காயப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தவே அனுப்பப்பட்டேன் | தினகரன் வாரமஞ்சரி

காயப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தவே அனுப்பப்பட்டேன்

முப்பது வருட யுத்தத்தில் நாங்கள் இழந்து போனவற்றையும் நாங்கள் அடைந்து கொள்ள முடியாதவற்றையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக எனது பதவிக்காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என புதிய வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.  

அதற்கான சந்தர்ப்பத்தை ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இப்போது உங்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றார். வடமாகாண ஆளுநர் நியமனத்தை இவ்வளவு காலம் தாமதித்து இவ்வளவு முயற்சிக்கு பின்னால் செய்திருக்கின்றார் என்றால் அதில் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.  

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;  

வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்பதற்கு தயங்கிய நிலையில் என்னை உற்சாகப்படுத்தி ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தியது எனது கணவர் தான். இந்தப் பதவியை ஏற்க வேண்டாமென என்னுடைய குழந்தைகள் என்னோடு முரண்டு பிடித்தனர். இவற்றுக்கும் மத்தியில்த்தான் உங்களை சந்திக்க நான் இன்று வந்திருக்கின்றேன்.  

வவுனியா மாவட்டத்திலிருந்து அரசாங்க அதிபராக நான் வெளியே சென்ற போது உண்மையாகவே இலேசான இதயத்தோட சென்றிருந்தேன். ஏனென்றால் எனக்களிக்கப்பட்ட கடமைகளை எனது மனத்திருப்திக்கு நான் நிறைவேற்றியிருந்தேன். பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நான் அங்கு முன்னெடுத்திருந்தேன். அந்த நிறைவும் மகிழ்ச்சியும் என் மனதை இலேசாக்கியிருந்தது.  

ஆனால் இன்று வவுனியா மாவட்டத்தின் வாசலில் நான் அடியெடுத்து வைத்தபோது அந்த மக்கள் காட்டிய அன்பும் என்னை எதிர்பார்த்து காத்து நின்ற அவர்கள் காட்டிய அந்த மாபெரும் ஆதரவும், அதே போல் வட மாகாணத்திற்கு நான் வந்த போது எதிர்பார்க்காத அளவுக்கு அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களென அனைவரும் அன்பாக பேசியதும் மீண்டும் என் இதயத்தைக் கனமாக்கியது.  

இங்கு அவைத் தலைவர் சிவஞானம் கூறியது போல் இது இலகுவான விடயமில்லை என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்தது. கடந்த ஒன்றரை மாதங்களாக ஐனாதிபதி பதவியேற்ற நாளிலிருந்து இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஊடகங்கள் ஊடாக நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். பலர் என்னை தொலைபேசியில் அழைத்து இது உண்மையா இது நடக்குமா என்றெல்லாம் கேட்டார்கள். அந்த நேரங்களில் எல்லாம் இந்த விடயத்தை நான் மறுத்தேன்.  

அதற்கு காரணம் என்னவென்றால் உண்மையாக நான் என்னுடைய நிர்வாக சேவையிலிருந்து ஓய்வு பெறவில்லை. அண்மையில் தான் நான் புதியதொரு பதவிக்கான கடமைகளை நான் ஆரம்பித்திருந்தேன். எனவே இந்த விடயத்திலே நான் ஒரு அரச அதிகாரியாக நிதானமாகச் சிந்திக்க வேண்டிய தேவையொன்று இருந்தது. ஏறக்குறைய முப்பத்தைந்து வருடங்களை அரச சேவையில் கழித்த நான் கடைசிக் காலத்தை பூரணப்படுத்தாமல் வெளியேறுவதென்பது எத்துணை வேதனையானது என்பது என்னுடன் வேலை செய்த நண்பர்களுக்கு தெரியும்.   ஆகையினால் இது தொடர்பாக நான் ஐனாதிபதியின் செயலாளருடன் தொடர்ந்து உரையாடியதன் காரணமாக இறுதியாக இதனை நான் ஏற்றுக் கொண்டு எனக்குரிய அத்தனை விடயங்களையும் தாங்கள் கவனத்தில் கொள்வதாக ஐனாதிபதி அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக உறுதியளித்து என்னுடைய சேவைக்கால நன்மைகளை பாதுகாத்துக் கொண்டு இந்த நியமனத்தை எனக்கு அளித்திருக்கின்றார்.  

இது நிச்சயமாக எனக்கானது மட்டும் அல்ல. நான் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டும் எடுத்த நடவடிக்கையும் அல்ல. வட மாகாண மக்களின் உணர்வுகளுக்காக வட மாகாண மக்களின் தேவைகளுக்காக, வட மாகாண மக்களின் ஏக்ககங்களுக்காக ஜனாதிபதி தர விரும்பிய ஒரு விடயமாகத் தான் நான் இதனை பார்க்கின்றேன்.  

நான் பதவியேற்ற போது என்னிடம் சொல்லப்பட்ட ஒரே ஒரு விடயம், வட மாகாண மக்கள் மிகுந்த வேதனைகளோடும் வலிகளோடும், காயங்களோடம் இருக்கின்றார்கள். அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய ஒரே ஒரு தேவை தான் எமக்கு இருக்கின்றது. அந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அந்த மக்களுக்கு இதுவரை கிடைக்காத சகல விடயங்களையும் செய்து முடிப்பதற்கான சகல அதிகாரத்தையும் அதற்கான சகல ஒத்துழைப்பையும்  ஐனாதிபதி செயலகம் வழங்குமென்ற ஜனாதிபதியின் உத்தரவாத செய்தியோடு தான் நான் இங்கு வந்திருக்கின்றேன்.  

இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியது போல நான் இந்த மண்ணின் நாடித் துடிப்பினை அறிந்திருக்கின்றேன். மக்களின் உள்ளங்களை நான் அறிந்திருக்கின்றேன். அரசாங்க உத்தியோகத்தர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு சிக்கல்களை நான் அறிந்திருக்கிறேன்.  

வவுனியா மாவட்டத்திலே மூன்று இலட்சம் மக்களை நாங்கள் மூன்றரை வருடங்கள் பராமரித்தோம். வவுனியா மாவட்ட மக்களையும் சேர்த்து சுமார் நான்கரை இலட்சம் மக்களை நான் மிகவும் அன்னியோன்னியமாகப் பார்த்திருக்கின்றேன். எனவே இந்த மாகாணத்தில் இருக்கின்ற பலருக்கு என்னைத் தெரியும் எனக்கும் பலரைத் தெரியும்.  

அப்படியிருந்தும் கடந்த எட்டரை வருடங்களாக இந்த மாகாணத்திற்கோ ஏன் என்னுடைய வவுனியா மாவட்டத்திற்கோ  கூட என்னால் வர முடியாமல் போய் விட்டது. அதற்கான ஒரு தேவை இருந்த போதும் என்னுடைய கடும் வேலைப்பளுவின்  காரணமாக நான் இங்கு வரவில்லை. சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நான் விரும்பாமலேயே எனக்கு  பதவி தரப்பட்டது.  பணிப்பாளர் நாயகம் பதவியை நான் ஏற்ற போது 2019ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தின் வருமானத்தில் ஆகக் கூடியளவு  975 பில்லியன் ருபாவை வருமானமாக ஈட்டிக் கொடுத்தேன்.  

பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியது போல் என்னை இடமாற்றுவதற்கான ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அன்று வீதியிலிறங்கிய என் உத்தியோகத்தர்கள் நான் தடுத்தும் கேளாமல் வீதியிலே போராடி கொழும்பு மாநகரையே ஸ்தம்பிதமடையச் செய்தனர். அந்த நிலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை மீளப் பெறச் செய்து திரும்பவும் அந்தப் பதவியில் என்னை அமர்த்தினர்.  

எனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட போது கூட இது உங்களுக்கான பதவி உயர்வு என்பதற்காகவே நாங்கள் அமைதி காக்கின்றோம் என்று கூறித்தான் என்னை அமைச்சின் செயலாளர் பதவிக்கு அனுப்பினர். ‘எத்தனையோ செயலாளர் பதவிகள் இருக்கும் போது சுகாதார அமைச்சை ஏன் என்னிடம் தந்தீர்கள்’ என அப்போது ஐனாதிபதி செயலாளரிடம் நான் கேட்டேன். அந்த அமைச்சுக்குள் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஐனாதிபதி எடுத்த தீர்மானம் இது என்றும் இது தொடர்பில் எந்த பேச்சுக்கும் இடமில்லை என்பதுடன் எவரும் இவ்விடயம் தொடர்பில் கதைப்பதற்கில்லை என்றும் கூறினார்.  

பதவியைப் பெற்று அங்கு நான் சொன்ற போது, அரசாங்க மருத்துவர்கள் ஒரு புறம் தாதியர் சங்கம் ஒரு புறம் என பல பிரச்சினைகள் முன்வைத்தார்கள். கடந்த ஒரு மாத காலத்திற்குள் அந்தப் பிரச்சினைகளில் 70 வீதமானவற்றை நான் தீர்த்துவிட்டுத் தான் இங்கு வந்திருக்கின்றேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு வேதனை என்னவென்றால் தற்போது அமைச்சரினால் அனுமதிக்கப்பட்டு அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற யாழ்.பொது வைத்திய சாலைக்கான இருதய சிகிச்சைப் பிரிவுக் கட்டிடத்திற்கான அனுமதி, வவுனியா வைத்திய சாலைக்கான கட்டிடத்திற்கான அனுமதி, முல்லைத்தீவு மன்னார் வைத்தியசாலைகளுக்கான புதிய கட்டிட அனுமதிகள் போன்ற அமைச்சரவைப் பத்திரங்களை முழுமை பெற முடியாத நிலையில் நான் விட்டு விட்டு வந்திருக்கின்றேன்.  

இருந்தாலும் அங்கு இருக்கின்ற அத்தனை பேரும் அத்தனை மேலதிக செயலாளர்களும் பணியாளர்களும் கூறிய ஒரே ஒரு விடயம், ‘நீங்கள் இந்த இடத்தில் இருந்து போனாலும் நாங்கள் நிச்சயமாக அங்கு வருவோம். வட மாகாண மக்களின் அத்தனை தேவைகளையும் தீர்ப்பதற்கு உங்களுக்கு வலதுகரமாக நாங்கள் நிற்போம். எதற்கும் நீங்கள் யோசிக்க வேண்டாம்’ வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் தேவைகளை தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.  

ஐனாதிபதியின் செயலாளர் எனக்கு கூறிய முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால், வட மாகாணத்தில் மட்டுமல்ல எந்த மாகாணத்திலும் இருக்கின்ற முதலாவது விடயம், வைத்தியசாலைகளின் தேவை. இரண்டாவது கல்வித்துறையில் காணப்படுகின்ற தேவைகள், அடுத்ததாக இங்கு காணப்படுகின்ற உட்கட்டமைப்பு வசதிகள், மக்களுக்கான தொழில் வாய்ப்புக்கள், விவசாய வசதிகள் போன்றவையே. இவற்றை உடனடியாகச் செய்து கொடுக்கும் படியே எனக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றார்.  

அதற்கான வேலைத் திட்டங்களை நிச்சயமாக விரைவாக ஆரம்பிப்பதற்கு அதிகாரிகளுக்கு நான் உறுதுணையாக இருப்பேன். அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் முரண்பட்ட கருத்துக்களுக்கு அப்பால் இன, மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால், ஒரு ஆளுநராக மட்டுமல்ல உங்களுடைய இந்த மாவட்டத்தின், மாகாணத்தின் ஒருவராக இந்த திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறேன்.  

குறிப்பாக அவைத் தலைவர் சரியாக என்னுடைய பூர்வீகத்தை இனங்காட்டினார். நான் யாழ்ப்பாண மாவட்டத்திலே இளவாலை என்ற கிராமத்திலே சொந்த இடமாகக் கொண்டவள். நான் அங்கு பிறந்து வளர்ந்த பின்னர் என்னுடைய பெற்றோரின் தொழில் நிமித்தம் பல்வேறு இடங்களுக்கும் சென்றாலும் யாழ். பல்கலைக்கழகத்தில் படித்து நிர்வாக சேவையில் இணைந்து கொண்டேன்.   ஆனால் என்னுடைய சேவைக்காலத்தில் என்னுடைய சொந்த மாவட்டம் அதாவது நான் பிறந்த மாவட்டத்திலே சேவையாற்றுகின்ற சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. அது எனக்கு ஒரு குறையாகவே இருந்தது. ஆனால் இன்று தான்  உங்களுக்காக  சேவையாற்றுகின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதுவும் இந்த மாகாணத்தின் ஆளுநராகவே நான் இங்கு வந்திருக்கின்றேன்.  

உங்களுக்கான அத்தனை விடயங்களையும் ஆராய்ந்து பார்த்து அவற்றைப் பற்றி  ஐனாதிபதி செயலகத்துடன் கலந்துரையாடி அவற்றைத் தீர்க்க   நான் நிச்சயமாக முயற்சி செய்வேன். உங்களுக்கும் ஐனாதிபதி செயலகத்துக்கும் வட மாகாண மக்களுக்குமான இணைப்பு பாலமாக ஆளுநர் செயலகம் செயற்படும் என்ற செய்தியை கூறிக்கொள்ளவும் விரும்புகிறேன்.  

நிச்சயமாக வடக்கு மாகாணத்தில் எங்களுடைய ஆதரவுக் கரம் உங்களோடு இருக்குமென அங்கிருக்கின்ற அத்தனை உத்தியோகத்தர்களும் கூறினர். பெரும்பான்மை அரச அதிகாரிகள் மிகக் கவலையோடு இருக்கிறார்கள். இந்த மக்களுக்குத் தேவையானவற்றை நாங்கள் செய்து கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். அழுத்தங்கள் விமர்சனங்கள் அப்பால் முரண்பாடுகளுக்கு அப்பால் நீங்கள் அனைவரும் என்னோடு இணைந்து செயற்படுவீர்கள் என இங்கு உறுதியளித்திருக்கின்றீர்கள்.

அதைத் தான் நானும் எதிர்பார்க்கின்றேன். உள்ளங்களிலே இருக்கின்ற அழுத்தங்கள், குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு இதயசுத்தியோடும் திறந்த மனத்தோடும் குறைகள், தவறுகள் இருந்தால் நேரடியாக சுட்டிக் காட்டுகின்றவர்களாக என்னோடு இணையுமாறும் கேட்டுக் கொள்கின்றேன். நான் இங்கு வந்திருப்பது எவரையும் குறை கூறுவதற்காக அல்ல. எவரையும் எனக்காக மாற்றிக் கொள்வதற்குமல்ல. எவரையும் விமர்சிப்பதற்குமல்ல. எவரையும் தள்ளி வைப்பதற்குமல்ல. எனவே இந்த மாகாணத்திற்குச் சேவை செய்வதற்காகத் தான் நான் வந்திருக்கின்றேன். உங்களுடைய மனங்களிலே நம்பிக்கை இருக்க வேண்டும்.  

ஏனென்றால் என்னுடைய பிள்ளைகள் கொழும்பிலே படித்துக் கொண்டிருக்கின்றார்கள். கொழும்பிலே வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். எனது வயதான தாய் என்னோடு இருக்கின்றார். இத்தனைக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே நான் இந்த பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

எனவே உங்களது ஆலோசனைகளும் அறிவுரைகளும் உங்களது ஆதரவும் எனக்கு நிச்சயமாகத் தேவை. நிச்சயமாக இந்த மண்ணை நான் நேசிக்கின்றேன். முழுமையாக நேசிக்கின்றேன்.

என்னுடைய பெற்றோர்கள்,​ெபற்றோரின் பெற்றறோர்கள் என்னுடைய உறவினர்கள் இந்த மண்ணிற்காக நிறையப் போராடியிருக்கின்றார்கள். எனவே அவற்றுக்காக அவர்களுடைய அந்தத் தியாகங்களுக்கு தலை வணங்கி நிச்சயமாக இந்த மண்ணிற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு முயற்சிப்பேன்.   இந்த உறவுப் பாலத்தை பலமாகப் பிடித்துக் கொண்டு முப்பது வருட யுத்தத்தில் நாங்கள் இழந்து போனவற்றையும் கடந்த காலங்களில் நாங்கள் அடைந்து கொள்ள முடியாதவற்றையும் பெற்றுக் கொள்வதற்கு இதையொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அந்தச் சந்தர்ப்பத்தை தான் ஐனாதிபதி இப்பொது உங்களுக்கு ஏற்படுத்தி தந்திருக்கின்றார்.  இந்த நியமனம் இவ்வளவு காலம் தாமதித்து இவ்வளவு முயற்சிக்கு பின்னால் செய்யப்பட்டிருக்கின்றதென்றால் அதில் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே அனைத்து விடயங்களிலும் உங்கள் ஆதரவு எனக்குத் தேவை. பாராளுமன்ற உறுப்பினர்களே அரசியல் தலைவர்களே அரச அதிகாரிகளே உங்களுடைய ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன் என்றார்.  

பருத்தித்துறை விசேட நிருபர்    

Comments