தரம் ஐந்தும் தரமில்லாத பலவும்! | தினகரன் வாரமஞ்சரி

தரம் ஐந்தும் தரமில்லாத பலவும்!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி வெற்றிபெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் இன்னமும் பத்திரிகைகள்ல வந்துகொண்டிருக்கு. ஆனால், இந்த முறை முந்தி மாதிரி இல்லை; பெஸ்ற்றா வந்த பிள்ளை, வராத பிள்ளை என்று யாரையும் அரசாங்கம் அறிவிக்கவில்லை. இது ஒரு வகையிலை நல்லதுதான்.இல்லாட்டிக்கு, பாஸ் பண்ணின பிள்ளைகளை வைச்சுக்ெகாண்டு, அவங்களுக்குப் படிப்பிக்காத மாஸ்டர்மார் படம்பிடிச்சுப் பத்திரிகைகள்லயும் பேஸ்புக்கிலையும் போட்டுப் போட்டுப் பிள்ளைகள் மனத்தைக் கஷ்டப்படுத்தியிருப்பார்கள். 

இப்படி நிம்மதியாக இருந்துகொண்டிருக்ைகக்குள்ள, இப்பவும் அப்பிடி படங்கள் வாறதாச் சொல்றார் நண்பர். 'இந்த வித்தியாலயத்தில் இன்னின்ன பிள்ளைகள் பாஸ்பண்ணி இருக்கினம். அவையளுக்கு இவையள்தான் படிப்பிச்சவங்கள்,' என்று குறிப்பிட்டுப் படங்கள் வருகுதாம் கந்தோருக்கு. வந்துவிட்டுப்போகட்டும், பிரசுரிக்க வேண்டியதுதானே! என்றால், அதெப்பிடி, மாஸ்டர்மார் வடிவா கதிரைகள போட்டு இருந்துகொண்டு, கஷ்டப்பட்டுப் படிக்கும் பிள்ளைகள நிற்கவைச்சுப் படங்களைப் பிடிச்சு அனுப்புறாங்கள். அதுக்கு விடேலுமா? அது சரியில்லைத்தானே! இவர்கள் படிப்பிச்சு அந்தப் பிள்ளைகள் பாஸ் பண்ணியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், பாருங்கள் ஒவ்வொரு பிள்ளையும் வீட்டிலை அம்மாவிடம் கேட்காத பேச்சு, ஏச்சு எல்லாத்தையும் கேட்டு, ஊருப்பட்ட ரியூஷன்களுக்குப் போய் படிச்சுத்தானே பாசாகுதுகள். கடைசியிலை, அந்தப் பிள்ளையின் பாடசாலைக்குப் பெயர். இவங்களுக்குப் பெயர் வாங்கிக்ெகாடுத்த பிள்ளைகளை இவர்கள் எப்படி கவனிக்க வேணும்! 

ஆசிரியர்மார் முகத்தை மிடுக்காகக் காண்பித்துக்ெகாண்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் பின்னால், கெட்டிக்கார பிள்ளைகள் நிண்டுகொண்டு இருக்கிறாங்கள். இதென்ன நியாயம்? ஒண்டு பிள்ளைகளும் ஆசிரியர்களும் உட்கார வேணும்; இல்லாவிட்டால், இரண்டு தரப்பினரும் நிற்க வேணும். அப்பிடியும் இல்லையெண்டால், பிள்ளைகள் உட்கார்ந்திருக்கோணும், ஆசிரியர்மார் பின்னால நிற்கோணும். இப்பிடிச் சொல்றதால அவர்கள் கோபிச்சுக்ெகாள்ளக்கூடாது. கஷ்டப்பட்டுப் பெயர் வாங்கிக் கொண்டும், பெயர் வாங்கிக்ெகாடுத்தும் இருக்கிற பிள்ளைகள நாங்கள் பாராட்ட வேண்டும், இல்லையா? என்கிறார் நண்பர். 

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையைப் பொறுத்தவரை, எந்தவொரு பிள்ளையாவது ஸ்கூல்ல படிச்சுப் பாஸாகியிருக்குதா? கிராமங்கள்ல உள்ள சிங்களப் பாடசாலைகள்ல படிக்கிற பிள்ளைகள் ரியூசன் போகாமல், சுயமாகப் படிச்சுப் பாஸ் பண்ணி சாதனை படைக்கிறார்கள். தமிழ் மொழியில் தோற்றும் பிள்ளைகளுக்குத்தான் எல்லாப் பிரச்சினையும். ஸ்கூல்ல படிப்பிக்காத ஆசிரியர்கள், ரியூஷனில் சிரத்தை எடுத்துப் படிப்பிக்கிறார்கள்.

அவர்களின் ரியூஷனுக்குப் போனால், பாடசாலையிலும் சற்றுக் கவனிப்பு! இப்பிடிச் செய்துவிட்டுப் படத்துக்குப் போஸ் கொடுக்கிறது நியாயமா? இல்லைதானே! 

உண்மையிலை, இப்ப அரசாங்கம் செய்திருக்கிறது நல்ல வேலை. அதாவது முதல் பத்து இடங்கள் பற்றி அறிவிப்பதில்லை என்று எடுத்த முடிவு நல்ல முடிவு. இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் ஏழைப் பிள்ளைகள், நல்ல பெரிய பாடசாலையில் சேர்ந்துகொள்ளலாம் என்று முதலாவதாகவும் இரண்டாவதாக, புலமைப்பரிசிலாக மாதாந்தம் ஓர் உதவுத் தொகை கிடைக்குமே என்ற எதிர்பார்ப்பு இரண்டாவது முக்கியத்துவமாகவும் கருதுகிறார்கள்.  

ஆனால், நடுத்த வர்க்கத்தினர், தமது கௌரவத்திற்கும் செல்வாக்கிற்கும் மேலும் ஓர் இறுக்கமான அடித்தளத்தைப் போட்டுக்ெகாள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில், அவர்களிள் பிள்ளைகள் சிறிய கிராமப்புற பாடசாலைகளில் கல்வி கற்பதில்லை. அப்பிடியே திறமையாகச் சித்தி எய்தினாலும், மாதாந்த உதவுத் தொகையினைப் பெற்றுக்ெகாள்ள முடியாது. அப்பிடியென்றால், அவர்களின் ஒரே நோக்கம் கௌரவம். 

அந்தளவில் பிள்ளைகள் சித்தியடைந்தால் மட்டுந்தான், அவர்களின் கௌரவம் காப்பாற்றப்படும். இல்லையேல், வேலை பார்க்கும் இடத்திலும் படிப்பிக்கும் பாடசாலையிலும் பெரும் அவமானம்தான்.! அதுதான், இந்தப் பரீட்சையை அம்மாமார்களின் பரீட்சை என்று சொன்னார் முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர். 

பிள்ளை எப்பிடி பாஸ்தானே, இலங்கையில எத்தனையாவது இடம். மாகாணத்திலை என்ன நிலை? மாவட்டத்திலை எத்தனையாம் பிள்ளை, என்றெல்லாம் தேடித்தேடிக் கேள்விகள் கேட்டுக் குடைந்தெடுத்து விடுவார்கள். 

இந்தச் சிக்கலிலிருந்து விடுபடுவதற்காகத்தான் ஒவ்வோர் அம்மாவும், அப்பாவும் திட்டம் தீட்டுகிறார்கள். பிள்ளை எங்குப் படித்தாலும் பாஸாகிவிட வேண்டும். எல்லாம் சரிதான், அந்தப் பிள்ளைகளை ரியூசன் என்று நெருக்குவாரப்படுத்துவதையும் கெடுபிடிகளுக்கு ஆளாக்குவதும் தவிர்க்கப்பட வேண்டும்! 

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைதான் ஒரு மாணவரின் எதிர்கால கல்வி மேம்பாட்டின் அளவுகோல் என்று சொல்வதற்கில்லை. அந்தப் பரீட்சையில் வெற்றிபெறாத பல ஆயிரக்கணக்கான மாணாக்கர், உயர் தரத்திலும் பல்கலைக்கழகத்திலும் மின்னிக்ெகாண்டிருக்கிறார்கள். பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்கிறார்கள். 

ஒரு மாணவரின் கல்வி வளர்ச்சிக்குத் தரம் ஐந்து என்பதைவிட அந்த மாணவன், சிறு வயதிலிருந்து புடம்போடப்படும்போதுதான் காலத்தின் கண்ணாடியாகத் திகழ்வான் என்கிறார்கள் மூத்தவர்கள்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. தரம் ஐந்து வரையிலான கல்வியைச் சரியாகக் கொடுத்துவிட்டோம் என்றால், இந்தப் பரீட்சை என்பது ஒரு பொருட்டே அல்ல என்பது புரிந்துகொள்ளப்படும்.  

Comments