ரூபிகாவின் வீட்டுத்தோட்டம் | தினகரன் வாரமஞ்சரி

ரூபிகாவின் வீட்டுத்தோட்டம்

மூன்றாம் பருவ விடுமுறை இன்றுதான் ஆரம்பித்திருந்தது. தனிப்பனைத் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஆறில் கல்வி கற்கும் ரூபிகா அவளது தந்தையால் பூமரங்கள் நாட்டுவதற்காக வாங்கிவந்த பெரிய பூச்சாடிகளில், தந்தையைக் கேட்காமலேயே  கீரை, வெண்டி, அவரை, பாகல்  விதைகளை நாட்டிக் கொண்டிருந்தாள்.

இதனை அவதானித்த ரூபிகாவின் அம்மா நிரூபா "என்ன மகளே! பூக்கன்று விதைகள் நாட்டுகிறாயா? ஏன் மகளே இதற்கு பெரிய சாடிகளைப் பயன்படுத்துகிறாய்?" என்று வினவினாள். அதற்கு ரூபிகா "எங்கள் செயன்முறைத் தொழில்நுட்பப் பாட ஆசிரியர் கூறினார், இன்று பல்வேறுபட்ட தொற்றா நோகளுக்கும் காரணம் சந்தையில் விற்கும் விவசாய இரசாயனம் விசிறப்பட்ட மரக்கறிகள்தான் என்றும், இவ்வாறான தொற்றா நோய்கள் ஏற்படாதிருக்க வீட்டில் எமக்கு வேண்டிய மரக்கறிகளை நாங்களே உற்பத்தி செய்துகொண்டால் இந்நோய்கள் எங்களை அண்டாது" எனக்குறிப்பிட்டார்.

"அதெல்லாம் சரிதான். இதற்கும் நீ பண்ணிக் கொண்டிருக்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம்?"

"அந்தக் காலத்தில் காய்கறிகளை எல்லாம் வீட்டின் கொல்லைப்புறத்திலும் பயிரிட்டார்கள்.  இப்போது வீடுகளின் முன்புறத்தில் அழகு தாவரங்களை வளர்க்கும் பண்பாடு மட்டுமே காணப்படுகிறது. இதனால் கிடைக்கும்  இலாபம்தான் என்ன?" என வினவினாள் ரூபிகா.

"ஆம் மகளே! மரக்கறிப் பயிர்களும் பூத்துக் குலுங்கும்போதும், காய்கள் நிறைந்து காணப்படும்போதும் அழகாகத்தான் தோன்றும்.  இத்துடன் நாமே நமது உணவுத் தேவையின் ஒரு பகுதியை உற்பத்தி செய்து மனத்திருப்தியும் ஏற்படும்" என ரூபிகாவின் வேலைத்திட்டத்தை தட்டிக் கொடுத்தாள் அவள் அன்னை.

"நான் பூ மரங்களுக்கு பதிலீடாக  சாடிகளில் மேலும் மரக்கறிப் பயிர்கள் நாட்டிப் பராமரித்து காய்கறிகளை அறுவடை செய்து  இலாபம் அடைவதுடன்  நஞ்சற்ற காய்கறிகளையும் பெறப்போகிறேன்" என்று மன உறுதியுடன்  கூறினாள் ரூபிகா.

மகளின் மனப்பாங்கில் ஏற்பட்ட மாற்றத்தை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்த தாய் நிரூபா "நன்று மகளே, நன்று" என்று கூறி ஆர்வப்படுத்தினாள்.

வீட்டின் பின்புறத்தில் வாழை, ஈரப்பலா நடப்போகிறேன். இப்படியே எம்போன்ற  எல்லோரும் செய்தால் நஞ்சற்ற காய்கறி பெறலாமல்லவா? இதனால் நோயற்ற ஆரோக்கியமான சமூகமொன்று உருவாகுமல்லவா? என்றாள் ரூபிகா.

தனது மகளின் அருமையான யோசனையைக் கேட்ட தாய் அகமகிழ்ந்து  அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டாள்.

ப. அருந்தவம்.

Comments