திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்...! | தினகரன் வாரமஞ்சரி

திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்...!

"யாழ்ப்பாணம் எண்டால் கற்றோர் நிறைந்த ஊரென்றுதான் பேர் இருந்தது. இப்ப பாத்தீங்களெண்டால், கள்ளங்கள் நிறைந்த ஊராகவும் தினமும் வன்முறைகள் இடம்பெறும் ஊராகவும் மாறிப்போய்விட்டது" என்று கடிந்துகொள்கிறார் நண்பர். 

அப்பிடிச் சொல்லேலாது! எல்லாம் கொழும்பிலிருந்து போற ஆக்கள் செய்யிற வேலை என்று சொன்னால், "அப்ப வாள் வெட்டைக் கொழும்பிலி ருந்து போறவையா செய்யினம்? பணம், நகைகளையும் அவையளா கொள்ளை அடிக்கினம்? விசர்க்கதை" என்று கோபப்படுகிறார். 

அவரின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இல்லை! கல்விக்குப் பேர் போன இடத்திலை இப்ப நடக்கிறதெல்லாம் பெரும் அநியாயங்கள். தமிழ்ப் பெடியங்களே எல்லாத்தையும் செய்யிறாங்கள்! தமிழ்ச் சமூகத்திலை அக்கறையிருந்தால், பற்றிருந்தால் இப்பிடிச் செய்வாங்களே? எங்குப் பார்த்தாலும் கொலை, களவு, கொள்ளை, வாள்வெட்டு! எங்காவது ஒரு மூலையிலை ஏதாவது ஒரு சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்குது. குழப்படி செய்யிற ஆக்களைப் பொலிசும் பிடிச்சுக்ெகாண்டுதான் போகுது. ஆனால், கொஞ்ச காலத்திலை வந்து திரும்பவும் புதுக்ெகாள்ளையிலையும் கொலையிலையும் அவங்கள்தான் ஈடுபடுறாங்கள் என்கிறார் நண்பர் சற்றுக் கோபமாக! 

உண்மையைச் சொன்னால், ரெண்டு வாரத்துக்கு முந்தி, கொழும்பிலை இருந்து யாழ்ப்பாணத்திற்குப் போன நண்பர் ஒருவர் 47 பவுண் நகைகளைப் பறிகொடுத்துட்டு வந்திருக்கிறார். சாவகச்சேரியிலை நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது இந்தக் கொள்ளை நடந்திருக்குது. 

புத்தாண்டு விடுமுறையைக் கழிக்கிறதுக்காக, மனைவி, பிள்ளைகள் இருவரோடும் அவர் சாவகச்சேரி நுணாவிலுக்குச் சென்று தங்கியிருக்கிறார். சென்ற முதல் நாள் அதிகாலை ஒரு மணியளவில் திடீரென வீட்டுக்குள் புகுந்த இரண்டு தம்பிமார், கொழும்பிலிருந்து சென்ற நண்பரை இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறார்கள். அவர் அலறியடித்ததும் சுதாகரித்துக்ெகாண்ட அவரது பெண் பிள்ளைகள் கதவைச் சாத்தித் தாளிட்டுக்ெகாண்டுள்ளார்கள். நண்பரை மீண்டும் வாளால் வெட்டியதைக் கண்ட அவரது மனைவி, "கணவரை ஒன்றும் செய்துவிட வேண்டாம், நகைகளைத் தந்துவிடுகிறேன்" என்று மன்றாடியிருக்கிறார். அவரது தாலிக்ெகாடி உள்ளிட்ட அனைத்து நகைகளையும் பெற்றுக்ெகாண்ட தமிழ் கொள்ளைத்தம்பிமார், அந்த வீட்டிலிருந்த பாட்டியம்மாவினது நகைகளையும் கழற்றி வாங்கிக்ெகாண்டிருக்கிறார்கள். இப்போது அவர்களுக்குத் தேவை வீட்டுக்குள் தாளிட்டுக்ெகாண்டிருக்கும் பெண் பிள்ளைகளிடம் உள்ள நகைகளையும் பெற்றுவிட வேண்டும் என்பதுதான். பெரும் முயற்சிக்குப் பின்னர், கதவைத் திறந்துகொண்ட கொள்ளைத் தம்பிமார், அந்தப் பிள்ளைகளின் நகைகளையும் அச்சுறுத்திப் பெற்றுக்ெகாண்டுள்ளார்கள். சுமார் பதினைந்து நிமிடம் இந்தக் களேபரம் நடந்திருக்கிறது. அதன் பின்னர்தான் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வருவதற்கும் தம்பிமார் கம்பி நீட்டிவிட்டார்கள். 

சம்பவம் நடந்த இடத்திற்குப் பக்கத்தில் உள்ள தேவாலயத்தின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரும் இருக்கிறார்கள். சற்று அண்மித்ததாகப் பொலிஸ் நிலையமும் உள்ளது. அப்பிடியிருந்தும் அந்தத் தம்பிமார் தப்பியோடிவிட்டார்கள். ஆனால், அவங்கள் வந்த மோட்டார் சைக்கிள மட்டும் விட்டிட்டுப் போய்ட்டாங்கள்.  

நண்பர் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் சில வீட்டுக்காணிகள் கிடக்குது. வளவிற்குள் படர்ந்த மரங்கள் இருக்குதேயொழிய பெரிதாக வீடுகள் இல்லை. அந்தக் காணி வழியாகத்தானாம் தம்பிமார் ஓடியிருக்கினம். பதினைஞ்சு இருபது நிமிடங்களுக்குள்ள நண்பரை சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்த்திருக்கிறார்கள். அவரைத் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய நண்பரின் மனைவிக்கும் காயம் என்பதால், அவங்களும் ஆஸ்பத்திரியிலை. ஆனால், தன்ரை பிள்ளைகளை முருகன் காப்பாற்றிவிட்டதாகச் சொல்கிறார் நண்பர். 

"எவ்வளவு ஆசையாய் யாழ்ப்பாணத்திற்குப் போனோம். ஆனால், அங்கு எங்கள் வாழ்க்ைகயே துலைஞ்சு போச்சு" என்கிறார் நண்பர். எல்லாம் 47 பவுண் தங்க நகைகள். இனி யாழ்ப்பாணத்துப் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டோம் என்கிறார்களாம் பிள்ளைகள்.  

நகையைப் பறிகொடுத்த அந்த நண்பர் சொல்கிறார். "எனக்கென்றால், யாழ்ப்பாணத்தில் நடப்பதெல்லாம் சந்தேகமாத்தான் கிடக்கு. எத்தினை நாளாக உது நடக்குது! சிறைக்குப் போய் வர்ற ஆக்களே திரும்பத் திரும்ப கொள்ளைகள்ல ஈடுபடுகிறாங்கள். பிள்ளைகள் பயந்து போய் இருக்கிறாங்கள். இரவிலை பயந்து ஒழும்புகிறார்கள். யாழ்ப்பாணத்திலை இப்பிடி நடக்குமென்று நினைச்சும் பார்க்ேகல்ல. எல்லாம் எங்கடை பெடியள் செய்யிற வேலைதான். ஒரு காலத்திலை பெடியள் என்றால் அப்பிடி ஒரு மதிப்பு! இப்ப, பொம்பிளை பிள்ளையள் வெளியிலை போய், வீட்டுக்கு வருமட்டும் ஒரே பதை பதைப்பா இருக்கு! இதுக்குப் புதிய அரசாங்கத்திலையாவது நிரந்தரமாத் தீர்வு வேணும். மக்களோடு மக்களாக நின்று பணியாற்றப்போவதாகச் சொல்லும் ஆளுநர் அம்மா, இதுபற்றிக் கவனமெடுத்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு போக வேண்டும்! அப்பத்தான் உதுக்ெகல்லாம் விடிவுகாலம் பிறக்கும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் நண்பர். 

ஆனால்,  

"சிந்தித்துப் பார்த்து செய்கையை

மாத்து  

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ  

தவறு, சிறுசாய் இருக்கையில்

திருத்திக்கோ  

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா

அது  

திரும்பவும் வராம பாத்துக்கோ..." என்று பட்டுக்ேகாட்டையார் சொல்லி வைச்சுப் போனதைத்தான் யாழ் தம்பிமாருக்குச் சொல்ல வேண்டியிருக்கு!  

"திட்டம் போட்டு திருடுற கூட்டம்  

திருடிக் கொண்டே இருக்குது...

அதை 

சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்  

தடுத்துக் கொண்டே இருக்குது...  

திருடராய் பார்த்து

திருந்தாவிட்டால்...  

திருட்டை ஒழிக்க முடியாது!  

திருடாதே! தம்பி திருடாதே! 

வேறொன்றும் சொல்வதற்கில்லை!   

Comments