விருது உயர்ச்சிக்கேயன்றிப் புகழ்ச்சிக்கல்ல! | தினகரன் வாரமஞ்சரி

விருது உயர்ச்சிக்கேயன்றிப் புகழ்ச்சிக்கல்ல!

கடந்த வாரம் இந்தப் பகுதியில் சொல்லப்பட்ட விசயங்கள் கன பேருக்குப் போய் சேர்ந்திருக்கு. சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கில பகிர்ந்துகொண்டும் இருந்தார்கள். மகிழ்சி!  

சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டது மட்டும் மகிழ்ச்சியில்லை; அதில் சொல்லப்பட்ட விடயங்கள் அத்தனையும் உண்மை என்றும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.  

அந்தளவில் திருப்தி. ஏனென்றால், பலருக்கு உண்மை என்றால் கசக்கும்! நாங்கள் என்னவோ தனிப்பட்ட ரீதியில் இந்த விடயத்தை அணுகியிருந்ததாகச் சிலருக்கு ஆதங்கம். 

இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்ட விசயங்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்கும்போது, இம்முறை விருதுபெற்றவர்களே கொஞ்சம் கூச்சப்பட்டிருக்கிறார்கள்போலத் தெரியுது. பக்கச்சார்பாக நடந்துகொள்வது உண்மைதான் என்று அவர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்களாம்!  

ஒருவனுடைய வளர்ச்சிக்கு விமர்சனங்களும் பொச்சாப்புகளும் உந்து சக்தியாக அமையும் என்பார்கள். அதேபோல, இகழ்ச்சிகளும் அவமானங்களும் ஒருவனைப் புடம்போடும். மறுபுறம், வீண்புகழ்ச்சி, தற்பெருமை ஒருவனை நாசமாக்கிவிடும்.  

புகழ் விரும்பியாக இருந்ததாலேயே இராவணன் அவப்பெயரைத் தேடிக்கொண்டான். சீதையைக் கவர்ந்து சென்றது முதல், அனுமனைப் பழிவாங்கும் நிலைவரை, இராவணன் தோற்றுப் போனதெல்லாம், அவனது புகழ்மாயையால் ஏற்பட்ட வினை என்கிறார்கள் தமிழறிஞர்கள்.  

அதேமாதிரி ஒருவனை இல்லாது செய்ய வேண்டும் என்றால், அவனைப் புகழ்ந்து தள்ள வேண்டும். தவறு செய்தாலும் கண்டுகொள்ளக்கூடாது. பிழையாக எழுதினாலும் அப்பிடியே அச்சேற்றி உசுப்பேற்றிவிட வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாகத் தமிழ் அரசியல் நகர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியதும் இந்தச் சுயநல போக்குதான் என்பதை இப்போது அனைவரும் புரிந்துகொண்டிருக்கின்றோம்!  

பரிசும் விருதும் ஒருவனின் திறமைக்குக் கொடுக்கும் வெகுமதிகள். அவனை அந்தத் துறையில் மேலும் கைகொடுத்துத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் மாத்திரைகள். ஆனால், அதுவே அவனது ஆக்கத்திற்கு அழிவாகிவிடக்கூடாது!  

அந்த நல்ல நோக்கத்தில்தான், விருது வழங்கிய முறையை விமர்ச்சித்திருந்தோம். விருதுகளைத் தற்பெருமைக்கும் வியாபாரப் போட்டிக்கும் பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கான ஆதாரமாகத் திகழ வேண்டும். விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்துவதன் மூலம் திறமான ஓர் அடுத்த சந்ததியை உருவாக்க வேண்டுமேயொழிய, அந்த முயற்சிக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது.  

கடந்த வாரம் நாம் சுட்டிக்காட்டிய விடயங்களைபற்றி விமர்சிப்போரும் அவற்றை ஏற்றுக்கொள்வோரும் அந்த விடயங்களுடன் பொருத்திப் பார்த்தால், உண்மை என்னவென்பது துலாம்பரமாகத் தெரியும் என்பதில் சந்தேகமில்லை.   

விருது வழங்கும் விழா எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் ஒழுங்கு செய்யப்படுகிறது என்பதை அறியாமல் நாம் இங்குச் சுட்டிக்காட்டவில்லை. குறித்த பத்திரிகைக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பதற்காகக் காழ்ப்புணர்ச்சியில் சொல்லப்படவும் இல்லை. பக்கச் சார்பான தேர்வுக்குழுவின் செயற்பாடுகளை ஆதாரபூர்வமாக அறிந்துகொண்டு உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னரே பொது வெளியில் சொல்லியிருந்தோம். மாறாக, யாரையும் தனிப்பட்ட ரீதியில் புண்படுத்தும் நோக்கமும் கிடையாது. எதிர்காலத்திலாவது சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கான ஒரு களமாக இந்த விருதுகள் அமைய வேண்டும் என்பதே இந்தப் பத்தியின் ஆதங்கம். 

விருதுகள் வழங்கப்படுவதற்கு முன்னரே அதுவும் பல மாதங்களுக்கு முன்னரே, இந்தத் தடவை எனக்குத்தான் கிடைக்கும்; அல்லது அவருக்குத்தான் கிடைக்கும் என்று எதிர்வு கூறப்பட்டிருப்பதும் எமக்குத் தெரியவந்த விசயம். அதேபோல், அப்படிக் கூறிய குறித்த ஊடகவியலாளர்கள் விருதுகளையும் பெற்றுள்ளார்கள் என்பதும் உண்மை என்கிறார் நண்பர். அவர் இந்த விசயத்தில் பலே கில்லாடி. தெரிவுக்குழுவினர் தெரிவு செய்வதற்கு முன்னரே, விருது இன்னாருக்குத்தான் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பது எவ்வாறு வெளியில் கசிய முடியும்? பக்கச் சார்பு செயற்பாடு இதன்மூலமே புலனாகிறது.  

அதேநேரம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள், யார் விருது பெறுகிறார், பெறவில்லை என்பது இங்கு முக்கியமில்லை. தமிழ் ஊடகவியலாளர்கள் பற்றித்தான் பெரும் கவலையாக இருக்கிறது. ஊடக மாஃபியா தனங்களால் இளம் தமிழ் ஊடகவியலாளர்கள் கருவிலேயே அழிக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஊடகத்துறையில் ஆங்கிலமும், சிங்களமும் எங்கேயோ வளர்ந்து வரும் நிலையில், விருதைக் காட்டி மழுங்கடிக்கும் சதிக்குள்தான் தமிழ் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் சிக்கியுள்ளனரென்பதைப் புரியாமல் இருப்பதுதான் கவலையாக உள்ளது. இதிலிருந்து தமிழ் ஊடகவியலாளர்கள் விடுபட்டு வெளியில் வரவேண்டும் என்பதே இந்தப் பத்தியின் எதிர்பார்ப்பு! 

அவ்வாறு பொதுநோக்கம் கொண்ட இந்தப் பத்தி பற்றிச் சமூக வலைத்தளங்களிலும் சிலர் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். கருத்துகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் விமர்சனம் செய்தவர்களுக்கும் இங்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.  

நடப்பது எதுவாயினும், தனக்கு மாத்திரமே நல்லதாக நடக்க வேண்டும். மற்றவருக்கு எப்படி நடந்தாலும் பிரச்சினையில்லை என்பதே சிலரின் மனப்போக்காக இருக்கிறது. "தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டும்; அந்தத் தன்மை வர உள்ளத்தில் கருணை வேண்டும்" என்ற கவிஞரின் கருத்துகளை மெய்ப்பிக்கும் தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு என்பது இந்தப் பத்தியின் நம்பிக்கையாகவும் இருக்கின்றது.  

இவ்வாறான நிலைமையில், சிலருக்குத் தங்கள் காரியம் நடந்துவிட்டால் சரி. இரண்டு பக்கமும் ஜிஞ்சா போடுவார்கள்! யாரது காலையோ கையையோ (காக்கா) பிடித்துச் செய்தி போட்டுக்கொண்டு பீற்ற வேண்டும், அவ்வளவுதான். பொருத்தமானால் போட்டுக்ெகாள்ளுங்கள்! என்கிறார் நண்பர்.

Comments