கிறிஸ்து பிறப்பை அர்த்தமுள்ளதாக்குவோம் | தினகரன் வாரமஞ்சரி

கிறிஸ்து பிறப்பை அர்த்தமுள்ளதாக்குவோம்

பலவிதமான எதிர்பார்ப்புக்களோடு திரும்பவும் ஓர் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட ஆயத்தமாகி கிறிஸ்துவின் பிறப்பை நம் மனக்கண்முன் கொண்டு வருகின்றோம்.

இயேசுவின் பிறப்பு ஒரு வரலாற்று நிகழ்வு. இந்த வரலாற்றை மத்தேயு நற்செய்தி நூல் ஆசிரியர் ஆபிரகாம் தொடக்கம் தாவீது வரை 14 தலைமுறைகள், தாவீது முதல் எக்கோனியா வரை 14 தலைமுறைகள், எக்கோனியா முதல் யோசேப்பு வரை 14 தலைமுறைகள் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து இத் தலைமுறைத் தொகுப்பு இயேசுவில் நிறைவடைகின்றது என்கிறார்.

இத் தலைமுறை அட்டவணையில் அந்நியர் என அழைக்கப்பட்ட தாமார் (தொ.நூல் 38:1-–26) இராகாபு (யோசுவா 2:1-–19) ரூத்து (ரூத் 1:16) என்ற பெண்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. இம் மூன்று பெண்களின் வரலாற்று இணைப்பைப் பார்க்கும்போது யாரெல்லாம் மாறாத மனிதாபிமானமும் மறக்க முடியாத நேசமும் கொண்டு இயங்குகிறார்களோ அவர்களையே வரலாறு தன் பக்கத்தில் பதிவு செய்கிறது.

கிறிஸ்து பிறப்பின் நாட்களில் நாமும் எம் பெயரை வரலாற்றில் பதிவு செய்ய மனிதாபிமானமும் நேசமும் உள்ளவர்களாக வாழ கிறிஸ்து பிறப்பு நம்மையும் அழைக்கின்றது.

கிறிஸ்துவின் பிறப்பில் பெண்களுக்கு கொடுக்கப்படும் சம அந்தஸ்து போற்றத்தக்கது. இதனை மத்தேயு ஆசிரியர் சரியாகப் புரிய வைக்கின்றார். லூக்கா நற்செய்தி ஆசிரியரும் பெண்களுக்கு அதிக முக்கியம் கொடுத்து தன் நற்செய்தியை எழுதும் போது வானதூதரின் வார்த்தையை நம்பாத செக்கரியாவை ஊமையாக்கிவிட்டு  லூக்கா 1 : 18 -– 20 இல் “இதோ பாரும் உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்” என்று கூறிவிட்டு மரியாவை பேசவைக்கின்றார்.

லூக்கா 1 : 26 -– 38 வரையான பகுதியில் வானதூதர் மரியாவை சந்திக்கின்றார். மரியாவிற்கும் வானதூதருக்கும் நீண்ட உரையாடலின் பின் மரியா “நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்கிறார். ஓர் ஆணை ஊமையாக்கிவிட்டு  ஒரு பெண்ணை பேசவைக்கின்றார்.

கிறிஸ்துவின் பிறப்பு அவ்வளவு அதிசயமானது. பெண்களின் புனிதம் போற்றப்படுகின்றது. பெண்ணை படைத்த பின் இறைவன் வேறு படைப்புக்களை படைக்கவில்லை. பெண்தான் இனி அனைத்துப் படைப்புக்களுக்கும் காரணமானவள். பெண்தான் மனுகுல மீட்பரையும் நமக்குத் தந்தான். இது வரலாற்றைப் புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வு.

வரலாற்றிலே மனுக்குல மீட்புக்காக மாடடைக்குடிலில் மரியாவின் மகனாக ஆட்டிடையர்கன் தரிசிக்க, ஞானிகள் பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கை கொடுத்து வணங்கிய வரலாற்று நிகழ்வு. 

விண்ணக வேந்தன் மண்ணக மாந்தரை தரிசித்த வரலாறு கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட முதல் பெற்றோர் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் செய்த பாவத்தால் அமைதி, அன்பு, நம்பிக்கை உறவு நலிதல் வெறுப்பு காழ்ப்புணர்ச்சி போன்றவை உலகில் மலிந்தன.

கானனியரின் இன வழிக்கடவுளான பாம்பு சூழ்ச்சியின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. பாம்பின் சூழ்ச்சியினால் பாவத்தில் வீழ்ந்த மனுக்குலத்தை மீட்க மனிதர்களோடு தங்கி உறைய மனு உரு எடுத்து மானிட மகனாக உலகில் உதித்த உன்னத வரலாறு இந்த வரலாற்றின் நாயகனுக்கு பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர் ஏசாயா 7 : 14 இல் இம்மானுவேல் என்று பெயரிடுவார் இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது பொருள். இதனை மத்தேயு நற்செய்தி நூல் 1 : 22 -– 23 இலும் கூறுகின்றார்.

வரலாற்றில் வந்த இறைமகனின் செயற்பாடுகள் எப்படி இருக்கும் என ஏசாயா இறைவாக்க்pனர் கனவு காண்கின்றார். “வாள் எடுத்துப் போர் புரியாத உலகம், போர்க் கருவிகளை விவசாயக் கருவிகளாக மாற்றும் உலகம், (ஏசாயா 2:4) சிங்கமும் செம்மறி ஆடும் ஒன்றாகப் படுத்துறங்கும் உலகம், (ஏசாயா 11:6) இறையரசு அமைதியின் அரசு, கிறிஸ்து அமைதியின் அரசர் (ஏசாயா 9:6) வன்முறையும் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்து மனித சமுதாயத்தில் அமைதி நிலவ அயராது உழைப்பவர்களே கடவுளின் மக்கள். இவர்களோடு தான் இறைமகன் இம்மானுவேலாக இருப்பார் என மத்தேயு ஆசிரியரும் குறிப்பிடுகின்றார்.

இம்மானுவேல் கடவுள் நம்மோடு இருக்கிறார். வரலாற்றில் வந்த இயேசுவின் வருகை மிகவும் அவலம் நிறைந்தது இந்த வரலாற்று நிகழ்வை மத்தேயு நற்செய்தி நூல் ஆசிரியரும் லூக்கா நற்செய்தி நூல் ஆசிரியரும் இயேசுவின்   பிறப்பின் செய்தியையும் அதையொட்டி நடைபெற்ற நிகழ்வுகளையும் எழுதுகிறார்கள்.

அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையை கணக்கிடுமாறு கூறியபோது, சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுனராக இருந்தார். முதன் முறையாக இக் குடிமதிப்பு எழுதப்பட்டது. இதன் பொருட்டு எல்லோரும் தங்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய அவரவர் தங்கள் ஊருக்குச்சென்றார்கள். இந்த வேளையில்தான் தாவீதின் வழி மரபினரான யோசேப்பு தனக்கு மண ஒப்பந்தமான கருவுற்ற மரியாவோடு பெயரைப்பதிவு செய்து கொள்ள கலிலோயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்தலகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றனர்.

இந்த நேரத்தில் மரியாவுக்கு பேறுகாலம் வந்தது விடுதியில் இடம் கிடைக்காதபடியால் பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார் (லூக்கா 2 : 1 -– 7)

மத்தேயு நற்செய்தி நூல் ஆசிரியர் மத்தேயு 1 : 18 -– 21 வரையுள்ள பகுதியில் யோசேப்பின் நேர்மைத் தன்மையையும் மரியாவை அவமானப்படுத்தாமல் விலக்கிவிட தீர்மானித்ததையும் சுட்டிக்காட்டும் நேரத்தில் சோர்வுகள், சந்தேகங்கள், பிரச்சினைகள் வரும்போதெல்லாம் ஆண்டவரின் தூதர் ஆறுதல் மொழிகளையும் ஆலோசனைகளையும் கூறி தைரியமூட்டுவதையும் காணமுடிகிறது. “யோசேப்பே தாவீதின் மகனே உம் மனைவி மரியாவை ஏற்றுக் கொள் அஞ்சவேண்டாம் ஏனெனில் அவர் கருவுற்று இருப்பது தூய ஆவியால்தான்” (மத்தேயு 1 : 20).

இப்படியான அவலங்கள், இடமின்மை, சந்தேகங்கள், உறவுகள் யாரும் அருகில் இல்லை என்ற அவலம் பெற்ற மகனை சுற்றுவதற்கு கந்தைத்துணி கூட இல்லை அப்படியெல்லாம் தொடரும் போது ஞானிகளின் வருகையினால் இன்னுமொரு அவலம் கொலைவெறி தாண்டவமாடுகிறது.

இந்த அவலத்துக்குக் காரணம் யூதரருக்கு ஒரு அரசர் பிறந்திருக்கிறார் என்ற செய்தியினால் ஏரோது அரசனும் எருசலேம் நகரமும் கலங்கியது. இந்த பின்புலம் தான் இரண்டு வயதுக்குட்பட்ட ஆண்குழந்தைகள் கொல்லப்படுகின்றார்கள்.

இது வரலாற்றில் நடந்த மிக மோசமான படுகொலை நிகழ்வு இந்த இடத்தில்தான் நாம் சிறுவர்களுக்கு நடைபெறும் துன்புறுத்தல்களை எண்ணிப்பார்க்க வேண்டும். அன்று ஏரோது கொலைவெறி கொண்டு குழந்தைகளைக் கொலை செய்தான். மத்தேயு 2 : 16  ஏரோதியாள் தன் மகளைப் பாவித்து திருமுழுக்கு முனிவர் யோவானின் தலையை வெட்டி எடுத்த நிகழ்வை மாற்கு 6 : 24 -– 28 காண்கிறோம்.  கிறிஸ்துபிறப்பு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் நாம் சிந்திக்க வேண்டியது’ அன்று ஒரு ஏரோது ஒரு ஏரோதியால் கொலைவெறி கொண்டு அலைந்தனர். இன்று எத்தனை ஏரோதுக்கள் ஏரோதியால்கள் சிறுவர்களை பலவிதமான துன்புறுத்தல்களைச் செய்யும் ஏரோதுக்கள் இவர்கள் எண்ணற்ற சிறார்களை வன்முறையாக நடத்துதல் வேலைக்கு அமர்த்துதல் கல்வியைத் தொடரவிடாது தடுத்தல்.

இலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகங்களில், சிறுவர் துன்புறுத்தல்களில் ஈடுபடும் ஏரோதுக்களை காண்கிறோம். இந்த ஏரோதுக்களைத் தடுப்பது யார்?

பல வடிவங்களில் பாலியல் துன்புறுத்தல், அடித்தல், வன்முறை செய்து கொலைசெய்தல் வேலைக்கு அமர்த்துதல், சித்திரவதை செய்தல், ஆணுறுப்பு, பெண்ணுறுப்புக்களைச் சிதைத்தல், பாலியல் செய்து ஒலி நாடாக்களை விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதித்தல், போதைப்பொருள் விற்பனைக்கும், கடத்தல்களுக்கும், கள்ளச்சாரய உற்பத்திக்கும், கடத்தல்களுக்கும் சிறுவர்களைப் பாவிக்கின்ற ஏரோதுக்கள் வளர்கின்றார்கள். சிறுவர் துஷ்பிரயோகங்களை பல ஏரோதுக்கள் முகவர்களாக இருந்து செயற்படுகிறார்கள்.

இன்னும் பல ஏரோதியான்களும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகிறார்கள் பெற்ற தாயே தன் சிசுவை கொலை செய்வதும், பெற்றவுடன் மலசல கூடத்திலும், பற்றைக்காடுகளிலும் சாக்குகளிலும், கட்டி தெருவிலே போடுவதும், சிறுவர்களை அடித்து சித்திரவதை செய்தலும் தொடர்கின்றன.

இந்த ஏரோதுக்களிடமும் ஏரோதியன்களிடமிருந்தும், சிறுவர்களைப்பாதுகாக்க திருச்சபை முன்வர வேண்டும். அன்று ஏரோதுவின் கொலை வெறியிலிருந்து குழந்தை இயேசு காப்பற்றப்பட்டதைப்போல் கொடிய ஏரோதுக்களிடமிருந்து சிறுவர்களைப்பாதுகாக்க வேண்டும்.

அன்று செக்கரியாவின் வாயை ஊமையாக்கி மரியாவை பேச வைத்த வானதூதர் இன்று எம்மையும் எம் குழந்தைகளுக்காக ஏரோதுக்களிடமும் ஏரோதியான்களிடமும் பேச அழைக்கிறார். குழந்தைகளுக்காக அவர்களின் வாழ்வுக்காக பேச முடியுமானால் கிறிஸ்து பிறப்பு விழா அர்த்தமுள்ளதாகும். பேசுவோம் வாழுவோம் குழந்தைகளுக்காக கிறிஸ்துவின் அருள் எப்போதும் எம்முடன்.

 அருட்பணி டி.எஸ்.மதியாபரணம் (கிளிநொச்சி)

Comments