திறமைக்கும் வறுமைக்கும் இடையில் போராடும் குத்துச்சண்டை வீரர்கள்!! | தினகரன் வாரமஞ்சரி

திறமைக்கும் வறுமைக்கும் இடையில் போராடும் குத்துச்சண்டை வீரர்கள்!!

வீரம் என்பது தமிழரின் இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் ஒரு விடயம் இதை யாராலும் எப்போதும் மறுக்க முடியாது. இலங்கையை போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் கைப்பற்றும் முன்னரும் கைப்பற்ற முயற்சி செய்த போதும் இலங்கையின் பூர்வீக குடிகளாக அறியப்பட்ட தமிழர்கள் அவர்களுக்கு தங்கள் வீரத்தை அறியச் செய்துள்ளனர். இலங்கை புவியியல் ரீதியாக கேந்திர முக்கியத்துவமிக்க இடத்தில் அமைந்துள்ளதால் காலத்துக்கு காலம் இலங்கை தேசம் படையெடுப்புக்களால் கலவர பூமியாகவே மாறி மாறி வருகின்றது. 

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இராமர் தலைமையில் படையெடுத்து வந்த குரங்குகள் படை இராவணனுடன் சண்டையிட்டு இலங்கையை தீயிட்டு எரித்ததாக இராமாயணம் கூறுகின்றது. 

இவ்வாறாக காலம் காலமாக இலங்கை அந்நியரால் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டாலும் சாம்பலிலிருந்து எழுந்து வரும் பீனிக்ஸ் பறவை போல் அற்புதமாக இலங்கை தீவு தன்னை புதுப்பித்து இத்தீவில் வாழும் ஜீவராசிகளை காத்து வருகிறது. இது இலங்கை தீவின் அதிசயங்களில் ஒன்று அது ஒருபுறமிருக்க. 

இலங்கைத் தீவை ஆக்கிரமிக்க முனைந்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் மோதி தங்கள் மக்களையும் மண்ணையும் மீட்க உயிரிழந்த மாபெரும் வீரர்களின் போர்க்குணம் இன்றும் எமது தேசத்தில் உயிர் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கின்றது. 

தமிழருடைய இதிகாசங்கள் வரலாறுகள் மாற்றி எழுதப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் இலங்கையில் அதுவும் வடக்கு மாகாணத்திலிருந்து புது அத்தியாயம் ஒன்றை எழுத புறப்பட்டுள்ளார்கள் ஏழு வீரர்கள். 

வடக்கில் இறுதியுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தமிழ் மக்களோ தமிழ் மாணவர்களோ குறிப்பிடும் படியான எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாமல் எதிர்காலம் ஒரு சூனியமான நிலையிலேயே வாழ்ந்து வரும் நிலையில் கல்வியிலும் விளையாட்டிலும் வடமாகாணம் கடைநிலையிலேயே இருந்து வருகிறது. 

வடக்கில் நடைபெற்ற இறுதியுத்தமானது தமிழ் மக்களின் வாழ்வையும் பொருளாதாரத்தையும்  சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ள நிலையில் அந்த யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான அனைத்து அரசியல் பாதைகளும் அடைக்கப்பட்டன. 

தமிழ் மக்கள் தாங்கள் பயணிப்பதற்கான பாதையை அவர்களே தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்கள். 1970ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு வழிகாட்ட நல்ல அரசியல் தலைவர்கள் அமையவில்லை. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இருந்த அரசியல் தலைவர்கள் வல்லாதிக்க சக்திகளின் ஏவலாளிகளாக, தமிழ் மக்களிற்கு வழிகாட்ட முடியாதவர்களாக பயணிக்க ஆரம்பித்தார்கள். 

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் வவுனியா மாவட்டம் ஒரு கேந்திர முக்கித்துவமிக்க பிரதேசம் யுத்த காலத்தில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து அகதிகளாக வந்த மக்களை தாங்கி வாழவைத்த பிரதேசம் வவுனியா என்றால் மிகையாகாது. அத்துடன் வடக்கையும் தென்பகுதியையும் இணைக்கும் நகரமாக விளங்கும் வவுனியாவிலிருந்து ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கை 'கிக் பொங்சிங்' குத்துச்சண்டை தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ள தெரிவாகியுள்ளார்கள்.  

இந்த செய்தியானது உண்மையிலேயே தமிழ் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் இதயங்களுக்கு இனிப்பான செய்தி. தமிழ் மக்களின் அவலங்களை அரசியலாக்கி அதில் குளிர்காய்பவர்களுக்கு இது ஒரு சாதாரண செய்தி. இலங்கையில் தேசிய அணிக்குள் தமிழர் ஒருவர் உள்வாங்கப்படுகிறார் என்பது சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு விடயமல்ல இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விளையாட்டுக்களில் சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற வேண்டுமாயின் இலங்கை தேசிய அணியில் இடம் பிடிக்க வேண்டும். அதன் பின்னர் சர்வதேச போட்டிகளுக்கு தெரிவாகி இலங்கை அமைச்சின் அனுமதியை பெற்று சர்வதேச போட்டிகளுக்கு செல்ல வேண்டும். 

வவுனியாவைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வட மாகாணத்திற்கு பல பதக்கங்களை பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்துள்ளனர். 

கடந்த 09- .12. -2019ஆம் ஆண்டு கண்டி நாவலப்பிட்டியில் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து வவுனியாவிலிருந்து சென்ற வீரர்கள் 18தங்கப்பதக்கங்கள் உட்பட மொத்தமாக 36பதக்கங்களை பெற்று வடக்கு மாகாணத்தை தேசிய ரீதியில் இரண்டாவது இடத்திற்கு இட்டுச் சென்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு மாத்திரம் இரண்டு தடவைகள் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை தட்டிக்கொண்டது. 

அவ்வாறாக தேசிய ரீதியில் பெருமை சேர்த்த வவுனியாவை சேர்ந்த மாணவர்கள் வடக்கு மாகாண அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படவில்லை, வவுனியா மாவட்ட செயலகத்தின் விளையாட்டுத்துறை திணைக்களத்தை பொறுத்தவரையில் குறித்த வீரர்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு நிலைமையே தொடர்ச்சியாக காணப்பட்டது. அரசினால் வழங்கப்படுகின்ற சலுகைகள், உபகரணங்கள் எதுவும் இந்த வீரர்களுக்கு வழங்கப்படுவதில்லை. நேரடியாக சென்று திணைக்களங்களை அணுகினால் சட்டம் மற்றும் வர்த்தமானி பிரகடனங்கள் இவ்வாறு தெரிவிக்கிறது என பதில் வழங்கப்படுகிறது. மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு திணைக்களங்கள் கடமைக்காக பணியாற்றுகின்றன. மாகாண ரீதியாக நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டியில் வவுனியா கடைசி நிலையான ஐந்தாம் இடத்தை தட்டிக் கொண்டது. 

அரச திணைக்களங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் உதவிகளை எதிர்பார்க்காது குறைந்த உபகரணங்களுடனும், பற்றாக்குறை அல்லது போசாக்கு உணவுகள் இல்லாத பட்சத்திலும் சாதிக்கும் வெறியுடன் குத்துச்சண்டை வீரர்கள் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமாரின் தலைமையில் கடுமையான பயிற்சிகளை பெற்று சாதனைகளை நிலைநாட்டி சர்வதேச போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். 

இலங்கையில் கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் கீழ் 68வது விளையாட்டாக பதிவு செய்யப்பட்டுள்ள பிரஞ்சு சவாட் கிக் பொக்சிங் குத்துச்சண்டையானது 2017ஆம் ஆண்டு தொடக்கம் அவ் அமைப்பின் தலைவரும், சர்வதேச கிக்பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய போட்டிகளாக நடைபெற்று வருகின்றது. 

வடக்கு மாகாணத்தின் தலைசிறந்த 'கிக் பொக்சிங்' மற்றும் 'வூசூ பொக்சிங்' பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில் கடும் பயிற்சிகளை பெற்ற ரி.நாகராஜா, எஸ்.சஞ்சயன், கெ.நிரோஜன், பி.ராகுல் வி.வசிகரன் மற்றும் ஆர்.கே. கெவின் ஆகிய குறித்த மாணவர்களின் குத்துச்சண்டை விளையாட்டு போட்டிகளில், தேசிய மட்டத்தில் தலைசிறந்த சர்வதேச பயிற்றுவிப்பாளர்களால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு தேசிய ரீதியில் தங்கப்பதக்கங்களை சுவீகரித்த வீரர்களுக்கு அவர்களின் திறமையின் அடிப்படையில் சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய கிக் பொக்சிங் குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள ஏழு வீரர்களும் எதிர்வரும் 21-/01-/2020பாக்கிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றுகிறார்கள். வவுனியவைச் சேர்ந்த ஏழு வீரர்களுமே வறுமைகோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள். ஒரு வீரரின் பயணத்திற்கு மொத்தமாக மூன்று இலட்சங்கள் செலவாகிறது. அவ்வளவு தொகையை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் எவருமே செலுத்தும் நிலையில் இல்லை இருந்தபோதும் இவ் வீரர்கள் அங்கம் வகிக்கும் வடமாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை அமைப்பானது ஊடகங்கள் மூலமாகவும், மகஜர்கள் மூலமாகவும் இவ் வீரர்களுக்கு உதவியளிக்குமாறு பகிரங்க கோரிக்கையை விடுத்திருந்தது. 

அந்த வகையில் வடக்கு மாகாணத்தை பிரதிபலிக்கும் அமைச்சர் ஒருவருக்கும் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட வீரர்களால் மகஜர் கையளித்திருந்தனர். இக்கட்டுரை எழுதப்படும் வரை அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. 

தமிழ் தேசிய அரசில்வாதிகளாக இருக்கலாம், எதிர்நிலை அரசியல்வாதிகளாக இருக்கலாம் உரிமைக்காகவும், அபிவிருத்திக்காகவும் அரசியல் கடையை விரிப்பவர்கள் குறித்த ஏழு மாணவர்களின் எதிர்காலத்தையும் இலங்கைக்கு அவர்கள் பெற்றுக் கொடுக்க போகும் கௌரவத்தையும் மறந்து போயுள்ளனர். 

வடக்கை பொறுத்தவரையில் இலங்கையின் தேசிய கட்சிகள் ஒரு கொள்கையுடன் செயல்பட்டு வருகின்றது. தமிழ் அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்களாகவும், அவர்களை காக்க வந்த தேவ புருசர்கள் போல் வேடமிடுபவர்கள் இம்மாணவர்களை கண்டுகொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விடயம். 

வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த ரி.நாகராஜா சிறந்த குத்துச்சண்டை வீரன் தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றி பத்து பதக்கங்களுக்கு மேல் பெற்றிருக்கிறார். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த இவரை தாயார் கச்சான் வியாபாரம் செய்து கற்பித்து வருகிறார். இவர் வவுனியா பண்டாரிக்குளம் விபுலாந்தா கல்லூரியின் மாணவராவர். 

அதே போல் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த எஸ். சிறிதர்சன் வடக்கில் நடைபெற்ற யுத்தமொன்றில் சிறுவயதிலேயே தனது தாயையும் தந்தையையும் பறிகொடுத்தவர். பெரிய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் இவர் பல தேசிய குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி பல பதங்கங்களை பெற்றவர். 

வவுனியாவை சேர்ந்த எஸ்.சஞ்சயன் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்தவர் சிறந்த குத்துச்சண்டை வீரர், இவரது தந்தையார் சாரதியாக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து வவுனியா நகரசபை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடும் இவரது கனவு ஒரு பொலிஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பதே. 

வவுனியா உக்குளாங்குளத்தில் வசிப்பவர் பி.ராகுல், சிறந்த வீரன் படிப்பிலும் கெட்டிக்காரன் தந்தையார் சிற்றுண்டிகள் மற்றும் பொதியிட்ட உணவுகள் வியாபாரம் செய்பவர். தேசிய ரீதியிலான குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பி.ராகுல் பல பதக்கங்களை பெற்றுள்ளார். 

வவுனியாவை சேர்ந்த வி.வசிகரன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார் சிறந்த பழுதூக்கும் வீரரான இவர் 2019ஆம் ஆண்டு மாத்திரம் தேசிய குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி மூன்று தங்க பதக்கங்களை பெற்றுள்ளார். 

வவுனியாவை சேர்ந்த கெ.நிரோஜன் நெலுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன். படிப்பிலும் விளையாட்டிலும் மிகவும் கெட்டிக்காரன் குத்துச்சண்டையில் மிகச்சிறந்த வீரன் இவரது தந்தையார் 'மிக்சர்' வியாபாரம் ஒன்றை மெற்கொண்டு வருகிறார். 

வவுனியவைச் சேர்ந்த ஆர்.கே.கெவின் இவர் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஆறில் கல்வி பயின்று வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக குத்துச்சண்டை பயிற்சி மற்றும் தேசிய போட்டிகளில் பங்கு பற்றி பல பதக்கங்களை பெற்றவர். 2019ஆம் ஆண்டு மாத்திரம் நான்கு பதக்கங்களை பெற்று சாதனை புரிந்துள்ளார். வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி அகில இலங்கை ரீதியில் மிகச்சிறிய வயதில் அதாவது பதினொரு வயதில் தேசிய குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். இவரது தந்தையார் ஊடகவியலாளராக பணியாற்றிவருகிறார். 

வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்கள் போன்ற சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் அவைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் திணறிவருகின்றனர். சமூகஞ் சார்ந்து சிந்திக்கும் திறன் அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் அருகி வருகின்றது விளையாட்டத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்தில் இளைஞர்களின் வினைத்திறனை அதிகரிக்க முடியும். விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் இன்றைய இளைஞர்கள் கையடக்க தொலைபேசியின் விளையாட்டுக்களில் நாட்டங்கொண்டு தங்கள் எதிர்காலத்தை தொலைத்து வருகின்றனர். 

யுத்தகாலத்தின் பிற்பாடு வடக்கிலிருந்து ஏழு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது அவ்வீரர்களின் தியாகத்தையே வெளிக்காட்டுகிறது. எந்த விளையாட்டுக்கும் அனுமதி அளிக்கும் பெற்றோர் குத்துச்சண்டை விளையாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் என்றால் தங்கள் பிள்ளைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர் மேல் வைத்த நம்பிக்கை என்றால் மிகையாகாது. 

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் 19-.01.-2020பாகிஸ்தான் நோக்கி பயணமாகவிருக்கும் நமது குத்துச்சண்டை வீரர்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், உதவிமனம் படைத்த வள்ளல்களுக்கும் வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை அமைப்பு இக்கட்டுரையூடாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

எதிர்காலத்தில் அவ்வீரர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடி வெற்றியிலும் அனைவரதும் உதவி நிச்சயம் பங்களிப்பு செய்யும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  

சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டையில் கலந்துகொண்டு இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்து வடக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்ப்போம் என்ற சவாலுடன் பயணிக்கவிருக்கும் எமது வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் தெரிவிப்போம். 

வன்னியத்தேவன்

Comments