இந்துக்களால் அனுட்டிக்கப்படும் விஸ்வகர்ம ஜெயந்தி | தினகரன் வாரமஞ்சரி

இந்துக்களால் அனுட்டிக்கப்படும் விஸ்வகர்ம ஜெயந்தி

இலங்கையில் விஸ்வகர்ம ஜெயந்தி கொழும்பு, மட்டக்களப்பு, மலையகமென பரந்துபட்டு அனுட்டிக்கப்பட்டு வருகிறது. 

மட்டக்களப்பில் விஸ்வகர்ம சங்கத்தினர் அதனை அனுட்டிப்பதிலும், விழாவாக கொண்டாடுவதிலும் முன்னின்று செயற்படுகிறார்கள். 

 மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியபோரதீவு பத்திரகாளியம்பாளின் சன்னிதியில் விஷ்வ கர்மாவுக்கென தனிக்கோயில் உண்டு. 

விஸ்வகர்ம ஜெயந்தி தினத்தை கிழக்கில் பக்தி பூர்வமாக அனுட்டிப்பதற்கு அத்திவாரமிட்டவர் மறைந்த தமிழரசுக்கட்சிப் பிரமுகரும், இலங்கை விஷ்வகர்ம சங்கத் தலைவருமான பூ.ம. செல்லத்துரையாகும். 

உலகில் வெவ்வேறு பாகங்களிலுள்ள இந்துக்கள் தமது தெய்வங்களை விஷேச தினங்களில் அனுட்டிப்பதை வழக்கத்தில் கொண்டிருக்கிறார்கள். அந்தந்த விசேட தினங்களில் அவ்வத் தெய்வங்களை வேண்டித் துதிப்போர்க்கு அத் தெய்வங்களின் ஆசிர்வாதமும், அனுக்கிரகமும் கிடைக்கின்றது என புராணங்கள் கூறுகின்றன. வழிபாட்டு முறைகளிலும், வழிபாட்டுத் தினங்களிலும் சிற்சில வித்தியாசங்கள் நாட்டுக்கு நாடு தோன்றினாலும், ”பக்தி” என்ற கருத்திலும், செயற்பாட்டிலும் மாற்றமில்லை. 

அவ்வாறே பூஜை முறைகளும் இருக்கின்றன. இந்தியாவில் ஆனேக மாநிலங்களில் விஸ்வகர்ம ஜெயந்தியை இந்துக்கள் அனுட்டித்தாலும், அதை ஒரு விசேட தினமாக கொண்டாடினாலும் இவற்றில் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமிருக்கிறது. 

இலங்கையில் விஸ்வகர்ம ஜெயந்தி கொழும்பு, மட்டக்களப்பு, மலையகமென பரந்துபட்டு அனுட்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியபோரதீவில் பத்திரகாளியம்பாளின் விசாலம் நிறைந்த சன்னிதியில் விஷ்வகர்மாவுக்கென தனிக்கோயில் உண்டு. விஸ்வகர்ம ஜெயந்தி தினத்தை கிழக்கில் பக்தி பூர்வமாக அனுட்டிப்பதற்கு அத்திவாரமிட்டவர் மறைந்த தமிழரசுக்கட்சிப் பிரருமகரும், விஷவகர்ம சங்கத் தலைவருமான பூ.ம.செல்லத்துரையாகும். அவர் ஆரம்பித்துவைத்த செயற்பாடு வளர்ந்தும், நிமிர்ந்தும் நிற்கிறது. 

விஸ்வகர்மா ஒரு தேவ சிற்பி, விஸ்வகர்மாவின் தோற்றம் பற்றி புராணங்கள் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்த போதிலும். அவற்றின் முதன்மைவாயந்தது, அவர் விஷணு பகவானுக்கும் மகாலக்ஷ்மிக்கும் பிள்யைாகப் பிறந்தவர் என்பதாகும். இன்னும் சில இடங்களில் பிரம்ம தேவனால் தோற்றுவிக்கப்பட்டவர், சுயமாகத் தோன்றியவர் என்றும் கூறப்படுகின்றது, ஆயினும், ஆய்வாளர்கள், அதனை இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. 

விஸ்வகர்மா பல விஞ்ஞானங்களுக்கு தோற்றுவாயாக விளங்கியிருக்கிறார். அவர் பல போராயுதங்களையும். பற்பல சக்தி கொண்ட விமானங்களையும்,  பல விந்தைகள் நிறைந்த நகரங்களையும் உருவாக்கியிருக்கிறார் என புராணங்கள் கூறுகின்றன. பல யுகங்களில் வாழ்ந்து ஒவ்வொரு யுகத்திலும். ஒவ்வொரு வினோதமான சிருஷ்டிகளை தந்திருக்கிறார். 

அவரே இந்திரனின் தேவலோகத்தையும், கிருஷ்ணரின் துவாரகையையும், கௌரவர்களின் அஸ்தினாபுரத்தையும், பாண்டவர்களின் இந்திர பிரசிஸ்தத்தையும், இராவணனின் லங்காபுரியையும் தோற்றுவித்தவராவர். இவை சாதாரண நகரங்களில்லை. பல நுணுக்கங்களையும், அழகையும், வசீகரத்தையும் கொண்டவை. அவரிடம் பன்முக சக்திகள் இருந்திருக்கின்றன என்பதை அவரது சிருஷ்டிகளிலிருந்தே நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. அவர் ஒரு விஞ்ஞானி, கட்டிடக் கலைஞர், சிற்பி என்று புராணங்கள் அவரை உருவகப்படுத்துகின்றன. 

இன்னும் இதுபற்றி மார்க்கண்டேய புராணம் விபரிக்கையில், சிவனுக்கு திரிசூலத்தையும், திருமாலுக்கு சக்கரத்தையும், முருகனுக்கு வேலையும், குபேரனுக்கு சிவிகையையும் ஆக்கிக் கொடுத்தவர் விஸ்வகர்மாவாகும் 

இவரது மகள் சமுக்கியாவை சூரியபகவான் மணம் முடித்ததாகவும். அவள் சூரியபகவானின் வெப்பம் தாங்க முடியாமல், சாயதேவி என்ற பெண்ணை தன்னைப் போலவே உருவாக்கி சூரியபகவானிடம் விட்டுவிட்டு தகப்பனிடம் வந்ததாகவும், காலப்போக்கில் உண்மையை அறிந்த சூரியபகவான் விஸ்வகர்மாவிடம் வந்து அவனது மனைவியை சமரசஞ் செய்து கூட்டிச் சென்றதாகவும் புராணங்கள் இயம்புகின்றன. 

விஸ்வகர்மா ஐந்து ஆண்மக்களை பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஐவரும் மனு, மயன், துவஸ்டா, சில்பி, விஸ்ணுவஞ்ஞ என்ற பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தந்தை வழியைப் பின்பற்றி நடந்தார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியான சிருஷ்டிகளை கைக் கொண்டிருக்கிறார்கள். மனு கொல்வதற்கும், மயன் தச்சு வேவைக்கும், துவஸ்டா உலோக வேலைக்கும்( கன்னார வேலை), சில்பி கற்சிலை கட்டட நிர்மாணத்திற்கும், விஸ்வஞ்ஞ தங்கம், பொன், வெள்ளி ஆகிய வேலைக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அவர்களின் சந்ததியினரே உலகில் விஸ்வ கர்ம பரம்பரையினராக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஆச்சாரா சீலர்களாக, இந்து சமயத்தில் ஊறித்திளைத்தவர்களாக வாழ்ந்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

இந்தியாவிலும், இலங்கையிலும் கோயில்களில் விழாக்கள், உற்சவங்கள் தொடங்கும்போது விஸ்வகர்ம சந்ததியினரே கொடியேற்றும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர். இது விஸ்வகர்மாவுக்கு கொடுக்கப்படுகின்ற கௌரவமாக கோயில் பரிபாலன சபை கருதுகிறது. இது கிழக்கில் பல கோயில்களில் மரபு வழியாக பேணப்பட்டு வருகிறது. 

கிழக்கில் விஸ.வகர்ம சங்கம் வருடாவருடம் விஸ்வகா்ம ஜயந்தி தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஜெயந்தி தினத்தன்று காலையில் விசேட பூசை இடம்பெறும். அதன் பிறபாடு ஊர்வலம் இருக்கும்.  அவ்வூர்வலத்திற்கு அங்கத்தவர்கள் மாத்திரமன்றி விஸ்வகர்ம சந்ததியினர், விஸ்வகர்மாவின் வாரிசுகள், அவர்காட்டி உலகுக்கு ஒப்டைத்த தொழில்களோடு ஒட்டியிருக்கும், எந்திரிகள். கட்டிடக் கலைஞர்கள், தொழில் வினைஞர்கள். புகைப்படக் கலைஞர்கள் சித்திர கலைஞர்கள் என அனைவரும் ஒன்று சேர்வார்கள். 

அந்நிகழ்வையொட்டி கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் தமது திறமைகளை காட்டி முத்திரை பதித்த பாடசாலை மாணவர்களையும், பல்கலைக்கழக பட்டதாரிகளையும் பரிசுகள் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிப்பார்கள். அத்தோடு சமூக சேவையில் தன்னலம் பாராது உழைத்தவர்களையும் பாராட்டி கௌரவிக்கத் தவறுவதில்லை.. இது எதிர்காலத்தில் வானுயர வளர வேண்டிய சமூகத்தை ஊக்குவிப்பதாக முடியும் என அச்சங்கத்தினர் கருதுவதாக ஒருவர் தெரிவித்தார். ”சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஆவசியம்” என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

புளியந்தீவு குறூப் நிருபர்

Comments