கல்வித்துறையில் எழுச்சிக்கு வித்திடும் மாற்றம் | தினகரன் வாரமஞ்சரி

கல்வித்துறையில் எழுச்சிக்கு வித்திடும் மாற்றம்

ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் 27 நாட்கள் பூர்த்தியடைகின்றன. நவம்பர் 16ஆம் திகதியன்று தேர்தல் நடந்தது. 18ஆம் திகதியன்றே கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.  

கிட்டத்தட்ட ஒரு மாதகாலத்தினுள், ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் எடுத்திருக்கும் மக்கள் நலன்சார் செயல்திட்டங்கள் மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கின்றன.    வரிச்சலுகைகளும் வரிக்குறைப்பும் இந்த அரசாங்கத்தின் முதலாவது அதிரடி நடவடிக்கை. வரிச்சுமையினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நின்மதிப்பெருமூச்சுவிடவைத்த ஒரு செயல் திட்டமாகவும் இதனைப் பார்க்க முடியும்.  

வற்வரி 15 வீதத்தில் இருந்து 8 வீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, உழைக்கும் போதே செலுத்தும் வரி முற்றாக நீக்கப்பட்டிருக்கிறது. இவை இரண்டும் நாட்டு மக்களை நேரடியாக பாதித்தவை. இதைவிடவும் மறைமுக வரிகளும் குறைக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதை பொருளியல் நிபுணர்களும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்கள்.  

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். அபிவிருத்திப் பணிகளை, அவரவர் பிரதேசங்களில் முன்னெடுக்க காலவரையறை கொடுத்துள்ளதோடு, சகல எம்.பிகளுக்கும் தலா 20 மில்லியன் ரூபா ஒதுக்கிக் கொடுக்கவுள்ளார்.  

ஆளும் கட்சி எம்பிக்களைச் சந்தித்துப் பேசிய ஜனாதிபதி, ஜனவரி 31 ஆம் திகதிக்குள் சில குறிப்பிட்ட அபிவிருத்திப் பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்ற அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். நாட்டிலுள்ள சகல எம்.பிக்களும் தலா 700 தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுமென்ற உறுதிமொழியையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.  

காலவரையறை கொடுத்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க அறிவுறுத்தல் வழங்குவதென்பது ஒரு முன்னுதாரணமான நடவடிக்கையாகும். இதற்கிடையில் அரசாங்கத்தின் வரிச்சலுகைகள் மக்களைச் சென்றடைகின்றதா? என்பதைக் கண்டறிய உயர்மட்டக் குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்திருக்கிறார்.  

அமைச்சுக்களுக்கு புதிதாக வாகனங்கள் இறக்குமதி, செய்யக்கூடாது என ஜனாதிபதி எடுத்த முடிவால், கோடிக்கணக்கான ரூபாய்கள் மீதப்படுத்தப்பட்டுள்ளதென்பதை மறுக்க முடியாது.  

அமைச்சுக்கள் மூலம் நடத்தப்படும் களியாட்ட விழாக்கள், டயரிகள் அடித்து விநியோகித்தல் உட்பட பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்படும் அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவதற்கும் ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார்.  

உண்மையில், நாட்டுத் தலைவர் என்ற வகையில் அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆரோக்கியமானவை. அரசாங்கப் பணம் என்பது மக்களின் வரிப்பணம் என்பதை மறந்து கடந்தகாலங்களில் அமைச்சர்களும் அமைச்சுக்களும் நடந்து கொண்ட விதத்தினைப் படிப்பினைகளின் அனுபவ நடவடிக்கையாகவே இவைகளைப் பார்க்க முடிகிறது.  

அமைச்சுக்களைப் பொறுப்பேற்றதும் புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதும் அமைச்சுக் கட்டடங்களை மாற்றுவதும் தனியார் கட்டடங்களை வாடகைக்கு அமர்த்தி கூடுதல் கூலி வழங்குவதும் விழாக்களையும் விருந்துபசாரங்களையும் ஏற்பாடு செய்வதும் கடந்தகால செயற்பாடுகளாகும். இவைகளை கட்டுப்படுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்கள் மீதப்படுத்தப்பட்டுள்ளன.  

இவை எல்லாம் தேர்தல்கால உறுதிமொழிகளின் அமுலாக்கமாக இருந்தாலும் மக்களின் பணத்தை வீணடிக்கக்கூடாது என்ற ஜனாதிபதியின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.  

மக்களின் பாரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இந்த அரசாங்கம் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றங்களை செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.    அடிப்படைகளையும் கீழ் கட்டுமானங்களையும் உறுதியுடன் மேற்கொள்ளும் செயற்பாடுகளே மாற்றமாகக் கொள்ள முடியும். எந்தவொரு மாற்றமும் தூரநோக்குடன் செய்யப்பட்டால் எதிர்கால சந்ததியும் நாடும் நலம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  

இந்த அரசாங்கம் எடுத்திருக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் பொருளாதார மேம்பாட்டுக்கான சீரிய பணி இருந்தாலும் கல்வியூடான மாற்றங்கள் அத்தியாவசியமாகவே பார்க்கப்படுகிறது.  

உண்மையில், கல்வியூடாகச் செய்யப்படும் மாற்றங்கள் எதிர்காலத்தை மையப்படுத்திய சிறந்ததோர் முதலீடாகவே இருக்குமென்பதில் ஐயமில்லை.  

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதை அதிகரிக்கும் வகையில் ‘இஸட் ஸ்கோர்’ (Z Score) வெட்டுப்புள்ளி முறைமையில் மாற்றம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது அரசின் அதிரடித்தீர்மானமாக இருந்தாலும், அர்த்த புஷ்டியான நடவடிக்கையென கல்விமான்கள் பாராட்டுகின்றனர்.  

நடைமுறையிலுள்ள இஸட் ஸ்கோர் முறைமையில் மாற்றமென்பது, அதனை முழுமையாக நிறுத்துவதாகக் கொள்ளக்கூடாது. சில ஊடகங்கள் இந்த செய்தியை மிகவும் தவறாக பிரசுரித்திருந்தன. அது அவர்களின் புரிதல்கள் ஏற்பட்டிருக்கும் தவறாகும்.  

உண்மையில், இஸட் ஸ்கோர் என்பது 2001ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறைமை. அதாவது பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கான முறைமையாகும். மாவட்ட அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறைச் சாத்தியமான சூத்திரம் இதுவென்று கூறலாம்.  

இதன்படி, மாவட்ட ரீதியில் 55 வீதமும் அகில இலங்கை ரீதியில் 40 வீதமும் பின் தங்கிய பாடசாலை என்ற ரீதியில் 05 வீதமும் பேணப்பட்டு மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த 18 வருடங்களாக இந்த முறைமை மூலமே மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றார்கள்.   இதற்கு முன்னர், சராசரிப்புள்ளித்திட்டமே (Agrigate Marks) நடைமுறையில் இருந்து வந்தது. இந்த முறைமையில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளும் குறைபாடுகளுமே இஸட் ஸ்கோர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதற்கான அடிப்படைக்காரணமாகும்.  

ஆனால், ‘இஸட் ஸ்கோர்’ முறைமையில் மாணவர்களைத் தேர்வு செய்வதில் மட்டுப்படுத்தல்கள் இருப்பதால் இதனைத் தளர்த்த வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.    பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் 33 ஆயிரம் மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கையை 83 ஆயிரமாக அதிகரிப்பதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும். உண்மையில், இஸட் ஸ்கோர் முறைமையை வைத்துக்கொண்டு பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் தொகையை அதிகரிக்கவே முடியாது. அதற்கான சூத்திரம் எந்தவகையிலும் அனுமதிக்காது.  

மாவட்ட மட்டத்தேர்வு முறைமையில் இருந்து பாடசாலைக்கட்டமைப்பு முறைமையில் மாணவர்களை தெரிவு செய்வதுதான் புதிய முறைமை. அனுபவ முதிர்ச்சியுள்ள கல்விமான்கள் அரசாங்கத்தின் இந்த செயல்திட்டத்தைப் பாராட்டுகிறார்கள். பாடசாலைகளை மையமாகக் கொண்ட தேர்வு மூலம் ஏழை மாணவர்களும் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி கற்பவர்களும் பெரும் நன்மையடைவார்கள் என்பது கல்விப்பணிப்பாளர்களின் கருத்தாகும்.  

மாவட்டத் தேர்வுக்கான கணிப்பீட்டு முறையினால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுமிருக்கிறார்கள். 3A, 2A, B சித்தியடைந்த மாணவர்கள் கூட மாவட்ட வெட்டுப்புள்ளித் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவம் பொறியியல், கால்நடை மருத்துவத்துறைகளுக்குள் நுழைவதற்கு இத்தகைய மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதைவிட, நிராகரிக்கப்படுகின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.  

மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் போன்ற துறைகளுக்குள் நுழைவதற்கு தகுதியுள்ள மாணவர்கள் கூட மாவட்ட வெட்டுப்புள்ளி முறைமையால் நிராகரிக்கப்படுவது, கல்வித்துறையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், விரக்தியடைந்த இளைஞர் சமூதாயமொன்று உருவாகிக்கொண்டே இருக்கிறதென்பது சமூக ஆய்வாளர்களின் கருத்தாகும். நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இளைஞர் அமைதியின்மைக்கு கல்வித்துறையில் இருந்த குறைபாடுகளே காரணமாக அமைந்தன.  

1971, 1989ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நடந்த ஜே.வி.பி. கிளர்ச்சியின் அடிப்படைகளை ஆராய்வதற்காக, அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச குழுவொன்றை நியமித்தார். இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தியின்மையே கிளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமென அந்தக்குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. கல்விக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட இளம் சந்ததியினரே இத்தகைய கிளர்ச்சியில் ஈடுபடுவதற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

ஆகவே, இளஞ்சந்ததியினரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கல்வியில் செய்யப்படுகின்ற மாற்றம் இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியாகவே இருக்க வேண்டும்.    இந்த அடிப்படையில் இஸட் கோர் முறைமையில் மாற்றம் கொண்டுவர அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை நாட்டில் கல்வித்துறையில் பாரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.      

Comments