கொதித்தெழும் மரக்கறி உற்பத்தியாளர்கள்; நுவரெலியா வர்த்தகர்களும் ஆவேசம் | தினகரன் வாரமஞ்சரி

கொதித்தெழும் மரக்கறி உற்பத்தியாளர்கள்; நுவரெலியா வர்த்தகர்களும் ஆவேசம்

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவிவரும் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயம் போக்குவரத்து என்பனவற்றில் ஏற்படும் பாதிப்பு இன்னும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கும் நிலை இப்படி பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது இந் நாடு. 

இதில் விசேடமான அம்சம் என்னவென்றால் விவசாயத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது அதாவது நெற் பயிர் செய்கையாக இருக்கட்டும் அல்லது மரக்கறி உற்பத்தியாக இருக்கட்டும் எல்லா விவசாயமும் முழுமையாக பாதிப்படைந்து இருக்கின்றது. 

அரிசியின் விலை ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. காய்கறிகளின் விலை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது இப்படி மக்கள் அன்றாடம் பாவிக்கும் அரிசி மரக்கறி உட்பட அனைத்தும் விலையேற்றம் பெற்றிருப்பதற்கு இந்த காலநிலை மாற்றமே காரணம். 

மலையகத்தை பொறுத்த அளவில் மரக்கறி விவசாயிகள் காலநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றார்கள் விவசாயத்தை மேற்கொண்டாலும் உரிய விளைச்சலை பெற முடிவதில்லை. விளைச்சலைப் பெற்றுக் கொண்டாலும் அதில் லாபத்தை பெற முடியாத ஒரு சூழ்நிலையும் இருக்கின்றது. 

மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுவதால் மொத்த வியாபாரிகள் தங்களுடைய கொள்வனவின் தொகையை குறைத்து கொண்டு வருகின்றார்கள். அதிக அளவில் இதில் முதலீடு செய்வதற்கு அவர்கள் விரும்பவில்லை அப்படி செய்கின்ற முதலீடுகளுக்கு லாபம் கிட்டாமல் போய்விடலாம் என்று மொத்த வியாபாரிகள் கருதுகிறார்கள். 

மரக்கறி விலை அதிகரிப்பின் காரணமாக மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். விவசாயிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவே விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். மரக்கறி விலை அதிகரித்ததும் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என மக்கள் கருதுகின்றார்கள். ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பதே உண்மை. ஒரு சில விவசாயிகளே நன்மை பெறுகின்றார்கள் அனேகமானவர்கள் சந்திப்பது பாதிப்பை மட்டுமே! 

கடந்த காலங்களில் நுவரெலியா மரக்கறிகளின் விலை அதிகரித்தாலும் போஞ்சி, கத்தரி, புடலங்காய், வெண்டைக்கா, வட்டக்காய் போன்ற மரக்கறிகளின் விலைகள் குறைவாக இருக்கும் ஆனால் தற்பொழுது அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதால் மக்களுக்கு இது ஒரு பாரிய பாதிப்பாக இருக்கின்றது. 

இந்த சீரற்ற காலநிலை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு நிவாரணம் தேவை. ஆனால் இந்த விவசாயிகளுக்கு அந்த நட்டத்தை ஈடு செய்து கொள்வதற்கு அரசாங்க தரப்பில் இருந்து உதவி செய்யப்படுவதில்லை. உதவ முன்வருவதும் இல்லை மானியம் வழங்கப்படுவதும் இல்லை காப்புறுதி திட்டம் ஒன்றையும் அரசாங்கம் இதுவரை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தவும் இல்லை. ஆனால் ‘நெட்’ பயிர்செய்கையில் ஈடுபடுகின்றவர்கள் நட்டம் அடையும் பொழுது அதனை ஈடு செய்வதற்கு அரசாங்கம் அவர்களுக்கு  நட்டையீட்டை வழங்குகின்றது. அவர்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கென ஒரு காப்புறுதித் திட்டம் இருக்கின்றது. ஆனால் மலையக விவசாயிகளை பொறுத்தளவில் இப்படி எந்த ஒரு திட்டமும் இவர்களுக்காக இல்லை தாங்கள் ஒவ்வொரு முறை விவசாயம் செய்கின்ற போதும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்களாகவே இருக்கின்றார்கள். 

எதிர்வரும் வாரங்களில் இன்னும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே இங்கிருக்கின்ற வியாபாரிகள் தெரிவிக்கின்றார்கள்.காரணம் மரக்கறிகளுக்கு அந்தளவிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இது தொடர்பாக நாங்கள் விவசாயிகளிடமும் இங்கு இருக்கின்ற வியாபாரிகளிடமும் கருத்துக்களை கேட்டோம் அதற்கு அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். 

நுவரெலியா தியாகு 

Comments