வெங்காய பொருளாதாரம் | தினகரன் வாரமஞ்சரி

வெங்காய பொருளாதாரம்

வெங்காயம் சுக்கானால் 

வெந்தயத்தால் ஆவதென்ன 

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை  

மங்காத, சீரகத்தை தந்தீரேல் 

வேண்டேன் பெருங்காயம் 

வேரகத்து செட்டியாரே!”... 

காளமேகப் புலவர் எழு திய இரட்டை அர்த்தம் கொண்ட சிலேடைப்பாடல் இதுவாகும். வெங்காயக் குழம்பை விரும்பாத ஒருவன் சீரக ரசம் வைக்க சீரகம் கேட்பதுபோல அமைந்த இப்பாடல் ஆழப்பொதிந்த உள்ளர்த்தம் கொண்டது. அந்த ஆன்மிக அர்தத்தை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.ஒரு கிலோ சின்னவெங்காயம் 600- முதல் 700ரூபாவுக்கு விற்கப்படும் காலமிது. அப்படியும் கடைகளில் சின்ன வெங்காயத்தை காணமுடிவதில்லை. பெரிய வெங்காயம் ஒரு மாதுளம் பழ சைசில் காணப்படுகிறது. வீசி எறிந்தால் மண்டை உடையும்! பல அளவுகளிலும் பல நிறங்களிலும் ஒரு பல்பொருள் அங்காடியில் 210 ரூபா விலைக்கு வெங்காயம் கண்டேன். எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்தது என்றார்கள் மம்மிக்கு பெயர்பெற்ற எகிப்து நாட்டு வெங்காயமும் பெரிதாக வித்தியாசமாகத்தான் இருக்கிறது. நமது அண்டை நாடு இந்தியாவில் ஒருகிலோ வெங்காயம் 350 இந்திய ரூபாய்வரை விலைபோனதாக வலைத்தளப்பதிவுகள் மின்னின. தேடிப்பார்க்க வெளிக்கிட்டத்தில் நமக்கு அருகில் இருக்கும் தமிழ் நாட்டில் ஒருகிலோ வெங்காயம் கடந்த 19ம் திகதி வியாழக்கிழமை 120 இந்திய ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும் சற்று அப்பாலுள்ள கேரளாவில் 150 இந்திய ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும் சந்தைப் புள்ளி விபரங்கள் கூறின. இலங்கை ரூபாவின் பெறுமதியில் இந்தியாவில் ஒரு கிலோ வெங்காயம் (1 இந்திய ரூபா 2.55 இலங்கை ரூபா) 306ரூபா தொடக்கம் 382.50 வரையில் விற்கப்படுகிறது இந்த விலைகள் சின்ன வெங்காயத்திற்கா அல்லது பெரிய வெங்காயத்திற்கா என்று தெரியவில்லை இலங்கையில் சின்ன வெங்காயத்தின் விலை பெரிய வெங்காயத்தின் விலையை விட உயர்ந்தே காணப்படுவது வழக்கம். புறக்கோட்டைச் சந்தையில் ஒரு கிலோ சின்னவெங்காயம் 600 ரூபாவுக்கு விற்கப்படுகிறதென்றால் ஏனைய பகுதிகளில் அதன் விலைபற்றிக் கூற வேண்டியதில்லை. இந்த நிலையில் காளமேகப்புலவர் கூறிய வெங்காயக் குழம்பை வைப்பதுபற்றி கனவும் காணமுடியாது. 

தென்னிந்தியாவின் மதுரை திருச்சிபோன்ற நகரங்களில் உள்ள சந்தைகளில் பரிச்சயமுடைய எவருக்கும் அங்கே மலைபோல குவிந்து கிடக்கும் வெங்காயத் தொகைகள் பற்றி தெரியாதிருக்க முடியாது. அதேவேளை இலங்கையில் வட புல யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ள, புத்தளம் போன்ற பிரதேசங்கள் வெங்காயச் செய்கைகு மிகவும் பிரசித்தமான இடங்கள். தென்னிந்தியாவில் தற்போது விலை கூடிய பொருள்களில் ஒன்றாக அங்குள்ள கார்டூனிஸ்டுகள் வெங்காயத்தை வரைந்து தள்ளுகிறார்கள் இலங்கை பத்திரிகைகளிலும் வலைப்பக்கங்களிலும் வெங்காயம் பற்றிய வினோதமான காட்டூன்கள் வந்த வண்ணமுள்ளகன. இவ்வாறு வெங்காயம் சுக்காகி வெவ்வேறு பட்டவர்களின் அதீத கவனத்தை ஈர்க்கக் காரணமென்ன? நிச்சயமாக வெங்காயத்திற்கான கேள்வி திடீரென சடுதியாக உயர்ந்திருக்க எவ்வித காரணமுமில்லை. அப்படி வெங்காய கேள்வியை உயர்த்தக் கூடியளவுக்கு புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள் – வெங்காய விதந்துரைப்புகள் எதனையும் வெளியிட்டதாக தகவல்கள் இல்லை.  

ஆகவே, நிரம்பல் பக்கமிருந்தே பிரச்சினை ஏற்பட்டிருக்க வேண்டும். சீரற்ற வானிலை, கடும் மழைப்பொழிவு, அல்லது கடும் வரட்சி காரணமாக பயிரழிவுகள் ஏற்படலாம். தற்போது இலங்கையிலும் இந்தியாவிலும் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. மண்வெட்டியால் தோட்டத்தில் ஒரு கொத்து கொத்தினால் ஊற்று கிளம்புவதாக ஊரிலிருந்து கேள்வி! நிச்சயம் மழைகொண்ட வானிலை வெங்காய உற்பத்திக்கு ஏற்றதல்ல அத்துடன் வெங்காயம் பச்சை வீட்டுக்குள் உற்பத்தி செய்யப்படக்கூடிய பொருளுமல்ல. எனவேதான் வெங்காய உற்பத்தி சடுதியாக வீழ்ச்சியடைந்து அதன்விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன. தட்டுப்பாட்டை ஈடுசெய்ய இலங்கை எகிப்து போன்ற நாடுகளிலிருந்து வெங்காயத்தை இலங்கை இறக்குமதி செய்வதாகத் தெரிகிறது. பொதுவாக இந்தியா, வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகியனவே நமது வெங்காய வழங்குநர்கள். தற்போது இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. 

இலங்கையில் சீரற்ற வானிலை வழமைக்கு திரும்பி ஓரிரு மாதங்கள் கடக்கும் வரை வெங்காயப் பிரச்சினை தொடருமென எதிர்பார்க்கலாம். வெங்காயம் மட்டுமன்றி வெரும்பாலான மரக்கறி வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளமையை காணமுடிகிறது. சில மரக்கறி விலை கிலோ 500 ரூபாவாக பலபொருள் அங்காடிகளில் விற்கப்படுகின்றன. அதேபோல ஒரு கிலோ அருக்குளா மீன் 2400 ரூபாவுக்கு பல்பொருள் அங்காடியில் விற்கப்படுகிறது. மீன்பிடி நடவடிக்கைகளும் சீரற்ற வானிலை காரணமாக கடுமையாய் பாதிக்கப்பட்டுள்ளன. 

ஒரு மனிதனது முக்கிய தேவைகளில் உணவு முதன்மையானது சமச்சீரான உணவை தாங்கக் கூடிய விலையில் (affordable price) கொள்வனவு செய்யப் படக்கூடியதாக இருக்கவேண்டும். இதுவே உணவு பாதுகாப்பின் (Food Security) அடிநாதமாகும். இலங்கையில் சராசரி ஒரு நபரது வருமானத்தில் பெரும்பகுதி உணவுக்காகவே செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. உணவுப் பொருள்களின் விலை அசைவுகளின் அடிப்படையிலேயே பணவீக்கத்தின் பெரும்பகுதி விளக்கப்படுகிறது. உணவுப் பொருள்களின் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும் மக்களின் அடிப்படைத் தேவையாகிய உணவைப் பெற்றுக்கொள்வதில் தடையாக அமையலாம். அப்படி ஆகும்போது பெருங்காயம் சுக்காகிப்போகும் நிலை உருவாகும். புரியவில்லையா? மனிதனின் உடம்பு போதியளவு உணவின்றி காய்ந்து சருகாக போய்விடும். போசாக்கின்மை ஏற்பட்டு நோய்த்தாக்கங்களுக்கு ஆளாக நேரிடும். இதற்கு சீரக ரசம் சாப்பிட்டால் சரிவராது. சீரான அகம் – கொள்கை மூலமாகவே உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய இயலும். ஒருகிலோ மீன் ஆயிரம் ரூபாவுக்கு மேல் என்றால் எவரால் அதை வாங்க முடியும்? கோழி இறைச்சிக்கு மாறலாம் என்றால் அதன் விலையும் 400- - 500 ரூபாவுக்கு மேல்! புரதத்தை தரும் சைவ உணவுகளுக்கு மாறலாம் என்றால் கடலை பருப்பு போன்றவற்றின் விலைகளும் சார்பளவில் உயர்வாக உள்ளன பாசிப்பயறு உளுந்து போன்றவற்றின் விலைகள் இறக்குமதி தீர்வைகள் காரணமாக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. நெத்தலி போன்ற கருவாட்டு விலைகளும் சாதாரண பொதுமகனின் நாளாந்த வருமானத்துக்கு ஏற்ப கைக்கு எட்டிய நிலையில் இல்லை. உடனடி புரத உணவு என்றால் டின்மீன் தான். அதன் விலையும் 250 தொடக்கம் 310 ரூபா வரையில் நிற்கிறது. முட்டை ஒன்றின் விலையோ 30ரூபாவை எட்டுகிறது. 

இலங்கையைப் பொறுத்தவரையில் உணவு பாதுகாப்பு தொடர்பில் முறையான கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் முறையாக இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். வெறும் 21 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் உணவு பாதுகாப்பு தொடர்பில் இலகுவாக உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம். 

உணவுப்பொருள் உற்பத்தி – களஞ்சியப்படுத்தல் – விநியோகம் விற்பனை தொடர்பில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். உணவு உற்பத்தியாளராகிய விவசாயிகள், பண்ணையாளர்கள், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் தமது உற்பத்திகளுக்காக பெற்றுக்கொள்ளும்  விலைகளுக்கும்  அவற்றை உண்பதற்காக வாங்கும் வாடிக்கையாளர்கள் அவற்றுக்கு செலுத்தும் விலைகளுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி காணப்படுகிறது மீனவர்கள் தமது மீன்களுக்கு நல்லவிலை இடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள். விவசாயிகள் தமது உற்பத்திகள் அடிமாட்டு விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதாக அலறுகிறார்கள். ஆனால் நுகர்வோர் அவற்றுக்கு செலுத்தும் விலையோ குறைவதில்லை. ஆகவே இடையில் உள்ள தரகர்களே அதிக நன்மைகளை அனுபவிக்கின்றனர். 

எனவே உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் விவசாய விலைபொருள் விலைகளை அதிகரித்தால் (அதாவது இறக்குமதி வரிகளை அதிகரிப்பதன் மூலம் அல்லது இறக்குமதியை தடை செய்வதன் மூலம்) அதன் நன்மைகள் உற்பத்தியாளரைச் சென்றடைவது மிகவும் அரிது. மாறாக அவற்றை அனைவரும் நுகரவேண்டியுள்ளதால் விலை அதிகரிப்பின் தாக்கத்தை முழுச் சமூகமும் அனுபவிக்க நேரிடும். இடையில் உள்ள இடைத்தரகர்களும் விநியோகத்தர்களுமே அவற்றின் நன்மையில் பெரும்பகுதியை அனுபவிக்கின்றனர். 

விவசாய விலைபொருள்களின் கேள்வியோ அல்லது நிரம்பலோ விலை அதிகரிக்கும் போது அல்லது குறையும் போது பெருமளவில் மாற்றங்களுக்கு உட்படுவதில்லை. உதாரணமாக வெங்காய விலை அதிகரித்த உடன் அதன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க முடியாது அத்துடன் வெங்காய நுகர்வை சடுதியாக குறைக்கவும் முடியாது. எனவேதான் விவசாய விலைப் பொருள்களின் விலைகள் சடுதியான ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுகின்றன. 

தேவையான உற்பத்தியின் அளவை விவசாய ஆராய்ச்சி, நுகர்வு ஆய்வு ஊடாக அறிந்து கொள்ளவேண்டும். அதற்கேற்ப உற்பத்தியை மேற்கொள்ள விவசாயிகள் அறிவுறுத்த வேண்டும் முறையான போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் களஞ்சியப்படுத்தல் வசதிகளை இற்றைப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதோடு வீண்விரயங்களையும் பற்றாக்குறைகளையும் தவிர்க்கலாம். எதிர்பாராத வகையில் தற்போது வானிலை மாற்றத்தினால் வந்த வெங்காய பிரச்சினை போன்ற நிகழ்வுகள் ஏற்படும் வேறு இறக்குமதிகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரலாம். 

அல்லாது விட்டால் தற்போது ஏற்பட்டுள்ள வெங்காய விலை அதிகரிப்பு, இலங்கை விவசாயிகளை வரையறையின்றி அதன் உற்பத்தியை அடுத்துவரும் சில மாதங்களில் அதிகரிப்பர். அது பெரிய அளவில் சந்தைக்கு வரும்போது வெங்காயக் கேள்வியில் பெரிய மாற்றங்கள் வராத நிலையில் வெங்காய விலைகள் சடுதியாக வீழ்ச்சியடையும் மிகைநிரம்பலை களஞ்சியப்படுத்தவும் முடியாது இறுதியில் வெங்காயம் சுக்காகி (அல்லது அழுகி) வீசப்படும் புறக்கோட்டைப் பகுதியில் அந்த நாற்றத்தை அப்பகுதியூடாகச் செல்வோர் அனுபவிக்கக் கூடியதாகவும் இருக்கும்.   

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

Comments