சவூதி அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை சாதகம் | தினகரன் வாரமஞ்சரி

சவூதி அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை சாதகம்

இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காக செல்லவுள்ள ஹாஜிகளுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை பெற்றுக்கொடுப்பதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பாகுமென இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார். ‘தினகரன் வாரமஞ்சரிக்கு’ அவர் வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவருடைய முழுமையான நேர்காணல் வருமாறு:

கேள்வி : 2020ம் வருடத்திற்கான ஹஜ் குழுவின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உங்களை தெரிவு செய்துள்ளார். இதற்கான காரணமென்ன?  

பதில் : இந்த பொறுப்பு நான் எதிர்பார்த்த ஒன்றல்ல. இறைவனின் நாட்டம் என்றே நான் கூறுகிறேன். உண்மையில் இந்தப் பொறுப்பு இலேசானதொன்றல்ல. இதற்கு மிகவும் பொறுமை அவசியம். பிரதமரின் வேண்டுகோளின் பேரிலும் சமூகத்தின் தேவை கருதியும் இப்பொறுப்பை நான் ஏற்றுள்ளேன்.  

கேள்வி : இக்குழுவில் எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்?  

பதில் : நான் தலைவராகவும், மொஹமட் அஹ்கம் உவைஸ், நகீப் மௌலானா, புவாத் ஹாஜியார், அப்துல் ஸத்தார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

கேள்வி : இவ்வருடத்திற்கான ஹஜ் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக நீங்களும் சக அங்கத்தவர்களும் சவூதி அரேபியாவிற்கு சென்று பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளீர்கள். அது சாதகமாக இருந்ததா?  

பதில் : ஆம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் எமது குழு அண்மையில் சவூதி சென்று ஹஜ் விவகாரங்களோடு தொடர்பான அனைத்து தரப்பினர்களையும் உத்தியோகபூர்வமாக சந்தித்தோம்.  

முதலில் சவூதி அரேபியா சார்பில் ஹஜ் உம்ராவுக்கு பொறுப்பான பிரதியமைச்சர் கலாநிதி அப்துல் சுலைமான் மாசத்துடன் விசேட சந்திப்பை மேற்கொண்டோம்.  

தற்போதைய அரசாங்கம் தொடர்பில் நிறைய விடயங்களை அவரிடம் எமது குழுவினர் எடுத்துக்கூறினர். மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பற்றி நிறைய எதிர்பார்ப்புகளுடன் அவர் இருக்கின்றாரென்பது அவருடனான பேச்சுவார்த்தை மூலம் தெளிவானது.  

கேள்வி : மேற்படி பிரதியமைச்சருடன் ஏதாவது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதா?  

பதில் : ஆம், கைச்சாத்திட்டோம். அதாவது, சவூதி அரேபிய அரசாங்கம் இதுவரை இலங்கைக்கு 2850 ஹஜ் கோட்டாக்களையே வழங்கி வந்தது. அல்லாஹ்வுடைய கிருபையினால் இம்முறை 3500 கோட்டாக்களை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எமது குழுவின் முதல் வெற்றியாகவே நான் கருதுகின்றேன். இதற்கான ஒப்பந்தத்தில் உத்தியோகப் பூர்வமாக நாம் கைச்சாத்திட்டுள்ளோம். மேலும் 1500 ஹஜ் கோட்டாக்களை அதிகரித்து வழங்குமாறு ஹஜ் விவகார அமைச்சரிடம் கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம். அதுவும் இன்ஷா அல்லாஹ் கிடைக்கும் என்பது எமது எதிர்பார்ப்பு.  

கேள்வி : ஹஜ் கட்டணம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதா?  

பதில் : ஹஜ் கட்டணம் தொடர்பிலும் விசேடமாக நாம் சவூதி அரேபிய இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.  

ஹஜ் கட்டணத்தை குறைத்து சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகவுள்ளார். ஹஜ் என்பது ஒரு சமூக கடமை. இதனை வியாபாரமாக மேற்கொள்ள ஒருபோதும் இடமளிக்க வேண்டாமென்பதில் பிரதமர் உறுதியாகவுள்ளார். அதேபோன்று விமான கட்டணம் தொடர்பிலும் சவூதி எயார்லைன்ஸ் குழுவினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். அவர்களும் விசேட சலுகைகளை வழங்குவதாக எம்மிடம் உறுதியளித்துள்ளனர்.  

கேள்வி : இலங்கை ஹஜிகளுக்கான தங்குமிட வசதி வாய்ப்பு குறித்து?  

பதில் : பெரும்பாலும் இம்முறை சவூதி அரசும் இலங்கை அரசும் எவ்வித ஹஜ் முகவர்களின் ஒத்துழைப்புமின்றி ஹாஜிகளை வழிநடாத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எம்மை வலியுறுத்தியுள்ளார். காரணம் சில முகவர்கள் கூடுதல் கட்டணங்களை பெற்று குறைந்த சேவைகளையே வழங்கி வருகின்றதென்ற குற்றச்சாட்டு இருக்கிறது.  

மேலும் மினா, முஸ்தலிபா, அரபா போன்ற இடங்களில் குறைந்த கட்டணத்தில் ஹாஜிகளுக்கு கூடாரங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.  

கேள்வி : பலமுறை ஹஜ் செய்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டாமென பிரதமர் தெரிவித்துள்ளதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையா?  

பதில் : ஆம். அதாவது பலமுறை ஹஜ் செய்பவர்களால் புதிதாக செல்லவிருப்பவர்களுக்கு வாய்ப்பு குறைவு. அதனால் புதிதாக ஹஜ் கடமையை நிறைவேற்ற முன்வந்துள்ளோருக்கு வாய்ப்பளிக்குமாறே பிரதமர் எம்மை கேட்டுள்ளார்.  

மேலும், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் எவ்வித முகவர்களின் துணையுமின்றி இரு அரசாங்கங்களுமே ஹஜ் கடமையை குறைந்த செலவில் திருப்தியான சேவைகளுடன் மேற்கொண்டு வர முடியுமென்றால் ஏன் எமக்கு அதனை திறம்பட மேற்கொள்ள முடியாது என பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார். இது விடயமாகவும் நாம் ஆராய்ந்து வருகிறோம்.  

கேள்வி : கடந்த வருடத்தில் முஸ்லிம் சமய கலாசார அமைச்சில் பதிவுசெய்யப்பட்டுள்ள அடிப்படையிலா இம்முறை ஹஜ் வாய்ப்புகளை வழங்கவுள்ளீர்கள்?  

பதில் : ஆம், அதேமுறையைத்தான் நாம் இம்முறை பின்பற்றவுள்ளோம். அதிலும் விசேடம் என்னவென்றால் எந்த வேறுபாடும் நாம் காட்டமாட்டோம். அதாவது, கட்சி, குடும்பம், பிரதேசம், எந்த வேறுபாடுமின்றி அல்லாஹ்வுக்காக இப்பணியை தூய்மையாக முன்னெடுக்கவுள்ளோம். இதில் எமது குழு உறுதியாகவுள்ளது.  

கேள்வி : ஹஜ் கோட்டாக்கள் பகிர்ந்தளிப்பதில் கடந்த நல்லாட்சியில் குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறதே இது உண்மையா?  

பதில் : எமக்கு கிடைத்த தகவலின்படி இது உண்மையாக இருக்கலாம். காரணம் கடந்த ஆட்சியில் இது ஒரு அமைச்சரின் கீழ் தான் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதனால் அவர் தனது நண்பர் குடும்பங்களையே இதற்கு உள்வாங்கியதாக இன்றும் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.  

என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு இஸ்லாமிய கடமை. இதில் நாம் ஏன் ஹராத்தை சேர்க்க வேண்டும்.  

கேள்வி : உங்கள் குழு சவூதிக்கு பேச்சுவார்த்தைக்காக செல்வதற்கும் அரசாங்கமா பணம் செலவளித்தார்கள்?  

பதில் : இல்லை. நாம் ஒவ்வொருவரும் சொந்த பணத்தில் தான் சென்று வந்தோம்.  

கேள்வி : ஹஜ் முகவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா?  

பதில் : ஹஜ் குழுவின் சவூதி விஜயம் தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து முழுமையான அறிக்கையொன்றை கையளிக்கவுள்ளோம். அதாவது ஹஜ் கட்டணம், தங்குமிட வசதிகள் மற்றும் இன்னோரன்ன விடயங்கள் தொடர்பில் பிரதமருடன் ஆராய்ந்த பின்னரே எமது குழு ஹஜ் முகவர்களை சந்திக்கவுள்ளோம்.  

இறுதியாக எமது குழுவினரின் சவூதி விஜயத்தின் போது சகல வகையிலும் உதவியாகவிருந்த சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் உட்பட அதிகாரிகள், ஜித்தாவுக்கான சௌன்சியூலர் ஜெனரல், மற்றும் அப்துல்காதர் மசூர் மௌலானா ஆகியோர்களுக்கும் ஹஜ் குழு தலைவர் மர்ஜான் பளீல் – நன்றி தெரிவித்துள்ளார்.

நேர்காணல்: அஜ்வத் பாஸி

Comments