வரிக் குறைப்பால் விவசாயிகளுக்கு பெரும் நன்மை | தினகரன் வாரமஞ்சரி

வரிக் குறைப்பால் விவசாயிகளுக்கு பெரும் நன்மை

வரிகள் பாரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளதால் நாட்டில் உற்பத்திகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளதுடன், அதிகளவான முதலீடுகள் நாட்டை நோக்கி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பாரிய சலுகைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதிக்கும் மீள் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் உற்பத்தியும் நாட்டில் அதிகரிக்கும். இன்றைய சூழலில் மிளகு விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டவற்றை அமுல்படுத்துவதே எமது பணியாகும்.

வரிகள் குறைக்கப்பட்டதால் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரிக்க எதிர்பார்ப்பதுடன், அதிகளவான மூலதனங்களும் நாட்டை நோக்கி வர கூடிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. மணல், மண் மற்றும் கற்கல் கொண்டுசெல்வதற்கான தடைக்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவற்றின் விலைகளும் குறைவடைந்துள்ளன.

கொழும்பில் ஒரு கியூப் மணலின் விலை 64,000ரூபாவுக்கு விற்கப்பட்டது. அவை அகழ்வு செய்யப்படும் இடத்தில் 20,000ரூபாவுக்கு விற்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாரிய வறட்சிகள் காணப்பட்டன. நாட்டிலுள்ள குளங்களை குறுகிய காலத்தில் மறுசீரமைத்திருக்க முடியும்.

என்றாலும் கடந்த அரசாங்கம் அதனை செய்திருக்கவில்லை. ஐந்து வருடங்களின் பின்னர் குளங்கள் எமது ஆட்சியில் தூர்வாரப்படுகிறது. விரைவில் அவற்றை மறுசீரமைப்போம். ஐ.தே.க. அரசாங்கம் விவசாயத்தை கைவிட்டிருந்தது. விவசாயத்தின்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. இதன் பெறுபேறுகள்தான் இன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இளைஞர்,யுவதிகள் கிராமங்களை விரும்புகின்றனர். அவர்களது அணுகுமுறைகள் மாறுகின்றன. அதனை நாம் வரவேற்கின்றோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments