மது, போதைப்பொருள் அடிமைகள் அமெரிக்காவின் இன்னொரு பக்கம் | தினகரன் வாரமஞ்சரி

மது, போதைப்பொருள் அடிமைகள் அமெரிக்காவின் இன்னொரு பக்கம்

ஹொலிவுட் நகரம்

அமெரிக்காவிலுள்ள சுப்பர் மார்க்கட்களில் இல்லாத பொருட்களே கிடையாது.  நாம் திணறிப்போகும் அளவுக்கு அனைத்தும் கொட்டிக் கிடக்கின்றன. அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதங்களும் கண்களைக் கவரும்! ருசிக்கவும் தோன்றும்! 

ஒரு தடவை நாம் வாகனத்தில் செல்லும்போது அந்த வாகனத்தின் சாரதி 'நீங்கள் இந்தியர்களா?' என்று கேட்டு விட்டு, 'எப்படி பனீர் பட்டர் மசாலா செய்வது? சிக்கன் குருமா எப்படி செய்வது? அந்தக் கடையில் இந்திய உணவுகள் நல்லாயிருக்கும்! நானும் என் மனைவியும் பஞ்சாபி உணவுகளை விரும்பி உண்போம்! 'என கூறிக்கொண்டே சென்றார். வெள்ளையர்களுக்கும் இந்திய உணவுகள் நன்றாகவே பிடித்துப் போய்விட்டதே! என நினைத்து நான் வியந்து போனேன். 

இனிப்புக்களைப் பொறுத்தவரை அமெரிக்காவில் டோனட்ஸ்ஸூம் புரவுனீசும் மிகப் பிரபலம். அங்கே சின்ன வட்டத்திலிருந்து பென்னம்பெரிய வட்டம் வரை டோனட்களை தயாரித்து விற்கின்றனர். அதிலும் உருளைக்கிழங்கில் செய்த டோனட்களை மக்கள் விரும்பி உண்கின்றார்கள். 

அவற்றை தவிர மிக அரிதாக கேக் துண்டுகள் விற்கப்படுவதை கண்டேன். சூப்பர் மார்க்கட்களில் மிக சிறியளவில் சொக்லட்டுக்கள் விற்க்கப்படுகின்றன. அவை அனைத்தும் சுங்கத்தீர்வையற்ற கடைகளில் தாராளமாகக் கிடைக்கக்கூடியவை. சில கடைகளில் நீரிழிவு நோயாளர்களுக்கான இனிப்பற்ற சொக்லட்டுகள் விற்கப்படுகின்றன. என்றாலும் அவை பெல்ஜியம் நாட்டின் தயாரிப்புக்கள். 

பொதுவாக நாம் தங்கியிருந்த அநேகமான ஹோட்டல்களில் வரவேற்பறையில் கண்ணாடியிலான மிகப் பிரமாண்டமான தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டிருக்கும். அதற்குள் தோட்ம்பழம் அல்லது அன்னாசிப்பழத்தை வட்ட வட்டமாக வெட்டிப் போட்டிருப்பார்கள். பழங்களின் சாறு கலந்த தண்ணீர்! அதை தேவையானபோது எடுத்து குடித்துக் கொள்ள வேண்டும். இதுவும் மிக ஆரோக்கிமானதொரு நீர் அருந்தும் முறை! இதை நாமும் பின்பற்றலாம்.   அமெரிக்காவில் என்னை வியக்க வைத்த இன்னுமொரு விடயம்தான் பரந்து, விரிந்த பிரகாசமான வானம்! நம் நாட்டில் போலன்றி அமெரிக்காவில் வானம் தரைக்கு மிக அண்மையாகவும் முகில்கள் பென்னம் பெரிதாகவும் காட்சியளித்தன.  ஆகாயத்தில் முகில்கள் கூட்டத்துக்கு மத்தியில் விமானம் செல்லும்போது எப்படி அதனை தெளிவாக அவதானிக்கலாமோ அப்படியொரு தெட்டத்தெளிவு! அதன் உண்மையான விஞ்ஞான விளக்கம் எனக்கு தெரியவில்லை என்றாலும் பூகோளத்தின் மேற்பாகத்தில் அமெரிக்க கண்டம் அமைந்திருப்பதனால் தான் வானத்துக்கிடையிலான இடைவெளி எம் கண்களுக்கு குறைவாக தென்படுகின்றதோ என்று நினைத்துக்கொண்டேன். அதுமட்டுமா, நாம் வாகனத்தில் செல்லும்போதெல்லாம் வாகனத்துக்கு மேலே மிக கிட்டவாக தெரிந்த பிரகாசமான வானத்தையும் பஞ்சுபோன்ற முகில்கள் கூட்டத்தையும் பார்த்து இலங்கையில் நமக்கென்றால் வானத்தை நோக்கிய பயணம் நீண்டதூரமானது.

அமெரிக்கர்களுக்கு வானம் மிக அண்மையில் இருப்பதனால்தான் நீல் ஆம்ஸ்ட்ரோங் இலகுவாக சந்திரனுக்கு சென்றிருக்கிறார்போல என நானும் காந்தும் எங்களுக்குள் நகைச்சுவையாக பேசி சிரித்துக்கொண்டோம்.  அது மட்டுமல்ல நம் நாட்டில் தேசியக் கொடிக்கு எவ்வளவு மரியாதை! ஆனால் அங்கு அப்படியல்ல. அமெரிக்காவின் தேசிய கொடியில் உள்ளாடைகள், பைகள், டீசேர்ட்டுகள், காற்சட்டைகள், கழுத்துப்பட்டி, கைக்குட்டையென அவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் இவைதான் அமெரிக்காவிலிருந்து வாங்கிச் செல்லும் நினைவுச் சின்னங்கள்! ரொம்பவுமே சுதந்திரமாகத்தான் சிந்திக்கிறார்கள். 

ஒரு நாள் இரவு பிலடெல்பியா மாநிலத்தில் நாம் நடந்து திரிந்துக் கொண்டிருந்தபோது வீதியின் ஒரு மூலையில் காதலன் ஒருவர் தன் காதலியிடம் முதன் முதலாக காதலைக்கூறும் காட்சியை நான் கண்டேன். பூக்கொத்தை பெண்ணிடம் நீட்டி மண்ணடியிட்டு அந்த இளைஞன் ஹொலிவூட்டுக்கே உரித்தான பாணியில் ,'ஐ லவ் யூ' சொன்னான். அந்த யுவதி வெட்கத்துடன் தலை குனிந்தபடி பூங்கொத்தை வாங்கிக் கொண்டார். அவர்களை தொடர்ந்து அவதானிப்பது அநாகரீகமான செயலென்பதால் நான் என் பார்வையை வேறு திசையில் திருப்பிக் கொண்டேன். 

அமெரிக்கர்களுக்கு பயணம் செய்வதென்றால் அவ்வளவு பிடித்தமானதொரு விடயம். அதற்காகவே உழைத்து பணம் சேகரிக்கின்றார்கள். எவருடன் பேசினாலும் அடுத்த விடுமுறைக்கு எங்காவது செல்வதற்காக தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருப்பதை உணரமுடியும்! சிலர் அமெரிக்காவுக்குள் மாநிலம் விட்டு மாநிலம் செல்வார்கள். வேறு சிலரோ நாடு விட்டு நாடு செல்வார்கள். பயணம் என்பது அவர்களின் வாழ்க்கை இலட்சியங்களின் ஒன்று. 

உள்நாட்டு விமான நிலையங்களில் எப்போதும் ஒரே நெரிசல் புரசலாக இருக்கும். அதுமட்டுமா, விமான நிலையங்களுக்குள் சிலர் அடுத்த விமானம் வரும் வரை குடும்பம் குடும்பமாக படுத்திருப்பார்கள். மாநிலம் விட்டு மாநிலம் செல்வோர் அனைவரும் கடும் சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள். சுங்க அதிகாரி சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு நாயை உடன் வைத்திருப்பார். ஒவ்வொரு பயணி அகன்ற பின்னரும் அந்த நாய் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும். அவ்வளவும், போதைப் பொருட்களை முகர்வதற்காகத்தான். ஆனால் அவ்வளவு சோதனைகளுக்கு மத்தியிலும் அமெரிக்காவுக்குள் எப்படி சர்வசாதாரணமாக போதைவஸ்து வருகிறது என்பது அடிக்கடி எனக்குள் நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி!  உலக பயங்கரவாதக் குழுக்கள் சித்தாந்த அடிப்படையில் வேறுபட்டாலும் அமெரிக்காவை எதிர்ப்பதில் ஒன்றுபடுகின்றன. அமெரிக்காவை பலவீனமடையச் செய்யும் பல உத்திகளில் போதைப் பொருட்களும் அடக்கம். அமெரிக்க இளைஞர்களை படிப்படியாக போதைப் பழக்கத்தில் ஆழ்த்தினால் அதன் வீரியமும் பலமும் வளர்ச்சியும் ஆதிக்க சக்தியும் குறையும் நலிவடையும் என்பது அவற்றின் எதிர்பார்ப்பு. போதைப் பொருட்களை அதனால்தான், அமெரிக்காவில் நுழைவதைத் தடுக்க அந்நாடு பிரம்மப் பிரயத்தனத்தில் ஈடுபடுகிறது. சோம்பேறிகளைத் தடுப்பதற்காக எல்லையில் சுவர் எழுப்புகிறது!    பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்ட பூட்டுக்களையே அமெரிக்க பயணிகள் தமது பயணப் பொதிகளில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் அதனை மிக இலாவகமாக இயந்திரமொன்றின் உதவியுடன் திறந்து சோதனையிட முடியும். இல்லையேல் பூட்டை உடைத்துத்தான் சோதனையிட வேண்டியிருக்கும். 

குல்ஷன் அமெரிக்கா வந்து இரண்டு நாட்களின் பின்னரேயே அவருக்கு அவரது பயணப்பொதி கிடைத்தது. திறந்து பார்த்தபோது பெட்டிக்குள் தண்ணீர் கொட்டப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் சேதமாகியிருந்தன. அவர் தனது பொதியின் மேலே 'பாகிஸ்தானிலிருந்து' என பெரிதாக எழுதி ஒட்டியிருந்தாராம் அதனால்தான் இவ்வாறு நிகழ்ந்திருக்கலாமென பின்னர் நாங்கள் ஊகித்துக்கொண்டோம். பாகிஸ்தான் என்றால் அமெரிக்கா சற்று உஷாராகத்தான் இருக்கிறது! 

லொஸ் ஏஞ்சல்ஸில் ஒரு தடவை இரவு நான் சில நண்பர்களுடன் உலாவிக் கொண்டிருந்தபோது ஒரு அழகான வெள்ளைக்கார யுவதி போதையில் தட்டுத் தடுமாறி படிக்கட்டுகளில் இறங்க முடியமல் இறங்கிக் கொண்டிருந்தாள். பின்னால் ஓடி வந்த அவருடைய காதலன் அப்பெண்ணை பிடித்து நிறுத்த முயன்றும் அப்பெண்ணை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் வந்த அதே வேகத்துடனேயே நிதானமில்லாமல் வீதியை கடந்தாள். வாகனங்கள் பிரேக்கடித்து நின்றன. வீதியிலிருந்தவர்கள் அக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை அது ரசிக்கக்கூடிய காட்சியாக இருக்கவில்லை. வேதனை கலந்த வலி என் மனதை வாட்டி எடுத்தது. 

போதையேறி வீதியெங்கும் விழுந்து கிடக்கும் அனைத்து வயதினரையும் அங்கு சர்வசாதாரணமாகக் காணலாம். அது மிகவும் கொடுமையான காட்சி! பெற்றோரின் கவனிப்பு மற்றும் வழிகாட்டல் இல்லாதவர்களே அவ்வாறு வழிதவறிப்போவதாக நான் அறிந்து கொண்டேன்.

பிலெடெல்பியா மாநிலத்தில் குடும்ப நீதிமன்றம் ஒன்றில் நடக்கும் விசாரணைகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு வரும் அநேகமான பெற்றோர் போதைவஸ்துக்கு அடிமையானவர்கள். 

அவர்களின் குழந்தைகளை அரசாங்கமே பொறுப்பேற்று வளர்க்கின்றது. அக்குழந்தைகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறி என்பதை நினைக்கும்போது அனுதாபம் ஏற்பட்டது. 

(நினைவுகள் தொடரும்)

லக்‌ஷ்மி பரசுராமன்

Comments