அலறிக் கூச்சலிட வைத்த யுனிவர்சல் ஸ்டூடியோ | தினகரன் வாரமஞ்சரி

அலறிக் கூச்சலிட வைத்த யுனிவர்சல் ஸ்டூடியோ

கலிபோர்னியாவில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள் காலை நாம் 'யுனிவர்சல் ஸ்டூடியோ' நோக்கி புறப்பட்டுச் சென்றோம். எனக்கு அது புது அனுபவம் என்பதால் மனதில் கொஞ்சம் பதற்றம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் அனைத்திலும் நான் பங்குபற்றப் போவதில்லை என்ற எண்ணத்துடன் தான் அங்கு சென்றேன். 

அமெரிக்காவில் நான் பயணித்த மாநிலங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் வாகன நெரிசலுக்கு முகம் கொடுக்கவில்லை. பரந்து, நீண்டு விரிந்த தெருக்களில் எப்போதும் வாகனங்கள் ஓடிக் ெகாண்டேயிருந்தன. வீதியின் இரண்டு புறங்களும் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இயற்கையை அழிக்காமல் அப்படியே விட்டு வைத்து நடுவில் மட்டும் தெருக்களை ஏற்படுத்தியுள்ளார்கள் அமெரிக்கர்கள்! 

அன்று அமெரிக்காவில் ஒரு பொதுவிடுமுறை தினம் என்பதால் யுனிவர்சல் ஸ்டூடியோவில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. நாங்கள் விசேட நுழைவாயிலுக் கூடாகச் செல்வதற்காக கொஞ்சம் கூடுதலாகவே பணம் கொடுத்து விசேட நுழைவுச்சீட்டைப் பெற்றிருந்தோம். அமெரிக்கர்கள் மட்டுமன்றி எகப்பட்ட வெளிநாட்டவர்கள் அங்கே குவிந்திருந்தார்கள்.  

நாம் கதைகளிலும் கார்ட்டூன்களிலும் அதுவரை பார்த்து ரசித்திருந்த ஒவ்வொரு அம்சத்துக்குமென அங்கு விசாலமான காணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. கிட்டதட்ட டிஸ்னி வேர்ல்ட் மாதிரிதான். நாம் கார்ட்டூன்களில் பார்க்கும் அதே கட்டமைப்பு. ஹெரிபொர்ட்டர், குன்பு பெண்டா, ஜூரேசிக் பார்க், கிங்கொங் என அத்தனை ஹொலிவூட் அம்சங்களும் அங்கு உண்டு. ஒரு நாளுக்குள் நாம் விரும்பும் அத்தனைக்கும் சென்று வரலாம்.  

வரிசைகளில் நின்று உள்ளே சென்றால் எம்மை வண்டிகளில் ஏற்றி விடுவார்கள். சில வண்டிகளில் அனைவரும் கூட்டமாகச் செல்லலாம். சிலதில் மூவர் மட்டும்! இன்னும் சிலதிலோ தனியாக! 'த்ரி டி' யிலான கார்ட்டூன் உலகத்துக்குள் வண்டிகள் கீழிருந்து மேலே வானத்தை நோக்கி தூக்கி எறிய அவை பின் உருண்டு, பிரண்டு, குழுங்க வயிற்றை பிய்த்துக் கொண்டு குடல்கள் எல்லாம் வெ ளியே வருமொரு புதுவித அனுபவம் அது. முதலில் வண்டிகளில் எற மறுத்து பின்வாங்கிய நான் பின்னர் எனது நண்பர்களின் உந்துதல் கட்டாயத்தினால் அச்சம் கலைந்து துணிச்சலுடன் பங்குபற்றினேன். 

ஹொலிவூட் திரைப்படங்களில் வரும் வீடுகள் அனைத்தும் அங்கு கட்டமைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒரு ரயிலில் ஏறி பார்த்து ரசித்தபடி சுற்றித் திரியலாம். அப்போது இடையே ரயிலைச் சுற்றி தீ பிடிக்கும். நாம் பதறும்போது அருவி ஊற்றெடுத்து எம்மையும் நனைத்தபடி தீயை அணைக்கும். ஓரமாக இருக்கும் ஆற்றிலிருந்து எம்மை நனைக்கும்படியாக வௌ்ளம் பாயும். சிறிது தூரம் சென்ற பின்னர் டைனோசர்கள் வந்து ரயில் கண்ணாடிகளை தட்டி வாட்டியெடுக்கும். ரயிலை இங்கும் அங்குமாக உருட்டி பிரட்ட கிங்கொங் குரங்கு வந்து டைனோசர்களுடன் சண்டையிட்டு எம்மைக் காப்பாற்றும். இத்தனைக்கும் மத்தியில் எம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாம் அனைவரும் எம்மையறியாமல் கத்தி கூச்சலிடுவோம்.  

சிலர் கத்தினால் பயம் போகும் என்பார்கள். இன்னும் சிலர் பயம் வந்தால் உரத்துக் கத்துங்கள் என்பார்கள். யுனிவர்சல் ஸ்டூடியோவில் பொழுதைக் கழிக்கும்போது இது இரண்டுமே சரியென்றுதான் எனக்குப் பட்டது. எமது குழுவில் இருந்த அனைவரும் ஆண் பெண் என்ற வேறுபாடில்லாமல் தொண்டை கிழிய கத்தித் தீர்த்தோம். இறுதியில் கத்தி கூச்சலிட்டதிலேயே அதிக சக்தியை இழந்து களைப்படைந்தோமே தவிர யுனிவர்சல் ஸ்டூடியோவை விட்டு செல்ல மனமே வரவில்லை. 

ஸ்ரேயே, ஹெரிபொட்டர் கதையின் வாசகி. அவருடைய நீண்டநாள் கனவு அன்று அவருக்கு நனவானது. குழுவாக எம்முடன் வந்த அவர் ஹெரிபொட்டர் மாளி​கையைக் கண்டதும் அனு அனுவாக அதை அனுபவிக்க வெண்டுமெனக்கூறி தனியாக பிரிந்து சென்றார். அங்கு ஹெரிபொட்டர் கதையில் வரும் இனிப்புக்கள் அவர் பயன்படுத்திய பேனை, பென்சில், உடைகளென அனைத்தும் விற்கப்படுகின்றன.  இதனை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டுச் சிறுவர்களும் அநேகமாக ஹெரிபொட்டர் ஆடை அணிந்து கையில் மந்திரக் கோலு டன் அங்கு உலாவி திரிவது கண்கொள்ளாக் காட்சி. அதேபோன்று பொது இடங்களிலும் சில இளைஞர், யுவதிகள் ஹெரிபொட்டர் போன்று வேஷம் இட்டு பொது மக்கள் பார்க்க ஆடி, பாடி மகிழ்கின்றனர். இங்கு சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் தங்களை மறந்து அனுபவித்து ரசிப்பதனை காணமுடிந்தது. 

அனைத்திலும் வேடிக்கையான விடயம் என்னவென்றால் நாம் வண்டிகளில் கட்டப்பட்ட நிலையில் வானத்தில் தூக்கி எறியப்படும்போது எம்மையறியாமல் அவர்கள் புகைப்படம் எடுத்து வெளியே வைத்திருப்பார்கள். நாம் வெட்கப்படுமளவுக்கு அனைவரின் முகமும் பயத்தில் ஒவ்வொரு கோணத்தில் இருப்பது பின்னர் வெட்கம் கலந்த வேடிக்கையளிக்கும்! 

எது எப்படியோ யுனிவர்சல் ஸ்டூடியோவை நாம் ரசித்த அதேநேரம் எங்கள் பிள்ளைகளின் ஞாபகமும் எம்மை கொஞ்சம் வாட்டத்தான் செய்தது. எங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை பற்றி எங்களுக்குள் பேசி, சிரித்துக்ெகாண்டதுடன் என்றாவது பிள்ளைகளை இங்கு அழைத்து வரவேண்டும் என்றும் நாம் கூறிக் ெகாண்டோம். 

அமெரிக்காவிலும் சீன தயாரிப்புக்களே விற்கப்படுகின்றன. அவற்றைத்தவிர பிலிப்பைன்ஸ், வியட்நாம், பங்களாதேஷின் உற்பத்திகளையும் அங்கு காணலாம். ஆடைகள், கைப்பைகளிலிருந்து அனைத்துப் பொருட்களும் தரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு கடைகளில் விற்கப்படும். சீன தயாரிப்புக்களாக இருந்தாலும் அவற்றின் தரம் இலங்கையில் விற்கப்படும் பொருட்களின் தரத்திலும் உயர்த்தியானவை! 

கடைகளில் எங்கு பார்த்தாலும் கறுப்பினத்தவர்களே வேலை செய்கிறார்கள். இவர்களை அமெரிக்கர்கள் ஆங்கிலத்தில், 'கலர்ட் பீப்பள்' என்று குறிப்பிடுகின்றார்கள். இவர்களோ சிரிக்க மாட்டார்கள். பார்ப்பதற்கு முரடர்களாக காட்சியளிப்பார்கள். இவர்கள் அநேகமாக சோமாலியா, கானா, நைஜீரியா போன்ற நாடுகளிலிருந்து குடியுரிமைக்கோரி அமெரிக்கா வந்தவர்களாகவே இருக்கின்றார்கள். அதனால் எம்மைப் போன்ற தெற்காசிய மக்களைக் கண்டதும் எம்மீது ஒரு வித்தியாசமான பார்வையை வீசத்தான் செய்கிறார்கள். 

வொஷிங்டனில் நான் முதன் முறையாக நண்பர்களுடன் கடைக்குச் சென்று பொருட்கள் கொஞ்சம் வாங்கினேன். அதன் பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் செலுத்துவதற்காக சென்றபோது ஒரு கறுப்பின இளைஞர் என்னிடமுள்ள பொருட்களை வாங்கி விலைகளை மதிப்பிட்டார். அவர் முகத்தில் சிரிப்பே இருக்கவில்லை. பணம் என்றார்.

நானும் ஏற்கனவே பொருட்களுக்கான விலைகளை மதிப்பிட்டிருந்ததனால் அதற்குரிய பணத்தை அவரிடம் நீட்டினேன். அந்த டொலர்களை கண்கள் பிதுங்க பார்த்து விட்டு என்னவோ நான் கள்ள நோட்டைக் கொடுத்த மாதிரி அதனை அவரின் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்து வெ ளிச்சத்தில் பார்த்தார், தடவினார், உதறினார். இறுதியில் உண்மையான டொலர்தான் என்பதை உறுதி செய்தார். எனக்கோ ஆத்திரம் தலைக்கு ஏறியது.

(அடுத்த இதழில் முடியும்)

லக்‌ஷ்மி பரசுராமன்

Comments