கலாநிதி ந.இரவீந்திரனின் இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராட்டம் | தினகரன் வாரமஞ்சரி

கலாநிதி ந.இரவீந்திரனின் இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராட்டம்

சாதி நேசம் பண்பாடு (2017( இரட்டைத் தேசியமும் பாண்பாட்டுப் புரட்சியும் (2015) சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் (2016) போன்ற நூல்களின் வரிசையில் நான்காவது நூலாக வெளிவந்திருக்கிறது இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராட்டம் (2019) என்னும் இந்த நூல்.   

சமூக விழிப்புணர்வுக்கான அமைப்பு இந்த நூலை வெளியிட்டிருக்கிறது.  

‘இந்த நூலினூடாக கலாநிதி ந.ரவீந்திரன் எமது நாட்டின் வர்க்கப் போராட்டத்தை மருதத் திணை மேலாதிக்கத்தால் தோற்றம் பெற்றியங்கிய திணைச் செல் நெறி அரசியலுக்கூடாகவே வகிபாகம் செய்கிறார். பழக்கப்பட்ட சிந்தனைத் தடத்தில் செல்படும் மாறா நிலை மார்க்சியர்கள் அவர்களின் வழிவழி வரும் கட்சிகள் போன்றவைகள் சமூகத்தின் அடிப்படை அலகு வர்க்கங்கள் மட்டுமே எனக் கணிக்கின்றனர். தொழிலாளர் விவசாயிகள் போன்றோர் வர்க்க உணர்வுடன் ஐக்கியப்பட்டுப் போராடுவதன் வாயிலாக அடிப்படையான சமூக மாற்றத்தை சாத்தியமாக்க இயலும் என்பது அவர்களின் இலட்சியக் கனவு. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் அதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் சமகால தேச, கால வர்த்தமானம் அதற்கான வாய்ப்புக்களை நடைமுறை சாத்தியமற்றதாக்கியிருக்கிறது என்பதை வலியுறுத்தும் நூலாசிரியர், சமூக மாற்றத்துக்கு அனுசரணையாக அமையும் வழியில் சாதிய, தேசிய இன விடுதலைகளை வழி நடாத்திச் செல்வதே திணை அரசியலாகும் என முன்மொழிகின்றார் கலாநிதி ந. ரவீந்திரன் என்று பதிப்புரையில் குறிக்கின்றார் வை. வன்னிய சங்கம்.  

சாதிச் சமூகம் பற்றியும், திணைக் கோட்பாடு சார்ந்து அதனை விளங்கிக் கொள்வது பற்றியும் விவாதிப்பதாக முந்திய நூல்களில் எழுதப்பட்டுள்ள போதிலும் தவிர்க்க இயலாமல் இந்திய அனுபவங்களே அதிகம் பேசப்படுவதாக இருந்தன. அதன் காரணமாகத் தனியே இலங்கை அரசியல் போக்குகள் என்பன குறித்து எழுத வேண்டும் என வை. வன்னிய சிங்கம் கேட்டுக் கொண்டார். அது மட்டுமன்றி அதற்கான நிதி திரட்டலையும் அவரே பெற்று வழங்கியிருந்தார்.

ஒரு வருடத்துக்கு முன்னமே இந்த நூல் வெளிவந்திருக்க வேண்டும். எனக்கான இடமாற்றங்கள் மேலைப் பழுக்களுடன் எமது இயங்கும் தளங்கள் சார்ந்த தெளிவீனங்களினாலும் இயக்க ஆர்வம் அடிப்படை காரணம் என்பதை வலியுறுத்துவது மிக மிக அவசியமானதாகும்’ என்று தனது ஏழு பக்க நீண்ட முன்னுரையில் குறித்து வைக்கின்றார் நூலாசிரியர் இரவீந்திரன்.  

இந்த நூல் நூறு பக்கங்களையே கொண்டிருந்தாலும் அது திறந்துவிடும் அரசியல் கதவுகள், வரலாற்றுக் கதவுகள், சமூகச் சிந்தனைக் கதவுகள், பல நூறுகளைத் தாண்டிச் செல்லும் விரிவும் வல்லமையும் கொண்டு இயங்குபவை.  

இலங்கைத் திணை அரிசயலில் சாதியத்தகர்ப்பு மத அடிப்படை வாதங்களை முறியடித்தல், தேசிய இன விடுதலை போன்ற விடயங்களை, விரிவாகப் பேசுகின்ற நூல் இது.  

உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசாக நீடித்திருந்த சோவியத் யூனியன், பிளவுபட்டு வீழ்ச்சியடைந்ததோடு உலக அளவில் தொழிலாள இயக்கங்கள் பலவீனமடையத் தொடங்கின.  

இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி பிளவடைந்தது. ஆற்றல் மிகு வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்து அரசையே திகில் கொள்ளச் செய்த தொழிற்சங்கத் தலைவர்களான நா.சண்முகதாசனும், பாலா தம்புவும் பிரிந்து சென்றனர். ஆயுதப் புரட்சியின் அவசியத்தை வலியுறுத்தும் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியில் சண்முகதாசனும், பாராளுமன்றப் பாதையூடாக சோசலிசத்தை வென்றெடுக்க இயலும் என்று நம்பிய சோவியத் ரஷ்ய கொம்யூனிஸ்ட் கட்சியில் பாலா தம்புவும் நின்றனர்.  

வர்க்க அரசியல் பலம் குன்றத் தொடங்கியதும் ஐம்பதுகளில் வளர்ந்து வந்த இனத்துவ அரசியல் இலங்கையில் முதலிடம் கொள்கிறது.  

எழுபதுகளில் ஏகாதிபத்திய பிணைப்புடன் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சி தலைமையிலான இடது சாரிக் கூட்டரசாங்கம் பிரித்தானியத் தொடர்பை முற்றாகத் துண்டித்த குடியரசு யாப்பை, 1972ல் முன்வைத்தது. சோல்பரி யாப்பில் சிறுபான்மை இனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக சொல்லப்படும் 29ஆவது சரத்துப் போன்ற எந்த அம்சமும் இல்லாமல் பௌத்தம்- சிங்கள மொழி என்பனவற்றின் மேலாதிக்கத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் யாப்பாகவே அது அமைந்தது. தமிழ்த் தேசியம் பேசிய கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவாகி தமிழீழப் பிரிவினைக் கோரிக்கை வரை வளர்த்தெடுத்து மக்கள் ஆதரவைத் திரட்டும் வாய்ப்பை வழங்குவதாகவே சிங்கள பௌத்த பேரினவாத அடையாளங்களை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தது அந்த இடது சாரிக் கூட்டரசாங்கம்.  

இப்படி வளர்க்கப்பட்ட இன முரண்பாடு யுத்த நிலைக்கு கூர்மை கொண்டதையும் யுத்தத்தை கையிலெடுத்த விடுதலைப் புலிகளின் இறுதியுத்த தோல்வி வரையும், அதன் பிறகான இன்றைய அரசியல் நிலைமைகள் பற்றியும் பேசுகிறது இந்த நூல்.  

சிங்கள பேரினவாதத்தின் மேலாதிக்க இராணுவ அத்துமீறல்களினாலும் அதற்குச் சற்றும் குறைவற்ற தமிழ்த் தேசிய இராணுவாத கொலை அச்சுறுத்தல்களாலும் ஏற்பட்ட தமிழர்களது புலச்சிதறல் பற்றியும் முன் வைக்கும் நூல் இது.  

ஆழ வாசிப்புக்கானது மட்டுமல்லாமல் கற்றலுக்குமானதொரு முக்கிய நூல் இது. 

Comments