நாள், கோள், நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள், நற்பலன்

மேஷம் 

மேஷ ராசி அன்பர்களே, சுறுசுறுப்பும் வேகமும் ஆட்கொண்ட மனிதர்களாய் இலக்குகளை நோக்கி விரைந்து செயல்படத் தொடங்கிவிடுவீர்கள். சாதுர்யமும், விவேகமும் ஒன்றாய் இணைய எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றிகளை நோக்கியே நகரும். இதனால் உற்சாகம் பெருகி உலகமே தனது காலடிக்குக் கீழ் வந்துவிட்டது போன்ற உணர்ச்சி எழும்பும். திருமணத்திற்காகவோ, குழந்தை பாக்கியத்திற்காகவோ காத்திருந்தவர்கள் நன்மை அடைவார்கள், இறைவனின் நல்லாசி அவர்களுக்குக் கிட்டும். கன்னியர்களுக்கும் காளையர்களுக்கும் வசந்த காலம் உதயமாகும். காதலர்களின் கனவுகள் நிறைவேற சந்தர்ப்பங்கள் உண்டு. வியாபாரங்கள் செழிக்கவும், புதியன தொடங்கவும், கல்வியில் வெற்றியும், உத்தியோகங்களைப் பெறுவதும், பெற்றிருப்பவர்கள் முன்னேற்றத்தையும் அடைய வாய்ப்புகள் அதிகம்.  

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, தலை தப்பியது தலைப் பாகைதான் போனது என்ற நிம்மதி இந்த வாரம் உங்களுக்கு அமையும். தொந்தரவுகளால் சிதறிப் போயிருந்த காரியங்களில் முன்னேற்றங்கள் உருவாகும். முழுதான வெற்றிகள் என்றில்லாவிட்டாலும் மூக்கு அறுந்து, தலைக் குனிவு வராத அளவு பல விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டு விடும். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்களவெற்றி அல்ல மானம் போகாதவகையில் காக்கப் படுவீர்கள். சிந்தையை உலுக்கும் வியாதிகளும் வரத்தான் செய்யும், ஆனால் கால ஓட்டத்தில் அவை கரைந்து மனதில் நிம்மதியும் உருவாகும். இருப்பினும் எரிச்சல் மற்றவர்கள் மீது சம்பந்தமில்லாமல் பாய்வது அடிக்கடி நடக்கும். இதனால் சூழ உள்ளவர்களின் விரோதங்களை மிக இலகுவில் சம்பாதித்துக் கொள்வீர்கள். 

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, மனதில் இருந்து வந்த அழுத்தங்கள் குறைந்தும், எடுப்பவைகளும், தொடுப்பவைகளும் வெற்றியில் முடியப் போகிறது என்ற நம்பிக்கையும் எதிர் பார்ப்பும் மனதில் துளிர் விடத்தொடங்கி இருக்கும். ஆம் இது வசந்தத்தின் ஆரம்பம் போல் தோன்றும். தலையின் பாரம் இறக்கப்பட்டு எளிதாக வாழ்க்கையை நகர்த்தத் தொடங்கலாம். உங்கள் முகத்தில் புன்னதை தவழவும், மனதில் அமைதி நிலவவும் நேரம் வந்து விட்டது. முதலில் தொழில் துறையைப் பார்ப்போம், விட்டேனா பார் என்று போட்டியிட்டுக் கொண்டிருந்த பங்காளிகள் விட்டுக் கொடுத்து நடக்கத் தொடங்கி இருப்பார்கள். சரளமாகத் தொழிலைத் திட்டமிட வாய்ப்புகள் வரும். தவற விட்டு விடாதீர்கள்.  

கடகம்

கடக ராசி அன்பர்களே, இப்படிச் செலவாகிறதே எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று யோசிக்காதீர்கள், அந்த விரயங்களுக்கு வேண்டிய பணம் உடனுக்குடன் வந்து சேரும். ஆன்மீகச் செலவுகளை விட அநியாயமானவைகளே அதிகமாக இருக்கும். சூசகமாகப் பேசும் உங்களது வாய்ச்சாலம் விவாதங்களை பணம் விளையும் களமாகவும் மாற்றி விடும். இதனால் பணமுடக்கம் இருக்காது. சில இழப்புகளை, சமாளிக்க முடியாத இடைஞ்சல்களை எதிர்கொள்ளவும் நேரும். சத்ருக்கள் என்று இனம் காணப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்கவும். சில தலைக் குனிவுகளும் கூடவே வந்து சேரும். நீண்ட தூரப் பயணங்கள் வரவும் வாய்ப்புள்ளது. 

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, நல்ல காலம் பொறந்தாச்சு என்று குறவர்கள் உங்கள் வீட்டின் முன் நின்று ராகம் போட்டால் கை நிறையக் கொடுத்து அனுப்புங்கள். தடுமாறிக்கொண்டிருந்த விஷயங்களை மளமளவென்று நிறைவேற்றிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது. என்ன செய்யப் போகிறோம் என்று யோசிப்பதைவிட எப்படியெல்லாம் முடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்ட ஆரம்பியுங்கள். மனதில் பாரமாய் இருந்தவைகள் இனிமேல் மனதில் அணிகலன்களாக மாற பல சாதனைகளுக்குச் சொந்தம் கொண்டாடலாம். தலை நிமிர்ந்து வழக்கமான சாகசப் புன்னகையோடு உலகை ஒரு பார்வை பார்த்து விட்டு நம்பிக்கையுடன் தொழிலில் இறங்குங்கள். மதிப்புக் குறையாத தங்கமாய் மீண்டும் ஜொலிக்கலாம். இல்லறத்தில் கலகலப்புகளுக்குப் பஞ்சமிருக்காது, சமூகத்தின் பார்வையில் உங்கள் கௌரவம் கட்டிக் காக்கப்படும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, தடம் புரண்டு தடுமாறும் வாழ்வாகிவிட்டதே என்று குழம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். ஒர் உண்மை என்னவென்றால், வாழ்க்கை தடம் புரளவில்லை திசை மாறித்தான் போயிருக்கிறது, அதை வழிப்படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். குடும்பத்தின் உள்ளும் ரகளைகள் தான், அது கொஞ்சம் கொஞ்சமாக இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போய்விடும். தொழிலைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

குழிதோண்டிப் புதைப்பேன் என்று சத்ருக்களும், வேண்டியவர்களும் முன்னிற்பார்கள். யார், எது, எப்படி இருந்தாலும் உங்கள் நம்பிக்கையை அசைக்க எவராலும் முடியவே முடியாது. ஆனால் இது பொறுத்துப் போக வேண்டிய காலமாகிப் போய்விட்டது. உங்களுடைய சொத்துக்களான குடும்பமும், தொழிலும் புதிய உருக்கொண்டு எழப்போகிறது. அதைக் கொஞ்ச நாள் கழித்துத்தான் உணர்ந்து கொள்ள முடியும். வருமானங்களில் வீழ்ச்சிகள் ஏற்பட வழியில்லை.  

துலாம்

துலா ராசி அன்பர்களே, ஏற்றங்கள் அதிகமாகவும், இறக்கங்கள் சிறியதாகவும் உள்ள வாரம் அமையும். என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல் சில காரிய நஷ்ட்டங்களும் கஷ்டங்களும் இடையிடையே வந்து போகத்தான் செய்யும். செலவுகள் அதிகமாக இருக்கின்ற போதிலும், பணப் புழக்கங்களில் சிக்கல்கள் தோன்றாது. கை நீட்டிச் செலவழிக்கப் போதுமானதாக நிதி நிலைமை நன்றாகவே அமைந்திருக்கும். குடும்பத்தில்; அமைதியும் சந்தோஷமும் நிலவும். உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்குக் குறையப் போவதில்லை. என்றும் போல் தலை நிமிர்ந்தே நடப்பீர்கள். குழந்தைப் பாக்கியம் தடைபட்டு இருந்தவர்களுக்கு நல்ல யோகம் கிட்டும். இருக்கும் பிள்ளைகளால் பெருமிதப்படக் கூடிய நிலைமை வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, வழக்கத்திற்கு மாறாக வாயில் வந்தபடி வைது கொண்டிருந்த உங்களுக்குக் கட்டுப்பாடு தானாக வந்து விடும், வாக்கில் இனிமையும் தென்படும். இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்களின் சகாயங்களும், சலுகைகளும் கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலும் குடும்பமும் சீரான வழியில் செல்லும். வேண்டத்தகாத மனப் பீதிகள் மறையும். அடி மனதில் அமைதி குடி கொள்ள வாய்ப்புகள் அதிகம். குடும்பத்திற்குள்ளேயோ, வெளி உறவுகளோ ஒத்துப் போகும் நிலை உருவாகும். ஒதுங்கிப் போனவர்கள், வெறுப்பைக் காட்டியவர்கள் உங்களில் அன்பு செலுத்தத் தொடங்குவார்கள். தொழிலில் மறுமலர்ச்சி உண்டாக இடமுண்டு. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம், புதிய முதலீடுகளால் பெரும் பயன் கிடைக்க வாய்ப்பில்லை.  

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, சிரமங்களும் சிக்கல்களும் வாழ்க்கையின் அங்கமாகிப் போய் விட்டதினால் எந்தச் சிரமங்களும் பெரிதாகத் தோன்றாது. மனதில் அமைதியும் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் வல்லமையும் எளிதாக வளர்ந்து விடும். குடும்பத்தினர்கள் இப்போது அமைதியாகவும், உங்களுக்கு ஆதரவாகவும் இயங்கத் தொடங்குவார்கள். பாரிய நன்மைகள் இல்லையென்றாலும் அநாவசியத் தொல்லைகள் அங்கிருந்து வந்து உங்களைத் தாக்காது. மூத்தோர்களின் ஆசீர்வாதங்களும், அனுதாபங்களும் உங்கள் பக்கம் திரும்பிவிடும். இதனால் பெரும் பலம் அடைவீர்கள். எதிரிகள் ஒதுங்கிப் போய்விடுவார்கள்.

மகரம்

மகர ராசி அன்பர்களே, முகத்தில் சிரிப்பும் செழிப்புமாகவும் இருக்கும் பிரச்சினைகளை முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டு அலட்டிக் கொள்ளாமல் வாழ்கிறீர்கள். விரயங்கள் பெருகி வந்தாலும், அவைகளைக் கையாளுவதில் பெரும் நிபுணராக வெற்றிகள் அடைந்து எவருக்கும் ஏதும் தெரியாமல் மறைத்தே சமாளிக்கிறீர்கள். ஆன்மீகச்; செலவுகளும் வரும், அநாவசிய விரயங்களும் சேர்ந்து விடும். சுகங்களுக்கும், வரவுகளுக்கும் குறைவில்லை என்பதும் உண்மைதான். சிலருக்கு சில சமயங்களில் தேக ஆரோக்கியமும் சவாலாக அமைய இடமுண்டு. எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும், புரளி கிளப்பி மனதைப் புண்படுத்துபவர்களும் நம்முடனேயே இருக்கிறார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, வருமானங்களை விட செலவினங்கள் அதிகமாகத்தான் இருக்கின்றன. அதற்காக அலட்டிக் கொண்டு, நான் பாதிக்கப் படுகிறேன் என்று புலம்பாதீர்கள். பூர்வீகச் சொத்துக்களைச் செலவுகளைச் சமன் செய்ய விற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. கொஞ்சம் பொறுமையுடன் இருந்தால் நிலைமை சீரடையச் சந்தர்ப்பங்கள் அதிகம். அவசரப்பட்டால் அவதிப்பட நேரிடும். உறவுகள் கை கொடுக்க வில்லையென்று ஆதங்கப்பட்டுப் பிரயோசனமும் இல்லை. நண்பர்களும் விலகித்தான் இருப்பார்கள். தனியாக எதையும் சமாளிக்க வேண்டியதுதான். ரகளைகள் இல்லாத உறவுகளும் குடும்பங்களும் இல்லை. இழப்புகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதையே நினைந்து குழம்பினால் முடிவுகள் கண்ணுக்குத் தெரியப் போவதும் இல்லை. உங்களுடைய கிரகங்கள் மிக நல்ல நிலையில் இல்லை என்றாலும் பெரும் பாதகங்களைத் தரக் கூடிய வகையில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

மீனம்

மீன ராசி அன்பர்களே, சில வாரங்கள் வியாபித்திருந்த அமைதி கலைய புயல் வீசும் அறிகுறிகள் இப்போது தென்படத் தொடங்கும். சொல்வாக்கில் மதிப்பும் மரியாதையும் இருப்பது போல் தோன்றினாலும் அதை முழுமையாக நம்பிவிடாதீர்கள். நம்ப வைத்து கழுத்து அறுக்கும் கூட்டமே அதிகம் இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உதவாத உறவுகளும், நம்ப முடியாத நண்பர்களுமே சுற்றி இருப்பார்கள்.

அவர்களின் நலனைப் பேணவே இருக்கிறார்கள் என்பதை நட்டாற்றில் கை விட்டுவிட்டுப் போன பின்னரே தெரியத் தொடங்கும். பணம் ஒரு பிரச்சினையாகத் தோன்றாது, ஆனால் முழுமையான நோக்கங்களை வெளிக்காட்டாதவர்களே சிரித்து மழுப்பிக் கொண்டு உறவுகள் வைத்திருப்பார்கள்.

Comments