கடந்த கால தவறுகளின் விளைச்சல் | தினகரன் வாரமஞ்சரி

கடந்த கால தவறுகளின் விளைச்சல்

ஜனாதிபதித் தேர்தலின்போது என்ன செய்வதென்றே தெரியாமல் தமிழ்த்தரப்புத் தடுமாறியதைப்போலவே வரவுள்ள  பாராளுமன்றத் தேர்தலிலும் தடுமாறப்போகிறது. அதற்கான சாத்தியங்கள் மிகத் துல்லியமாகவே தெரிகின்றன. 

பாராளுமன்றத் தேர்தலுக்காக அணிகளை உருவாக்குதல், கூட்டுச் சேருதல், வியூகங்களை வகுத்தல் என்றெல்லாம் ஆரம்ப கட்டப் பணிகள் அங்கங்கே மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஒன்றும் உருப்படியாகத் தேறுகிறமாதிரித் தெரியவில்லை. 

வடக்குக் கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். கூட்டமைப்புக்கு மாற்றாக அல்லது எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி. விக்கினேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் பிரேமச்சந்திரன் அணி, ஈ.பி.டி.பி ஆகியனவும் களமிறங்கும். 

இவற்றுக்கப்பால் முருகேசு சந்திரகுமாரின் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஆகியனவும் வடக்குக் கிழக்கில் மாகாண ரீதியாகவோ மாவட்ட ரீதியாகவோ போட்டியிடலாம். 

இதற்கப்பால் ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன போன்ற தேசியக் கட்சிகளும் போட்டியிடக் கூடிய வாய்ப்புண்டு. முஸ்லிம் கட்சிகளும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வடக்குக் கிழக்கில் களமிறங்கலாம். அதற்கான சாத்தியங்களும் தென்படுகின்றன. இதைக்குறித்து இந்தக் கட்சிகளின் தலைவர்கள் அங்கங்கே அறிவிப்புகளை விட்டிருக்கிறார்கள். 

ஆகவே, இப்படிப் பல முனைகளில் கடுமையான போட்டி நிலவக்கூடிய சாத்தியங்களே தென்படுகின்றன. இவற்றுக்குள் எப்படித் தமிழ்க்கட்சிகளும் தமிழ் வாக்காளர்களும் தப்பிப் பிழைக்கப்போகிறார்கள்? என்பதே கேள்வி. அதாவது தமிழ்க்கனவு என்று சொல்லப்படும் வடக்குக் கிழக்கின் அரசியல் அடையாளமும் பலமும் எப்படிப் பேணப்படவுள்ளது என்பது. 

கடந்த காலத்தில் ஒற்றுமை, ஒருமித்த குரல் என்று பேசப்பட்டு வந்த தமிழ் அரசியல் இன்று நடைமுறையில் சிதைவுண்ட நிலைக்குள்ளாகியிருக்கிறது. இந்தச் சிதைவைக் கடவுள் வந்தாலும் மீள ஒருங்கிணைத்து ஒன்றுபடுத்த முடியாது என்ற நிலையே காணப்படுகிறது. இதற்குக் காரணம், சனங்களைப் பற்றிய, சமூகத்தைப்பற்றிய அக்கறைக்குப் பதிலாக கட்சி நலன், அதன் வழியே தமது தனி நலன் என்ற பேரவா வலுப்பெற்றதேயாகும். 

இந்தத் தனி நலன் போட்டியானது கட்சியைத் தம்மை நோக்கி, தமது நலனை நோக்கி இழுவிசைக்குட்படுத்த விளைகிறது. இது உள்முரண்பாடுகளை அளவற்றுத் தோற்றுவிக்கும். இதுவே நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முடிவே இல்லை. இதை எளிதில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியாது.  

 

ஆகவேதான் உடைவுகள் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒருங்கிணைய முடியாத நிலையும் வளர்ந்து செல்கிறது. இப்படியிருந்தால் எப்படி வெற்றிகரமான அணிகள் உருவாகும்? நல்ல கூட்டணிகள் ஏற்படும்? ஆகவேதான் பாராளுமன்றத் தேர்தலில் உருப்படியாக எந்தத் தரப்பும் களமிறங்கப்போவதில்லை என்று சொல்ல வேண்டியுள்ளது. 

இந்த நிலையில் திருப்தியளிக்கக்கூடிய, மக்களின் நலனை முதன்மைப்படுத்திய, மக்களுக்காகவே செயற்படக்கூடிய ஒரு அரசியற் சக்தியை அடையாளம் காணமுடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். 

தேர்தல் நெருங்கி வருவதற்கிடையில் நல்லதொரு கூட்டணி உருவாகுவதற்கான வாய்ப்புண்டு. நிர்ப்பந்தங்களே சிலவேளைகளில் நல்ல விடயங்களை உருவாக்கி விடுவதுண்டு. அப்படியான நிர்ப்பந்தமே இன்று நிலவுகிறது. ஒரு பக்கம் அரசாங்கத்தையும் பிற இனவாதத் தரப்பையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம். மறுபக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றொன்றை உருவாக்க வேண்டிய தேவை என ஒரு நிர்ப்பந்தம். இவை இரண்டும் இன்று தமிழ் அரசியற் பரப்பிலும் தமிழ்ச்சமூகத்திடத்திலும் உண்டு. ஆகவே எப்படியும் ஒரு நல்ல அரசியற் கூட்டு உருவாகக் கூடிய சந்தர்ப்பமுண்டு என்று சொல்வோருண்டு. 

இது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையே. ஆனால், தமிழ்ச் சமூகம் எப்போதும் உண்மைக்கு வெகு தொலைவிலேயே உள்ளதால் அது இந்தத் தடவையும் கோட்டை விடும். இந்த உண்மைக்கு வெகு தூரத்திலேயே நிற்கும். நல்லதொரு கூட்டணியை அதனால் உருவாக்க முடியாமல் தன்னைத் தானே தோற்கடிக்கும். 

அப்படி நல்லதொரு கூட்டணியோ கட்டமைப்போ உருவாகுமானால் அதற்கான உரையாடல்களை அது காது கொடுத்துக் கேட்கும். சிந்திக்கும். தன்னை விரிக்கும். தன்னைத்தானே புதுப்பிக்கும். அப்படியான நற்சகுனம் எதுவுமே தென்படவில்லை. 

ஆக மொத்தத்தில் பழைய மட்டைகளே பழைய குட்டையில் ஊறப்போகின்றன. இவற்றினால் எந்தப் புதுமைகளையும் நிகழ்த்த முடியாது. எந்த மாற்றங்களையும் உண்டாக்கவியலாது. 

அப்படிச் செய்யக் கூடியவையாக இருந்தால், இவ்வளவுக்குள் இவை சனங்களோடு இணைந்தும் கலந்தும் வேலை செய்து தம்மைச் சமூக மயமாக்கியிருக்கும். சனங்களோடு கரைந்து நின்றிருக்கும். சனமயப்பட்ட அரசியலை முன்னெடுத்திருக்கும். 

இவ்வளவுக்கும் இதுவரையும் தமிழ் அரசியலில் முதன்மைப்பாத்திரத்தை வகித்துக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றொன்றை உருவாக்க வேண்டும் என்று விரும்பும் கருத்தாளர்கள் கூட சனமயப்பட்ட அரசியலுக்கான அத்திவாரத்தை உருவாக்கவில்லை. மாற்றான அணிகளை அதை – சனங்களை – நோக்கிச் செலுத்த முற்படவில்லை. 

எனவேதான் எந்தப் புதிதும் நடக்கப்போவதில்லை என்று துணிந்து கூறுகிறோம. 

இதேவேளை வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு ஏற்றவாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆசனப்பங்கீட்டுக்கான கூட்டங்களை முதற்கட்டமாக நடத்தி முடித்துள்ளது. அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களுக்கான வேட்பாளர் தெரிவுகளைத் தவிர, ஏனையவை ஓரளவுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் மட்டக்குழு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. 

எப்போதும் ஆசனப்பகிர்வுப் பிரச்சினை கூட்டமைப்புக்குள் ஏற்படுவது வழமை. ஆனால், இந்தத் தடவை இதற்கு மாறாக ஏதோ ஒரு வகையில் அதிக கொந்தளிப்பில்லாமல் இந்த விசயம் இப்படிச் சுமுகமாகத் தீர்வைக் கண்டிருக்கிறது. இதற்குக் காரணங்கள் உண்டு. கூட்டமைப்பின் அரசியற் பலமென்பது இப்பொழுது கேள்விக்குள்ளாகியிருக்கிறது. கூட்டமைப்பின் மீது மக்கள் கடுமையான அதிருப்தியோடிருக்கிறார்கள். தங்களுடைய அதிருப்தியையும் கோபத்தையும் அவர்கள் பல இடங்களிலும் பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்திக் காண்பித்துமிருக்கிறார்கள். 

எனவே இந்தச் சூழலில் எரிந்து கொண்டிருக்கிற நெருப்பிலே மேலும் உள் முரண்பாடு, ஆசனப்பகிர்வில் இழுபறி என்ற சேதிகளால் எண்ணெய்யை ஊற்றாமல் அடக்கி வாசிக்க முற்பட்டிருக்கிறது கூட்டமைப்பு. இதெல்லாம் அதனுடைய இயல்புக்கு மீறியது என்றாலும் வேறு வழியில்லாமல் அடக்கி வாசித்திருக்கிறது. 

இப்படிக் கூட்டமைப்பு ஓரளவுக்குத் தமது வேட்பாளர்களை அடையாளம் கண்டாலும் பின்னர் எதிரணிகளின் வியூகத்தைப் பொறுத்துச் சில மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கும். அப்படி நிகழ்ந்தால் மேலும் கொந்தளிப்புகள் அல்லது இழுபறிகள் நிகழ வாய்ப்புண்டு. 

இதற்கப்பால் வினைத்திறனுள்ள, அரசியல் ஞானமுடைய, பிராந்தியத்திலும் சர்வதேசியத்திலும் அறிமுகமான – பல முனைகளிலும் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய தலைகள் யாரும் புதிய தெரிவில் இருப்பதாகத் தெரியவில்லை. சிந்தனையிலும் சமூக அக்கறையிலும் அடையாளம் காண்பித்த யாரையும் காணவுமில்லை.   இதெல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் போதாமைகள், குறைபாடுகள் என்றால் மற்றத் தரப்புகளின் கதையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவை இன்னும் பலவீனமானவையாகவே உள்ளன. அங்கங்கே கஞ்சிக்குப் போடுகின்ற பயறைப்போல ஒவ்வொரு அணிக்குள்ளேயும் ஒரு சிலர் அப்படித் திறனுள்ளோராக இருக்கலாம். தனித்த அடையாளங்களாக தெரியலாம். ஆனால், அவர்களால் தீர்மானிக்கும் சக்திகளாக மேலெழ முடியுமா? என்பது கேள்வியே.   இதைத்தவிர்த்து திறனாளர்களின் கூட்டாக, செயற்பாட்டாளர்கள் அணியாக புதிய – மாற்றணிகள் எவையும் இல்லை என்பதே உண்மை.   ஆகவேதான் எந்த அணியும் உருப்படியாக இல்லை என்கிறோம். ஈ.பி.டி.பியிலும் டக்ளஸ் தேவானந்தா, தவராஜா, தவநாதன் ஆகியோருக்கு அப்பால் ஒளிரும் நட்சத்திரங்கள் எவையும் இல்லை. இதை உணர்ந்து கொண்டு தம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய, புதிய ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டிய தேவை ஈ.பி.டி.பிக்குண்டு. 

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நிலைப்பாடுகள் குழப்பகரமானவை என்றாலும் அது முன்வைத்த அடிப்படையான விடயங்களும் விமர்சனங்களும் புறக்கணிக்கக் கூடியவை அல்ல. இருந்தபோதும் அதனாலும் ஒரு அரசியற் திடசித்தமுள்ள – செயற்திறனுள்ள அணியை உருவாக்க முடியவில்லை. தன்னாலும் அப்படித் திரளமுடியவில்லை. 

இதற்கப்பால் முருகேசு சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, பொ. ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் போன்றவை வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் செயற்களத்தைக் கொண்ட கட்சிகளாகவே உள்ளன. இதில் சந்திரகுமாருக்கு – சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்புக்கு ஒரு குறிப்பிட்டளவுக்கான வாக்கு வங்கி இருந்தாலும் அதை உடைத்துச் சிதைப்பதற்கு பல முனைகளில் நெருக்கடியாளர்கள் உண்டு. இதை எதிர்கொள்ளக் கூடியவாறு அந்தக் கட்சியில் ஆளுமைகளும் திறனும் உண்டா என்பதும் கேள்வியே. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தனித்துத் தேர்தலில் நிற்குமா என்பது கேள்விக்குரியது. இவ்வாறே மேலும் பல சிற்றணிகளும் குழுக்களும் உள்ளன. 

ஒட்டு மொத்தத்தில் இவையெல்லாம் தமிழ்ச்சமூகத்தை மேலும் பலவீனப்படுத்தக் கூடிய சூழலே உண்டு. இதைக் கடந்து ஒரே அணியில் நின்று யாரையும் அல்லது எந்தத் தரப்பையும் தேர்வு செய்யக் கூடிய நிலையிலும் எதுவும் இல்லை. 

இந்த நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள விளைகின்றன தேசியக் கட்சிகள். சரியாகச் சொன்னால் தேசியக் கட்சிகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கான வாசலைத் திறந்து வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது தமிழ்ச்சூழல் – தமிழ்ச்சமூகம். 

அப்படியென்றால், தமிழ்ச்சமூகத்தின் அரசியல் சிந்தனையும் செயன்முறையும் எப்படி இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இதையே திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்பப் பலரும் சொல்லி வந்திருக்கிறார்கள். அபாயம் வந்து கொண்டிருக்கிறது. அரசியல் தவறுகள் நிகழ்ந்தால் அதற்கான தண்டனைகள் இந்த மாதிரித்தான் நிகழும். அரசியற் பலவீனங்களை திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர, நியாயப்படுத்திக் கடந்து செல்ல முடியாது. அப்படிச் செல்ல முற்பட்டால், அது நிச்சயமாக ஒரு நெருக்கடியில் கொண்டுபோய் நிறுத்தும். அல்லது எங்கோ ஒரு கட்டத்தில் வழிமறிக்கும் என.   இன்று வந்திருக்கும் நெருக்கடி என்பது கடந்த காலத்தின் தவறுகளின் விளைச்சலே. இதை இன்று திருத்திக் கொள்ளவில்லை என்றால், நாளை இதையும் விட மோசமான நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.   அது சரி, அப்படியென்றால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க்கட்சிகளின் நிலை என்ன? தமிழ் மக்கள் செய்ய வேண்டியதென்ன? என்று இனியும் நீங்கள் கேட்டால்... 

வானத்தை நோக்கிப் பார்த்துச் சிரிப்பதைத் தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

கருணாகரன்   

Comments