ஈரான் மீதான போரிலிருந்து பின்வாங்கி விட்டதா அமெரிக்கா ? | தினகரன் வாரமஞ்சரி

ஈரான் மீதான போரிலிருந்து பின்வாங்கி விட்டதா அமெரிக்கா ?

அமெரிக்க -ஈரான் மோதல் தீவிரம் அடைகிறது என்ற செய்தி உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளது. கடந்த வாரத்தின் இறுதி நாட்களில் இரண்டு பெரும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இரண்டாவது உக்ரைனின் விமானம் வீழ்ந்து நெருங்கியதில் 176 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதனை ஈரானே நிகழ்த்தியதாக ரொய்ட்டர் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. அதே நேரம் அமெரிக்க ஜனாதிபதி ஈரானுடன் நிபந்தனையின்றி பேசத் தயார் என அறிவித்துள்ளார். இதனால் போருக்கான வாய்ப்பு ஓய்ந்துள்ளதாக தெரியவருகிறது. இக்கட்டுரையும் இத்தகைய நெருக்கடி ஈரானின் அரசியலில் ஏற்படுத்தியுள்ள புதிய திசையையும் அமெரிக்கா அடைந்துள்ள அரசியலையும் தேடுவதாக அமையவுள்ளது.  

முதலில் காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விடயத்தினை அடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தும் இரு தேசங்களுக்கும் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது என்பது யதார்த்தமான அரசியல் போக்காக தென்படுகிறது. ஆனால் இதில் ஈரானுக்கு மிகப் பெரும் இழப்பாக மட்டுமன்றி எதிர்காலத் தலைவன் ஒருவனை இழந்துள்ளதாகவே அளவிட வேண்டியுள்ளது. அதற்கு ஏழு மில்லியன் மக்கள் சாட்சியாகும். அதனைக் கடந்து ஈரானுக்கு மிக சிறந்த வாய்ப்புக்கள் எட்டியுள்ளது.  

ஒன்று, அமெரிக்காவை வழிக்கு கொண்டுவரவும் போரற்ற சூழலை உருவாக்குவதிலும் ஈரான் வெற்றி கண்டுள்ளது. குறிப்பாக பல கட்டமாக பொருளாதாரத் தடைகளையும் நிபந்தனைகளையும் ஏற்படுத்தி வந்த அமெரிக்கா தற்போது நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்கா ஒரு போருக்கு ஈரானுடன் போவதற்குரிய சூழலையும் ஜனாதிபதி ட்ரம்ப் அண்மைய நாட்களில் நிராகரித்திருந்தார். இதே விடயத்தினை அண்மைய ஆண்டுகளில் வடகொரியாவுடனும் ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார் என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும். ஆனாலும் ஈரான் மீதான போர்ப் பிரகடனத்தை தற்போதைய நெருக்கடி காரணமாக அமெரிக்கா கைவிட்டதா அல்லது ட்ரம்ப்பின் தவறான உத்தரவினால் கைவி-ட்டதா என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். எதுவாயினும் ஈரானின் அணுகுமுறையினால் ஏற்பட்ட நெருக்கடியாகவே தெரிகிறது.  

இரண்டு, சுலைமானியின் மரணச்சடங்கினை வைத்துக் கொண்டு உலகத்தினை தனது பக்கம் திசைதிருப்புவதில் ஈரான் வெற்றி கண்டது. அதாவது  ஏழு மில்லியன் மக்களை வீதியில் கொண்டுவந்து நிறுத்தி ஒரு வரலாற்றுத் தலைவனின் மரணத்திற்கு ஒப்பானதாக மாற்றியது. சுலைமானி உண்மையிலேயே ஈரானியரின் வரலாற்றுத் தலைவன் என்பதில் ஈரானியருக்கு மட்டுமல்ல மேற்காசிய மக்களுக்கும் அத்தகைய கருத்து நிலை உண்டு. சுலைமானி தனித்துவமான தலைவன் என்பதை அவரது பணிகள் உறுதிப்படுத்துகின்றன. அந்த மரணச்சடங்கு உலகத் தலைவர்களையும் மக்களையும் திகைப்படையச் செய்தது. ட்ரம்ப் வெளிப்படுத்திய அனைத்தையும் உலகம் நிராகரிக்கத் தொடங்கியது. இது ஈரானியரின் புத்திசாதுரியமான செயல் என்றே பார்க்கப்பட வேண்டும். உலகத் தலைவர்கள் ஈரானுக்கு ஆதரவாகச் செயல்பட ஆரம்பித்தன. அமெரிக்க ஜனாதிபதியின் உணர்ச்சிக்கு பதில் ஈரானிய ஆட்சியாளரின் புத்திசாலித்தனம் செயல்பட்டது.  

மூன்று, ஈரானியர் அன் அல் அஷத் மற்றும் ஹாரிரி கேம்ப் ஆகிய  ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது நி-கழ்த்திய தாக்குதல் அமெரிக்காவுக்கு நெருக்கடியாக மாறியது. குறிப்பாக 16 ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் அதில் 80இற்கு மேற்பட்ட அமெரிக்க இராணுவம் கொல்லப்பட்டதாகவும் அனேக ஆயுத தளபாடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஈரான் அறிவித்தது. இதில்  பாவிக்கப்பட்ட குண்டுகள் 500 கிலோ முதல் 600 கிலோ என அமெரிக்காவே அறிவித்துள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் குறிப்பிடும் போது உயிரிழப்பது ஆயுதங்களை அழிப்பது மற்றும் கட்டுமானத்தை சேதப்படுத்துவது என்பனவே தாக்குதலின் நோக்கம் என தெரிவித்துள்ளார். இது அமெரிக்கப்படைகளுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதை பதிவிடுவதாகவே தெரிகிறது. இத் தாக்குதலை அடுத்து அமெரிக்க நட்பு படைகள் ஈராக்கினை விட்டு வெளியேற ஆரம்பித்துளளனர். அனேக நாட்டுப் படைகள் குவைத்துக்குள் நுழைவதாகவும் ஏனைய அயல் நாடுகள் வழியாக தாயகம் திரும்ப தி-ட்டமிடுவதாகவும் தெரியவருகிறது.  

நான்கு, ஐ.நா. சாசனத்தின் விதி 51 ஐ காட்டி அமெரிக்க தளங்கள் மீது நிகழ்த்திய தாக்குதலை ஈரான் நியாயப்படுத்தியுள்ளது. அதாவது தற்பாதுகாப்புக்காகவே தாக்குதல் நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளது. அது மட்டுமன்றி 80 அமெரிக்கப் படைகள் கொல்லப்பட்டதென்ற செய்தியை இராணுவத் தளபதி சுலைமானியின் சொந்த இடத்தில் வைத்து ஈரானிய இராணுவம் அறிவித்தாகவும் தெரியவருகிறது. இது தனது இராணுவத் தளபதி மீதான தாக்குதலுக்கு பதிலானது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்தியிருக்கிறது.  

ஐந்து, உலக நாடுகளின் அணுகு முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் அமெரிக்காவுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா சீனா என்பன அதிக நெருக்கடியை அமெரிக்காவுக்கு கொடுத்ததுடன் போருக்கு போவதை முற்றாக கைவிடும் நிலையை ஏற்படுத்துவதில் ஐ.நா.வும் கவனம் எடுத்திருந்தது.  

ஆறு, அமெரிக்காவின் பாதுகாப்பு தரப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான நகர்வுகள் ஒன்றாக அமைந்திருக்காமை,  பாதுகாப்பு செயலாளருக்கு பாதிப்பு ஏற்பட்டது எனக்குறிப்பிடும் போது ட்ரம்ப் எல்லோரும் பத்திரமாக உள்ளனர், எனத் தெரிவித்திருந்தது போலவே முரண்பாடான அறிக்கைகள் வெளிவந்தன. அதிலும் பத்திரிக்ைகயாளரை சந்திக்க வரும் போது ட்ரம்ப் உரையாடத்திட்டமிட்ட விடயத்தினை மட்டும் மூன்று தடவை மாற்றிய வரைபுகளை பென்டகன் வழங்கியுள்ளது. 

எனவே அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது ஈரான் ஒரு சிறிய படைப்பலத்தையும் ஆயுத தளபாடத்தையும் கொண்ட நாடு.  ஆனால் தனது தந்திரத்தினால் அமெரிக்காவின் நகர்வுகளை தகர்த்துள்ளது. இதனால் ஈரான் எதிர்காலத்தில் அணுவாயுதத்தை பரிசோதிக்கும் நிலையை அமெரிக்கா பலப்படுத்திவிட்டது என்றே தோன்றுகிறது. தற்பாதுகாப்புக்காக ஈரான் அயுணுவாயுதத்தை பரிசீலிக்கும் நிலை இலகுவில் சாத்தியமாகும். அதற்கான அடிப்படையை தற்போது ஈரான் வரைந்துள்ளது. சுலைமானியின் படுகொலை ஈரானுக்கு அதிக வாய்ப்புக்களை தந்துள்ளது என்பதில் மறுப்பதற்கில்லை. ஆனால் தற்போது உக்ரைனின் விமானத்தை ஈரானே சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. இதற்கு ஆதாரமாக கறுப்புப் பெட்டியை வழங்க ஈரான் மறுத்துவருவது அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஆனால் இது ஈரானின் நகர்வுகளில் நெருக்கடியை ஏற்படுத்தும். அதற்கான பொறுப்பினை ஈரான் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் அதன் அரசியல் இராணுவ வெற்றிகளுக்கு நெருக்கடியானதாக மாறும். அது அமெரிக்காவுக்கு வாய்ப்பானதாக அமையும். அமெரிக்காவின் தற்போதைய போக்கினால் போர் முற்றாக முடிவுக்கு வந்துவிட்டது எனக் கருதுவது முடிவாக அமையாது.

இன்னோர் பக்கம். இஸ்ரேல் அமைதியாக இருக்கிறதா என்பதையும் ஈரானியர் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்ரேல்,  அமெரிக்காவின் இலக்கு ஈரானின் அணுவாயுதமே.  

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்  

Comments