மக்களின் எதிர்பார்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

மக்களின் எதிர்பார்ப்பு

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறும் விற்பனை நிலையங்களை தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையும் பொலிஸாரும் இதற்கான கூட்டுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.   சம்பா மற்றும் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாய் என நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையையும் மீறி அரிசி விற்னை செய்யப்படுகிறதென்ற பொதுமக்களின் குற்றச்சாட்டையடுத்து அரசாங்கம் உஷாரடைந்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அரிசி விற்பனை நிலையங்கள் கடந்த வாரம் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, கட்டுப்பாட்டு விலையையும் மீறி அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட, வர்த்தக நிலையங்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளை இலாபம் ஈட்டும் செயற்பாடுகளில் வர்த்தகர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மை. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் உள்ளூர் உற்பத்திகள், குறிப்பாக நெற்செய்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், போதியளவு அரிசி கையிருப்பில் இருக்கிறதென அரசாங்கம் அறிவித்திருக்கிறது. 

செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை அதிகரிப்பதுதான் வர்த்தகர்களின் வழமையான செயற்பாடு. அதற்காக கையிருப்புகளை பதுக்கி சந்தையில் வியாபாரப் போட்டியையும் கேள்வியையும் அதிகரித்துக் கொள்வதில் வர்த்தகர்கள் கில்லாடிகளாகவே இருக்கின்றனர். 

அரச நெற்களஞ்சியங்களில், இருந்த நெல்லை உடனடியாக அரிசியாக்கி விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அரசாங்கம் அரிசியாலை உரிமையாளர்களுக்கு அவசர அறிவுறுத்தல்களை விடுத்தது மட்டுமல்ல, களஞ்சியசாலைகளில் இருந்த நெல்லையும் விடுவித்தது. என்றாலும், சந்தை நிலைவரத்தில் மாற்றம், ஏற்படவில்லை. இந்த நிலையில் தான் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையும் பொலிஸாரும் களம் இறங்கியிருக்கின்றனர். 

இந்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ நேரடியாகவே தலையிட்டு விலைக்கட்டுப் பாட்டை முழுமையாக அமுல்படுத்துமாறு அதிகாரிகளையும் வர்த்தகர்களையும் பணித்துள்ளார். 

கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்குள் திடீர் விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அரிசி விற்பனை நிலையங்களுக்குச் சென்று விலைகளைக் கேட்டறிந்ததோடு, கட்டுப்பாட்டு விலையைப் பேணுமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோளும் விடுத்தார். 

ஜனாதிபதியொருவர் களத்தில் இறங்கி விலைவாசிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறாரென்பது இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முன்னுதாரணமாகவே பார்க்கப்படுகிறது. 

வரிச்சுமைகளினாலும் விலைவாசி அதிகரிப்புகளாலும் பாதிக்கப்பட்டிருந்த மக்களைப் பாதுகாக்கவே அரசாங்கம் உடனடி வரிக்குறைப்புச் செய்து விலைவாசிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கியது. பொதுமக்கள் நலன்சார்ந்த இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகளும் பெரும் வர்த்தகர்களும் தன்னார்வத்துடன் உதவ முன்வராமல் இருப்பது கவலையளிக்கிறது.    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றவுடன் உடனடியாக செய்த பணி, வரிக்குறைப்பாகும்.   பால்மா விலைக்குறைப்பு, கோதுமை மாவிலைக்குறைப்பு, சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைக்கட்டுப்பாடுகள். இவைகள் எல்லாம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் துரித நடவடிக்கை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. பொருளாதார நிபுணர்களே மெச்சும் அளவுக்கு அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்கிறது. பதவியேற்று முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே எட்டு வரிக்குறைப்புகள் செய்யப்பட்டன. 17 வீதத்திலிருந்து வற்வரி 8 வீதமாக குறைக்கப்பட்டது. இதன்மூலம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டாயம் குறைந்திருக்கவே வேண்டும். 

பொருட்களின் விலைகளில் வற்வரிதான் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனை மறுக்க முடியாது. ஆனால், 17 வீதம் 8 வீதமாக குறைக்கப்பட்டது. அதாவது, வற்வரி 9 வீதம் குறைந்தது. 

கோதுமை மாவுக்கான வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னர் பேக்கரி உற்பத்தி உணவுகளின் விலைகளில் நிலை தொடர்பாக  நாம் ஒரு கள ஆய்வு செய்தோம், சிற்றுண்டிச்சாலைகள், சிறுஹோட்டல் உரிமையாளர்களிடம் இது தொடர்பில் வினவிய போது, அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றன.   “வற்வரி, உட்பட ஏனைய வரிகளெல்லாம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தாலும் எந்தச் சாமானும் எங்களுக்கு குறைந்த விலையில் வாங்க முடியவில்லை. உழுந்து, கோதுமை மா, சீனி, பருப்பு எல்லாம் அதே விலைக்குத்தான் வாங்குகிறம். இந்த நிலையில், எங்களால் எப்படி? தேநீர், ரீ உட்பட சிற்றுண்டிகளின் விலைகளைக் குறைக்க முடியும். என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.  

அரசாங்கம் இந்த விடயத்தில் கடும் போக்கை கடைப்பிடித்தே ஆக வேண்டும். வரிக்குறைப்பும் விலைக்குறைப்பும் மக்களுக்காகவே செய்யப்பட்டன. இதன் பலனை மக்கள் அனுபவிக்க முடியவில்லையென்றால் அரசின் நடவடிக்கைகள் அர்த்தமற்றதாகிவிடும்.   இந்த அரசாங்கம் பதவியேற்று முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே எட்டு வரிக்குறைப்புகள் செய்யப்பட்டன. 17 வீதத்திலிருந்து வற்வரி 8 வீதமாக குறைக்கப்பட்டது. இதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டாயம் குறைந்திருக்கவே வேண்டும். 

கோதுமை மாவுக்கான வரிச்சலுகை காரணமாக பேக்கரி உற்பத்தி உணவுகளின் விலைகளைக் குறைக்குமாறு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் சகல பேக்கரிக்களுக்கும் (வெதுப்பங்களுக்கும்) அறிவித்திருந்தது. என்றாலும், விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை. 

பேக்கரி உரிமையாளர் சங்கத்தலைவர் ஜயசிறியிடம் இது தொடர்பில் கேட்டால் “பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 5 ரூபாவால் குறைக்குமாறு பேக்கரிக்காரர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். 5 சதவீதமானவர்கள் மட்டுமே குறைத்துள்ளனர். குறிப்பாக பெரேரா அன்சன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் விலைகளைக் குறைத்துள்ளன. ஆனால், 95 சதவீதமானவர்கள் இன்னமும் விலைக்குறைப்பைச் செய்யவில்லை” என்றார். 

அதேநேரம் “எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் விலைக்குறைப்புச் செய்யுமாறு மீண்டும் அறிவித்துள்ளோம்” எனவும் அவர் கூறுகிறார். 

வற்வரிக் குறைப்பால் அரசாங்கத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படுகிறது. அதேபோல, ஏனைய வரிக்குறைப்புக்களாலும் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மக்கள் நலன்கருதியே அரசாங்கம் பெருந்தொகை வருவாயை இழக்கிறது. இந்த இழப்பீட்டுத் தொகை மக்களுக்கு பிரயோசனப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.   இந்த நிலையில், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நாடு முழுவதும் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கையை நாம் மனந்திறந்து பாராட்டத்தான் வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் இதனைச் செய்யாமல் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புக்களை செய்வதுதான் வரவேற்கக் கூடியது.   தினங்களைக் குறிப்பிட்டு சுற்றிவளைப்புக்களைச் செய்யாமல் திடீர்ப்பாய்ச்சல்கள் நடத்தினால், பதுக்கல்காரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கக் கூடியதாக இருக்கும். பெரும்பாலான வர்த்தகர்கள் அரிசி, உட்பட அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குகிறார்கள். செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரிப்பதுதான் இவர்களது குறிக்கோள், ஆகவே, பதுக்கல்காரர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அரிசி வெங்காயம், உருளைக் கிழங்கு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வர்த்தகர்களால் பதுக்கப்படுகின்றன.  

வியாபாரிகளின் மண்கொள்ளையடிக்கும் இத்தகைய கபடத்தனமான நடவடிக்கைகள் நாட்டில் வீணான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு வழி வகுத்துவிடும். அரசாங்கம் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டுமென்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. 

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நுகர்வோர் அதிகார சபையின் தனி முயற்சி மாத்திரம் போதாது. அதிகாரிகளின் ஒத்துழைப்பு இதற்கு 100வீதம் தேவைப்படுகிறது. கடந்த காலங்கள் நமக்கு படிப்பினைகளைத் தந்திருக்கின்றன. அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகள் எடுத்தாலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் பணிகள் அதிகாரிகளின் கைகளில்தான் இருக்கிறது. 

ஜனாதிபதி மக்கள் நலன்சார்ந்த பல முன்னேற்றகரமான திட்டங்களை முன்வைத்த வண்ணமே இருக்கிறார். வரிக்குறைப்பின் பலன் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டுமென்றும் துடிப்புடன் செயற்படுகிறார். அதிகாரிகளினதும் மக்களினதும் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவுமே நூறுவீதம் சாத்தியப்படாது. ஆகவே, விலை உயர்வைக்கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் உறுதியான பணிக்கு சகல மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

Comments