ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த அமரர் எம்.ஏ. தங்கவேல் | தினகரன் வாரமஞ்சரி

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த அமரர் எம்.ஏ. தங்கவேல்

பதுளை மாவட்டத்தின் தெமோதரை தோட்டத்தில் சாதாரண தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, காலனித்துவ ஆட்சியில் தொழிலாளர் அடக்குமுறைகளைக் கண்டு மனம் வெதும்பி, அவற்றுக்கு எதிராக அமைப்பு ரீதியாக குரல் கொடுத்து மலையகத்தில் நடுநிலையான மக்கள் இயக்கத்தை விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் எனும் பெயரில் தோற்றுவித்தவர் மூத்த தொழிற்சங்கவாதி அமரர் எம்.ஏ. தங்கவேல் ஆவார்.

மலையக தொழிலாளர் நலனுக்காக பல்வேறு போராட்டங்களையும், தியாகங்களை செய்த இவரின் 40 ஆவது சிரார்த்த தினம் எதிர்வரும் 09 ஆம் திகதி நினைவுகூரப்படுகிறது. இவ்வேளையில் இவரது தொழிற்சங்கப் பணி குறித்து மீட்டிப் பார்ப்பது காலத்தின் தேவையாகும். 

காலனித்துவ ஆட்சிகாலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பு பல்வேறு வடிவங்களில் சுரண்டப்பட்டது. காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை தொழிலாளர்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவ்வாறான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிலாளர்களுக்கு வெள்ளையர் நிர்வாகம் கடுமையான தண்டனைகளை வழங்கியது. இலாப நோக்கை மட்டும் இலக்காகக் கொண்டு செயற்பட்ட இவர்களை தட்டிகேட்க தொழிற்சங்க அமைப்புகள் தொழிலாளர் மத்தியில் இருக்கவில்லை.

இந்த நிலையை மாற்றியமைக்க முற்பட்ட தங்கவேல் போன்ற இளம் தொழிற்சங்கவாதிகள் தோட்டவாரியாகச் சென்று தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை அறிந்து, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளை தொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தினர். மக்களை ஓரணியில் திரட்டும் பணியில் வெற்றி கண்டனர். 

இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு 1939 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது இந்திய வம்சாவளி மக்கள் படும் துயரங்களை போக்கி அமைப்பு ரீதியான செயற்பாடு அவசியம் என்பதை உணர்ந்து, இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் இந்திய வம்சாவளி மக்களின் அரசியல், தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்ட வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வமைப்பில் அமரர் தங்கவேல் தனது தோழர்களுடன் இணைந்து தீவிர செயற்பாட்டாளராக தன்னை மாற்றிக்கொண்டார். 

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடந்த முதலாவது பாராளுமன்ற தேர்தலில் இலங்கை, இந்திய காங்கிரஸ் சார்பில் பதுளை, நுவரெலியா, மஸ்கெலியா, நாவலப்பிட்டி, கம்பளை போன்ற தொகுதிகளில் போட்டியிட்டு ஏழுபேர் பாராளுமன்றம் சென்றனர். இது மிகப்பெரிய அரசியல் வெற்றியாக அக்காலத்தில் பேசப்பட்டது. 

1949 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமையை ரத்துசெய்வதற்கான தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அக்காலக்கட்டத்தில் பிரதமராக இருந்த டி.எஸ்.சேனாநாயக்கவிற்கு இலங்கை இந்திய காங்கிரஸ் ஜவஹர்லால் நேரு ஊடாக பிரஜாவுரிமையை மீளபெற்றுக்கொள்ள உரிய அழுத்தம் கொடுக்கத் தவறியது. காங்கிரஸின் இலங்கை தலைமைகள் காட்டிய மெத்தனப்போக்கு பிராந்திய தலைவர்களை மாற்றுவழியில் சிந்தித்து செயற்படத் தூண்டியது. 

1968ஆம் ஆண்டு பஞ்சப்படியாக தொழிலாளர்களுக்கு 17 ரூபா 50 சதம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி 45 நாட்களுக்கு தொடர் போராட்டம் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு கிட்டாமையால் போராட்டம் தோல்வியடைந்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட அஷிஸ், தங்கவேல், நாயர், பாலாதம்பு, எட்மன் சமரக்கொடி போன்றவர்கள் மக்களை தெளிவுப்படுத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டு பலாங்கொடை, பெட்டியாகலவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை சந்திக்கச் சென்றபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதன் காரணமாக போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது.  

பஞ்சப்படி போராட்டம் தோல்வியடைந்தமைக்கு காரணம் மலையக தொழிலாளர்களின் பிரச்சினைகளை அணுகுவதற்குரிய தலைமை இன்மையே என்பதை உணர்த்த அமரர் தங்கவேல் அதே ஆண்டே பதுளையில் விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தை மூத்த தொழிற்சங்கவாதி ஏ.கே. கந்தசாமி, ஆர்.எம்.சண்முகம், எஸ். தங்கசாமி, பி.எம்.மலையப்பன் போன்றோருடன்  இணைந்து, உருவாக்கி அதன் தலைமைபொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

1979ஆம் ஆண்டில் அவர் மறையும் வரை காங்கிரஸின் தலைவராகச் செயற்பட்டார். சாதாரண தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த அமரர். எம்.ஏ. தங்கவேல் இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்கங்களை களமாகப் பயன்படுத்திதன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துள்ளார். இவரது சமாதி தெமோதரை தோட்டத்தில் இன்றும் நினைவு கல்வெட்டுடன் காட்சி தருகின்றது. 

ஆ. புவியரசன்

Comments