ஆட்சி மாற்றமும் அரசியல் கைதிகளின் விடுதலையும் | தினகரன் வாரமஞ்சரி

ஆட்சி மாற்றமும் அரசியல் கைதிகளின் விடுதலையும்

சிறைகளில் அரசியல் கைதிகளாக இராணுவத்தினரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களும் உள்ளனர். புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் பலர் உண்மையிலேயே திருந்தி வாழும் மனநிலையில் இருக்கின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் ஏனைய நிர்ப்பந்தங்களாலேயே அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துக்கொண்டனர்.  

அவர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும். மனிதர்கள் தவறிழைப்பது என்பது இயல்பானதாகும். அவ்வாறு தம்மால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான தண்டனையை அனுபவித்த பின்னர், அவர்கள் திருந்தி மீண்டும் சமூகத்தில் வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும். நோய்வாய்ப்படுகின்றபோது சிகிச்சைகள் தாமதமடைகின்ற காரணத்தினால் எமது கண் முன்னால் பல கைதிகள் மரணமடைந்திருக்கிறார்கள். அனைத்தையும் விட மனித உயிர் மேலானதாகும்!”  

பொதுபலசேனா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடியுள்ள கோட்டாபய ராஜபக்ச, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது, “தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார். அதேபோன்று எதிர்த்துப் போட்டியிட்ட ஐ.தே கட்சித் தலைமையிலான ‘புதிய ஜனநாயக முன்னணி’. ஜே.வி.பி தலைமையிலான ‘தேசிய மக்கள் சக்தி’, சிவில் சமூகத்தின் பெயரால் போட்டியிட்ட ‘தேசிய மக்கள் கட்சி’ மற்றும் அனேகமான சுயேட்சை வேட்பாளர்களும், “தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டடோ விடுவிக்கப்படுவார்கள்” என்று உறுதி மொழிகளை வழங்கியிருந்தனர். அந்த வகையில் பாரத்தால், எவருமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்குத் தடையாக நிற்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது.  

இந்நாள் பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்தராஜபக்ச காலத்தில், இந்நாள் ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்டபோது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து குறுகிய காலத்துக்குள்ளேயே 12ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டார்கள். தவிர, புலிகள் அமைப்பின் முக்கிய பல தலைவர்களும் விடுவிக்கப்பட்டார்கள். அவ்வாறிருக்கும் போது நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பு அதிகாரம் ஆகியவற்றினூடாக அரசியல் தீர்மானமொன்றை மேற்கொண்டு தற்போது சிறையிலுள்ள 89தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் என்ன தயக்கம்? நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் படி, மக்கள் இனக்குழுமங்களாக விலகி நிற்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். ஆகவே, இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வகையில் ‘மறப்போம்! மன்னிப்போம்!’ என்ற அடிப்படையிலாவது அரசியல் கைதிகளை விடுவிக்க முடியுமல்லவா? எதிர்வருகின்ற காலங்களும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தேர்தல் காலமென்பதால், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் முக்கியமானதாக இருக்குமென நம்பலாம்.  

அரசியலமைப்பின் உறுப்புரை 34(1), இலங்கை குடியரசினுள்ளே நீதிமன்றம் எதிலும் எத்தவறுக்காகவும் குற்றத்தீர்ப்பு அளிக்கப்பட்ட வரான தவறிழைத்தவர் எவரினதும் விடயத்தில் ஜனாதிபதி;  

(அ) “கட்டற்ற ஒரு மன்னிப்பை, அல்லது சட்டமுறையான நிபந்தனைகளுக்கு அமைந்த ஒரு மன்னிப்பை வழங்கலாம்.  

(ஆ) அத்தகைய தவறாளிக்கு வழங்கப்பட்ட ஏதேனும் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதில், கால வரையரையற்ற அல்லது ஜனாதிபதி பொருத்தமென எண்ணக்கூடியவாறான அத்தகைய காலத்துக்கான காலந்தாழ்த்துதலை வழங்கலாம்.  

(இ) இத்தகைய தவறாளியின் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்குப் பதிலாக கடூரம் குறைந்த ஒரு தண்டனையை விதிக்கலாம். அல்லது,  

(ஈ) அத்தகைய தவறு தொடர்பில் விதிக்கப்பட்ட ஏதேனும் தண்டனை முழுவதையும் அல்லது அதன் 3/5பாகத்தை, அல்லது அத்தகைய தவறு தொடர்பில் வேறுவிதத்தில் குடியரசுக்கு சரியான ஏதேனும் தண்டம் அல்லது பறிமுதல் முழுவதையும் அல்லது அதன் ஏதேனும் ஒரு பாகத்தை தளர்த்தலாம்”.  

எனக் குறித்துரைக்கிறது. மேற்போந்த அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னைக் கொலை செய்ய முயன்றதாகச் சொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதியான ஜெனீவன் என்பவரை, தனது ஒரு வருட பதவிக்காலப் பூர்த்தியை முன்னிட்டு அரசியல் தீர்மானத்தை எடுத்து பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். குறித்த அரசியல் கைதி விடுதலை செய்யப்படும்போது, ஒரு வழக்கில் அவருக்கு பொலன்னறுவை மேல் நீதிமன்றம் 10ஆண்டுகால சிறைதண்டனை வழங்கியிருந்தது. அதனை அவர் மேல் முறையீடு செய்திருந்தார். அதுதவிர, பொலன்னறுவை மேல் நீதிமன்றிலும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலும் என இரண்டு குற்றவியல் வழக்குகள் விளக்கத்திற்கு எடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே, ஜனாதிபதியின் விஷேட உத்தரவுக்கமைய ஒரே நாளில் இருவேறு மேல் நீதிமன்ற வழக்குகளும் சட்டமா அதிபரினால் வாபஸ் பெறப்பட்டன. அதே வேளை, மேல் முறையீட்டு வழக்கினை குற்றம் காணப்பட்ட மேல் முறையீட்டாளர் மீளப் பெற்றுக்கொண்டார். அதனையடுத்து அவருக்கு பொது பன்னிப்பு வழங்கப்பட்டது.  

கடந்த காலங்களில் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உணவுத் தவிர்ப்பு கவனயீர்ப்புகளை மேற்கொள்வதும், அரசியல்வாதிகள் கைதிகளைச் சென்று பார்வையிட்டு வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் சிவில் சமூகங்கள் போராட்டங்களை செய்வதும் எனக் காலமழிந்ததேயின்றி சிறைக்கதவுகள் திறக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் உணவுத் தவிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடுமளவுக்கு கைதிகளின் உடல் நிலை இருப்பதாகத் தெரியவில்லை. நீண்ட நெடுஞ்சிறை வாழ்வில் உடல் உளரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள் சர்க்கரை வியாதி, இருதயநோய், குடல் அழற்சி போன்ற பல உபாதைகளுக்கு ஆளாகி மருந்தே உணவாகப் போன வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

தமது கட்புலனுக்கு அப்பால் இருக்கின்ற அதிகாரம் மிக்கவர்கள் சிறைக்கதவுகளைத் திறப்பதற்கு என்ன வகையான தந்திரோபாயத் திறப்புகளை தம் வசம் வைத்திருக்கிறார்கள் என நித்தமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் அரசியல் கைதிகள். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு வலுவூட்டியதன் பெயரில் விலங்கு பூட்டி சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரலுயர்த்த வேண்டிய சமூகக் கடமை நேர்மையான சிவில் சமூகங்களினது தோள்களில் தங்கியுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அரசியல் சார்ந்த பிரச்சினை. அதனை சட்ட ரீதியாகவன்றி, அரசியல் ரீதியாகவே கையாள வேண்டும். 10முதல் 26ஆண்டுகளாக தமது சத்தான வாழும் காலத்தை தொலைத்து இருள் சூழ்ந்த சிறையறைக்குள் உயிர் பறிக்கும் உபாதைகளுடன் சாவின் விளிம்பில் நின்று வலிகளோடு துடித்துக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளை நோக்கி அன்பையும் கருணையையும் மன்னிப்பையும் வலியுறுத்துகின்ற பௌத்த மஹா சங்க பீடங்களின் பார்வை மேலும் முன்நோக்கி நகரவேண்டுமென மக்களும் கைதிகளும் எதிர்பார்க்கிறார்கள்.  

ஜனாதிபதியை சந்தித்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் மறைமாவட்ட ஆயர்கள் குழு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு கேட்டிருந்தனர். அதற்கு ஜனாதிபதி, அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் சட்ட நடைமுறைகளின்படி விரைவுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். இங்கு சற்று சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால், ஜனாதிபதி கூறியுள்ள ‘சட்ட நடைமுறை’ எதுவென்ற மயக்கம் எழுகிறது. மிக நீண்டகால சிறைத்தடுப்பிலுள்ள அரசியல் கைதிகளின் விடயத்தை மேலும் மேலும் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளின் ஊடாக கையாள்வதாக இருந்தால், ஒவ்வொரு கைதிகளினதும் குற்றப்பத்திரங்களில் ஏராளமான சாட்சியாளர்களும் குற்றச் சாட்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அது கற்பனைக்கு எட்டாத காலத்தை தின்றுவிடும்.  

தமிழ் அரசியல் தரப்பினரில், அரசாங்கத்தின் பலமான முகவர்களாக இருக்கின்றவர்களும் சரி வலிமையான எதிர்பரசியலாளர்களாக இருந்தாலும் சரி அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தை சாலையேற்றி சந்தைப்படுத்தி சுயலாபமீட்ட முயலக்கூடாது. இந்த நாட்கள், தமது கட்சி அரசியலை வலுப்படுத்துவதற்கு அப்பால் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்கான நாட்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். இதுநாள்வரை அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் எதிரும் புதிருமான கருத்துக்களை வெளியிட்டு வந்த கடும் போக்காளர்களும் கூட கைதிகளை விடுவிப்பதற்கு பச்சைக்கொடி அசைப்பதைக் காணமுடிகிறது.  

நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளை கையாண்டு பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதை விடுத்து, வெறுமனே, ‘அவர் அதைச் செய்யமாட்டார். இவர் இதற்கு ஒத்துழைக்க மாட்டார்’ என, கிளி ஜோசியம் பார்ப்பது போன்ற விளையாட்டுகளை கைவிட வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் அரைவாசி யாவது கிடைக்கலாம், கிடைக்காமலும் இழுத்தடிக்கப்படலாம் என்கின்ற ‘அரசியல் தீர்வினை’ நோக்கி மாத்திரம் நாம் வீறுநடை போடுவோமானால், அன்றாட பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படும். இராஜதந்திர விடயங்கள் தவிர்த்து, இரண்டாம் வகுப்பு பிள்ளைகளைப் போல நாமும் தொட்டதுக்கெல்லாம் முகவரியற்ற சர்வதேசத்திடம் சென்று முறையிடுவதால் உள்நாட்டு முறுகல் அதிகரிக்குமேயன்றி முழுமையான தீர்வுக்கு வழிவகுக்கப் போவதில்லை. தமிழர்களை ஒரு தங்கியிருக்கும் அரசியலின் பால் வழிநடத்திய பிராந்திய விஸ்தரிப்புவாத சக்திகளும் மேலை நாட்டு சக்திகளும் அவர்களை முள்ளிவாய்க்காலில் அந்தரிக்கச் செய்துவிட்டு அமைதியாய் இருந்த உண்மையை ஞாபகத்துக்கொள்வது நல்லது.

நட்பு அரசாங்கத்திடம் பேசி எதையாவது சாதிக்க வேண்டுமாக இருந்தால், ஒருபுறம் ஒற்றுமையை வலியுறுத்திக்கொண்டு மறுபுறம் புதுப்புது கட்சிகளை ஆரம்பித்து கின்னஸ் சாதனை படைப்பதை விட்டு தமிழ் அரசியல் தரப்புகள் அடம்பன் கொடியாய் திரண்டு ஒற்றைக் கயிறாக திரட்சித்து வடம் பிடித்தாலன்றி வேறெந்த தனிவழிகளும் வெற்றியைத் தரப்போவதில்லை.    பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான உடைவாள்களை துருப்பிடித்துப் போகாமல் கூர்மைப்படுத்திக்கொள்வதற்கு ஏற்றாற்போல அவ்வப்போது ‘புலிகளின் மீள் எழுச்சி என்கின்ற செயற்கை மாயக்காட்சிகள் மெருகூட்டப்படுவதும் அரசியல் கைதிகளின் விடுதலையை இழுத்துப்பிடிக்கும் ஒரு நாணயக் கயிறாகத்தான் இருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையமாக வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆயுளை நீடித்துக்கொண்டு அரசியல் கைதிகள் விடயத்தில் தீர்மானமெடுக்க முடியாது போனல் அதனை மீள் பரிசீலனை செய்யவேண்டிய அரசாங்கத்தின் கடமையாகும்.      

விவேகானந்தனூர் சதீஸ்

 

 

 

 

Comments