போல் வில்சன்: அவர் ஒரு மனிதர்! | தினகரன் வாரமஞ்சரி

போல் வில்சன்: அவர் ஒரு மனிதர்!

இது என் அலுவலக நண்பர் சொன்ன விஷயம்

அவருக்கு உடனடியாக முப்பது ஆயிரம் ரூபா தேவை. கேட்டுப் பார்த்த இடங்களில் படிந்து வரவில்லை. முகவாய்க் கட்டையில் கை வைத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையுடன் வெறித்த பார்வையில் ஆழ்ந்திருந்தார். அப்போது அருகே வந்த நண்பர் வில்சன் போல், என்னப்பா சோகமாக இருக்கிறாயே, கப்பல் கவிழ்ந்து விட்டதா? எனச் சீண்டியிருக்கிறார். அவரும் அசிரத்தையாக, தனது பிரச்சினையை சுருக்கமாகக் கூறியிருக்கிறார்.

“அட இவ்வளவுதானா! இதற்காகவா  இப்படி? நான் உனக்கு பணம் தருகிறேன். பின்னர் திருப்பித் தந்தால்போதும்” என போல் கூறியதும், நண்பருக்கோ அதிர்ச்சியோ அதிர்ச்சி! கிடைக்கக் கூடும் என்றிருந்த இடங்கள் எல்லாம் கதவை சாத்திவிட, அழையா விருந்தாளியாக வந்த இந்த மனிதர் பணம் தருகிறேன் என்கிறாரே இவர் ஜோக்கடிக்கிறாரா? எனச் சந்தேகப்பட்டிருக்கிறார்.

வில்சன் போல் தன் மேசை இழுப்பறையைத் திறந்து நோட்டுகளை எண்ணி எடுத்து வந்து நண்பரின் கைகளில் திணித்திருக்கிறார். “இதை வைத்து நிலைமையை சமாளியுங்கள். பின்னர் தந்தால் போதும்” என்று கூறிவிட்டு வெளி வேலை ஒன்றிருப்பதாக் கூறி நடையைக் கட்டியிருக்கிறார்.

வில்சன் போல் காலமாகி விட்டதாகத் தகவல் வந்ததும் அதிர்ச்சியடைந்த அந்த நண்பர், போலின் இந்த அடுத்த பக்கத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஒன்பதாம் திகதிதான் அவர் அலுவலகத்தில் பணியாற்றிய கடைசி நாள். இரவு எட்டரை மணிவரை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவர், வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்னர் எமது அலுவலக உதவியாளரை அழைத்து இது உன் மகளுக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி ஓர் ஆடையைத் தந்துள்ளார். துயரச் செய்தி வந்ததும் இதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார் அந்த உதவியாளர்!

வலக் கை கொடுப்பது இடக் கைக்குத் தெரியக் கூடாது என்பார்கள். அதாவது, நாம் செய்யும் உதவிகளை தம்பட்டம் அடிக்கக் கூடாது என்பது இதன் பொருள். வில்சன் போல் கிறிஸ்தவ பண்புகளின் அடியொற்றி வாழ்ந்தவர் என்ற வகையில், இயேசுவின் உன்னிடம் இரண்டு ஆடைகள் இருந்தால் அதில் ஒன்றை இல்லாதவனுக்குக் கொடு’ என்ற வார்த்தைகளை முற்றிலுமாக நம்புகிறவர். தன்னால் முடிந்த உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்திருக்கிறார். நத்தார் காலத்தில் தனக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்களை தேவையானோருக்குக் கொடுத்து வந்துள்ளார்.

தினகரன் ஆசிரிய பீடத்தில் பணியாற்றுபவர்களில் நீண்ட சேவை காலத்தைக் கொண்டவர் என்றால் அவர் வில்சன் போல் தான். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தோடு அவர் 35 வருடங்களை நிறைவு செய்கிறார். அவர் உயிருடன் அடுத்த சில மாதங்களைத் தாண்டியிருந்தால் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தங்கப் பவுண் விருதையும் கௌரவத்தையும் அவர் பெற்றிருப்பார். அவரது எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருந்தது. இருபத்தைந்தாவது ஆண்டில் தன் முதல் தங்க விருதைப் பெற்ற அவருக்கு, தான் ஓய்வு பெற்று செல்வதற்கு முன் இரண்டாவது விருதையும் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் காலம் வேறு விதமாக நினைத்திருந்தது.

வில்சன் போலுக்கு இரண்டு மகள்மார். அன்பான மனைவி, தன் கணவனுக்கு விதவிதமாக சமைத்துப் போடுவதில் நாட்டம் கொண்டவர் என்பதால் அவர் புண்ணியத்தில் எங்களுக்கும் அவ்வப்போது விதவிதமான உணவுப் பண்டங்களை ருசி பார்க்கும் பாக்கியம் கிடைக்கும். காலைப் பொழுதிலேயே அலுவலகம் வந்துவிடும் அவர், நேரம் முடிந்து நாங்கள் கிளம்பிய பின்னரும் தான் அன்றைய பொழுதில் முடிக்க வேண்டிய பணிகளை நிறைவு செய்த பின்னர்தான் வீட்டுக்கு புறப்படுவார்.  "ஏன் வில்சன், நேரம் முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பாமல் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டால், எடுத்துக் கொண்ட வேலைகளை முடித்தால் தான் திருப்தியாக இருக்கும் என்று பதில் வரும். இத்தகைய கடமையுணர்வு கொண்டவர்களை இந்த அவசர உலகில் தேடிப் பிடிப்பது கஷ்டம் என்பது உங்களுக்கும் தெரியும்!

1960 ஏப்ரல் 02ம் திகதி கொள்ளுப்பிட்டியில் பிறந்தவர் போல் வில்சன். கொழும்புக்காரர் என்பதால் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் அவருக்கு அத்துப்படி. 35 வருடங்களுக்கு முன்னர் அச்சுக் கோப்பு பிரிவில் பணியில் சேர்ந்தார். அப்போது டீ.ஆர். விஜேவர்தன குடும்பத்துக்கு இந்நிறுவனம் சொந்தமாக இருந்தது. கொதிக்கும் ஈயக்குழம்பில் எழுத்துகளைத் தோய்த்து எழுத்துகளை உருவாக்கி பக்கங்களை ‘செட்’ செய்ய வேண்டும். அச்சகப் பகுதியை அப்போது ‘வேர்க்ஸ்’ என அழைப்பார்கள். கடும் உஷ்ணமாக இருக்கும். வேலை செய்பவர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், கேலி பேசி வெற்றிலை குதப்பிக் கொண்டும் இருப்பார்கள். சிலர் பெனியனையும் கழற்றி வெற்றுடம்புடன் வேலை செய்வார்கள். அவ்வளவு புழுக்கமாக இருக்கும். சம்பளம் கொஞ்சமானாலும் மிச்சம் பிடிக்கக் கூடிய அளவுக்கு வாழ்க்கைச் செலவு மிகவும் குறைவு. காலம் மாறி, கணனி பயன்பாடு தொண்ணூறுகளில் வந்ததும் வில்சனும் கணனி அச்சுக் கோப்புக்கு மாறினார். அவருக்கு எழுதுவதிலும் வாசிப்பதிலும் இருந்த ஆர்வம் அவரை தினகரன் ஆசிரியபீடத்துக்கு அழைத்து வந்தது. உதவி ஆசிரியராகத் தன் பணியைத் தொடர்ந்தார்.

ஒரு மனிதன் சமூகத்தால் பல வகையாக, பல கோணங்களில் பார்க்கப்படுகிறான். மகனாக, அப்பாவாக, மாமனாராக, மச்சானாக, நண்பராக, அந்நியனாக, எதிரியாக என ஒரு மனிதன் அவரவர் பார்வையில் வெவ்வேறு மனிதர்களாக காட்சியளிக்கின்றான். அவன் அவனாக இருக்க, பார்வைகள் தான் மாறுபடுகின்றன. ஆனால் வெகு சிலரே ஒரு மனிதனை சரியாக அடையாளம் காண்கின்றனர். அவர்களில் உண்மையான நண்பர்களே முதலிடம் வகிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் தான் அவனை உண்மையாகவே அறிந்தவர்கள். இவ்வகையிலே போல்வில்சன் தொடர்பாக பல்வேறு பார்வைகள் இருப்பினும், நண்பன் என்ற வகையில் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்.

அவர் ஒரு நல்ல மனிதர் என்பது தான் அந்த மதிப்பீடு. ஒருவர் அடிப்படையில் நல்ல மனிதராக மட்டும் இருந்துவிட்டால் போதும். ஏனெனில் அதுதான் அவனது உண்மையான அடிப்படை. மனிதனின் உண்மையான சுயம். வில்சனுக்கு அது வாய்த்திருந்தது என்பதை தன் மரணத்தின் மூலம் நாம் துலாம்பரமாக அறிந்து கொண்டோம். ஏனெனில் அலுவலகத்தில் மட்டுமல்ல, வெளியிலும் இச் செய்தி கேட்டு பலர் உண்மையாகவே அதிர்ந்து போனார்கள். அவர்கள் அனைவருமே அவரை ஒரு நல்ல மனிதராகக் கருதியிருந்ததே இந்த அதிர்ச்சிக்கான காரணம்.

போல் வில்சனின் மரணத்தைக் கேட்டதும் நாங்கள் கிறான்பாசில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம்.

நேற்று இரவு என்ன நடந்தது என்று அவரது மகள் தமரியிடம் கேட்டபோது, ஒன்பது மணியளவில் வீடு வந்த அவர் பதினொன்றரை மணிவரை கணனியில் அமர்ந்து ஆலயம் தொடர்பான பணியொன்றில் ஈடுபட்டிருந்தார் என்றும் பின்னர் படுக்கைக்கு சென்று விட்டார் என்றும் சொன்னார்.

“இரவு இரண்டு மணியளவில் சளி அடைப்பது போன்ற சத்தம் கேட்டது. எழுப்பியபோது உடல் அசையவில்லை. மயக்கமாகி இருப்பதாக நினைத்து அம்பியூலன்ஸ் வண்டியை அழைத்தோம். வண்டி வருவதற்கு அரை மணித்தியாலயம் சென்றது. அப்பாவை ஏற்றிக் கொண்டு கொழும்பு பெரியாஸ்பத்திரிக்குச் சென்றோம். அங்கே மருத்துவர் இருக்கவில்லை. நர்ஸ்மாரிடம் கூறியபோது, அவர் தூங்குவதாகவும் எழுப்பிக் கொண்டு வருகிறோம் என்றும் கூறிச் சென்றனர். பின்னர் வந்து, அவர் எழும்புகிறார் இல்லை, நீங்கள் போய் கூட்டிக்கொண்டு வருகிறீர்களா? என்று எம்மிடம் அத் தாதிமார் கேட்டார்கள். அரை மணித்தியாலத்துக்கும் மேல் காத்திருந்த பின்னரேயே அங்கு தூக்கக் கலக்கத்துடன் வந்த மருத்துவர், அப்பாவின் கையைப் பிடித்து பார்த்து விட்டு, ‘இறந்து விட்டார்’ என ஒற்றை வரியில் கூறியபடியே இடத்தைக் காலி செய்தார்.

ஆஸ்பத்திரியில் நாங்கள் அந்த அதிர்ச்சியான சூழலில் அனுபவித்த இந்த அலட்சிய பாவம் எங்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மருத்துவ உதவிதேடி, உயிரைக் காப்பாற்றும் அவசரத்தில் வருபவர்களை இவ்வளவு அலட்சியமாகவா நடத்துவார்கள்? Very Very Poor Service!” என்று கவலையுடன் கூறி முடித்தார் தந்தையை இழந்த மகள்.

வில்சன் போல் ஒரு பத்திரிகையாளர். அவர் மறைவிலும் ஒரு செய்தி இருக்கிறது.

மருத்துவத்தில் அலட்சியம் வேண்டாம் என்பதுதான் அந்தச் செய்தி!

அருள் சத்தியநாதன்

Comments