கழிந்தன நாட்கள் | தினகரன் வாரமஞ்சரி

கழிந்தன நாட்கள்

ஈழத்திரு நாட்டின் வடபுலத்தே விவசாய செழிப்புமிகு சிற்றூரிலிருந்து ஆனந்தி என்பவளும் அதே போல கடல் வளம் மிக்க சிற்றூரிலிருந்து லவன் என்பவனும் தொழில் நிமித்தம் அலுவலகம் ஒன்றிற்கு செல்கின்றனர். இருவரும் சொல்லி வைத்தாற் போல் ஒரே அலுவலகத்தில் கடமைக்கு அமர்த்தப்படுகின்றனர். இது இருவருக்கும் முதலாவது தொழில் நியமனம். உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கைப் பிரயோகித்து பலர் தமது இருப்பிடத்திற்கு அண்மையில் வேலை பார்க்கும் இக்காலத்தில் விதிவிலக்காக இவர்கள் இருவரும் தமது இருப்பிடத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்கின்றனர். அலுவலகத்தில் இருவருக்கும் இடையில் முதற் சந்திப்பு இடம்பெற்றது. அங்கு ஒருவருக்கொருவர் நுனிப்புல் மேய்வது போல் அறிமுகம் செய்து கொள்கின்றனர்.  

ஒரு நாள் லவன் சாப்பாட்டுக்காக கடைக்குப் புறப்பட்டான். அலுவலகத்தில் நின்ற ஆனந்தி அவனை மறித்து “லவன்! வெளியிலையா போறீங்கள்?” எனக் கேட்டாள். அதற்கு லவன் “ஓம். சாப்பிடப் போறன்” என்றான். உடனே ஆனந்தி கடதாசி ஒன்றில் எதையோ எழுதிவிட்டு “இந்தாங்கோ லவன். இது என்னுடைய ஏ.ரி.எம் காட். இந்த துண்டிலை காட் நம்பர் எழுதியிருக்கு. சாப்பிட்டு வரும்போது, பத்தாயிரம் ரூபா காசு எடுத்திட்டு வாங்கோ” என்றாள். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனது வாழ்நாளில் அதுவும் ஒரு பெண் வங்கி பணப்பரிமாற்று அட்டையை கொடுத்து காசு எடுத்துவரும்படி கூறியது இதுவே முதல்தடவை. லவனும் சாப்பிட்டு விட்டு வரேக்ைக காசை எடுத்து வந்து கொடுத்தான். ஆனந்தி “தாங்ஸ் லவன்” என்றாள்.  

ஆரம்பத்தில் நீங்கள், நீர், வாங்கோ, போங்கோ என மரியாதையாக உரையாடலை மேற்கொண்ட இருவரும் காலம் செல்லச் செல்ல நட்பு இறுக்கமடைந்து நீ, வா,போ என உரையாடலை மேற்கொண்டனர். ஒரு முறை மதியபோசனத்திற்காக லவன் வெளியே புறப்படத் தொடங்கினான். அதைக் கண்ட ஆனந்தி அவனை அணுகி, “சாப்பிட்டு வரேக்கை சாப்பாட்டு பாசல் ஒண்டு வாங்கி வா” எனக்கூறி காசைக் கொடுத்தாள். லவனும் சாப்பிட்டு விட்டு வரும்போது சாப்பாட்டு பாசலை வேண்டி வந்து ஆனந்தியிடம் கொடுத்தான். ஆனந்தி “தாங்ஸ் டா” எனக்கூறி சாப்பிடத் தயாராகினாள். லவனும் “ஓகே டி. நான் போயிற்று வாறன்” எனச் சொல்லி விட்டு புறப்படத் தொடங்கினான். உடனே ஆனந்தி “லவன்! உள்ளுக்கை வந்திருந்து சாப்பிட்டு போ” என்றாள். லவன் “இப்ப தானே சாப்பிட்டு வந்தனான்” என்றான். மீண்டும் அன்பு கலந்த உரிமையுடன் சாப்பிட்டுச் செல்லும்படி கூறினாள் ஆனந்தி. லவனால் அவளது சொல்லை மீற முடியவில்லை.லவனும் உள்ளே சென்றான். ஆனந்தி சோற்றை கையால் பிசைந்து “இந்தா சாப்பிடு” என லவனின் கையில் கொடுத்தாள். லவனும் வேண்டிச் சாப்பிட்டான். எனினும் லவனுக்கு இனம் புரியாத ஒரு ஆச்சரியமும் ஆனந்தக் கண்ணீரும். ஏனெனில் இதுவரை அவனுக்கு தாய் மட்டுமே கையால் பிசைந்து சாப்பாட்டை கொடுத்திருக்கிறாள். மூன்றாம் நபரான ஒரு பெண் தனது கையால் பிசைந்து சாப்பாடு கொடுத்தது இதுவே அவனுக்கு முதல் தடவை.  

இவ்வாறாக ஆனந்தி லவனிடம் காலை வணக்கம் சொல்வது, உதவிகள் கேட்பது, சாப்பாடு பரிமாறுவது, அரட்டைகள் அடிப்பது வழக்கமாகியது. இப்படி இருக்க ஒரு நாள் ஆனந்தி பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவ்வழியே லவன் சென்றான். லவனைப் பார்த்த ஆனந்தி, “லவன் இஞ்சை வந்திட்டு போ” என்றாள். “என்ன சொல்லு” என்று கேட்டான் லவன். “முதன் முதலாக நான் செய்த பூரி. சாப்பிட்டுப் பார்” என்று கூறி பூரியைக் கொடுத்தாள் ஆனந்தி. லவனும் வாங்கிச் சுவைத்தான். சுவையாக அது இருந்தது. எனினும் அவளை ஊடல் கொள்வதற்காக “நான் நம்ப மாட்டன். நீயாவது பூரி செய்யிறதாவது. அம்மா செய்து தர இஞ்சை வந்து எனக்கு பொய் சொல்லுறாய்” என்றான் லவன். உடனே ஆனந்தி, “இல்லையடா. உண்மையாய் நான் தான் செய்தனான். பொய் எண்டா அம்மாக்கு ரெலிபோன் பண்ணுறன் கேட்டுப்பார்” என்று கூறி தாய்க்கு ஆனந்தி தொலைபேசி அழைப்பை மேற்கொண்டாள். தாய் “சொல்லு பிள்ளை” என்றாள். ஆனந்தி “அம்மா! நானல்லோ இண்டைக்கு பூரி செய்தனான். லவன் நான் சொல்ல நம்பிறான் இல்லை அம்மா” என்று கைத்தொலைபேசியில் கதைத்தாள். தாயும் “ஓம் தம்பி!ஆனந்தி தான் பூரி செய்தவள்” என்று சொன்ன பின்னர் ஆனந்தி லவனைப் பார்த்து “எப்பிடி...” என்று சிரித்தபடி முகத்தை அசைத்து தொலைபேசி அழைப்பை துண்டித்தாள்.  

இப்படியாக இருவருக்கும் இடையிலான நட்பு இறுக்கமடைந்திருந்த வேளை லவனின் நாடக எழுத்துரு ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் தெரிவாகியுள்ளது என்றும் அதனை குறித்த நாளில் வவுனியாவில் ஆற்றுகை செய்து காட்ட வேண்டும் என்றும் லவனுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்தது.

இதனை லவன் உடனே ஆனந்திக்கு தெரிவித்தான்.ஆனந்தி சந்தோசப்பட்டாள். “லவன் உடனே நாடகத்தை பழக்கு. வவுனியாவில் எங்கட மாமா இருக்கிறார். அவரோட கதைச்சு முதல் நாள் வவுனியாவில் தங்கிறதுக்கான எல்லா ஒழுங்கும் நான் செய்யிறன்” என்று ஆனந்தி லவனுக்கு தைரியத்தைக் கொடுத்தாள். ஏனெனில் லவனின் ஊரிலிருந்து வவுனியா சுமார் இருநூறு கிலோ மீற்றர்கள். வவுனியாவில் லவனுக்கு தெரிந்தவர்கள் எவரும் இல்லை. அதனால் ஆனந்தி கூறிய வார்த்தை லவனை உற்சாகப்படுத்தியது.  

லவனும் போட்டிக்காக நாடகத்தைப் பழக்கினான். பழக்கும் போது ஆனந்தியும் இடையிடையே வந்து நாடகத்தைப் பார்த்து சில திருத்தங்களைக் கூறுவாள். போட்டியின் முதல் நாள் மாலை வேளை லவனின் நாடகக்குழு வவுனியாவை நோக்கி சிறிய ரக வாகனம் ஒன்றில் புறப்படத் தொடங்கியது. இடைவழியில் செல்லும்போது மழை குறுக்கிட்டு, அவர்கள் சற்று சிரமப்பட்டு செய்த நாடக காட்சிப் பொருட்களை நனைத்து அவர்களையும் நனைத்து விட்டது. எனினும் லவனின் நண்பர்கள் அவனுக்கு பக்கபலமாக இருந்து அவனது மனதை சோரவிடாது பார்த்தனர். இதேவேளை ஆனந்தி இடையிடையே லவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயணித்துக் கொண்டிருக்கும் இடம் தொடர்பாக கேட்டறிவாள். அப்படி ஒரு தடவை ஆனந்தியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. லவன் “ஆ! சொல்லு” என்றான். “லவன்! எவடத்தில போய்க் கொண்டு இருக்கிறாய்” என்று ஆனந்தி கேட்டாள். “முறிகண்டிப் பிள்ளையார் கோயிலில நிக்கிறம்” என்று லவன் பதிலளித்தான். உடனே ஆனந்தி “மாடு! என்னடா இப்பவோ முறிகண்டியில நிக்கிறியள்” எனக் கேட்டாள்.

ஏனென்றாள் அவள் அழைப்பு எடுத்த நேரத்திற்கு அவர்கள் வவுனியாவை அண்மித்திருக்க வேண்டும். “பொடியளோட வெளிக்கிட்டால் பயணங்களைப் பற்றி தெரியும் தானே. அது தான் பிந்துது” என்று லவன் பதில் அளித்தான். ஆனந்தி “சரி... சரி... ஏதோ செய்து தொலை. வவுனியாவுக்கு போய் நான் அனுப்பின நம்பருக்கு அடி. மாமாட்ட பொடியன் வந்து கூட்டிக்கொண்டு போவான்” என்று கூறி அழைப்பை துண்டித்தாள். லவனின் நாடகக் குழு வவுனியா சென்று ஆனந்தி கூறியது போல் கொடுத்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ஆனந்தியின் மாமனின் வீட்டை அடைந்தது.  

லவனின் நாடகக் குழுவினரை நடு இரவு தாண்டியும் விழித்திருந்து அவர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர். சில நிமிடங்கள் கழித்து அனைவருக்கும் மாமனின் மகள் தேநீர் பரிமாறினாள். “தேத்தண்ணியை குடிச்சிட்டு கொஞ்சம் பொறுத்து சாப்பிடுங்கோ” என்றார் மாமனார். அதற்கு லவன் “இல்லை வேண்டாம். வரேக்கில சாப்பிட்டிட்டு தான் வந்தம். எங்களுக்காக இவ்வளவு நேரமும் முழிப்பிருந்து தேத்தண்ணி தந்ததே சந்தோசம்” என்றான்.

ஆனந்தியின் மாமியார் “ஆனந்தி எங்களுக்கு முதலே சொல்லிப் போட்டாள், அவங்களுக்கு சாப்பாடு குடுங்கோ எண்டு. இல்லாட்டி அவள் என்னைப் பேசுவாள்” என்றார். “சரி சரி அன்ரி. அப்ப கொஞ்சம் பொறுத்து நாங்கள் சாப்பிடுறம்” என்று லவன் கூறினான். அது போல அவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு ஆனந்தியின் மாமனார் வீட்டுக்காரர் நித்திரைக்கு சென்றனர். இப்படியான உதவி ஆனந்தி மூலம் கிடைத்தது லவனுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியது.  

இவ்வாறு இருக்க ஒருமுறை ஆனந்தியின் கைத்தொலைபேசி தவறவிடப்பட்ட நிலையில் லவன் தொலைபேசியை எடுத்து வைத்திருந்த நபருடன் தொடர்புகொண்டு ஆனந்தியின் கைத்தொலைபேசியை அவளிடம் சேர்ப்பித்தான்.

இதனாலும் லவனிடத்தில் ஆனந்தியின் மீதான நட்பு மேலும் வலுவானது. காலம் செல்லச்செல்ல ஒருசில சுவாரசியமான வார்த்தைகளை ஆனந்தி லவனிடத்தில் பேசுவாள். அவற்றில் ஒன்று “லவன் உனக்கு என்ன வேணும்டா... சொல்லு. என்னையே எடுத்துக் கோடா” என்று சிறுபுன்னகையுடன் சொல்வாள். அதேபோன்று லவனும் அவனுடைய நண்பன் ஒருவனும் பேசிக் கொண்டிருக்கையில் ஆனந்தி வந்து நின்றாள். அப்போது நண்பன் “நீ ஏண்டா அந்த இங்கிலிஸ் கோசிற்கு போகேல்லை” என்று லவனிடம் கேட்க உடனே ஆனந்தி “ நான் போறன் தானே. குடும்பத்தில ஒராள் போனா காணும் தானே” என்று சிரித்தபடி பதிலளித்தாள்.  

இவ்வாறிருக்க ஒருமுறை ஆனந்தி சற்று கவர்ச்சியான வகையில் சேலை உடுத்தி வந்திருந்தாள். அப்போது அலுவலக உத்தியோகத்தர்கள் தம்மிடையே ஆனந்தி சேலை உடுத்திய முறைமையை கீழ்த்தரமான வகையில் விமர்சித்தார்கள். இது லவனது காதுக்கும் எட்டியது. அவனுக்கும் அது கவர்சியாகத் தான் தெரிந்தது. லவன் அன்று மாலை நேரமே ஆனந்தியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பக்குவமாக இன்று சேலை உடுத்தி வந்த முறைமை நமது கலாசாரத்திற்கும் அலுவலகத்திற்கும் தகுந்தது அல்ல என்ற யதார்த்தத்தை எடுத்துரைத்தான். அடுத்த நாள் ஆனந்தி அழகான வகையில் அலுவலகத்திற்கு ஏற்றாற்போல் சேலை உடுத்தி வந்து “லவன் இது எப்படி இருக்கு. சொறி டா. எனக்கு நேற்று தெரியலையடா. எங்கட கேள்ஸ் கூட அதைச் சொல்லல. நீ சொல்லியிருக்கிறாய். தாங்ஸ்டா” என்று கூறினாள். அன்றிலிருந்து அவள் கவர்ச்சியாகவோ அல்லது அலுவலகத்திற்கு ஒவ்வாத முறையிலோ சேலை உடுத்தி வருவதில்லை.  

இவ்வாறாக இதுவரை காலமும் ஆனந்தி லவனுடன் பழகிய விதங்கள் அவனிடத்தில் இனம் புரியாத அன்பை மெதுமெதுவாக மலரச் செய்தது. தன்னை புரிந்துகொண்ட, தனக்கு தெரிந்த ஒருவர் தனது வாழ்க்கைத் துணையாக அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நினைத்தான். தனது எண்ணத்தை ஆனந்தியிடம் சொல்ல வேண்டும் என்று விரும்பினான். இருந்தாலும் அவள் என்ன நினைப்பாளோ என்ற தயக்கம் அவனுக்குள் குடிகொண்டது.  

நாட்கள் கடந்தன. லவன் தனது மனதிற்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்ற தனது உணர்வு நிலையை எப்படியாவது ஆனந்திக்கு சொல்ல வேண்டும் என்ற முடிவோடு அவளோடு மனம் திறந்து கதைப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கினான். தனது எண்ணத்தை தெரியப்படுத்தினான்.

ஆனால் நடந்ததோ வேறு.

ஆனந்தி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை, இவனிடம் தன்மீது இப்படியொரு எண்ணம் இருக்கும் என்று. “இஞ்சை வா லவன். எனக்கு உன்னை நல்லா பிடிக்கும். ஆனால் உன்னை கலியாணம் செய்யிற எண்ணம் எனக்கு இல்லைடா. நான் வேற ஒருவரை லவ் பண்றன் டா. அது ஆர், எவர் எண்டு மட்டும் இப்ப கேக்காதை. காலம் வரும்போது சொல்லுறன்” என்றாள். லவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை ஆனந்தியிடமிருந்து இப்படியான பதில்வரும் என. “லவ் வாறது மனிச இயல்பு தானே. அதை நீ தெரியப்படுத்தியது தவறில்லடா. என்னை விட நல்ல பிள்ளை உனக்கு கிடைப்பாள். நாங்கள் எப்பவும் போல நல்ல நண்பர்களாய் இருப்பம்” என்று கூறி ஆனந்தி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

லவனின் கண்களிலிருந்து கண்ணீர் சொரிந்தது. மனம் விட்டு அழுதான். நாட்கள் கழிந்தன. மெதுமெதுவாக தன்னைத் தானே தேற்றிக் கொண்டு தனக்கானவளின் அந்த வருகைக்காய் லவன் காத்திருந்தான்.

 

கைதடியூர் நி. ஹரன்

Comments