தேசிய பாடசாலை அதிகரிப்பின் நன்மையும் தீமையும் | தினகரன் வாரமஞ்சரி

தேசிய பாடசாலை அதிகரிப்பின் நன்மையும் தீமையும்

நாடளாவியரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை  ஆயிரமாக அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதே கருத்தை பதவியில்  இருந்து விலகிய நல்லாட்சி அரசும் கொண்டிருந்தது. ஆயினும் அதனை  நடைமுறைப்படுத்த முன்னர் அரசாங்கம் மாறிவிட்டது. 

உத்தேச ஆயிரம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக  தரமுயர்த்தப்படுவதன் அடிப்படையாக ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று  பாடசாலைகளை தரமுயர்த்தப்போவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

தற்போது நாடளாவியரீதியில் 324பிரதேச செயலாளர் பிரிவுகளில்  10,194பாடசாலைகள் உள்ளன. இவற்றுள் தற்போது 374தேசிய  பாடசாலைகள் இயங்குகின்றன. இவை தவிர ஏனைய அனைத்தும் மாகாண சபைகளின் கீழ்  இயங்குகின்றன.  

ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு நாட்டை  ஆட்சி செய்ய பாரம் எடுத்தபோது 352தேசிய பாடசாலைகள் இருந்தன.  அவ்வரசாங்கத்தின் நான்கு வருட ஆட்சிக் காலத்தினுள் 22பாடசாலைகள் தேசிய  பாடசாலைகளாக உருவாக்கப்பட்டன.  

இலங்கையில் தேசிய பாடசாலைகள் என்றதொரு பாடசாலை வகை 1985ம்  ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1985ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில்  கடமையாற்றினார்.  

1985ம் ஆண்டு கல்வித் துறையில் சில புரட்சிகர மாற்றங்களை  கொண்டுவருவதற்காக கல்வி வெள்ளையறிக்கையொன்று வெளியிடப்பட்டது.  இவ்வெள்ளையறிக்கையிலேயே தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம்  குறிப்பிடப்பட்டிருந்தது. 

தேசிய பாடசாலை என்பது நாட்டில் உள்ள மூவின மாணவர்களும் ஒன்று  சேர்ந்து பயில்வதற்கான பாடசாலைகள் எனும் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும்  எனும் கருதுகோள் முன்வைக்கப்பட்டது. இந்த நன்னோக்கத்தில் கொழும்பு நகரில்  உள்ள றோயல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி, நாலந்தா கல்லூரி, டி.எஸ்.சேனாநாயக்கா  கல்லூரி, குருநாகல் மல்லியதேவ ம.வி, கண்டி தர்மராஜ கல்லூரி, காலி றிச்மன்ட்  கல்லூரி உள்ளிட்ட பிரபல பாடசாலைகள், பிரசித்தி பெற்ற நகரங்களில் இருந்து 18  பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.  

தேசிய பாடசாலைகள் என்பது கல்வி, பெளதீக வளம், நிதிவளம்  கற்பித்தலுக்கான ஆசிரியர் வளம் என்பன தாராளமாக கொண்ட உயரடதர அபிவிருத்தி  வளம் கூடிய பாடசாலைகள் என்ற அடிப்படையில் நோக்கப்பட்டது. இப்பாடசாலைகளுக்கு  அரச உதவிகளை குறைத்து பாடசாலை பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி  சங்கம், பாடசாலை சமூக நலன் விரும்பிகள் ஆகியோராலும், தனவந்தர்களாலும்  வழங்கப்படும் உதவிகளின் மூலம் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனும்  எதிர்பார்க்ைக இருந்தது.  

1987ம் ஆண்டு நாட்டின் அரசியலமைப்பில் 13வது திருத்தச் சட்டம்  கொண்டுவரப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. 13வது திருத்தச் சட்டம்  மூலம் கல்வி எனும் விடயம் மாகாண சபைகளுக்கு முழுமையாக கையளிக்கப்பட்ட  விடயமாக காணப்பட்டது. 

இந்த சூழ்நிலையில் பாடசாலைகள் யாவற்றையும் மாகாண சபைகளிடம்  கையளித்துவிட்டு மத்திய அரசின் கீழ் கல்வி எனும் விடயதானத்தின் கீழ்  பாடசாலைகள் கட்டமைப்பு எதுவும் காணப்படாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில்  மத்திய கல்வி அமைச்சின் கீழ் சில பாடசாலைகளை வைத்திருக்க வேண்டிய நிலை  உருவானது. இதன் காரணமாகவே நாட்டில் உள்ள பாடசாலைகள் தேசிய பாடசாலைகள்,  மாகாண பாடசாலைகள் என பிரிக்கப்பட்டன.  

தேசிய பாடசாலைகளுக்குரிய நிர்வாகம் மத்திய கல்வி அமைச்சின்  கீழும், மாகாணப் பாடசாலைகளின் நிருவாகம் மாகாண சபைகளின் கீழும்  கொண்டுவரப்பட்டன. தேசிய பாடசாலைகளுக்கான இணைப்பு காரியாலயமாக மாகாண கல்வித்  திணைக்களம் இயங்கியது. இம்மாகாண கல்வித் திணைக்களம் மத்திய, மாகாண  அரசுகளின் கொள்கைகளை அமுல்படுத்தும் அலுவலகமாக கொள்ளப்பட்டது. மாகாண கல்வி  அமைச்சின் செயலாளரை மாகாண ஆளுனரும், மாகாண கல்விப் பணிப்பாளரை அரச சேவை  ஆணைக்குழுவும் நியமித்தன.  

1987ம் ஆண்டும் அதற்கு முன்னரான 1985கல்வி வெள்ளையறிக்கை  காலப்பகுதியிலும் ஒரு பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு  பின்வரும் நியமங்களை கல்வி அமைச்சு அளவுகோலாக கொண்டது.  

பாடசாலை மொத்த மாணவர் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கு மேலும் இருத்தல் வேண்டும். 

பாடசாலையில் போதுமானளவு விஞ்ஞான, கலை, வர்த்தக வகுப்புகளை கொண்டதாகவும் கல்லூரி மட்டத்தில் இருத்தல். 

க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் திருப்தியான மட்டத்தில் இருத்தல். 

மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கட்டிடம், தளபாடம், உபகரணங்கள், ஏனைய வசதிகள் போதுமானளவு இருத்தல். 

பாடசாலை அபிவிருத்திக்கான நிதிகளை வழங்கும் வகையில் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன பலமான நிலையில் காணப்படல். 

பொதுவாக தரமுயர்த்தப்பட வேண்டிய பாடசாலை சமூக, பிரதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபல பாடசாலையாக இருத்தல். 

இதன் பின்னர் 1990ம் ஆண்டிற்குப் பின்னர் ஒரு பாடசாலையை தேசிய  பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு பின்வரும் நியமங்கள் அளவு கோலாக  கொள்ளப்பட்டன.  

பாடசாலை மாணவர்  எண்ணிக்கை 2000அதற்கு மேலும். 

க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில் 200அதற்கு மேலும் மாணவர்கள் இருத்தல். 

தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படுவதற்கு முன்னரான மூன்று வருட  காலப்பகுதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மூன்றிலொரு  பங்கினர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றிருத்தல்.  

மாணவர்களுக்கு தேவையானளவு தளபாடங்கள், கட்டிடங்கள், கற்பித்தல் உபகரணங்கள் காணப்படுதல். 

கற்பித்தலுக்கு தேவையான வளங்கள் இருத்தல்.  

க.பொ.த சாதாரண தர, உயர்தர மாணவர்களுக்கான ஆய்வுகூட வசதிகள் இருத்தல். 

பாடசாலையின் வசதிகள், சேவைகள் கட்டணம் வருடாந்தம் 15,000க்கு மேற்படல். 

பிரதேசத்தில் முன்னணி பாடசாலையாக திகழ்தல். 

உயிரோட்டமுள்ள பாடசாலை அபிவிருத்தி சங்கம். 

உயிரோட்டமுள்ள பழைய மாணவர் சங்கம். 

இதன் அடிப்படையில் 1990க்கு பின்னர் தேசிய பாடசாலைகளின்  எண்ணிக்கை 37ஆகவும் 1994இல் 165ஆகவும் 2000ம் ஆண்டளவில் 317ஆகவும் 2019  இல் 374ஆகவும் அதிகரித்தது. 1991க்கு பின்னரே வடக்கு, கிழக்கு, மலையகம்,  தென், மேல் மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் பாடசாலைகளில் முன்னணி பாடசாலைகள்  தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டன.  

இவ்வாறான நியமங்களுக்கு மாற்றமாக அரசியல் தலையீடுகளின்  அடிப்படையில் நியமங்களுக்கு உட்படாத 40பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக  தரமுயர்த்தப்பட்டதாகவும் இவற்றில் எவ்வித கல்வி முன்னேற்றத்தையும்  காணமுடியவில்லையெனவும் 2003ம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழு அதன்  அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியது.  

தேசிய பாடசாலைகளின் கல்விப் பண்புத் தரங்களை மேற்பார்வை  செய்யும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுவருகிறது. எனினும் மாகாண  கல்வித் திணைக்களம், வலயக் கல்வி அலுவலகங்கள் என்பவற்றையும் மேற்பார்வை  செய்யுமாறு கல்வி அமைச்சு கோருகின்றது.  

எனினும் தேசிய பாடசாலை நிருவாகத்தினர் மட்டத்தில் ஒருவகையான  தாழ்வுச்சிக்கல் நிலை காணப்படுகிறது. நாம் தேசிய பாடசாலை எம்மை கல்வி  அமைச்சு அதிகாரிகள் மட்டும் மேற்பார்வை செய்ய வேண்டும். ஏனைய அதிகாரிகளது  மேற்பார்வையை ஏற்றுக்கொள்ளாத நிலை காணப்படுகின்றது. 

கல்வி அமைச்சு அதிகாரிகளின் மேற்பார்வை என்பது மேல்மாகாண  மட்டத்தினை தவிர ஏனைய மாகாணங்களில் செயற்படுவதாக இல்லை. கட்டுரையாளனாகிய  எனது அனுபவத்தில் எனது பிரதேசத்தில் 1993காலப்பகுதியில் தேசிய பாடசாலை  முறைமை கொண்டுவரப்பட்டது. ஆனால் சுமார் 25வருடகாலமாக கல்வி அமைச்சின்  அதிகாரிகள் குழுவாக சமூகமளித்து தேசிய பாடசாலைகளை பரிசோதனை செய்த சம்பவம்  இடம்பெறவில்லை. 

மாகாண சபைகளின் நிருவாகத்தில் இருந்து தப்பித்து கொள்ளும்  முயற்சியாகவே அதிகமான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்திக்  கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.  

மாகாண பாடசாலைகளை மாகாண சபை உறுப்பினர்களின் தளங்களாக  பாவித்துவரும் அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பாடசாலைகளை தமது  கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தமது தளங்களாக பாவித்து வருவதனையும்  அவதானிக்கலாம். 

தேசிய பாடசாலைள் வளர்ந்த, அபிவிருத்தியடைந்த பாடசாலைகளாகும்.  இவற்றை மென்மேலும் அபிவிருத்தி யெ்ய வைக்க வேண்டுமெனில் அதன் பிரதான பங்கை  பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஏற்க வேண்டுமென கல்வி அமைச்சு, அரசாங்கம்  என்பன எதிர்பார்க்கின்றன. இவ்வாறான பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் ஏனைய  வசதிகளை வழங்கும், அன்பளிப்புச் செய்யும் தனவந்தர்களுக்கு வருமானவரி  விலக்கும் வழங்கப்படுகிறது. 

இவ்வாறான தனவந்தர்களை கிராமிய மட்டத்தில் காண்பது அரிது.  ஆனால் கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை போன்ற பெரு நகரங்களில் காணக்கூடிய  வாய்ப்புண்டு. இவர்கள் இப்பணிக்கென பெரிதும் உதவுகின்றனர். 

இந்த சூழ்நிலையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த கையோடு 1000  தேசிய பாடசாலைகளை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது ஏற்கனவே உள்ள 374  தேசிய பாடசாலைகள் தவிர்ந்த 626தேசிய பாடசாலைகளா அல்லது புதிதாக 1000தேசிய  பாடசாலைகளா என்ற விடயம் தெளிவற்ற நிலையில் உள்ளது. 

கடந்த அரசாங்கத்தினால் 2017செப்டம்பர் 26ம் திகதிய அமைச்சரவை  கூட்டத்தில் தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கான தேசிய கொள்கையொன்று  அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையில் பின்வரும் தகைமைகள் தேசிய  பாடசாலையாக தரமுயர்த்தப்படவேண்டிய பாடசாலைக்கு இருத்தல் வேண்டுமென  அவசியப்படுத்தப்பட்டுள்ளது. 

தரம் 06முதல் தரம் 13வரையான வகுப்புக்கள் மட்டும் இருத்தல் வேண்டும். 

தரம் 06முதல் தரம் 13வரையான வகுப்புக்களில் ஆகக் குறைந்தது 750மாணவர்களை கொண்டிருத்தல் வேண்டும். 

ஒவ்வொரு வகுப்புத்தரங்களிலும் 05சமாந்தர வகுப்புக்களுக்கு மேற்படக் கூடாது.  

தெரிவு செய்யப்படும் பாடசாலை சமூக இணக்கம், ஒற்றுமை,  இனரீதியான பாகுபாடற்ற சகலரும் ஒன்றிணைந்து கற்கக்கூடிய பாடசாலையாக  இருத்தல் வேண்டும். 

க.பொ.த உயர்தர வகுப்பு பிரிவுகள் அனைத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.  

சகல பெளதீகவள வசதிகளும் இருத்தல் வேண்டும். ஆய்வு கூடம்,  செயற்பாட்டறை, கணனி கூடம், விளையாட்டு மைதானம், அழகியல் கலை கூடங்கள் என்பன  அத்தியாவசியமாகும். 

தேசிய பாடசாலையாக்கப்படுவதற்கு முந்திய ஐந்து வருடங்களுள்  பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 25வீதம் கலை, வர்த்தக பிரிவுகளில்  பல்கலைக்கழக அனுமதியையும் 20வீதம் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்ப  துறைகளில் பல்கலைக்கழக அனுமதியையும் பெற்றிருத்தல் வேண்டும். 

ஐந்து வருடகாலத்திற்குள் தேசிய, சர்வதேச போட்டிகளுக்கு மாணவர்களை அனுப்பியிருத்தல் வேண்டும். 

பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன ஆர்வத்துடன் இயங்கி வேலைத்திட்டமொன்றை மூன்று வருடத்திற்குள் செய்திருத்தல். 

பொதுப்போக்குவரத்துள்ள பிரதேச பாடசாலையாக இருத்தல். 

மண்சரிவு, இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகாத பிரதேசம் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

ஒவ்வொரு 20,000நபர்களுக்கும் ஒரு தேசிய பாடசாலை. 

எதிர்கால அபிவிருத்திக்கு தேவை யான நில கிடைப்பனவு. 

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு பாடசாலை. தற்போது தேசிய பாடசாலை இல்லாத பிரதேசத்திற்கு முன்னுரிமை. 

ஆண், பெண் கலவன் பாடசாலையாக இருத்தல்.  

இன்று பெற்றோர் விசேடமாக கிராமப்புறங்களை சேர்ந்தோர் தமது  பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளிலும், தேசிய பாடசாலைகளிலும் கற்பதையே  விரும்புகின்றனர். 

கிராமிய மட்டத்தில் சகல வளங்களையும் கொண்டு நகர்ப்புற  பாடசாலைகளுக்கு இணையான தேசியப் பாடசாலைகளை உருவாக்குவதன் மூலம் பெரும் பணச்  செலவில் நகர்ப்புற பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்த்து விடும் மோகத்தை  குறைக்க முடியும் என கல்வி அமைச்சும், புதிய ஜனாதிபதி கோட்டாபாயவும்  தீர்மானித்துள்ளனர். 

ஜனாதிபதி கோட்டாவின் திட்டம் அமைச்சரவை ஏற்கனவே  அங்கீகரித்துள்ள கொள்கைக்கு அமைவானதாக இருப்பின் சாத்தியமாகும். இல்லையேல்  மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். 

புதிய தேசிய பாடசாலைகள் உருவாவதற்கு மாகாண சபைகளின்  ஒத்துழைப்பு, ஒத்திசைவு அவசியமாகும். ஏனெனில் தேசிய பாடசாலை என்ற மாயைக்கு  தம்மிடம் உள்ள முன்னணி மாகாண சபை பாடசாலைகளை இழப்பதற்கு அவை விரும்பாத  சூழ்நிலையும் உருவாகும். 

ஆழமாக சிந்திக்கும் போது தேசிய பாடசாலைகள் உருவாகுவதால்  நன்மைகளும் தீமைகளும் சரிசமமாக இருக்கவே செய்கின்றன. நீண்ட காலம் கல்விச்  சேவையில் இருந்தவன் என்ற வகையில் தேசிய பாடசாலை முறைமை மாகாண மட்டத்தில்  மேல் மாகாணத்தைத் தவிர தோல்வியடைந்த ஒன்றாக உள்ளதை துணிந்து கூறுவேன். 

ஏ.எல்.எம். முக்தார் 
ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர்

Comments