என்கவுண்டர் | தினகரன் வாரமஞ்சரி

என்கவுண்டர்

இந்தியாவில், ஐதராபாத்தில் நடந்திருக்கும் சம்பவம் இன்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. 

பொலிஸாருக்கு எதிராக இங்கு தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அவர்களை தலையில் தூக்கிவைத்து இனிப்பு ஊட்டி மகிழ்கின்றனர். ஐதராபாத்தில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் பொலிஸார் மீது பாராட்டு மழை பொழியும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. 

ஆர்ப்பாட்டம் நடத்தி பொலிஸார் மீது கல்வீசிய பெண்கள் இப்போது அவர்கள் மீது றோஜா மலர்களை வீசி வாழ்த்தி மகிழ்கின்றனர்.  

தெலுங்கானா, ஐதராபாத் நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களும் மேளதாளங்களுடன் ஊர்வலம் வருகின்றனர். இவை நமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இவைகளுக்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. 

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஐதராபாத் நகரில் பெண் கால்நடை மருத்துவரொருவர் நான்கு காமுகர்களினால் பாலியல் வன்புணர்வுக்கு, உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 27ம் திகதி (27/11/2019) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

இதனைக் கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. நான்கு காமுகர்களும் தண்டிக்கப்பட வேண்டுமென்ற கோஷம் வலுவடைந்தது மட்டுமல்ல, நாடெங்கும் கொந்தளிப்பான நிலையே உருவானது. 

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் கேசவலு, முஹம்மது பாஷா, நவீன், சிவா ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும் லொறி சாரதிகளும் நடத்துனர்களுமென பொலிஸார் அறிவித்தனர். 

பெண் மருத்துவருக்கு உதவி செய்வது போல் நடித்த இவர்கள், 

தெலுங்கானாவில் பணி முடிந்து இரவு வீடு திரும்பிய டொக்டரின் மோட்டார் சைக்கிள் பழுதடைந்திருந்தது. இதற்கு உதவி செய்வது போல் கடத்திச் சென்று நான்கு பேரும் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பொலிஸார் கூறினர். அதேநேரம், மருத்துவரின் வாயில் மதுபானத்தை பலாத்காரமாகப் பருக்கி, அவர் மயக்கமடைந்த நிலையிலேயே பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இவர்கள் நால்வரும் ஒப்புக் கொண்டதோடு சம்பவ இடத்திலேயே அந்த மருத்துவரை எரித்துக்கொலை செய்துள்ளனரென்பது பொலிஸாரின் முதற்கட்ட அறிவிப்பு. 

என்றாலும், தொடர்ந்து ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்திய பொலிஸார், அவர்கள் நால்வரையும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.  மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, நால்வரும் தப்பியோட முயன்றனர். அதனாலேயே இவர்களைச் சுட்டுக்கொன்றோமென பொலிஸார் அறிவித்தனர். 

இந்த அறிவிப்பு வழமையானது மட்டுமல்ல; எதிர்பார்த்ததுந்தான். என்றாலும், பெண்கள் அமைப்புக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்த நால்வரையும் சுட்டுக்கொன்ற விதத்தைக் கண்டிக்கின்றனர். 

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டுமென்பதில் இவர்களிடம் மாற்றுக் கருத்து இல்லை. சட்டமும், நீதி மன்றமும் அதனைச் செய்திருக்க வேண்டுமென்றே வலியுறுத்துகின்றனர். 

பொலிஸாரின் துப்பாக்கிகள் வழங்கியிருக்கும் ‘என்கவுண்டர்’ தீர்ப்பு, நீதித்துறையையும் நீதிமன்றங்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்பதும் மனித உரிமைகள் ஆர்வலர்களின் ஆதங்கமாக இருக்கிறது. 

உண்மையில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அரக்கத்தனங்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. எத்தனை தீர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் இன்னும் அவை கட்டுக்கடங்கியதாக இல்லை. 

இது இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான். பெண்கள் தனிமையில் சென்று வருவதென்பது மிகவும் கேள்விக்குறியானதாகவே இருக்கிறது. 

காலங்காலமாக காமுகர்களின் வெறித்தனங்கள் தொடர்ந்தாலும் குறிப்பிட்ட காலப்பகுதியின் பின்னரே பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் ‘நிர்பாயா’ வழக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டு வருகிறது. டில்லியில் பஸ்ஸில் தனிமையில் பயணம் செய்து கொண்டிருந்த நிர்பாயா என்ற பெண் (கற்பனைப் பெயர்) ஏழு காமுகர்களால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு ஓடும் பஸ்ஸினுள் இருந்து வெளியே வீசப்பட்ட நிலையில் உயிரிழந்தாள். இதனோடு சம்பந்தப்பட்ட ஏழு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் மேன்முறையீடு செய்தபோதும், மரண தண்டனை மீண்டும் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. 2012ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்த போதும் அந்த 7 பேரின் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

இதேபோல, இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலும் பெண்ணொருவர் மிகக் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் ஐவர் கொண்ட கும்பலொன்று இளம் பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்தப் பெண் பொலிஸில் கொடுத்த புகாரால் ஐந்து காமுகர்களும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு அந்தப் பெண் வந்து கொண்டிருந்தபோது வழிமறித்தவர்கள் (பிணையில் வந்த இருவருமென நம்பப்படுகிறது) அவளைத் தாக்கித் தீ வைத்து எரித்தனர். காமுகர்களின் வெறியாட்டத்தில் அந்த இளம் பெண்ணும் கருகிமாண்டு போனாள். 

கொடுமை இப்படியே தொடர்ந்தால் பெண் சமூகத்தின் நிலை பேரவலமாகத்தான் இருக்கப் போகிறதென்ற செய்தியைத்தான் நம்மால் உணர முடிகிறது. 

நம் நாட்டிலும் பெண்கள், சிறுமிகள் மீதான துஷ்பிரயோகங்கள் நடந்துள்ளன.  

புங்குடுதீவு மாணவி வித்தியா, காம வெறியர்களாலேயே கொல்லப்பட்டார். 18 வயது நிரம்பிய அந்த மாணவி பாடசாலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வழிமறித்த ஏழுபேர் கொண்ட காமுகர்கள், மிகவும் ஈனத்தனமாக நடந்து கொண்டது மட்டுமல்ல, சித்திரவதை செய்தே அந்த பாலகியைக் கொன்றார்கள். 

2015ம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி நடந்த இந்தக் கொடூரம் முழு உலகையுமே இலங்கையை கேவலமாக பார்க்க வைத்தது. யாழ் உயர் நீதிமன்றம் இதனோடு தொடர்புடைய ஏழு பேருக்கும் மரணதண்டனை வழங்கியது. என்றாலும், இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லையென்பதால் ஆயுள் தண்டனைக் கைதிகளாகவே அவர்கள் உயிர் வாழ்கின்றனர். ஆனாலும், தங்களை விடுதலை செய்யக் கோரி இன்னும் மேன்முறையீடு செய்து கொண்டேயிருக்கிறார்கள்.  

இதேபோல, கொழும்பு கிருலப்பனை, வென்னப்புவ, ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். தாயின் அருகில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயதுச் சிறுமியை யன்னல் வழியாகத் தூக்கிச் சென்ற இளைஞன் ஒருவன், பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு அந்த சிறுமியை ஆற்றில் வீசிக் கொலை செய்த சம்பவமும் இங்கு நம்மை குடைந்தெடுக்கின்றது. 

தொடரும் இந்தக் கொடூரங்களைப் பார்க்கும் போது, சட்டத்திலும் நீதித்துறையிலும் உள்ள ஓட்டைகளை குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள் என்பது புலனாகின்றது. 

மருத்துவரின் கொலையோடு தொடர்புடையவர்களாக கூறப்படும்,  நால்வரும் குற்றவாளிகள் என்றால் தண்டனை வழங்கத்தான் வேண்டும். காமவெறியர்கள் மீது கருணைகாட்டவே முடியாது. அதற்காக எழுந்தமானமாக அதிகாரத்தை பொலிஸார் கையில் எடுப்பதை ஏற்கவும் முடியாது. 

இப்படியான நடவடிக்கைகள் பிழையான முன்னுதாரணம் மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கை சீரழித்து நாட்டைச் சின்னாபின்னமாக்கிவிடும். 

குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டுமென்பது மக்களின் ஆதங்கம். அதில் நியாயம் இருக்கிறது. 

நீதிமன்றங்களுக்குச் செல்கின்ற வழக்குகளின் தீர்ப்புகள் காலதாமதமடைகின்றன. எதிரி தன்னை தயார்ப்படுத்திக் கொள்வதற்கும் அடுத்த கட்ட நகர்வுக்கும் இந்தக் காலமாதம் வழியேற்படுகின்றதென்பது மனித உரிமைகள் ஆர்வலர்களின் விமர்சனமாக இருக்கிறது. 

வழக்குத் தீர்ப்புகளின் தாமதமும், மக்களின் அவசரமும் பொலிஸாரை சட்டத்தைக் கையில் எடுக்கச் சந்தர்ப்பம் வழங்குகிறதென்பதும் இந்திய மனித உரிமைகள் ஆணையத்தின் பகிரங்க குற்றச்சாட்டாக இருக்கிறது. 

பாலியல் துஷ்பிரயோகம், கொலை தொடர்பான விசாரணைகளை உடனடியாக விசாரிக்க பிரத்தியேக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டாலே இப்படியான என்கவுண்டர்களைத் தவிர்க்க முடியுமென்பது நீதித்துறைசார் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.  என்கவுண்டர் என்பது துப்பாக்கியால் எழுதப்படும் தீர்ப்பாகும். கொல்லப்பட்ட நால்வரையும் நீதிமன்றமே தண்டித்திருக்க வேண்டும். அதாவது தண்டனையை நீதிமன்றமே எழுதியிருக்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்துக்கு கட்டியம் கூறும் நடவடிக்கையாக இருக்கும்.  

இன்னுமொரு விடயத்தையும் நாம் மிக அழுத்தமாகச் சொல்லியே ஆக வேண்டும். பெண் சமூகத்தின் மீது தொடரும் இந்த கொடூரங்களுக்கு தண்டனை வழங்குவதாலோ அல்லது கொலைப் பயமுறுத்தல்களாலோ தீர்வு கண்டுவிடலாமென கருதிவிட முடியாது. அப்படியென்றால், இப்படியான அவலங்கள் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். சரியான முறையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் தெளிவும் ஏற்படுத்தப்படாதவரை இந்தப் பிரச்சினை முடிவிலியாகவே தொடரும்.    

Comments