பொறுமையற்ற ஒரு சமூக மனநிலை வீதிகளை படுத்தும்பாடு! | தினகரன் வாரமஞ்சரி

பொறுமையற்ற ஒரு சமூக மனநிலை வீதிகளை படுத்தும்பாடு!

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்கு உலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்  
கோட்டானே நாயே குரங்கே உனை ஒருத்தி  
போட்டாளே வேலையற்றுப் போய்.

நல்ல பசியோடு பந்தியிலே சாப்பிடுவதற்கு அமர்ந்த புலவர் எதிரிலே, சோழநாட்டைச் சேர்ந்த ஒருவனது முன்குடுமி அவிழ்ந்து சோற்றில் விழ எச்சிற் சோறு சாப்பாட்டில் தெறிக்க எழுந்த கோபம் காளமேகத்தின் வார்த்தைகளில் வந்து விழுகிறது.

மனிதன் என்றால் இங்கிதம் தெரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல் இடம் பொருள் ஏவல் எதுவுமின்றி தற்குறியாக நடப்பது மிருகத்தனமானது என்பது. ‘கோட்டானே, குரங்கே, நாயே’” என திட்டுக்களாக வெளிப்படுகிறது. முத்தாய்ப்பாக “உனை ஒருத்தி போட்டாளே வேலையற்றுப்போய்” என்பது உன் தாய் உன்னை வேறு வேலையில்லாமல் பெற்றுப் போட்டிருக்கிறாள்,  உன்னால் எவருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை என்ற பொருளைக் கொண்டது. மிருகங்கள் மட்டும்தான் குட்டி 'போடும்'மனிதர்களல்ல. எனவே முடியை சோற்றிலே விட்டு இங்கிதமில்லாமல் நடந்த சோழ நாட்டு குடுமிக்காரனை வார்த்தைகளால் வாட்டியிருக்கிறார் கவி காளமேகம்.

இலங்கையிலே குறிப்பாக, கொழும்பு நகரில் நீங்கள் ஒரு வாகன சாரதியாக வீதியில் இறங்கிவிட்டால் – நிச்சயமாக பல காளமேகங்களாக கனல்கக்க வேண்டியிருக்கும். இங்கிதம் தெரியாத, சுய ஒழுக்கம், கட்டுக்கோப்பற்ற மற்றும் போக்குவரத்து விதிகளை  சற்றும் சட்டைசெய்யாத ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பது கசப்பான உண்மை.

நாளுக்கு நாள் இலங்கை பூராகவும் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களினதும் காயமடைபவர்களினதும் எண்ணிக்கை யுத்தம் காரணமாக உயிரிழந்த மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். பாதைகள் செப்பனிடப்பட்டமையும் நவீன வாகனங்களில் வருகையும் சாலை ஒழுங்கு விதிகளைப் பின்பற்றாமையும் வாகன சாரதிகளின் உடல் மற்றும் உளவியல் குறைபாடுகளும் விபத்துகள் நிகழ பிரதான காரணமாகின்றன.

கொழும்பு நகரைப் பொறுத்தமட்டில் வாகன நெரிசல் என்பது தவிர்க்க இயலாத நாளாந்த நிகழ்வாக மாறியிருக்கிறது. அதன் காரணமாக இழக்கப்படும் வேலை மணித்தியாலயங்கள் மற்றும் விரயமாகும் எரிபொருளின் அளவு என்பன மிகமிக அதிகம். இதனை குறைக்க நெரிசல் மிக்க நேரங்களில் பொலிசார் எதிர்வீதியின் ஒரு மருங்கையும் திறந்து விடும் உத்தியைக் கையாள்கின்றனர். இது ஓரளவுக்கு வாகனங்கள் முன்னோக்கிச் செல்ல உதவினாலும் அவை மீள ஒன்றுகூடும் இடங்களில் நீண்டநேரம் தரித்து நிற்க வேண்டியுள்ளது. வாகனத்தில் எஞ்சினை “ஓவ்” செய்து விட்டு ஒரு 10 நிமிடம் காத்திருக்கலாம் அடுத்த சிக்னல் விழும் வரைக்கும். காலி வீதியைப் பயன்படுத்துவோர் 'வில்லியம் ஜங்ஷன்' என்னும் இடத்தில் மாலை வேளையில் இதனை அனுபவிக்கலாம்.

சாதாரண வேளையில் உங்கள் வாகனத்தின் சாரதியாக பாதையில் இறங்கி விட்டால் மூன்று நபர்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் ஒன்று பஸ் சாரதிகள், இரண்டு முச்சக்கரவண்டி சாரதிகள் மூன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநனர்கள்.

நீங்கள் உங்களுக்கு உரிய லேனில் போய்க்கொண்டிருப்பீர்கள் பக்கத்து லேனிலும் இன்னொரு வாகனம் போய்க் கொண்டிருக்கும். இடையில் உங்கள் வலப்புறமாகவோ இடப்புறமாகவோ முச்சக்கரவண்டி உங்கள் வாகனத்தை உரசுவதுபோல் ஓடிவரும்.

ஏதோ நேற்றைய பயணத்தை இன்று செல்வது போல அல்லது இயற்கை கடன் கழிக்க தூண்டுவதால் பாதையை அடக்க முடியாமல் மிகமிக அவசரமாக முந்திக்கொண்டு ஓடுவது போல வருவார்கள்.

நாட்டின் போக்குவரத்து விதிகள் எதையும் கவனிக்காத – அனுசரிக்காத கடைப்பிடிக்காத, பாதைகளில் தமக்கு மட்டுமே முன்னுரிமை கொண்டதுபோல சிந்திக்கும் ஒரு காட்டுமிரண்டிக் கூட்டமாக தோன்றும்.

நாம் நமது வாகனத்தை ஓரம்கட்டி போக  இடம்தர வேண்டும் அல்லாவிட்டால் ஒரு முறைப்புடன் விறைப்புடன் விர்ரென்று இடம் கிடைத்ததும் முன்னுக்கு ஓடுவார்கள்.

காளமேகப் புலவராக நாம் மாற விரும்பினாலும் வெளியே மூன்று சக்கரத்தில் உட்கார்ந்திருப்பவனிடம் உள்ள அஸ்திரங்கள் நாகரிகமானவையாக இருக்காது என்பதால் 'அடக்கிக் கொண்டு' இரத்த அழுத்தத்தைக் குறைக்க இஷ்ட தேவதைகளை பிரார்த்தனை செய்ய வேண்டியிருக்கும். அத்தோடு நமது வாகனம் பல இலட்சம் ரூபா பெறுமதியுடையதாயின் அதனை பாதுகாத்துக் கொள்வது நமது பொறுப்பல்லவா – அதனால் ‘சாந்த மூலேகா சௌக்ய மூலே கா’

அடுத்தது பஸ் சாரதிகள். கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற ரூபா சதத்திற்காக மக்களின் வாழ்க்கையில் குறிவைக்கும் ஜென்மங்கள் இரண்டு பஸ்கள் வீதியின் இரண்டு லேன்களிலும் போட்டி ஓட்டம் ஓடுவார்கள் பாருங்கள். இரண்டு யானைகள் ஓடுவது போலிருக்கும். இடது பக்க லேனில் பயணிக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள் பாதைகளில் நிற்கும் குழலூதும் கண்ணன்கள் அவ்வப்போது குழலை ஊதி” சில வேளை இடது பக்க லேனுக்கு போகுமாறு சமிக்ைஞ காட்டினாலும் அப்போதைக்கு இடது பக்கம் போய் அதன்பின்னர் வழமைபோல அராஜகம் தான். தரிப்பிடம் இருக்கும் இடத்திற்கு முன்னதாகவே பாதைகளின் நடுவில் பஸ்ஸை குறுக்காக நிறுத்தி பயணிகளை கவ்விக்கொண்டு  ஓடுவார்கள். பின்னால், பக்கத்தில் வரும் வாகனத்தைப் பற்றி எதுவித கவலையுமின்றி வலப்புறம் திருப்பி ஓடுவார்கள். பின்னால் பக்கவாட்டில் அடுத்த லேனில் வரும் வாகன சாரதி நிறுத்தி வேகம் குறைத்து தனது வாகனத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தது மோட்டார் சைக்கிள் மன்னன்கள்! இவர்களுக்கு எங்ஙனும் நிறைந்திருக்கும் அனுபவம்! எந்த இடைவெளி கிடைத்தானும் புகுந்து சென்று விடுவார்கள். பதினெட்டு பத்தொன்பது வயதுப் பையன்களிடம் 200 CC நவீனரக மோட்டார் சைக்கிள் கிடைத்தால். காலி வீதியென்ன கொம்பனி வீதியென்ன. அல்லது கிராமத்து குறுக்கு வீதியென்ன. பேயோட்டம் தான்! வேகமாகப் போவது தான் ஆண்மை என நினைப்பது வயதுக்கோளாறு.

அவ்வப்போது பொலிஸ்காரன் பிடித்துவைத்து தண்டம் விதித்து சிறையில் அடைத்து பாடம் புகட்டினாலும் ஒட்டுமொத்த சமூகம் சேர்ந்து திருத்தினால் ஒழிய இவற்றை குறைப்பது கடினம். இவற்றின் போது பணயம் வைக்கப்படுவது இளைஞர்களின் உயிர்கள்.

இதெல்லாம் சரிதான், வாகனங்களில் சாரத்தியம் செய்வோர் தமது மமதை காரணமாகவோ மன அழுத்தம் அல்லது கூடல் உபாதைகள் காரணமாகவோ போக்குவரத்து ஒழுங்கு விதிகளைப் பேணுவதில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும். பாதசாரிகளாக பாதைகளில் செல்வோருக்கு சாலை விதிகள் ஏற்புடையதல்லவா? இது மிகப்பெரிய ஒரு கேள்வி. கொழும்பிலே காலி வீதியில் சவோய் தியேடட்டரிலிருந்து வெள்ளவத்தை பாலம் வரையிலும் பாதையின் நடுவே பாதையை இருபுறமும் பிரிக்கும் வண்ணம் செடிகள் வளர்த்துப் பராமரிக்கிறார்களே, ஏனென்று தெரியுமா? அப்பகுதியின் அழகை மேம்படுத்துவதற்காக என்று பலரும் நினைக்கலாம். ஆனால் கண்ட இடத்தில் கண்டபடி பாதையை கடக்கும் பாதசாரிகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான். அப்பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் யார் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் சாலை விதிகள் பற்றிய புரிந்துணர்வு, ஒழுக்கம் எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பது புரியும்.

மேலே சொன்ன பாதையில் பாதசாரி கடவைகள் பல சமிக்ைஞ விளக்குகளோடு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வாகனங்கள் செல்வதற்கு பச்சை விளக்கு ஒளிந்து கொண்டிருக்கும் போது எவ்வித கவலையுமின்றி காதில் செல்போனை செருகியபடி பாதையை கடக்கும் நவநாகரிக (?) மனிதர்களைக் காணமுடியும்.

அதே கடவையில் ‘நாய்’ கூட பச்சை ஒளிர்ந்த பின் பாதையைக் கடப்பதைப் பலமுறை கண்ட ஞாபகம். கவி காளமேகம் கண்டதுபோல “உனை யொத்தி போட்டாளே வேலையற்றுப் போய்” எனத் திட்டுவதில் உன்ன தப்பு பிழை இருக்க முடியும்?

ஒழுக்கமுள்ள ஒரு சமூகம் இருப்பது ஒரு நாட்டின் சீரான பொருளாதார, சமூக, சுற்றாடல் அபிவிருத்திக்கு மிகமிக அத்தியாவியம். அது தனிமனிதனின் வீட்டில் இருந்து ஆரம்பித்து சமூகத்தில் சென்று முடிகிறது. மற்றவரைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படாத ஒரு சமூகம் உருவாவது மிக மிக ஆபத்தானது.

சாதாரணமாக ஒன்றன் பின் ஒன்றாக சீரான ஒழுங்கில் வாகனங்கள் சென்றால் எல்லோரும் தத்தமது இடத்தினை சென்றடையலாம். அடுத்த பச்சை விளக்கு ஒளிரும் மட்டும் பாதசாரிகள் தாமதிப்பதால் எந்தக் கோட்டையும் எதிரியிடம் சிக்கிச் சீரிழியப் போவதில்லை.

பொறுமையற்ற ஒரு சமூக நடைமுறை சமூகத்தை மனநோயாளிகளாக ஆக்கி விட்டிருக்கிறது. இதிலிருந்து மீண்டுவர மிக நீண்ட காலம் ஆகலாம். சட்டத்தினால் மட்டும் இதை சரி செய்துவிட முடியாது.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

Comments