இ.தொ.கா.வுக்கு இது சாதிக்க வேண்டிய காலம் | தினகரன் வாரமஞ்சரி

இ.தொ.கா.வுக்கு இது சாதிக்க வேண்டிய காலம்

மலையகத் தமிழருக்கென 14ஆயிரம் தனிவீடுகளை அமைத்துத் தரும் திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. கடந்தவாரம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்தார். அப்போது இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.  

இது மலையக வீடமைப்புத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. முன்னாள் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பொறுப்பில் இத்திட்டம் மேற் கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கரங்களுக்குச் சென்றுள்ளது. தோட்ட உட்கட்டமைப்பு சமூக வலுவூட்டல் அமைச்சாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது.  

முதன் முதலாக மலையக சமூகத்துக்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை உருவாக்கியவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.  இந்த அமைச்சைப் பொறுப்பேற்றுக் கொண்ட பெ. சந்திரசேகரன் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, தோட்டப்புற வீடமைப்பு நலன்புரி (நிதியம்) ட்ரஸ்ட் ஆகியனவற்றின் அனுசரணையுடன் 6000தனி வீடுகளைக் கட்டித் தந்தார். இது 20000வீடுகளை அமைப்பதற்கான திட்டம். முதல் தடவையாக தோட்ட மக்களுக்கு 7பேர்ச் காணி இலவசமாக வழங்கும் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.  

இவை சுய உதவி வீடமைப்புத் திட்டமாக வரையறுக்கப்பட்டு தனித்தனி வீடுகளாக அமையப்பெற்றன. இதன் மூலம் சில இடங்களில் இலவசமாக கூரைத்தகடுகள் வழங்கப்பட்டன. எனினும் வீடமைப்புக்கான காணியைப் பெறுவதில் பெரும் சங்கடங்கள் எழுந்தன.  

1992இல் பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. தோட்ட வீடமைப்புக்கான சமூகநல நிதியம் வீடுகளை கட்டிக்கொள்வதற்கான மீள செலுத்த வேண்டிய கடனுதவித்திட்ட மொன்றைக் கொண்டு வந்தது. அமரர் பெ. சந்திரசேகரன் அமைச்சும் கடனுதவித்திட்டம் மூலமே வீடுகளைக் கட்டின. ஆனால் மீள் செலுத்தக்கூடிய கால வரையறை, வட்டிவீதம் என்பவற்றில் வேறுபாடுகள் இருந்தன. 2004இல் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஆறுமுகன் தொண்டமான், இக்காலப்பகுதியில் அட்டன் வனராஜா, லிந்துலை ஹென்போல்ட், கரோலினா ஆகிய தோட்டங்களில் தொடர்மாடி வரிசை வீடுகள்  அமைத்தார். 

இதன் பின்னர் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இல்லாமல் செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக சமூக வலுவூட்டல் என்றதொரு அமைச்சு அமைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறையில் 50000வீடுகளை அமைப்பதற்கான திட்டம் பற்றியும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இக்காலப்பகுதிலேயே இந்திய அரசாங்கம் 4000வீடுகளை அமைத்துத்தர முன்வந்தது. ஆனால் பல்வேறு இழுபறிகள் காரணமாக இத்திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. 2015இற்கு பிறகு இத்திட்டம் செயற்பட ஆரம்பித்து வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இன்னும் பல வீடுகள் முடியுந்தருவாயில் காணப்படுகின்றன. 

முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பொறுப்பில் இருந்த அமைச்சு மலையகத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் நோக்கத்தினைக் கொண்டிருந்தது.

தற்போது அது பெயர் மாற்றம் கண்டுள்ளது. ஆனால் பழனி திகாம்பரத்தின் அமைச்சு மூலம் முன்னெடுக்கப்பட்ட அனைத்து வேலைத் திட்டங்களும் இந்த அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படலாம் என்னும் எதிர்பார்ப்பு உள்ளது. 

முன்னைய ஆட்சியில் இந்த வீடுகள் மண்சரிவு, தீ விபத்து, வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாகவே வழங்கப்பட்டன. தலா 7பேர்ச் காணியில் சுமார் 12இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட வீடுகள் இவை. மின்சார வசதி, குடிநீர் பாதை உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் ஒரு திட்டமாகவே இது செயற்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இலவசமாக    வீடுக       ளைப் பெறக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏனையோர் குறிப்பிட்ட கடன் அடிப்படையில் வீடுகளைப் பெறமுடிந்தது. உதாரணமாக 10இலட்சம் ரூபா பெறுமதியான வீடு எனும் பட்சத்தில் 5இலட்ச ரூபா கடனாக வழங்கப்பட்டது. ஆனால் வீடமைப்பதற்கான 7பேர்ச் காணி என்பது அனைவருக்கும் இலவசமாகவே கிடைத்து வந்தது. சுயமான காணி உரிமமும் கிடைத்தது. 

இதே போலவே இந்திய அரசாங்கத்தின் இலவச வீடமைப்புத் திட்டமும் முன்னைய ஆட்சியின்போது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இது பூண்டுலோயாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை அரசுக்கூடான தனி வீட்டுத்திட்டம், இந்திய அரசின் இலவச தனி வீட்டுத் திட்டம் இரண்டையுமே பழனி திகாம்பரம் பக்குவமாக மேற்கொண்டு வந்திருந்தார். இதுவரை அவ்வாறு 9000வீடுகள் வரை கட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

ஆனால் இந்த வீடமைப்புத் திட்டம் பற்றி இ.தொ.கா. அடிக்கடி விமர்சனங்களை முன்வைக்கவே செய்தது. வீடுகளின் தரநிர்ணயம், பயனாளிகளைத் தெரிவு செய்வதில் பாரபட்சம் என்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வந்தது.  சோனியா காந்தி மூலம் 4000வீடுகளை வாங்கியது இ.தொ.கா.வே என்று அது உரிமை கொண்டாடுகின்றது.

அதுபோன்று (ட்ரஸ்ட் பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம்) மூலம் சுமார் 30000வீகள் வரை நிர்மாணித்திருப்பதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சில காலத்துக்குமுன் கூறியிருந்தார்.

இதேபோல இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நோர்வூட் பிரதேசத்துக்கு வந்தபோது உறுதியளித்த 10000வீடுகளைப்பெற தாமே காரணம் என்கிறது இ.தொ.கா.  

இதேவேளை தனி வீட்டுத் திட்டத்தை இ.தொ.கா. குழப்ப முயற்சிப்பதாகவும் சில இடங்களில் வீடமைப்புக்குத் தேவையான காணியைப் பெறுவதில் இ.தொ.கா. தடையாக செயற்படுவதாகவும் பழனி திகாம்பரமும் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி இருந்தார் அப்போது.  

முன்னைய ஆட்சியால் முடுக்கிவிடப்பட்ட நூறுநாள் வேலைத் திட்டத்தில் முதன்மை பெற்றது இந்த மலையக வீடமைப்புத் திட்டம். அதேபோல ஒரு முன்னுரிமை இடத்தை எதிர்வரும் 4மாதங்களுக்குள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பாரிய சவாலை சந்திக்க வேண்டியுள்ளது இ.தொ.கா. இதற்கான முன்னகர்வுகளை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக 1000ரூபா சம்பள விவகாரத்தையும் சாதிக்க வேண்டியுள்ளது. நான்கு மாதங்களின் பின் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முகம்கொடுக்க இவை முக்கியம்.  

இதே நேரம் மாடி வீட்டினை அறிமுகப்படுத்த இ.தொ.கா. தயாராகி வருவதாக ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இவ்வாறான வீடுகளை அமைப்பதற்கான செலவினம் அதிகரிக்கும். வீடுகளை நிர்மாணிப்பதற்காக சமதரையான நில பரப்பைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமம் ஏற்படலாம் எனவும் தெரிகின்றது. வீடமைப்புக்கான கால அளவும் அதிகரிக்கும். 

ஏறக்குறைய 150000வரையிலான வீடுகளை அமைக்க வேண்டிய பாரிய பணி காத்திருக்கின்றது. தற்போதைய லயவரிசை வீடுகள் காரணமாக அடிக்கடி தீ விபத்துகள் இடம் பெறுவது வழமையாகி விட்டது. தவிர லயக்குடியிருப்புப் பகுதிகளில் அநேகமானவை அனர்த்த எச்சரிக்கையை உள்வாங்கிக் கொண்டிருப்பவை.

எனவே பாதுகாப்பான இடங்களில் தனி வீட்டுத் திட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்துள்ளது. 

இதற்கான முன்னோட்டக் காலமாகவே எதிர்வரும் 4மாதங்களும் இருக்கப்போகின்றன. இது இ.தொ.காவின் மீது அழுத்தத்தைப் பிரேயாகிக்கவே போகின்றது. ஆயினும் அமைச்சர் தொண்டமான் சாணக்கியமிக்க அரசியல் தலைவரென்ற பரிமாணம் கொண்டவர். எந்தச் சவாலையும் சந்திக்கக் கூடியவர். அதனால் சாதித்துக் காட்டுவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். பொறுத்திருப்போம்..!

பன். பாலா 

Comments