சாணக்கியத்துடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும் | தினகரன் வாரமஞ்சரி

சாணக்கியத்துடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும்

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதைத் தொடர்ந்து நாட்டில் முன்னெடுத்து வரும் மக்கள்நல திட்டங்கள் தற்போதைய அரசியல் நிலை, முஸ்லிம்களின் வகிபாகம் என்பன தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உதவி பொதுச்செயலாளரும் சர்வமத அமைப்பின் அங்கத்தவருமான தேசமான்ய மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் அளித்த விசேட பேட்டி.

கேள்வி: கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆணையைப் பெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார். அது தொடர்பில் சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?  

பதில்: இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு ஜனநாயக நாடாகும். இந்நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராகவும் தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினராகவும் வாழ்ந்து வருகின்றனர். என்றாலும் இந்நாட்டின் தலைமைப் பதவியான ஜனாதிபதி பதவிக்கு சிறுபான்மை இனத்திலிருந்து ஒருவர் தெரிவாவது சாத்தியமற்றதாகும். அந்த உயர் பதவிக்கு பெரும்பான்மை சமூகத்திலிருந்துதான் ஜனாதிபதி தெரிவாக முடியும். அவ்வாறு தெரிவாகும் ஜனாதிபதி இந்நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் ஜனாதிபதியாவார். அவருக்கு வாக்களித்தவர்களுக்கு மாத்திரமல்லாமல் வாக்களிக்காதவர்களுக்கும் அவர்தான் ஜனாதிபதி. இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியேற்கும் உத்தியோகபூர்வ வைபவத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார். அதற்கேற்ப அவர் பதவிக்கு வந்த முதல் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள், செயற்பாடுகள் அமைந்திருப்பதை வெளிப்படையாக காண முடிகின்றது.  

அதேநேரம், தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நோக்கப்பட்ட விதம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை அவரது செயற்பாடுகள் வெளிப்படுத்தி உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அவர் ஏற்கனவே இந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றினார். அச்சமயம் அவர் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவைகள் மக்கள் மனங்களில் அவருக்கு தனி இடத்தைப் பெற்றுக்கொடுத்து இருக்கின்றன. அதுவே அவரை நாட்டின் தலைமைப் பதவிக்கும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.  

ஏற்கனவே, இந்நாட்டில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களிடம் காணப்படாத பல விசேட அம்சங்கள் இவரிடம் காணப்படுகின்றன. தனக்கான ஒரு தனிவழியை வகுத்து நாட்டின் எதிர்கால சுபீட்சம், பொருளாதார அபிவிருத்தி, கொழும்பு உள்ளிட்ட நாட்டிலுள்ள எல்லா நகர்களதும் உட்கட்டமைப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும்? சுற்றுச்சூழலை மேம்படுது்துவதோடு ஆரோக்கியமான மக்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள், அதற்கான வசதிகளை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும்? இனங்களுக்கு மத்தியில் சகவாழ்வு, சமாதானம் நல்லிணக்கம் என்பன எவ்வாறு நிலைபேறானதாக கட்டியெழுப்பப்பட வேண்டும்? ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளை எவ்வாறு ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட அனைத்து விடங்களையும் தூரநோக்கோடு சிந்தித்து நடைமுறைக்கு சாத்தியமான முறையில் அவற்றை ஆய்வுகளுக்கு உட்படுத்தி அவற்றைந முன்வைத்துத்தான் அவர் தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார். அதனால் நாட்டின் பயணப்பாதையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமைவார். 

கேள்வி: ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி தொடர்பில் பலவித கருத்துக்கள் கூறப்பட்டனவே. அக்கருத்துக்கள் குறித்து சமய அறிஞர் ஒருவர் என்ற வகையில் உங்களது கருத்து என்ன? 

பதில்: பொதுவாக உலகில் நடப்பவை அனைத்தும் அல்லாஹ்வின் நிர்ணயம், விதியின் அடிப்படையில்தான் இடம்பெறுகின்றது. இதுதான், முஸ்லிம்களின் நம்பிக்கை. உலகில் மறைவான அறிவு ஞானம் எவருக்கும் வழங்கப்படவில்லை. நாம் ஒன்றை நல்லதாக நினைப்போம். அது தீயதாக அமையும். நாம் தீயதாக நினைத்தவை நல்லவையாக அமையும். அல்லாஹ் அறிந்தவனாவான். மேலும் நீங்களோ அறிய மாட்டீர்கள். (அல் குர்அன் 2:216)

இதுதான் அல்குர்ஆன் கூறும் உண்மை. அந்த வகையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும், தேர்தல் தினத்தன்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் தொழுது, பிரார்த்தனைகள் செய்து நாட்டுக்கு நல்ல ஆட்சியாளரைத் தா என்று தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கோரினர். தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான மக்களின் தெரிவு ஜனாதிபதியாக கோட்டாபய உள்ளார். அது இறைவனின் நிர்ணயமாகவும் பிரார்த்தனைக்கான அங்கீகாரமாகவும் இருக்கும். 

எல்லா அரசாங்கங்களிலும் நன்மை, தீமைகள் நடைபெற்று வந்ததை கடந்த காலங்களில் நாம் அவதானித்துள்ளோம். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகைக்குப் பின்னரான அவரது செயற்பாடுகள் பல விடயங்களை தெளிவாக எடுத்துக்கூறக்கூடியனவாக உள்ளது.  

அதனால் முஸ்லிம்களாகிய எமது கடமை நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து செயற்படுவதோடு இந்நாட்டை பொருளாதாரத் துறை உட்பட சகல வழிகளிலும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பை நல்குவதாகும். அதேநேரம் ஏனைய இன மக்களுடன் சகோதர மனப்பான்மையோடு ஒற்றுமையாகவும் சகவாழ்வோடும் தனித்துவ அடையாளங்களை பேணியபடி இலங்கையர் என்ற அடிப்படையில் வாழ வேண்டும். இவற்றினூடாக சிறந்த பிரஜைகளாக திகழ்வதே இலக்காக இருக்க வேண்டும்.  

கேள்வி: இலங்கையை சிங்கப்பூர் போன்ற ஒரு நாடாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொண்டிருக்கிறார். அது தொடர்பில் கூறுவதாயின்? 

பதில்: இது பெரிதும் வரவேற்கக்கூடிய விடயமாகும். இந்நாடு சுதந்திரமடைந்து 70வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னும் வளர்முக நாடாகவும் மூன்றாம் மண்டல நாடாகவும் தான் அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனால் நாம் 1948ல் சுதந்திரமடையும்போது ஜப்பானுக்கு மாத்திரமே இரண்டாவது நாடாக இருந்தோம். ஆனால் அன்று எமக்குப் பின்னால் இருந்த பல நாடுகள் இன்று எம்மையும் தாண்டி பலமடங்கு முன்னேறிச் சென்றுவிட்டன. எனினும் நாம் இன்னும் மூன்றாம் மண்டல நாடாகவே இருக்கின்றோம். இதற்கான அடிப்படைக் காரணம் சரியான அரசியல் தலைமை இந்நாட்டிற்குக் கிடைக்கப் பெறாமையேயாகும். ஆனால் அக் குறைபாட்டை நிவர்த்தி செய்து நீக்கி நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இட்டுச் செல்லுவார் என்ற நம்பிக்கை எல்லா நாட்டு மக்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை இன, மத, கட்சி, அரசியல் பேதங்களுக்கு அப்பால் மக்கள் வரவேற்று பாராட்டுகின்றனர்.  

சிங்கப்பூரை எடுத்துக்கொண்டால் அங்கு எல்லா இன, மத மக்களுக்கும் முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மிக உயர்ந்த நிலையிலுள்ளது. குறிப்பாக இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம், சகவாழ்வை ஏற்படுத்தவென நல்லிணக்க மையங்கள் (harmony centers) அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான ஏற்பாடுகள் இலங்கைக்கும் உகந்தது என்பதுதான் ஜனாதிபதியின் கருத்தாக இருப்பதாக அறிய முடிகிறது. ஜம்மியத்துல் உலமாவின் தலைமையகத்தில் அரசாங்க உயரதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கேள்வி: ஜனாதிபதி பதவிக்கு வந்தது முதல் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து கூறுவதாயின்? 

பதில்: கொழும்பு மாநகரம் உட்பட நாட்டிலுள்ள நகரங்களை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இது எல்லா மக்களாலும் வரவேற்கப்படுகின்றது. அதேநேரம் சகல அரசாங்க நிறுவனங்களிலும் ஜனாதிபதியினதோ, பிரதமரினதோ புகைப்படங்களை காட்சிப்படுத்தாது தவிர்த்தமை வீணான செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக அமைந்திருந்தது.

அத்தோடு அமைச்சர்களின் உத்தியோகபூர்வ ஆளணியில் குடும்ப அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளக்கூடாது என்ற ஆலோசனையும் பெரிதும் வரவேற்ககக்கூடி யதாகும்.  

நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான திட்டங்களை வகுத்து செயற்படுகின்றார். மக்களின் நன்மை கருதி பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். இதன் ஓரங்கமாக நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்திற்கு நேரில் விஜயம் செய்து அரிசி உள்ளிட்ட பொருட்களின் விலைகளை கேட்டறிந்ததோடு அரிசிக்கான உச்ச சில்லறை விலையாக 98ரூபாவையும் அறிவித்தார். இந்த அறிவிப்பையும் மீறி அரிசியை விற்பனை செய்த பல வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் சிறிய மற்றும் நடுத்தரக் கடன்களை அறவிடக்கூடாது என அறிவுறுத்தலும் வழங்கியுள்ளார். இவை அனைத்தும் மக்களுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் பெரும் ஆறுதலாகும்.  

மேலும் வாகனங்களை தரிப்பிடங்களில் நிறுத்தாது கண்ட கண்ட இடங்களில் தரித்து நிறுத்துவதால் மக்கள் பலவிதமான அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதனைத் தவிர்ப்பதற்கும் வேலைத்திட்டங்கள் மும்மொழியப்பட்டுள்ளன. 

கேள்வி: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதியான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பதவிக்கு வந்த அரசாங்கம் மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கும் சாதாரண மக்களும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு கட்டணங்களை குறைப்பதற்கும் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? 

பதில்: உண்மையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்களோடு மாத்திரமல்லாமல் உலக முஸ்லிம்களோடும் முஸ்லிம் நாடுகளுடனும் மிகவும் நெருக்கமான உறவைப் பேணிவருபவராவார். குறிப்பாக நாட்டை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள பலஸ்தீன மக்களுக்காக நீண்டகாலமாக குரல் கொடுத்து வரும் இவர், அம்மக்களுக்கான இலங்கை - பலஸ்தீன் நட்புற அமைப்பின் தலைமையை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வகித்து பணியாற்றியுள்ளார். இவர் பலஸ்தீன மக்களுக்காக ஆற்றியுள்ள சேவைகளைக் கெளரவிக்கும் வகையில் இவரது பெயர் பலஸ்தீனில் வீதியொன்றுக்கும் சூட்டப்பட்டிருக்கின்றது.  

இதேநேரம், இம்முறை ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகளையும் தமது மேற்பார்வையின் கீழ் கொண்டு வந்துள்ளார். குறைபாடுகள் இன்றி ஏமாற்றங்களைத் தவிர்த்து நல்ல முறையில் ஹாஜிகள் ஹஜ் செய்ய ஏற்பாடு செய்து கொடுப்பதே இதன் சிறந்த எதிர்ப்பார்ப்பாகும்.  

மேலும், தமது பதவிக் காலத்தில் மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட பின்னர் கடந்த ஆட்சிக்காலத்தில் எவருக்கும் இந்நியமனம் வழங்கப்படவில்லை. அதனால் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் புதிதாக மெளலவி ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதேநேரம், இலங்கை வானொலியில் ஐந்து நேரமும் அதான் ஒலிபரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவரும் அவரேயாவார். அத்தோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையகம் தற்போது அமைந்துள்ள இடத்திற்கான காணியையும் அவரே பெற்றுக்கொடுத்தவராவார்.  

அத்தோடு வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழவும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அகதி முகாம்களில் அல்லல்பட்ட முஸ்லிம்கள் திரும்பவும் தமது சொந்த பிரதேசங்களுக்கு செல்லவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவரும்் அவரேயாவார். இவ்வாறு இன்னும் பல சேவைகளை முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்றியுள்ள அவருக்கு முஸ்லிம் சமூகத்தினரின் நன்றிகள் உரித்தாகட்டும்.  

அதேநேரம் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15வருடங்கள் கடந்தும் இன்னும் பல குடும்பங்கள் வீடுகள் இன்றி பலவிதமான அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்த வண்ணமுள்ளனர். ஆனால் சவூதி அரேபிய அரசினால் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் அமைக்கப்பட்டு இன்று வரையும் மக்களுக்கு வழங்கப்படாதுள்ள 500வீடுகளையும் இந்த அரசு உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.  

கேள்வி: நிறைவாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்? 

பதில்: குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் சாணக்கியத்துடன் சமூக நலன்களை கருத்தில் கொண்டு நடந்து கொள்வது காலத்தின் தேவையாகும். அதிலும் இந்நாட்டில் சிறுபான்மையினர் என்பதை மறந்தும் முஸ்லிம்கள் செயற்படவும் கூடாது. அதனால் முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தை பிரதான கட்சிகளில் உறுதிப்படுத்திக்கொள்வது இன்றியமையாததாகும். முஸ்லிம்கள் தம் வாக்குகளை அலட்சியப்போக்கின்றி அளிப்பது கட்டாயமாகும். இஸ்லாத்திலிருந்து அரசியலைப் பிரித்து நோக்க முடியாது. அதற்கமைய எமது உரிமைகளை நாம் பயன்படுத்த வேண்டும். அதனை வீணாக்குவது அல்லது வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். வாக்களிப்பதே தமது தேவைகளைனயும் சேவைகளையும் பெற்றுக்கொள்ள உகந்ததாக அமையும். 

இறுதியாக ஜனாதிபதி சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்பி இன, மத பேதங்களுக்கு அப்பால் சிறந்த சூழலையும் சட்டம் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தி நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்வார். அதற்கு சகலரதும் ஒத்துழைப்பும் பக்கபலமாக அமையும் என நம்புகின்றேன்.

நேர்காணல்: மர்லின் மரிக்கார்

Comments