தமிழர்களும் சிங்களவர்களும் கரவொலி எழுப்பும் சுனாமி திரைப்படம் | தினகரன் வாரமஞ்சரி

தமிழர்களும் சிங்களவர்களும் கரவொலி எழுப்பும் சுனாமி திரைப்படம்

பெயரைப் பார்த்ததும் 2004இல் பல நாடுகளைப் புரட்டிப்போட்ட சுனாமி அனர்த்தம் பற்றிய கதையாக இருக்கும் என்றே எண்ணத் தோன்றும். ஆனால், கதைக்கரு அதுவல்ல. அந்தச் சம்பவத்தை அடியொற்றியதாகப் பின்னப்பட்ட மனிதநேய யதார்த்தத்தின் வெளிப்பாடு. மனிதர்கள் எல்லோரும் சமம் என்பதை நிறுவுவதற்கான பிரயத்தனம்! இதன்மூலம் நல்லிணக்கத்திற்கு ஓர் உறுதியான அடித்தளத்தை இடுவதற்கு முயற்சித்திருக்கிறார் படத்தின் இயக்குநர் பேராசிரியர் சோமரத்ன திசாநாயக்க.

சுனாமி அனர்த்தத்தில் தமது பிள்ளையைத் தொலைத்துவிட்ட இரண்டு தம்பதிகள் பிள்ளைக்கு உரிமைகோரி நீதிமன்றத்தில் வழக்காடுவதுதான் கதை. சிங்களக் குடும்பமொன்றுக்கும் தமிழ்க்குடும்பமொன்றுக்கும் இடையிலான இந்தச் சிக்கலை அவிழ்ப்பதற்காக, அன்பையும், அரவணைப்பையும் வலுவான ஆயுதமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். ஈற்றில் வெற்றி பெறுவது அன்பு, புரிந்துணர்வு, பாசம் இப்படி சொல்லிக்ெகாண்டே போகலாம். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இதனைவிட எதுவும் செய்துவிட முடியுமா? என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு உழைத்திருக்கிறார்கள் படத்தின் கலைஞர்கள்.

பொதுவாக சிங்களப் படங்களில், நாடகங்களில் தமிழர்களைக் காண்பிப்பதென்றால், ஒரு வேலைக்காரியாக அல்லது வேலைக்காரனாகத்தான் காண்பிப்பார்கள். 'சார்ஜன்ற் நல்லதம்பி' நாடகத்தின் நல்லதம்பி கதாப்பாத்திரத்தில் நடித்த நிஹால் சில்வா, 'தட்டயா' என்கின்ற ரொனி லீட் எல்லோரும் அப்படித்தான் சித்தரித்தார்கள். "ஆனந்தபவன் எக்கட்ட கிஹின் தோசே கிலினவா, எளியட்ட எவதின் யாப்பனே தெமழுன்ர பணினவா" என்று பாடுவார் ரொனி லீட். இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலக்கியத்தால் ஆற்றக்கூடிய வகிபாகம் அளப்பரியது. ஆனால், ஆரம்பகால படைப்புகள் எல்லாம் விரிசலை விசாலப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. "ஹெரியட் தெமழவுனத் லஸ்ஸனய், எய சிங்களத் கத்தாக்கரய்" ஹெரியட் ஒரு தமிழாக இருந்தாலும் அழகானவள், அவள் சிங்களமும் கதைக்கின்றாள் என்பது அதன் பொருள். இந்தக் கூற்றைப் பேராசிரியர் பராக்கிரம நிரியெல்ல ஒரு தடவை மிக வன்மையாகக் கண்டித்திருந்தார். அப்படியென்றால், "தமிழர்கள் எல்லோரும் அவலட்சணமானவர்கள், ஹெரியட் மட்டும் அழகானவள்" என்றா சொல்ல வருகிறார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இவ்வாறான படைப்புகளைத் தமிழறிஞர்கள் பெரிதாகக் கொள்வதில்லை; அல்லது ஆழமாகச் சிந்திப்பதில்லை. சில தமிழ் பேசும் எழுத்தாளர்கள் இவ்வாறான தவறுகளை இன்னமும் தொடர்ந்து வருகிறார்கள் என்பது வேறு விடயம்.

தற்போதைய சூழலில் இயக்குநர்கள் அசோக்க ஹந்தகம, பேராசிரியர் சோமரத்ன திசாநாயக்க முதலானோர் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்துவதற்காகத் தங்களின் கலைத்திறமைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இயக்குநர் சோமரத்ன திசாநாயக்க

அந்த வகையில், இயக்குநர் சோமரத்ன திசாநாயக்க ஏற்கனவே இயக்கி வெளியான 'சரோஜா', 'புஞ்சி சுரங்கனாவி' ஆகிய வெற்றிப்படங்கள் மூலமும் இனங்களுக்கிடையில் ஓர் உறவுப் பாலத்தை ஏற்படுத்த முயற்சித்திருந்தார். சிங்கள மொழியில் வெளியான இரண்டு படங்களிலுமே நித்தியவாணி கந்தசாமிக்குப் பிரதான பாத்திரத்தை வழங்கி, தமது நல்லிணக்க முயற்சிக்கு வலுவூட்டியிருந்தார்.

எனினும், சுனாமி திரைப்படத்தை ஒரு சிங்களப்படம் என்று சொல்ல முடியாது என்கிறார் இயக்குநர். அதில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்ப் படங்கள் திரையிடப்படும் அரங்குகளில், தமிழ் உப தலைப்புகளுடன் படத்தைக் காட்சிப்படுத்த நடவடிக்ைக எடுப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். எனவே, இதனைச் சிங்களப் படம் என்று சொல்ல முடியாது. இரு மொழிப் படம்.

பிரதான பாத்திரங்களில் தர்ஷன் தர்மராஜ் (செல்வம்), நிரஞ்சனி சண்முகராஜா (கல்யாணி) ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை (03) இந்தப் படத்தை வெள்ளவத்தை 'சவோய்' திரையங்கில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அரங்கு நிறைய சிங்கள ரசிகர்கள். அவர்களுடன் ஏராளமான ஊடகவியலாளர்கள். படக்காட்சிகள் தொடங்குவதற்கு முன்னர், படத்தின் தயாரிப்பாளர் திருமதி ரேணுகா பாலசூரிய (இயக்குநரின் மனைவி) அனைவரையும் வரவேற்று சில நிமிடங்கள் பேசினார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் சோமரத்ன திசாநாயக்க வந்தார்.

"ரேணுகா சுருக்கமாகப் பேசினார். ஆனால், எனது உரை 105 நிமிடங்கள் கொண்டது. இந்தப் படம், 2004 சுனாமிப் பாதிப்பைச் சொல்வதாக நினைப்பீர்கள். அதுதான் இல்லை. அதற்கும் அப்பால் சென்று உங்களின் இதயங்களைத் தொட்டிருக்கிறது. அரசியல், இனம், மதம் என்று பல்வேறு கூறுகளாகப் பிரிந்து கிடக்கும் நமது சமூகத்தின் மூளை தட்டிவிடப்பட்டிருக்கிறது" இனி எனது கதையைக் கேளுங்கள் என்று தாம் ஓர் இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

திருகோணமலை, குச்சவெளியில் ஒரு மீனவக்குடும்பத்தைச் சேர்ந்த கல்யாணியும் செல்வமும் வழமைபோன்று அன்றும் (2004 டிசம்பர் 26) கருவாடு உலரப்போடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். திடீரெனக் கடல் உள்வாங்குகிறது. அப்போது மணலில் தத்தளிக்கும் மீன்களைப் பொறுக்குவதில் முழுக்கிராமமும் ஈடுபடுகிறது. நொடிப்பொழுதில் இராட்சத அலைகள் கரையைத் தொட்டு அனைத்தையும் துவம்சம் செய்கின்றன. இதன்போது மனைவி கல்யாணியையும் மகள் பிரபாவையும் காப்பாற்றுவதற்கு முயற்சித்துத் தோற்றுப்போகிறார் செல்வம். எல்லாம் ஆடி அடங்கியதும், வைத்தியசாலையில் மனைவியைக் கண்டுகொள்கிறார் செல்வம். அப்போது பிள்ளையைக் காணவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட கல்யாணி பித்துப் பிடித்தவள்போல் ஆகிவிடுகிறாள். நிரஞ்சனி சண்முகராஜாவின் நடிப்பு அரங்கத்தையே கண்ணீரில் நனைத்துக்ெகாண்டிருக்கிறது. அவர்கள் தமிழில் பேசி நடிப்பதைப் பற்றி எந்தச் சலசலப்பும் இல்லை. அந்தளவிற்கு நெஞ்சத்தைக் கிழித்துக் கண்ணீரைப் பிழிந்தெடுக்கிறார்கள் தர்ஷனும் நிரஞ்சனியும்.

இந்த இடத்தில், போலி மதவாதிகளினதும் மந்திரவாதிகளினதும் அரசியல்வாதிகளினதும் பித்தலாட்டங்களுக்குச் சம்மட்டியால் அடித்திருக்கிறார் இயக்குநர்.

பிள்ளையைத் தேடியலைந்து படாதபாடு பட்டு இறுதியில் நீதிமன்றத்தில் வழக்காடுகிறார்கள். அதற்குக் காரணம் கண்டியிலிருந்து குச்சவெளிக்குச் சென்ற ஒரு சிங்கள தம்பதியும் அன்றைய தினம் தங்கள் மகளைத் தொலைத்துவிடுகிறார்கள். ஆனால், தங்கள் மகளென நம்பி ஒரு பிள்ளையை நிவாரண முகாமிலிருந்து அவர்கள் கொண்டு சென்று விடுகிறார்கள். பத்து வருடங்களுக்குப் பின்னர் அந்தப் பிள்ளை தங்களுடையது என்று அறிந்துகொண்ட கல்யாணியும் செல்வமும் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது பத்திரிகையொன்றில் வெளிவந்த ஒரு கட்டுரை. சிங்களப் பிள்ளையொன்றுக்குத் தமிழும் புரிகிறது. முற்பிறப்பு கதைகளைச் சொல்கிறது என்பது அந்தக் கட்டுரை. அதில் பிரசுரிக்கப்பட்டிருந்த படம் செல்வம் தம்பதியின் காணாமற்போன குழந்தையுடையது. அந்தக்கட்டுரையாளரைச் சந்தித்து அவரின் உதவியுடன் கண்டிக்குச் சென்று தமது பிள்ளையைப் பார்க்கிறார்கள் செல்வமும் கல்யாணியும். ஆனால், அவர்கள் அது தங்களுடைய பிள்ளை என்கிறார்கள்.

மன்னன் சொலமனின் அரசவையில் இரண்டு தாய்மார்கள் ஒரு பிள்ளையைத் தங்களுடையது என்று வாதிட்டார்கள். அதில் ஒரு தாய் போலித்தாய். சுனாமி திரைப்படத்தில் இருவருமே அந்தப் பிள்ளை மீது உயிரைவிடுகிறார்கள்.

வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்ெகாண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அது தங்களுடைய பிள்ளை அல்லவென்றும், அஃது ஒரு தமிழ்ப் பிள்ளை என்பதைப் புரிந்துகொண்டும் சிங்களத் தம்பதியர் பிள்ளையை விட்டுக்ெகாடுக்கிறார்களில்லை. ஹிமாலி சயூரங்கி, பிமல் ஜயகொடி ஆகிய இருவரது நடிப்பும் ரசிகர்களைக் கண்ணீரில் நனைய வைக்கின்றது. உண்மையில் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைத்துவிடும் திரைப்படம் இது.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய காற்று, நான் உங்கள் தோழன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூலில் சக்ைகபோடு போட்டிருந்தாலும், நல்லிணக்கத்திற்கு மகுடம் வைத்திருக்கும் ஒரு திரைப்படம் என்ற பெருமையை சுனாமியே தக்கவைத்துக்ெகாள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

குழந்தை நட்சத்திரம் மெனாரா வீரதுங்கவின் நடிப்பும் பிரமிக்க வைக்கிறது. நிரஞ்சனிக்கு நிகராக ஹிமாலி சயுரங்கியைப்போல் மெனாராவும் அசத்துகிறார். அதேபோன்று மற்றொரு குழந்தை நட்சத்திரமான பர்னி விஜேகுமாரும் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தவிரவும், ரஞ்சனி ராஜ்மோகன், ஜெயரஞ்சன் யோகராஜ், சத்யபிரியா ரட்னசாமி ஆகியோரும் தங்களுடைய வகிபாகத்தைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நிறைவாக, குழந்தை யாருக்குச் சேர்கிறது என்பதைவிட, யாரை நேசிக்கிறது, ஏன்? என்பதற்கு விடைசொல்கிறது கிளைமாக்ஸ்! இறுதியில் "எனக்கு இரண்டு அம்மா, இரண்டு அப்பா " என்கிறாள் மெனாரா வீரதுங்க. இரண்டு குடும்பமும் சேர்ந்து கருவாடு உலரவிடும் காட்சி திரைப்படத்தின் உச்சம்!

விஸ்வா பாலசூரியவின் ஔிப்பதிவில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் தொகுப்பில் சில காட்சிகள் உந்திச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதி உயர் தொழில் நுட்பத்திலும் கூடுதல் செலவிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தைச் சிறந்த திரையரங்குகளில் மாத்திரம் திரையிட எண்ணியிருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர். என்றாலும், இந்தப் படத்தை முழு இலங்கையர்களும் பார்க்கவேண்டும்; படிக்க வேண்டும்; பக்குவப்பட வேண்டும். அதற்கு எல்லாத் திரையரங்குகளிலும் திரையிடப்பட வேண்டும் என்பதை, படம் நிறைவுறும்போது தமிழர்களும் சிங்களவர்களும் சேர்ந்து எழுப்பிய கரவொலி ஆழமாகவே வலியுறுத்தியிருக்கின்றது!

விசு கருணாநிதி

Comments