உரிமைகளை கோருவது எதிர்ப்பு அரசியலா? | தினகரன் வாரமஞ்சரி

உரிமைகளை கோருவது எதிர்ப்பு அரசியலா?

தமிழ் மக்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளைக் கோருவது எதிர்ப்பு என்றால் நாங்கள் செய்வது எதிர்ப்பு அரசியல்தான் என்கிறார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். அவர் தினகரனுக்கு வழங்கிய செவ்வியில் தாங்கள் தான் ஒடுக்கப்படுகின்ற  இனத்தின் பிரதிநிதிகளாக இருப்பதாகச் சொல்கின்றார். அவரது நேர்காணல்...

கேள்வி: நாட்டில் புதிய அரசாங்கமொன்று வந்திருக்கின்ற இன்றைய சமகால நிலைமைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் - சமகால அரசியல் என்பது ஐனாதிபதித் தேர்தலுக்குப் பிற்பட்ட காலம். ஐனாதிபதித் தேர்தலுக்குப் பிற்பட்ட இந்தக் காலத்தில் தென்னிலங்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கைதுகள் நடக்கின்ற அதே நேரத்தில் அக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒரு பதற்றமான அல்லது முறுகலான நிலைமை இருக்கிறதை எங்களால் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

அதே போல தமிழ் மக்களுடைய விடயத்தில் கூட ஒரு நியாயமான தீர்வு கிடைப்பதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை. 13 ஆவது திருத்தத்தையே மறுதலிக்கின்ற நிலைமைகளும் இருக்கின்றன. இந்த நாட்டின் ஐனாதிபதி அவர் தான் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னிற்க வேண்டும். ஆகவே எங்களால் இயன்றளவிற்கு முயற்சிகளை எடுப்போம். கடந்த காலங்களில் பல கடினமான தலைவர்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

உதாரணத்திற்கு பண்டாரநாயக்காவை எடுத்தீர்களானால் அவர் 24 மணித்தியாலத்தில் சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தவர். பின்பு தந்தை செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி பண்டா_செல்வா-ஒப்பந்தத்தை எழுதியவர். இப்படியாக மாற்றங்கள் ஏற்படலாம். மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். ஆகவே அந்தப் பலத்தின் மூலம் தான் தொடர்ந்து எங்கள் நிலைப்பாடுகளை சரியான முறையில் எடுத்துச் செல்ல முடியுமென்று நான் நம்புகின்றேன்.

கேள்வி: தமிழ்த் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை அடைவதற்காக கடந்த அரசுடன் இணைந்து செயற்பட்டது போன்று இந்த அரசுடனும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கட்சிக்குள் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறதா?

புதில் - கடந்த அரசாங்கம் தமிழ் மக்களுடைய தீர்வு சம்பந்தமாக ஒரு அரசமைப்பு பேரவையை உருவாக்கி அதனூடாக தீர்வை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தது. ஆனால் அந்தப் பயணத்தில் வெற்றி கிட்டவில்லை என்பது அது வேறு விசயம். அல்லது அந்த பயணத்தில் கொடுக்கப்பட்ட இடைக்கால அறிக்கை கூட எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. என்பதும் வேறு விசயம்.

ஆனால் அவர்கள் தொடர்ந்தும் முயற்சியெடுத்து வந்தார்கள். அந்த முயற்சியின் அடிப்படையில் பயணம் நிறைவு பெற வேண்டும் அதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் பலமாக இருக்க வேண்டுமென்ற காரணத்தின் அடிப்படையில் தான் நாங்கள் எங்களுடைய ஆதரவைக் கொடுத்து வந்திருக்கிறோம். தொடர்ந்து ஆதரவைக் கொடுத்து வந்ததற்கு அது தான் மிக முக்கிய காரணம்.

ஆனால் எந்தவிதத்திலும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர முடியாது என்று இந்த அரசு இருக்குமென்றால் அதற்கு எந்தவிதத்திலும் நாங்கள் ஆதரவைக் கொடுக்க மாட்டோம். எங்களுடைய எதிர்ப்பை நாங்கள் தெரிவித்துக் கொண்டே இருப்போம்.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சி என்றால் ஆதரவு ஏனைய கட்சிகள் என்றால் எதிர்ப்பு என்பது போல கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?

பதில் - கூட்டமைப்பை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்து அமைத்த அந்த அரசு தான் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசியலமைப்பு பேரவையை உருவாக்கி நடவக்கைகளை எடுத்தது.

அதே போல இந்த அரசாங்கங்களும் அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பார்களானால் அவர்களுக்கும் நிச்சயமாக அந்த ஆதரவை நாங்கள் கொடுப்போம். அதாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வொன்றை ஏற்படுத்துகின்ற அந்த முயற்சிகளுக்கான ஆதரவை கொடுப்போம்.

கேள்வி: எதிர்ப்பு அரசியலையே கூட்டமைப்பு முன்னெடுக்கிறதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் - தமிழ் மக்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளைக் கோருவது எதிர்ப்பு என்றால் அது எதிர்ப்பு அரசியல்தான் . ஏனென்றால் நாங்கள் தான் ஒடுக்கப்படுகின்ற இனத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றோம்.

தங்களுடைய மக்களிற்கான உரிமைகளைக் கேட்பது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அல்லது அவர்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அல்லது தமிழின விடுதலைக்காக, காணாமல் போனவர்கள் சம்பந்தமாக, காணிகளை விடுவிப்பது சம்மந்தமாக கோருகின்றனர்.

ஆகவே அது எதிர்ப்பு அரசியல் என்றால் நாம் செய்வது எதிர்ப்பு அரசியல் தான். ஏனெனில் எங்கள் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கட்டாயம் நாங்கள் கோரத் தான் வேண்டும். அது தான் எங்களுடை எதிர்ப்பு அரசியல் . ஆனால் நாங்கள் மக்களுக்காக, மக்களுடைய பிரச்சினைகளைளத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு தான் இருப்போம்.

கேள்வி: தமிழ் மக்களுக்கான தீர்வொன்றை அடையமுடியுமென நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது இந்த அரசாங்கம் அத்தகைய தீர்வொன்றை ஏற்படுத்திக் கொடுக்குமா?

பதில் - இல்லை. தீர்வொன்று ஏற்படுமென நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அவர்கள் ஒரு நியாயமான தீர்வைத் தருவதாக இல்லை.

குறிப்பாக கடந்த அரசாங்கத்தின் ஆரம்பத்தில் அரசமைப்பு பேரவை ஆரம்பிக்கப்பட்ட போது கூட தீர்வு வருமென்று தனிப்பட்ட முறையில் நான் நம்பவில்லை.

ஆயினும் அந்த முயற்சியில் வரக் கூடிய பலாபலன்களை நாங்கள் படிப்படியாகத் தான் பார்க்க முடியும். அதே போல இந்த அரசாங்கமும் அதற்கான முயற்சிகளை எடுக்குமாக இருந்தால் ஆதரவைக் கொடுத்து அதற்கு செயற்பட வேண்டும். அதன் பின்னர் அதற்கான முடிவு எப்படி வருகின்றதென்பதை பின்பு பார்ப்போம்.

கேள்வி: தமிழ்க் கட்சிகள் ஒருமித்து செயற்பட வேண்டுமென்று கூட்டமைப்பே அழைப்பு விடுத்திருக்கின்ற நிலைமையில் கூட்டமைப்பிற்குள்ளேயே குழப்பங்கள் தோன்றியுள்ளனவே?

பதில் - எந்தவொரு கூட்டமைப்பிற்குள்ளும் கட்டாயமாகக் குழப்பங்கள் இருக்கும். பிரச்சினைகள் கட்டாயமாக வரும். ஆனால் அடிப்படையிலே ஒத்த கருத்துக்கள் இருந்தால் அது ஒரு கூட்டமைப்பாக இயங்க முடியும். எங்களுடைய கூட்டமைப்பை பொறுத்தமட்டில் பல விசயங்களிலே நாங்கள் ஒத்துப் போனாலும் முக்கியமான ஒரு சில விசயங்களில் பிரச்சினைகள் ஏற்படத் தான் செய்கின்றன.  அது சில வேளை தமிழரசுக் கட்சி தாங்கள் தான் பெரும்பான்மை அல்லது தாங்கள் தான் தாய்க் கட்சி என்ற ரீதியில் நடக்க முற்பட்டால் அப்போது பிரச்சினைகள் வருகின்றன. மற்றும்படி ஒரு அரசியல் ரீதியாகவும் வேறு எல்லா விடயங்கள் ரீதியாகவும் நாங்கள் ஒன்றாகத் தான் வேலை செய்கின்றோம். அப்படி எங்களுக்குள்ளே அரசியல் ரீதியாக ஒத்த கருத்துக்கள் இல்லாவிட்டால் நிச்சயமாக நாங்கள் தொடர்ந்து கூட்டமைப்பிற்குள் இருக்க முடியாது. இருக்கவும் மாட்டோம்.

கேள்வி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா?

பதில் - அவ்வாறு வடக்கு கிழ்க்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் கட்சிக் கூட்டங்களில் யோசிக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை. வடகிழக்கிற்கு வெளியே போட்டியிடுவது சில வேளைகளில் பல பிரச்சினைகளை அல்லது தாக்கங்களையும் செலுத்தலாமென்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.  எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில் இவ்வாறு வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் இருக்கின்ற நிலைமைகளை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சொல்லியுள்ளளோம். அதனையே ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் சொல்லிருயிருக்கின்றார். வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவதன் மூலம் நாங்கள் ஒரு ஆசனத்தை தானும் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஒன்று இருக்குமாக இருந்தால் அநியாயமாக மற்ற தமிழ் சிறுபான்மைக் கட்சிகளை குழப்புகின்ற அல்லது அவர்களைப் பாதிக்கின்றதொரு நிலைமை ஏற்பட்டு விடலாம். அது மாத்திரமல்ல அந்தச் சிறுபான்மைக் கட்சிகளுடன் எங்களுக்குஇருக்கக் கூடிய நல்லுறவுகள் அற்றுப்போகிற நிலைமைகள் வந்துவிடும்.

ஆகவேஇது சம்பந்தமாக நாங்கள் மிகக் கவனமாகச் சிந்தித்து தான் செயற்பட வேண்டும். கூடியளவிற்கு தென்னிலங்கையிலே செயற்படுகின்ற சிறுபான்மைக் கட்சிகளுடனும் ஒரு பேச்சுவார்த்தை நடாத்தி அது எப்படிச் செய்யலாம் அல்லது எப்படிச் செய்யாமல் விடலாம் என்பது சம்பந்தமாக ஆராய்ந்து அதன் பிறகு தான் சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டுமென்பது தான் என்னுடைய அபிப்பிராயம்.

கேள்வி: வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா?

பதில் - எந்தக் கட்சியும் தன்னுடைய வாக்கு வங்கியைக் கூட்டுவதற்கான முயற்சியைத் தான் எடுக்கும். கடந்த முறை 2 தேசியப் பட்டியல் இருந்திருந்தால் அதனை இம்முறை 3 ஆக்குவதற்குத் தான் எந்தக் கட்சியும் விரும்பும். எந்தக் கட்சியானாலும் தங்களுடைய வாக்கு வங்கிகளைக் கூட்டுவதற்குதானே முயற்சிப்பார்கள். ஆனால் அதைவிட மிக முக்கியமான காரணியாக தமிழ் மக்கள் ஒன்றுபட்ட பலத்தை வெளிக் கொண்டு வர வேண்டுமென்பது முக்கியமான விசயமாகவும் இருக்கிறது.  ஆனால் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட பலத்தைக் கொண்டு வரப் போகின்றோம் என்று வடகிழக்கிற்கு வெளியில் போட்டியிட்டு மற்றத் தமிழ் மக்கள் அதாவது வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு வெளியே இருக்கக் கூடிய மலையகத் தமிழ் மக்கள் போன்றவர்களை விரோதமானவர்களாக மாற்றக் கூடாது.

கேள்வி புதிய ஐனாதிபதி புதிய அரசு வந்திருக்கிற இன்றைய சூழ்நிலைமை தமிழ் மக்களுக்கு எத்தகைய சாதக பாதக நிலைமைகளை ஏற்படுத்துமெனக் கருதுகின்றீர்கள்?

பதில் - புதிய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி திட்டங்களைப் பற்றி பேசப்படுகிறதே ஒழிய வேறு விடயங்கள் குறித்துப் பேசவில்லை. அபிவிருத்தியை தவிர வேறு பெரிய விசயங்கள் எதனையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்வதற்கான நிதியும் அவர்களிடத்தே இல்லை.

ஏனென்றால் வரவு செலவுத் திட்டமும் கொண்டு வரவில்லை. அதனைக் கொண்டு வரப் போவதும் இல்லை. அல்லது கணக்கு அறிக்கையோ அல்லது மினி பட்ஐெட் கூட கொண்டு வருகிற சிந்தனையும் அவர்களிடத்தே இல்லை. ஆகவே இந்த 2 மாதங்களுக்குள்ளே அவர்கள் பெரிய அளிவிலே அபிவிருத்தி வேலைகள் செய்யப் போவதென்பதில்லை. ஆனால் அடுத்து வரும் தேர்தலுக்குப் பின்னர் அதாவது ஒகஸ்டுக்குப் பிறகு தான் பலதையும் செய்வோம் என்றும் அரசாங்கத்தினர் சொல்லியுள்ளனர்.  அடுத்ததாக அரசியல் தீர்வு விடயத்திலும் இந்த இரண்டு மாதத்திற்குள் எதுவுமே நடக்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கு அத்தகைய தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்காது. ஏனென்றால் தமிழ் மக்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்து விட்டோம் என்று தெற்கில் காட்டி விட்டாலே சிங்கள வாக்குகள் இல்லாமல் போய் விடுமென்ற பயப்பீதியில் தான் இன்றும் இந்த அரசாங்கத்தினர் இருக்கின்றார்கள். ஆகவே இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் உடனடியாக எதுவும் செய்யுமென்று நான் எதிர்பார்க்கவில்லை.

 எஸ்.நிதர்ஷன்

Comments