ஐ.தே.க மறுசீரமைப்பு மாநாடு 25இல் நடத்துவதில் சிக்கல் | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.க மறுசீரமைப்பு மாநாடு 25இல் நடத்துவதில் சிக்கல்

ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாக மறுசீரமைப்புக்கான விசேட மாநாடு டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் கூடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீ கொத்தா வட்டாரம் தெரிவித்திருக்கின்றது.

மறுசீரமைப்புக்கான குழுவை நியமிப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதமே இதற்குக்காரணமெனக் கூறப்படுகின்றது. இந்தக் குழுவை நியமிப்பது தொடர்பாக ஆராயும் கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்கிரம, அகில விராஜ் காரியவசம் ஆகியோரடங்கிய குழுவின் சிபாரிசுக்கமையவே இந்தக் குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மூவரடங்கிய குழு இன்னமும் அதன் சந்திப்பை முன்னெடுக்கவில்லை. அக்குழு கூடியெடுக்கும் முடிவுக்கமையவே பத்துப் பேர் அல்லது 15பேரடங்கிய சிபாரிசுக் குழு நியமிக்கப்படும். அதன் பின்னர் அந்த சிபாரிசுக்குழு அதன் யோசனைகளையும், சிபாரிசுகளையும் முன்வைப்பதற்கு பத்து நாட்களாவது காலம் எடுக்கலாம் என்பதால் நத்தார் தினத்துக்கு முன்னர் விஷேட மாநாடு கூட்டப்படுவது சாத்தியமற்றதாகலாம் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை எதிர்வரும் 22ஆம் திகதி அல்லது 23ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுமுறை நிமித்தம் வெளிநாடு செல்லவிருப்பதால் இந்த மாநாட்டுக்கான திகதியை நிர்ணயிப்பதில் தாமதமேற்படலாமெனவும் கூறப்படுகின்றது.

பெரும்பாலும் இந்த விஷேட மாநாடு ஜனவரிமாத முற்பகுதியில் நடைபெறலாமெனவும், அதன் போது ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்தை பிரிதொருவருக்கு விட்டுக்கொடுக்க தயாராகவுள்ளதாகவும் அறியவருகின்றது.

இது இவ்விதமிருக்க ரணில் விக்கிரமசிங்க தனது 42வருடகால அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

Comments