ஐ.தே.மு தலைவர் பதவி சஜித் பிரேமதாசவுக்கு | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.மு தலைவர் பதவி சஜித் பிரேமதாசவுக்கு

ஐக்கிய தேசிய முன்னணி சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக அந்த முன்னணி வட்டாரம் தெரிவித்தது. நேற்று முன்தினம் மாலை ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்கிவருவதால், அதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. பொறுப்புமிக்க தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசிய முன்னணி இயங்க வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவாகியுள்ள உட்பூசல் இன்னமும் இழுபறி நிலையில் தொடர்வதால் ஐக்கிய தேசிய முன்னணியால் சீராக இயங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டி விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். 

இதன்போது இங்கு கருத்துத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியகட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து கூடிய விரைவில் ஆராயப்பட்டு முடிவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சி இணைத்தும் ஒன்றுபட்டு தேர்தலுக்குத் தயாராகுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இதன்போது முன்னணி யாருடைய தலைமையில் இயங்குவது என்ற கேள்வி எடுக்கப்பட்டபோது முன்னணியில் உள்ள பலரதும் விருப்பப்படி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் தேர்தலுக்கு முகம் கொடுப்பது பயனுள்ளதாக அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த முடிவை ஐ.தே.கதலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக்கொண்டதாகவும் அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றிப்பாதையில் பிரவேசிக்க வேண்டுமென ரணில் ஆலோசனை வழங்கியதாகவும் முன்னணி வட்டாரம் தெரிவித்தது. 

ஐக்கிய தேசிய கட்சியின் நிருவாக மறுசீரமைப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவெடுக்கப்படுமெனவும், கட்சியின் மறுசீரமைப்பு தாமதம் தேர்தலுக்குத் தடையாக இருக்கக்கூடாது எனத் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, உரிய நேரத்தில் சரியான தீர்வு எட்டப்பட்டதும் கட்சித் தலைமைத்துவத்தை திறமையுள்ள இளம் தலைவரிடம் ஒப்படைத்து விட்டுத் தான் ஒதுங்கிக் கொள்ள விருப்பதாகவும் தனது இந்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாதெனவும் தெரிவித்துள்ளார். 

தான் அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டிய நேரம் வந்துள்ளதை உணர்வதாகவும் கட்சியை திறமை மிக்க இளம் தலைவர்களிடம் ஒப்படைப்பதே தனது நிலைப்பாடு என்பதையும் ரணில் விக்கிரமசிங்க இங்கு வலியுறுத்திக் கூறியுள்ளார்.

எம்.ஏ.எம். நிலாம்  

Comments