அண்மையில் இரண்டாயிரம் கிலோகிராமிலும் அதிக எடையுடைய வெள்ளைப்புள்ளி சுறாவொன்று வலையில் மாட்டிய யாழ்ப்பாணம் நயினைதீவு கடற்பிரதேச மீன்பிடித் தலைவரிடம் உரையாடினோம்.  

அவரின் பெயர் என். மரியநாயகம் நாற்பத்தெட்டு வருட காலமாக அவர் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றார். அது அவரின் பரம்பரைத் தொழிலாகும்.  

அந்த வெள்ளைபுள்ளி சுறா எமது மீனவர்களின் வலையில் சிக்கியது. அதன் நிறை இரண்டாயிரம் கிலோ கிராமிற்கும் அதிகமாகும். கடல் நடுவில் அதனை விடுவிக்க முயற்சி செய்தாலும் நிறை அதிகம் என்பதாலும், மீனவர்கள் நான்கு பேர் மட்டுமே இருந்ததாலும் அதனை விடுவிக்க முடியாமற் போயுள்ளது. அதனால் அவர்கள் வலையுடன் மீனை கரைக்கு கொண்டு வந்து வலையிலிருந்து விடுவித்து மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளார்கள்.  

அதை விடுவிக்க இருபது, முப்பதுபேர்வரை தேவை. சுறாவால் அரை மணித்தியாலயம் வரை கரையில் வாழமுடியும். அதனால் மீனவர்கள் சுறா வலையில் மாட்டினால் கரைக்கு கொண்டுவந்து விடுவார்கள். அவ்வாறு செய்யாவிட்டால் மீன்வலையிலிருந்து வெளியேற முயற்சி செய்யும் போது வலை அறுந்துவிடும்.  

யாழ்ப்பாணத்தில் வெள்ளை புள்ளி சுறாக்களும், வெள்ளை சுறாக்களும் எட்டு முறை வலைகளில் சிக்கியுள்ளன. மொத்த வட புல கடற்பகுதியிலும் கடந்த ஒன்றரை வருடங்களில் பன்னிரண்டு மீன்கள் அகப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் அவர்கள் கடலில் விடுவித்துள்ளார்கள்.   மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கரையொதுங்கிய இரண்டு சுறாக்கள் காயமடைந்திருந்ததனால் அவை மரணமடைந்தன. இம் மீன்கள் கப்பலில் அகப்பட்டு காயமடைகின்றன. படகு இயந்திரங்களில் அகப்பட்டும் காயமடைகின்றன. அதே போல தங்கூஸ் நூல் மற்றும் வலைகளில் அகப்பட்டும் காயமடைகின்றன.  

“வெள்ளைப் புள்ளி சுறாக்களும், வெள்ளை சுறாக்களும் மிகவும் அபூர்வமான மீன்கள் என அதிகாரிகள் சொல்கிறார்கள். அதே போல் இவை அழிவடைந்து வரும் மீனினம் என்பதால் அவ்வகையான மீன்களை பிடிப்பதை தடை செய்துள்ளார்கள்.  

வலையில் மாட்டினால் இதனை தம்வசம் வைத்திருக்க மீனவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. அவற்றை வைத்திருந்து அகப்பட்டால் சட்டம் கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.  

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் மீன்பிடி அனுமதி பத்திரம் ரத்துச்செய்யப்படலாம். அத்துடன் பெருமளவு அபராதமும் விதிக்கப்படும். அதனால் மீனவர்கள் அவ்வகையான மீன்களைப் பிடிப்பதில்லை.  

அடுத்த விடயம் இந்த இரண்டு இன மீன்களையும் உணவுக்காக பாவிக்க முடியாது. மீனாக அதனை யாரும் சாப்பிடமாட்டார்கள். மிகவும் சத்துடையதால் சூப்பாகதான் பயன்படுத்துவார்கள்.   

சாதாரணமாக வெள்ளைசுறாவின் எடை ஆயிரம் கிலோவாகக் காணப்படும். வெள்ளை சுறா இரண்டாயிரம் கிலோவிற்கும் அதிகமாக காணப்படும் அதனால் அவ்வளவு பெரிய மீனை சூப்புக்காக மாத்திரம் விற்க முடியாது. யாரும் வாங்க மாட்டார்கள். அதனால் மீனவர்கள் கனவில் கூட அவற்றைப் பிடிக்க மாட்டார்கள்.  

மீனவர் எஸ் மரியநாயகத்துக்கு சுறாக்களின் வகைகள் பற்றிய அறிவு இல்லாவிட்டாலும் அவர் கூறிய விடயங்கள் உண்மையென நீர்வாழ் உயிரினங்கள் பற்றி நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் வெளியிட்டு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளன. நிபுணர்களின் கருத்துபடி உலகிலுள்ள பல கடற்பகுதிகளிலும் பல இனச் சுறாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.  

சுறாக்களில் மிகவும் பெரிய சுறா வெள்ளைப் புள்ளி சுறாவாகும். பன்னிரண்டு மீற்றர் வரை நீளமாக வளரக்கூடிய வெள்ளைப் புள்ளி சுறா திமிங்கில சுறாவென்றும் அழைக்கப்படுகின்றது.  

நீர்வாழ் உயிரின நிபுணர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட தகவல்களை, மரியநாயகம் போன்றோர் தங்கள் அனுபவத்தால் பெற்றுள்ளார்கள். உலகிலுள்ள மிகச் சிறிய சுறா லாந்தர் சுறாவாகும். பதினைந்து சென்ரிமீற்றர் தொடக்கம் பதினேழு சென்ரிமீற்றர் வரையான நீளம் கொண்ட இச்சுறா லாந்தர் போன்ற உருவத்தையுடையதால் லாந்தர் சுறா (Dwart Lantern Shark) என அழைக்கப்படுகின்றது.  

கடலில் மாத்திரமல்லாது நன்னீரிலும் இரண்டு வகையான சுறாக்கள் காணப்படுவதாகவும் ஆனால் அவ்வினங்கள் அழிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.  

 மீனவர்களை தாக்கக்கூடிய பாரிய சுறாக்களும் உள்ளன. ஆனால் இலங்கையை அண்டிய கடலில் அவ்வாறான சுறாக்கள் இல்லை என நீர்வாழ் உயிரின விசேட நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள்.  

சுறாக்களின் இனம் அழிவடைவதற்கும் காரணம் சுறாக்களின் துடுப்புகள் கொண்டு தயாரிக்கப்படும் சூப் மிகவும் பெறுமதியானவை என்பதால் சுறாக்கள் அதிக விலைக்கு விலை போகின்றன. சூப்புக்காக சுறாக்களின் துடுப்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக Smithsonal Ocean Portal – Smithsonian Institution நிறுவனம் பின்வருமாறு தனது கருத்தை தெரிவிக்கின்றது.  

சுறாக்களின் துடுப்புகளின் ஏற்றுமதிக்காக பெருமளவு சுறாக்கள் வேட்டையாடப்படுவதால் அவை அழியும் நிலையிலுள்ளன. அது அன்று தொடக்கம் இன்றுவரை உள்ள செயல்பாடாகும். அதிகளவு பொருளாதார லாபத்தை ஈட்டிக் கொடுப்பதால் அது இலாபகரமான தொழிலாக மாறிவருகின்றது.  

யப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் சுறாவின் துடுப்பு சூப்பிற்கு பெருமளவு கிராக்கியுள்ளது. சுறாவின் முழு உடலையும் விட துடுப்புகளே பெறுமதி வாய்ந்தவை. கடலில் பிடிக்கப்படும் சுறாக்களின் துடுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டபின் சுறாக்களை கடலில் வீசிவிடுவார்கள். அப்போது அவை இறந்து விடும்!  

அதற்காக மாத்திரமல்ல சுறாக்களின் தோலை பெறுவதற்கும், மீன்எண்ணெய் தயாரிப்புக்கும் சுறாக்கள் பிடிக்கப்படுகின்றன. சமுத்திரம் மாசடைவதாலும் அவற்றின் உணவாகவுள்ள ஏனைய உயிரினங்களின் அழிவும் அவற்றின் வாழ்வை பாதிக்கின்றன.  

இடம்பெயரும் உயிரினங்கள் தொடர்பாக சர்வதேச ஒப்பந்தம் மூலம் 2010ல் இடம் பெயரும் சுறாக்களை பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹொன்டுராஸ், மாலை தீவு மற்றும் பஹமாஸ் போன்ற நாடுகள் சுறாக்களின் சரணாலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன், 2011ஆம் ஆண்டு மாலைதீவு சுறாக்களை பிடிப்பதை முற்றாக தடை செய்திருந்தது. சுறாக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் சூழல் பாதுகாப்பு அமைப்பான கீறீன்பீஸ் முக்கிய இடம் வகிக்கின்றது.  

1991ல் உலகிலேயே முதற்தடவையாக பெரிய வெள்ளை சுறாக்களை (Great White Shark) பாதுகாக்கப்பட்ட உயிரினமாக தென்னாபிரிக்கா பெயரிட்டது.  

1999ல் ஐக்கிய நாடுகள் சபை சுறாக்களை பாதுகாக்கும் திட்டமொன்றை செயற்படுத்தியது. உலக பாதுகாப்பு சங்கம் 2009ம் ஆண்டு 64வகையான சுறாக்கள் அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.  

2012ஆம் ஆண்டு சீனாவும் இலங்கையும் சில சுறா இனங்களை பிடிப்பதை தடை செய்ததோடு 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் மற்றும் 27நாடுகள் தங்கள் நாடுகளிலும் சுறாக்களை பிடிப்பதை தடை செய்தது.  

நீர்வாழ் உயிரினங்கள் தொடர்பான நிபுணர் டீலர் மாத்திரமல்ல, காலத்தின் மாற்றத்தால் அழிவடையும் நிலைமையிலுள்ள சுறாக்களை பாதுகாக்க முழு உலகமுமேகவனமெடுத்துள்ளது. வடக்கில் மீனவர்கள் தங்கள் வலைகளில் சிக்கும் சுறாக்களை விடுவிப்பது எவ்வளவு சிறப்பானது?  

ரசூலதில்ஹார கமகே  
தமிழில் ஆர்.ஏ வயலட்  

Comments