பிரதேச வாரியாக விவசாய உற்பத்திகளை வகைப்படுத்த வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பிரதேச வாரியாக விவசாய உற்பத்திகளை வகைப்படுத்த வேண்டும்

நான் என்னை ஒரு அரசியல் வாதி என அழைப்பதைவிட ஒரு விவசாயியாக அடையாளப்படுத்திக் கொள்வதையே அதிகம் விரும்புகின்றேன். இன்றைய இந்த நிலைக்கு முக்கிய காரணம் அதிக மழைவீழ்ச்சியே. எனவே இதே நிலை மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

மழைவீழ்ச்சி இல்லாத சந்தர்ப்பத்திலும் இந்த விலை அதிகரிப்பு ஏற்படலாம் வரட்சி காலத்திலும் இந்த நிலை ஏற்படலாம். 

இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால் திட்டமிட்டல் அவசியம். இந் நாட்டில் விவசாயத்திற்கு என ஒரு கட்டுப்பாடு இல்லை.ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்யாமல் எல்லா மாவட்டத்திலும் இன்று எல்லா பொருட்களும் உற்பத்தி செய்யப்படுவதும் ஒரு பிரச்சினையே. 

இன்று விலை அதிகரிப்பைப் பற்றி பேசுகிறோம்.

இதே மரக்கறிகள் விற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலை குறைந்த பொழுது உற்பத்தியாளர்களுக்கு எந்தளவுக்கு நட்டம் ஏற்பட்டிருக்கும் என்பது பற்றி எவருமே பேசுவதில்லை.

எத்தனையோ விவசாயிகள் பாரிய நட்டத்தை சந்தித்திருக்கின்றார்கள். இன்று புதிய தொழில்நுட்பம் காரணமாக ஹைபிரிட் விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் ஒரு பாதிப்பே.

இந்த விடயத்தில் விவசாய திணைக்களம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் சரியான தகவல்களை சேகரித்து இதனை தேசிய மட்டத்தில் கட்டுப்படுத்த வேண்டும். 

இன்னுமொரு முக்கிய விடயம். நான் பலமுறை இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்திருக்கின்றேன்.

ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. நுவரெலியாவில் குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகள் அமைக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால் விலை அதிகரிப்பு விலை குறைப்பு இந்த இரண்டையும் கட்டுப்படுத்த முடியும் விவசாயிகளும் பாதிக்கப்பட மாட்டார்கள். பாவனையாளர்களும் பாதிப்படைய மாட்டார்கள். இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். விவசாய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றவர்கள் துறை சார்ந்தவர்களாக இருப்பது அவசியம். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பல துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கின்றார். எனவே இதனையும் அவர் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.   

Comments