விளைதிறனான அரச சேவைக்கு புத்துயிரூட்டும் வினைத்திறன் | தினகரன் வாரமஞ்சரி

விளைதிறனான அரச சேவைக்கு புத்துயிரூட்டும் வினைத்திறன்

2019: இன்னும் இரு தினங்களில் இந்த ஆண்டும் விடைபெற்றுச் செல்கிறது. எதிர்வரும் புதன்கிழமையன்று 2020இல் கால்பதிக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்ற போது ஏற்படும் புத்துணர்வும் எதிர்பார்ப்பும் இந்த புதிய ஆண்டிலும் நமக்கு ஏற்படாமலில்லை. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

இந்த அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் 42 நாட்கள் பூர்த்தியடைகின்றன. மக்களின் வாழ்க்கைச் சுமையைப் போக்கும் வகையில் வற்வரி உட்பட கூடுதலான வரிகளை புதிய அரசு குறைத்திருக்கிறது. புத்தாண்டு பிறக்கும் போது மேலும் பல சலுகைகள் மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அரசாங்கம் எத்தகைய சலுகைகளையும் மக்கள் நலன்சார் செயற்திட்டங்களையும் அறிவித்தாலும் அவைகளை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அரசாங்க ஊழியர்கள் அதாவது, அரசாங்க சேவை வினைத்திறனுடன் செயற்படாதவரை எந்தவொரு நடவடிக்கையும் மக்களைச் சென்றடையாது என்பது யதார்த்தமான உண்மை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் இதனைத் தான் புடம்போட்டுக் காட்டுகின்றன.

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் வெரஹர அலுவலகத்துக்கு திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டு கடும் ஆத்திரமடைந்தார்.

ஆயிரக்கணக்கான மக்கள் வாகனச்சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கும், பழைய லைசன்ஸ்களை புதுப்பிப்பதற்கும் படும்பாடு சொல்லிமாளாது. இதற்காக நாடு முழுவதுமிருந்து வருகைதரும், மக்கள் வீணாக அலைக்கழிக்கப்பட்டே காலத்தைக் கடத்துகிறார்கள்.

வெரஹர அலுவலக வளாகத்திலுள்ள மருத்துவ நிலையத்தில் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக ஒருவர் படும் கஷ்டம் வாழ்க்கையையே வெறுக்கச் செய்து விடுகிறது. நோய் இருக்கிறதா? என சோதனை செய்து சான்றிதழ் பெறவும் ஒருவர் நிரந்தர நோயாளியாகும் அவலந்தான் அங்கு தினப்பணியாக இருக்கிறதென்பது நொந்து மனமுடைந்து போனவர்களின் கருத்தாக இருக்கிறது.

வெரஹெர அலுவலகத்திற்குள் ஏதாவதொரு பணிக்கு செல்வதாக இருந்தால் அன்றைய தினமே முற்றாக முடிந்து விடுகிறது. அல்லது இரண்டு மூன்று தினங்கள் அலையவேண்டிய நிலையுள்ளது.

என்றாலும், பணம் கொடுத்தால் எதனையும் செய்ய முடியும் என்ற மிகக் கேவலமான போக்கு நிலவும் முக்கிய இடமாக இந்த மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வெரஹர வளாகம் திகழ்கிறது. இந்த விடயத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள்.

வாகனங்களுக்குரிய லைசன்ஸ் எடுப்பதென்பது ஒருவிதமான சோதனைகளும் பரீட்சைக்களுக்குமுரிய விடயதானம். சாரதிகளுக்கு தகுதிகாண் செயன்முறை பரீட்சைக்கு தோற்றும் போது நாம் அதிகாரிகள் முன் தோற்றித்தான் ஆக வேண்டும். அதற்காக, நேரம் செலவிடப்படுவதைத் தாமதமாகக் கொள்ளமுடியாது. ஆனால், 10 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரமொன்றை புதுப்பிக்கச் செல்லும் போதுதான் வீணான அவலங்களை எதிர்நோக்க நேரிடுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஊழல், மோசடிகளும், இலஞ்சம் வழங்கலும் நாட்டில் கொஞ்சம் மலிந்துதான் காணப்படுகிறது. என்றாலும், இலஞ்சம் மோசடிகளின் குகையாகவே இந்தத் திணைக்களத்தைப் பார்க்க முடிவதாக பட்டுத்தேறியவர்கள் கூறுகிறார்கள்.

அரசாங்க அலுவலகமொன்றில் நடக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு இந்த திணைக்களம் எடுத்துக்காட்டாக இருந்தாலும், நாடு முழுவதும் அரசாங்க அலுவலகங்களில் இதுபோன்ற மோசமான நிலை இருப்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு திடீர் களப்பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிர்வாகச் சீர்கேடுகளைத் திருத்திக்கொள்ள அவர்களுக்கு ஒருமாதகால அவகாசம் வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் நடவடிக்கையை மக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

உண்மையில், இந்த அதிரடி நடவடிக்கை ஆச்சரியம் தருவதாக இருந்தாலும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானதென்பதை மிகவும் அழுத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது.

இந்த செயல்திறன் மிக்க நடவடிக்கை கொழும்பில் மட்டுமல்ல, நாட்டின் சகல பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டுமென்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அரசாங்க சேவையை வலுவடையச் செய்யவேண்டுமென்பது புதிய அரசாங்கத்தின் இலக்கு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதுதொடர்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

உண்மையில், வினைத்திறனுடைய நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று இல்லாமல் மக்களுக்கான பணிகளை சாத்தியமாக்கவே முடியாது.

சுமார் 12 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் அரச சேவையில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவருமே தகுதியானவர்களாகவும் அனுபவ முதிர்ச்சியுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இதனை எவரும் மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்களின் ஆளுமை வினைத்திறன்களின் பலனை நாடும் மக்களும் முழுமையாக பெறவில்லையென்பது கவலைக்குரிய விடயம்.

இந்த இலட்சக் கணக்கான ஊழியர்களுக்கும் மக்களின் வரிப்பணமே செலவிடப்படுகிறது. அதாவது, அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளமும் ஏனைய கொடுப்பனவுகளும் மக்களாலேயே வழங்கப்படுகிறது. என்றாலும் தாங்கள் ஒவ்வொருவரும் மக்களுக்கான சேவகர்கள் என்பதைப் புரிந்து செயற்படுவதாகத் தெரியவில்லை.

இன்னும் ஒரு நிர்வாகச் சீர்கேடும் மக்களை வெகுவாகப் பாதிக்கிறது சொந்த கிராமங்களில் அல்லது நகரங்களில் பணிபுரியும் சில அரசாங்க ஊழியர்கள், அலுவலகத்தில் ஒப்பமிட்டுவிட்டு, தங்களது குடும்பப்பணிகளை கவனிக்கச் செல்வதும் பிற்பகலில் வந்து ஒப்பமிட்டு விட்டு வீடு செல்வதும் தினமும் நடக்கிறது. மதிய உணவுக்கு வெளியில் அல்லது வீடுகளுக்குச் செல்வோர் சிலர் அப்படியே விடுமுறை எடுத்து விடுகின்றனர். இவை ஒரு சில ஊழியர்களின் தவறான செயற்பாடு.

அதற்காக, சகல அரசாங்க ஊழியர்களும் தவறாக நடக்கிறார்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. மிகச் சிறந்த அர்ப்பணிப்போடு செயற்படும் அதிகாரிகள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் மறந்து யாரும் பேச முடியாது.

அரசாங்க ஊழியர்கள் இல்லாமல் நாட்டை ஓட்டமுடியாது. அவர்களது நிர்வாகப்பணிதான் நாட்டின் முதுகெலும்பு அவர்களுக்கு வழங்கும் பதவி உயர்வுகளும் ஊதியங்களும் மக்கள் சேவைக்கான வெகுமதிகள் என்பதை சகல ஊழியர்களும் உணர்ந்து செயற்பட்டாலே போதுமானது. இருக்கின்ற அரச ஊழியர்களின் பணிகளை வினைத்திறனுடையதாக மாற்றியமைக்க வேண்டும்.

எதற்கெடுத்தாலும் அரசியல் பேசும் அதிகாரிகள் அலுவலகங்களில் இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் அதற்கான உரிமை தாராளமாகவே இருக்கிறது. ஆனால், அரசியல் வேறு, நிர்வாகம் வேறு என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் போதுமானது.

ஒரு அதிகாரி ஒரு கட்சியின் ஆதரவாளர் என்பதற்காக, அதனை அலுவலக நிர்வாகச் செயற்பாடுகளுடன் கலந்து செயற்பட முயற்சிப்பது, அலுவலகச் செயற்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்யும்.

உண்மையில் அரச ஊழியர்களின் செயற்பாடுகளில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். இலஞ்சம் கொடுத்துத்தான் பணிகளை நிறைவேற்றிக் கொள்ளும் கேவலமான நடவடிக்கைகள் மக்களை அதிருப்தியின் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

நாட்டிலுள்ள பட்டதாரிகளும் சரி, பாமரர்களும் சரி அரசாங்க உத்தியோகத்தையே விரும்புகிறார்கள். கூலி வேலையென்றாலும் அரசாங்கத்தில் பணியாற்ற வேண்டுமென்றே விரும்புகின்றார்கள். அரசாங்கத் தொழில் செய்பவர்களுக்கே சமூக அந்தஸ்தும் இருக்கிறது.

அரச சேவையை சமூகம் உயர்வாகவும் கௌரவமாகவும் மதிக்கிறது. மக்கள் சேவைக்கு கொடுக்கும் கௌரவமாகவே இதனைப் பார்க்க முடிகிறது. ஆனால், அரசாங்க சேவையிலுள்ள ஒவ்வொருவரும் அந்தக் கௌரவத்தையும் அந்தஸ்தையும் மக்கள் நலன்சார் செயற்பாடுகள் மூலந்தான் ஈடுசெய்ய வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.

அரசாங்க தொழிலை நாடும் ஒவ்வொருவரும் மக்கள் நலன்சார் அர்ப்பணிப்பையும் மனதில் கொள்வதே சாலச்சிறந்தது. தனியார் துறையோடு ஒப்பிட்டால் இவர்களுக்கு வேலைப்பளு இல்லையென்றே சொல்லுமளவுக்கு அரச சேவையிலுள்ளோரின் செயல்கள் புடம் போடுகின்றன.

உண்மை அதுவல்ல, தனியார்துறைசார் ஊழியர்களைவிட மிகவும் பொறுப்பும் சமூக வேலைப்பளுவும் அரச ஊழியர்களுக்கே இருக்கிறது. ஆகவே, நிர்வாகச் சீர்கேடுகளால் செயல் மழுங்கிக்கிடக்கும் அரச சேவையை வினைத்திறனுடையதாக மாற்ற உறுதியுடன் செயற்படும் ஜனாதிபதி கோட்டாபயவின் அர்ப்பணிப்பு நாட்டுக்கு புத்துயிரூட்டும்.

Comments